Tuesday, December 24, 2013

ஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உள்ளதா?

//தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது.// என்று தமது இடதுசாரி அல்லது கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு பின்வரும் காரணங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். //டட்லி வயிற்றில் மசாலா வடை என இனவாத கூச்சலிட்டவர்கள், இலங்கையில் கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். மேலும் சிங்கள மொழிக்கு மட்டும் அந்தஸ்த்து கொடுக்கும் இலங்கை யாப்பை எழுதியவரும் கொல்வின் ஆர் டி சில்வா என்னும் புகழ் பெற்ற கம்யுனிஸ்ட். // (குறிப்பு: கொல்வின் ஆர்.டி. சில்வா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ட்ராஸ்கிஸ்ட்)


மேற்குறிப்பிட்ட வாதம் வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும், வரலாற்றை திரித்து, மறைமுகமாக தமிழ் மக்கள் மனதில் கம்யூனிச எதிர்ப்பு எனும் நஞ்சை ஊட்டும், விஷமத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.

வலதுசாரிகளோ அல்லது இடதுசாரிகளோ அல்லது லிபரல் வாதிகளோ, எவையாயினும், அவை இறுதியில் தமிழ், சிங்களமென இரண்டாக பிளவுபட்டுச் சென்றுள்ளமையே, இலங்கையின் வரலாறாகக் காண முடிகிறது. இது தனி மனிதரில் இருந்து, கட்சிகள் வரை பொருந்தும்.

1956 ஆம் ஆண்டு ஐ.தே.க.வில் இருந்து தமிழ் அமைச்சர்கள், தமிழ் எம்.பி.க்கள், தமிழ் உறுப்பினர்கள் வெளியேறியது போல, 1976 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தமிழ் தலைவர்கள் பிரிந்து சென்று, "செந்தமிழர் ஆயிடுவோம்" என்ற தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இலங்கையில் இடதுசாரி இயக்கங்களை, குறிப்பாக சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பதற்கு, பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகளையும், இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது. இலங்கையின் முதலாவது பிரதமரும், மேற்கத்திய சார்பு லிபரல்வாதியுமான டி.எஸ். சேனநாயக்க, "ஐம்பதுக்கு ஐம்பது கோரிய" ஜி.ஜி. பொன்னம்பலத்தை தனது அரசாங்கத்தில் அமைச்சராக சேர்த்துக் கொண்டார். அன்று ஆட்சிக்கு வரக் கூடிய அளவு பலத்துடன் இருந்த இடதுசாரிக் கட்சிகளை தடுப்பதும், இடதுசாரி சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பி விடுவதுமே, டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது.

சுருக்கமாக சொன்னால்: "இலங்கையில் இடதுசாரியத்திற்கு எதிராக, சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் கூட்டுச் சேர்ந்தது." துரதிர்ஷ்டவசமாக, டி.எஸ்.சேனநாயக்கவின் தீர்க்கதரிசனம் கொண்ட சூழ்ச்சி பலித்து விட்டது. அதன் மூலம், இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாள நினைத்த, சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் எண்ணம் நிறைவேறியது. அதே நேரம், ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற தமிழரை அமைச்சராக வைத்துக் கொண்டே, டி.எஸ். சேனநாயக்க மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்தார்.

" 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய  தேசிய கட்சியுடன், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (இலங்கை சமஷ்டிக் கட்சி) பங்கெடுத்து கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரு பெரும் சிங்களக் கட்சிகளும் அறுதிப் பெரும் பான்மை எட்டாத நிலையில், ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியுடன் இடது சாரிகளும் தமிழரசுக் கட்சியும் இணைந்த ஒரு கூட்டரசாங்கத்தை உருவாக்க கலாநிதி என்.எம்.பெரேரா முயற்சித்தார். அதற்காக அவர் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் அப்போது யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன், என்.எம். பெரேரா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கூட்டரசாங்கம் அமைப்பது பற்றிய விடயங்களை கொழும்பில் உள்ள தனது நண்பரான திரு. மு.திருச்செல்வத்துடன் பேசுமாறு செல்வநாயகம் கூறினார். ஆனால் தமிழ் வலதுசாரியான திருச்செல்வம், சிங்கள தரகு முதலாளிய கட்சியான ஐ.தே.க.வுடன் உடன் பாட்டுக்கு வர விரும்பினார். அதனால், என்.எம். பெரேராவுடன் பேசாமலே, திருச்செல்வம் அவரை புறம்தள்ளினார் என்பது உண்மை."   (தகவலுக்கு நன்றி : www.nerudal.com)

இலங்கையின் சிக்கலான இனப் பிரச்சினையை, "சிங்களவர்+தமிழர்=எதிரிகள்" என்று இலகுவாக புரிந்து கொள்வது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சிங்கள வலதுசாரிகள் மட்டுமல்ல, தமிழ் வலதுசாரிகள் கூட ஆரம்பத்தில் இருந்தே, இடதுசாரி சக்திகளை தமது வர்க்க எதிரிகளாக கருதி வந்தனர். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு தமிழ் தேசியக் கட்சிகளும், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பதை விட, சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.

