Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

1 comment:

பிரகாஷ் said...

திருமணம் முடித்த போராளிகள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினர். பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை.