(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - இரண்டாம் பாகம்)
திபெத் பிரச்சினை பற்றி ஹாலிவூட் தயாரிப்பில் உருவான, "Seven Years in Tibet" எனும் திரைப்படம், ஒரு ஜனரஞ்சகப் படம் என்றளவில் உலகளவில் வெற்றி பெற்றது. "சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்ட திபெத்" பற்றிய சித்திரத்தை அரசியல் செய்தியாக கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் பலராலும் பேசப் பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் மறைத்த இனவாத / நிறவாதக் கருத்தியல் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஒரு சரித்திரக் கதையை ஆதாரமாக கொண்டு தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது. அந்த சரித்திர நாயகன் Heinrich Harrer, ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ஜெர்மனியர். இந்த விபரம் படத்தில் வருகின்றது. "செவன் இயர்ஸ் இன் திபெத்" என்பது கூட அவர் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டது தான். 1939 ம் ஆண்டு, ஹைன்ரிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ்காரரால் சிறை வைக்கப் பட்டிருந்தார். அங்கிருந்து தப்பி ஓடி, உலகப்போரில் நடுநிலை வகித்த திபெத்தினுள் தஞ்சம் புகுந்து, ஏழு ஆண்டுகள் பாதுகாப்பாக வாழ்ந்துள்ளார். யார் இந்த ஹைன்ரிஷ்? அவருக்கு திபெத்தில் என்ன வேலை? அவரை அங்கே அனுப்பியது யார்?
ஹைன்ரிஷ் ஹிட்லரின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நாசிக் கட்சி உறுப்பினர். வெள்ளை நிற ஆரிய இனத்தின், ஆதிமூலம் குறித்து ஆராய்வது ஹிட்லரின் நோக்கம். திபெத்தில் ஆரிய இனத்தின் தூய்மை இன்னமும் பேணப் படுவதாக கிடைத்த தகவலை உறுதிப் படுத்துவதற்காக, ஹைன்றிஷை அனுப்பி வைத்தார். மேலும், நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா, மத்திய ஆசியாவில் இருந்து வந்தது என்பது, அன்றைய ஜெர்மனியில் அறியப் பட்டிருந்தது. (இந்துக்களின் மங்கலச் சின்னமான அதே ஸ்வாஸ்திகா தான்.) ஆகவே, ஹிட்லரின் நிறவெறிக் கொள்கைக்கு சான்றுகளை திரட்டுவதற்காகவே, ஹைன்ரிஷ் திபெத் சென்றுள்ளமை இதிலிருந்து புலனாகும். இந்தத் தகவல்களை எல்லாம், செவன் இயர்ஸ் இன் திபெத் திரைப்படம் இருட்டடிப்பு செய்துள்ளது. ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சிக் காலத்தில், தீபெத்தியர்கள் கௌரவ விருந்தினர்களாக நடத்தப் பட்டனர். அவர்கள் நாஜிப் படையிலும் இணைந்து போரிட்டிருக்கலாம். போரின் முடிவில், பெர்லின் நகரை செம்படையினர் கைப்பற்றிய வேளை, நூற்றுக்கணக்கான திபெத்தியர்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. (The Morning of the Magicians, authors: Louis Pauwels and Jacques Bergier)
தலாய் லாமா பாதுகாத்து வைத்திருந்த இரகசிய நூல்கள் சில நாஜி ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேற்கத்திய இனவாத தத்துவ ஆசிரியர்களுக்கு பயன்படத் தக்க தகவல்கள் பல அவற்றில் இருந்திருக்கலாம். நாஜிகள் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு திபெத்தில் அப்படி என்ன இருக்கிறது? பல இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகம் நாகரீகமடைந்து கொண்டிருந்த காலத்தில், திபெத் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி இருந்தது. உயரமான இமய மலையில், தனிமைப் படுத்தப் பட்டிருந்த திபெத், ஆரிய இனத் தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது, நாஜிகளின் எண்ணம். உண்மையில், திபெத் என்பது மொழியைக் குறிக்கும். குறைந்தது நான்கைந்து இனங்கள் அந்த மொழியைப் பேசுகின்றன. அவர்கள் எல்லோரும் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் அல்ல. குறிப்பிட்ட அளவு முஸ்லிம்களும், "பொன்" (Bon) எனும் பழமையான மதத்தை பின்பற்றுவோரும் சிறுபான்மையாக உள்ளனர். (பொன் மதம் குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) இனத்துவ அடிப்படையில் பார்த்தால், திபெத்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வெள்ளை நிறமாக இருப்பர். இவர்களுக்கும், சீனர்களுக்கும் (பெரும்பான்மை ஹான் இனத்தவர்கள்) இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமானது. அதே நேரம், அந்த நாட்டில் காணப்படும் பழுப்பு நிற மக்களை மட்டுமே திபெத்திய இனமாக வெளியுலகம் தவறாக கருதிக் கொண்டிருக்கிறது.
திபெத்தியர்கள், மொங்கோலிய இனத்திற்கும், ஐரோப்பிய இனத்திற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது, வெள்ளை இனத்தின் பரிணாம மாற்றம் அங்கே தான் நடைபெற்றது என்பது நாஜிகளின் நம்பிக்கை. திபெத்திய ஆட்சியாளர்களும், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த நாஜி விருந்தினர்களை இரு கரம் நீட்டி வரவேற்று உபசரித்தனர். (1926 க்கும் 1940 க்கும் இடையில் பல ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் திபெத் மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.) நாஜிகளின் இனங்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தனர். இந்த விபரம் எல்லாம் வெளியில் தெரிந்தால், தலாய் லாமாக்களின் முகத்திரை கிழிந்து விடும் என்பதால், வரலாறு அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டது. அது ஒரு புறமிருக்க, நாஜிகளிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்தனவோ இல்லையோ, ஸ்வாஸ்திகா சின்னம் பற்றிய உண்மைகள் தெளிவாகின. திபெத்தில், இந்திய எல்லையோராமாக உள்ள இமய மலைத் தொடர்கள் ஸ்வாஸ்திகா வடிவத்தில் காணப்படுகின்றன. அதனை பண்டைய "இந்துக்கள்" (அல்லது ஆரியர்கள்) தமது புனிதச் சின்னமாக கருதியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? வெவ்வேறு திசைகளை நோக்கிய ஆரிய இனங்களின் புலம்பெயர்வு அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
Tagzig Olmo Lung Ring என்ற பெயரைக் கொண்ட மலைத் தொடரானது, கிழக்கே திபெத்திலும், மேற்கே தஜிகிஸ்தான் வரையிலும் நீண்டுள்ளது. மலையின் பெயரில் வரும் தாஜிக் என்ற சொல்லானது, இன்றைய தாஜிகிஸ்தான் நாட்டின் பெயருக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தாஜிக்கியர்கள் பாரசீக (ஈரானிய) மொழி பேசும் மக்கள். அதாவது தாஜீக்கும், பார்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பான மொழிகள். நாகரிக வளர்ச்சி காரணமாக, நவீன ஈரான் எமக்கு நன்கு பரிச்சயமாகியுள்ளது. ஆனால், பார்சி மொழி பேசும் ஈரானியரின் மூதாதையர் தாஜிகிஸ்தானில் இருந்து வந்திருப்பார்கள், என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். அநேகமாக, துருக்கிய மொழி பேசும் இனங்களுக்கும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் இனங்களுக்குமிடயிலான பிரிவினையும் அங்கே தோன்றியிருக்க வேண்டும். அது வேறு விடயம். இப்போது அந்த, தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையில் அப்படி என்ன விசேஷம் என்று பார்ப்போம்.
தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலைத் தொடரை முழுமையாகப் பார்த்தால், எண் கோண வடிவில் அமைந்த தாமரைப் பூ போன்றிருக்கும். அதன் மையப் பகுதி ஸ்வாஸ்திகா என்று அழைக்கப் படுகின்றது. திபெத் பொன் மத ஸ்தாபகர், சொர்க்கத்தில் இருந்து நேராக, அந்த மலையில் தான் வந்திறங்கியதாக, பொன் மதத்தவர்கள் நம்புகின்றனர். அந்த மலைப் பகுதியின் மேலே உள்ள ஆகாயம், தர்ம சக்கரம் போன்றிருக்கும். இந்து மத நம்பிக்கையாளர்கள் புனிதமாகக் கருதும், "ஸ்வாஸ்திகா, தாமரை மலர், தர்ம சக்கரம்" போன்ற குறியீடுகள் திபெத்தில் தான் தோன்றின. இந்த உண்மை பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. "ஒரு இனத்தின் பூர்வீகத்துடன் சம்பந்தப்பட்ட குறியீடுகள்", இவ்வாறு தான் மதச் சின்னங்களாக மாறின. நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஆரம்பத்தில் இந்து மதமானது, பிராமணர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்களின் மதமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் மக்களும், ஆக்கிரமிப்பாளர்களின் மதத்தை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்றால், பிரம்மாவின் மக்கள் என்று அர்த்தம். முன்னொரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மாவை வணங்கும் வழக்கம் இருந்தது.
புனிதமான தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையை, அதன் குறியீடுகளை எல்லாம் புனிதமாக கருதி வழிபட்ட பொன் மதம் திபெத் முழுவதும் பரவியிருந்தது. அது திபெத் மக்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான மதம். அது ஒரு பண்டைய மத நம்பிக்கை. இயற்கையை கடவுளாக வழிபடும் மக்களுடைய நம்பிக்கை. லாமாக்களின் பௌத்த மதமானது, பொன் மதத்தை ஏறக்குறைய அழித்து விட்டது. அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த சில ஆயிரம் பொன் மத திபெத்தியர்கள், இன்றைக்கும் அந்த மதத்தை அழிய விடாது பாதுகாத்து வருகின்றனர். பௌத்த மதம் இந்தியாவில் இருந்து திபெத்திற்கு பரவியது. அரசர்களும், மதகுருக்களும் பௌத்த மதத்தை மக்கள் மேல் திணித்தனர். இருந்தாலும், திபெத்திய மக்களின் பொன் மத நம்பிக்கையை முற்றாக அகற்ற முடியவில்லை. அந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில உள்வாங்கப் பட்டன. உதாரணத்திற்கு, வண்ண மயமான கொடிகளில் பிரார்த்தனையை எழுதி தொங்க விடும் வழக்கமானது, பொன் மதத்திற்கு உரியது. கொடிகளின் வர்ணங்கள் ஒவ்வொன்றும், பஞ்ச பூதங்களைக் குறிக்கும். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பொன் மதத்திலும், திபெத்திய பௌத்தத்திலும் இது ஒரு அடிப்படை நம்பிக்கையாகும். இந்து மதத்திலும், பஞ்சபூதங்கள் பற்றிய நம்பிக்கைகள் நிலவுவது, இங்கு குறிப்பிடத் தக்கது.
திபெத்திற்கு அருகில் உள்ள நேபாளத்தில், இந்துக் கோயில்களுக்கும், பௌத்த ஆலயங்களுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உள்ளேயிருக்கும் புத்தர் சிலை ஒன்று மட்டுமே வித்தியாசம். நேபாளத்தில் உள்ள லும்பினி எனுமிடத்தில் புத்தர் அவதரித்ததாக கருதப் படுவதால், இன்றைக்கும் அங்கே ஒரு ஆலயம் உள்ளது. புத்த சமயம், உண்மையில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய மதமாகும். அது பிராமண மதத்தில் இருந்த காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களை எதிர்த்து உருவானது. அந்தக் காலத்தில் இந்து மதம் என்றால், புரோகிதர்கள் எல்லாம் சேர்ந்து யாகத்தீ மூட்டுவது முக்கியமான வழிபாடாக இருந்தது. யாகத்தீயில் குதிரை, மாடு, ஆடு என்று வளர்ப்பு மிருகங்களை தூக்கிப் போட்டு கடவுளுக்கு பலி கொடுப்பது வழக்கம். இதைத் தவிர, ரிக் வேதம் என்ற செய்யுள்களை பாடுவார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடிக் கூட்டங்களாக வந்த ஆரியர்கள், "வரும் வழியில் எத்தனை தேசங்களை அழித்தனர், எத்தனை மக்களை இனப்படுகொலை செய்தனர், எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்தனர்," என்பன போன்ற கதைகள் அந்த செய்யுள்களில் பாடப்படும். நமது காலத்தில், யாராவது இப்படியான செய்யுள்களை இயற்றினால், சர்வதேச நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், தமது இனப்பெருமையை பறைசாற்றுவதற்காக எழுதப் பட்டதே ரிக் வேதம். அதில் எந்த தத்துவ விசாரத்தையும் எதிர்பார்க்க முடியாது.
இந்திய ஆரியர்களின் சகோதர இனத்தவர்கள், மத்திய ஆசிய பாலைவனங்களில் இன்னமும் நாடோடிகளாக அலைந்து கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பௌத்த மதமும், இஸ்லாமிய மதமும் பரவும் வரையில், அவர்கள் நாகரீகத்தை அறிந்திருக்கவில்லை. அதே நேரம், இந்திய உப கண்டத்திற்கு வந்து சேர்ந்த ஆரிய இனத்தவர்கள், அங்கே ஏற்கனவே வளர்ச்சி அடைந்த நாகரிக சமுதாயத்தை கண்டனர். அவர்களது மதமும், இயற்கையோடு இணைந்திருந்தது. இயற்கையின் அற்புதங்களுக்கு மதத்தின் பெயரால் விளக்கங்கள் கொடுத்தனர். அது வரையில், வருண பகவானையும், வாயு தேவனையும், இன்ன பிற இயற்கையின் அமானுஷ்ய சக்திகளை கண்டு அஞ்சி கடவுளாகக் கருதி வழிபட்ட "இந்துக்கள்"; இந்திய மண்ணில் மெய்யியல் தத்துவங்களை கற்றுக் கொண்டனர்.
(தொடரும்)
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
6 comments:
wonderfully informative blog...nandri!
very interesting keep it up
thanks for your effort
இதுவரை நான் அறியப்படாத பல விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.
.
nice
ஆரியர்களை தவறாக மேற்கோள் காட்சியில் உங்களின் அறியாமை தெரிகிறது. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்த்கார்களா ? ஆரியர்கள் யார் ? அவர்களால் உருவாக்கம் பெற்றதா ரிக் வேதம் என்பது இதுவரை நிச்சயமாக கூற படவில்லை ...
Post a Comment