பிரிட்டன் உருவாக்கிய பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பூர்ஷுவா அரசுக் கட்டமைப்பும் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டது. தேர்தல் அரசியல் சாக்கடையில் புரண்டெழும் எந்தப் பன்றியும் சுத்தமாக இருக்க முடியாது. வாக்காளர்களை இலகுவாக கவர முடியும் என்பதால், அனைத்து தேர்தல் கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. சிங்களப் பேரினவாத கட்சிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்.

சமசமாஜக் கட்சி போன்ற ட்ராஸ்கிசவாதக் கட்சிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சமூக ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தன. அதாவது, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதே ட்ராஸ்கிசவாதிகளின் புரட்சிகர தத்துவம் ஆகும்.தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, கம்யூனிஸ்டுகளுக்கும், ட்ராஸ்கிஸ்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து புரட்சியை நடத்துவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். ஆனால், ட்ராஸ்கிச கட்சிகள், பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, அரசாங்கத்தை மாற்றி சோஷலிச சீர்திருத்தங்களை (புரட்சி அல்ல) கொண்டு வரலாம் என்று நம்புகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எழுதிய ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரும், முன்னாள் LSSP ட்ராஸ்கிஸ்டுகள் தான் .

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. குருஷேவ் முன்மொழிந்த "சமாதான சகவாழ்வு" கொள்கையின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பூர்ஷுவா அரசாங்கத்தில் பங்கெடுப்பது ஊக்குவிக்கப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆயுதேமந்திய புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தன. குருஷேவ் அதைக் கைவிட்டு விட்டு, அமைதி வழியிலான ஆட்சி மாற்றத்தை முன்மொழிந்தார்.

சர்வதேச கம்யூனிச அகிலத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றம், இலங்கை கம்யூனிஸ்ட் அரசியலிலும் எதிரொலித்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களை கவர்வதற்காக இனவாதம் பேசியது.  மே தின ஊர்வத்தில் "தோசை, மசால வடே அப்பிட்ட எபா" கோஷம் எழுப்பப் பட்டது. உண்மையில், அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே அந்தக் கோஷம் எழுப்பப் பட்டது. ஆனால், அதன் இனவாத உள்ளடக்கம் காரணமாக தமிழ் மக்களை அன்னியப் படுத்தியது.

1972 ம் ஆண்டு, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியை துறந்து குடியரசு ஆனது. ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர்.டி. சில்வா புதிய அரசியல் யாப்பை எழுதுவதற்கு நியமிக்கப் பட்டார். "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, தமிழ் வலதுசாரிகள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அவர் ட்ராஸ்கிச LSSP கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான தமிழ் தேசியவாதிகளுக்கு, ட்ராஸ்கிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையில் வித்தியாசம் தெரிவதில்லை. "கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற ஒரு கம்யூனிஸ்ட் தமிழர் விரோத யாப்பு" எழுதியதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் வலதுசாரிகள், அந்த யாப்பு சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்ற உண்மையை காண மறுக்கின்றனர். 

1971 ம் ஆண்டு, ஜேவிபி தலைமையில் நடந்த சிங்கள குட்டி முதலாளிய இளைஞர்களின் எழுச்சி, அந்த யாப்பை எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. அதாவது, சிங்கள குட்டி முதலாளிய வர்க்கத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக, அந்த யாப்பு அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியது. இதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் மட்டுமல்ல, சிங்கள பாட்டாளி மக்களின் அபிலாஷைகளும் புறக்கணிக்கப் பட்டன. இதன் மூலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, தனது சோஷலிசக் கொள்கைக்கே துரோகம் இழைத்தார்.

"தமிழ் மக்களுக்கு சோஷலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவமே இருக்கின்றது." என்பது தமிழ் வலதுசாரிகளின் கற்பனையான அனுமானம். தமிழ் மக்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. பாராளுமன்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் தங்களது சொந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளையே நம்பவில்லை. அதனால் தான், எண்பதுகளுக்கு பின்னான காலங்களில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு, புலிகள் போன்ற ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு ஆதரவளித்தனர். அந்தக் காலங்களில், மார்க்சிய லெனினிசக் கொள்கை கொண்ட விடுதலை இயக்கங்கள் கூட தோன்றின. பெருமளவு தமிழ் மக்கள் அவற்றையும் ஆதரித்தனர்.

தமிழ் மக்களுக்கு சோஷலிசத்தின் மேல் ஈர்ப்பு இருந்த காரணத்தால் தான், 1977 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட வட்டுகோட்டை தீர்மானத்தில் "சோஷலிசத் தமிழீழம்" உருவாக்கப் படும் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் கூட தமது பிரசுரங்களில் சோஷலிசத் தமிழீழத்திற்கு போராடுவதாக கூறி வந்தனர். தமிழ் மக்களுக்கு சோசலிசம் மேல் வரலாறு ரீதியாக ஒரு கசப்பான அனுபவம் இருந்தது உண்மையாக இருந்தால், அன்று யாருமே சோஷலிசத் தமிழீழத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்.

No comments: