Saturday, December 10, 2011

காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஐந்தாம் பாகம்)


பண்டைய இந்தியர்களின் அறிவியல், இனவாத ஆரியர்களின் கைகளில் சிக்கி விடாமல் தடுப்பதற்காக, சித்தர்கள் அவற்றை தமிழகக் காடுகளில் கொண்டு வந்து மறைத்து வைத்தார்கள். இன்று, ஆரிய மயப்பட்ட தமிழ் இனவாதிகளிடம் இருந்து சித்தர்களின் அறிவியலை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னே விரிந்து கிடக்கிறது. மனித இனத்தின் வரலாறு முழுவதும், ஆங்காங்கே பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் அவற்றை, இனம், மொழி, மதம் கடந்து தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு இனத்தின் கண்டுபிடிப்பை இன்னொரு இனம் மெருகூட்டி வளர்த்தது. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, இடம்பெற்று வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, எந்த இனமும் தனது என்று உரிமை கோர முடியாது. நமது பாடசாலைகளில் போதிக்கப்படும் நவீன அறிவியல் கல்விக்கு சொந்தக்காரர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. சீனர்களிடமிருந்தும், அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்ட நவீன அறிவியலை ஐரோப்பியர்கள் தமது என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம். "வெள்ளையர்களை உலகிலேயே உன்னதமான கலாச்சாரம் கொண்ட சிறந்த இனம். வெள்ளை இனத்தில் மட்டுமே மேதாவிகள் தோன்ற முடியும்." என்பன போன்ற நிறவெறிக் கருத்துக்கள் அங்கிருந்து தான் உதயமாகின்றன.

சித்தர்கள் யார்? சித்தர்கள் தமிழர்களா? அவர்களது அறிவியலை, தமிழர்களது அறிவியலாக கருதலாமா? தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியின் பின்னர், சித்தர்கள் மீதான ஆர்வம் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே சித்தர்கள் பற்றிய நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், தொலைக்காட்சி தொடர்கள் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர வழிவகுத்தது. புனைவுகளை கலந்து தயாரிக்கப்பட்ட மர்மதேசம், மற்றும் சித்தர்கள் குறித்த தொடர் நாடகங்களும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கவர்ந்திருந்தன. இருப்பினும், அந்த தொடர்கள் தோற்றுவிக்காத அரசியல் விழிப்புணர்வை, "ஏழாம் அறிவு" எனப்படும் வணிகப் படம் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்த திரைப்படம் சித்தர்களின் பற்றிய அறிவியல் தகவலை, தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றது.

வெறும் வாய் மென்று கொண்டிருந்த தமிழ் இனவாதிகளுக்கு அவல் கிடைக்கவே, "தமிழர்கள் உலகிற்கே நாகரீகத்தை சொல்லிக் கொடுத்த உன்னத மனிதர்கள்." என்று தற்பெருமை கொள்ளத் தொடங்கி விட்டனர். ("ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுப்பது எமது கடமை." என்று இனவாத வெள்ளையர்களும் இறுமாப்புடன் கூறிக் கொண்டனர்.) தமிழ் இனவாதிகளின் உரிமை கோரல், சித்தர்களின் கொள்கைகளுக்கே முரணானது. தமிழகத்தின் சித்தர்கள் மரபின் மூலவராகக் கருதப்படுபவர் திருமூலர். தமிழ் மொழியிற் சிறந்த தத்துவமாக கருதப்படும் திருமந்திரத்தை எழுதியவர். திருமூலர் தன்னை ஒரு குறுகிய எண்ணம் கொண்ட தமிழ் இனவாதியாகவோ, அல்லது சைவ மத அடிப்படைவாதியாகவோ என்றுமே காட்டிக் கொள்ளவில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" போன்ற வாசகங்கள் மூலம் அவர் தன்னை ஒரு சர்வதேசவாதியாக தான் காட்டிக் கொள்கிறார்.

முதலில், சித்தர்கள் என்றால் யார்? நாலாயிரத்திற்கும் அதிகமான நோய்களைப் பற்றியும், அவற்றின் குணம் குறிகளையும், நோய் தீர்க்கும் மருந்துகளையும் சித்தர்கள் தமிழில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். நவீன மருத்துவம் பயின்றோர், இவற்றை புறக்கணிப்பது அறிவீனம். இந்த விடயம் குறித்து பிறகு பார்ப்போம். சித்தர்கள் என்றால், மருத்துவர்கள் என்பது போன்ற கருத்து தவறானது. பல்வேறு பட்ட துறைகளில் சித்தர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

தத்துவ ஆசிரியராக, மொழியியல் அறிஞராக, சமூக ஆய்வாளராக மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களாக கூட சித்தர்கள் இருந்துள்ளனர். சித்தர்களை நமது காலத்தில் விஞ்ஞானி என்று அழைப்பார்கள். நமது காலத்தில் அரிய கண்டுபிடிப்புகளை செய்த விஞ்ஞானிகள் எல்லோரும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் அல்ல. தேடல், திறமை, அறிவு, புத்திசாதுர்யம் என்பனவே அவர்களை விஞ்ஞானிகளாக்கியது. உதாரணத்திற்கு, ஒரு இலத்திரனியல் கண்டுபிடிப்பை செய்தவர் மட்டுமே விஞ்ஞானி அல்லர். சமூகத்தை ஆய்வு செய்தவரும், இயற்கையின் இரகசியங்களை தத்துவங்களாக விளக்கத் தெரிந்தவரும் விஞ்ஞானி தான்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகளை சித்தர்கள் என்று அழைத்தனர். சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தில்,அல்லது நாட்டில் மட்டும் தோன்றவில்லை. உலகம் முழுவதும் இருந்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களினதும் பூர்வீகம் கூட பல வகைப் பட்டது. சித்தர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். நம் மத்தியிலும் வாழ்கின்றனர். நாம் அவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாததால், கிறுக்கன் என்று நினைத்திருப்போம்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர்களையும், அன்றைய மக்கள் "புத்தி சுவாதீனமற்ற பைத்தியக்காரர்களாக" கருதினார்கள். தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன், ஷவோலின் ஆலயத்தினுள் சுவரை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாராம். யாருடனும் எதுவும் பேசாமல், நாட்கணக்கில் சுவரை வெறித்துப் பார்த்த போதிதர்மனை பார்த்தவர்கள் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள். அந்த "புத்திசுவாதீனமற்ற" நபர் தான், ஜென் பௌத்தர்களால் தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கப் படுகிறார். கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள் அவரை, "தமிழ் தேசிய வீர புருஷனாக" வெள்ளித்திரையில் காட்டினார்கள்.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்று, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதிய சித்தர்களை, தமிழ்த் தேசியத்தின் தூண்களாக திரித்துக் கூறும் போக்கு அபாயகரமானது. அது சித்தர்களுக்கே விரோதமான போக்கு மட்டுமல்ல, அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு "பேட்டன்ட்" உரிமை கோருவது போன்றது. அமெரிக்க, ஐரோப்பிய தேசியவாதிகளும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், தேசியவாதிகளிடம் இருந்து அறிவியலை விடுதலை செய்ய வேண்டிய மாபெரும் கடமை மக்களுக்குண்டு. அறிவியல் அனைத்துலக மக்களின் பொதுச் சொத்து.

திருமூலர் அதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளார், என்பதை மறந்து விடலாகாது. சிவ பக்தனான திருமூலர், சைவ சித்தாந்தவாதிகள் போன்று "ஒரு இந்துவாக" வாழவில்லை. சிவனைத் தவிர வேறெந்த கடவுளையும் ஏற்க மறுத்தார். யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் மையமாகக் கொண்ட "ஓரிறைக் கோட்பாட்டை" திருமூலர் அன்றே போதித்தார். அது மட்டுமல்ல, ஆகம வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவராக, ஆலயம் சென்று தொழுவது வீண்வேலை என்றும் சாடினார். "அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்..." என்று அன்பிலே இறைவனைக் கண்டார்.

"அறிவியல் மக்கள் மயப் படுத்தப் பட வேண்டும்", என்ற நல்லெண்ணத்துடன் தான், திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதினார். பண்டைய தமிழர்கள் பேசிய இலகு தமிழில், அந்த செய்யுள்கள் இயற்றப் பட்டன. திருமூலரை அடியொற்றிய சித்தர்களும், தமிழ் மொழியில் தமது குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பாடநூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். "அறிவியலை கற்பதற்கு குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்," என்ற மூட நம்பிக்கையை, சித்தர்கள் அன்றே தகர்த்திருந்தனர்.

உலகம் முழுவதும், சோஷலிச இயக்கம் வளர்ந்த காலத்தில் தான், தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமென்ற அரசியல் மயப் பட்டது. அடித்தட்டு மக்களும் கல்வியறிவு பெறுவதற்கு, அவர்களது தாய் மொழியில் கற்பிப்பது அவசியம், என்பதை சித்தர்கள் அன்றே உணர்ந்திருந்தனர். அந்த வகையில், சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக கருதப் பட வேண்டும். நமது சித்தர்கள் அறிவியலை மட்டும் உலகிற்கு அறிமுகப் படுத்தவில்லை, கூடவே சோஷலிச தத்துவங்களையும் கூறிச் சென்றனர்.

திருமூலர் போன்ற சித்தர்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் தமிழர்களை சமதர்மவாதிகளாக உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். சமதர்மக் கொள்கை மூலம், நாம் அறிவியல் மேன்மை அடையலாம் என்பதையே சித்தர்களது வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. தூய இனத் தேசியவாதம் பேசினால், திருமூலரையும் ஒதுக்க வேண்டியேற்படும். ஏனெனில் திருமூலர் ஒரு தமிழரல்ல! அவர் ஒரு காஷ்மீர்க் காரன்!! திருமூலரின் பிறப்பிடம் கைலாச மலைக்கு தெற்கே இருந்ததாக, அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அது இன்றைய காஷ்மீராக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

இன்று திபெத்திற்குள் உள்ள கைலாச மலைக்கு அருகில் தான் காஷ்மீர் உள்ளது. ஒரு காலத்தில் காஷ்மீர் முழுவதும் சைவ சமயம் தழைத்திருந்தது. இன்றைக்கும், சிவனுக்கு சிறப்புச் சேர்க்கும் ஒன்பது புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று காஷ்மீரில் உள்ளது. பிற்காலத்தில், ஆரிய- பிராமண இனக்குழுக்களின் வருகையே, காஷ்மீரின் சமூகக் கட்டமைப்பை மாற்றியது. பிராமணீய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திபெத்திய பௌத்த மதத்தில் சேர்ந்தனர். இன்றைக்கும், காஷ்மீரின் லடாக் பகுதியில் பௌத்தர்களே பெரும்பான்மையினர். ஆரிய- பிராமணர்கள், "காஷ்மீர் பண்டிதர்கள்" என்ற பெயரில் இன்றைக்கும் தமது இனத் தூய்மையை பாதுகாத்து வருகின்றனர். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்து தப்புவதற்காகத் தான், காஷ்மீர் பள்ளத்தாக்கு சைவர்களும், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறினார்கள்.

திருமூலர், காஷ்மீரை ஆரியர்கள் ஆக்கிரமித்த காலத்தில் தப்பிப் பிழைத்த அரசியல் அகதியாக இருக்கலாம். தாந்திரிய சைவ சமயம் கட்டிக் காத்து வந்த, அறிவுச் செல்வத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு, தெற்கு நோக்கி பயணமானார். தனது தாயகமான காஷ்மீரை ஆக்கிரமித்த அன்னியர்கள், சைவ மதத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்று, அவர் ஞானதிருஷ்டியால் உணர்ந்திருப்பார். இன்னமும் ஆரியரின் கால் படாத தமிழகம், புகலிடம் கோருவதற்கு சிறந்த இடம் என்று நினைத்திருப்பார்.

காஷ்மீரத்து திருமூலர் தமிழகம் வந்து, பழனி அருகில் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். ஆரியக் கலப்பற்ற தமிழ் மொழி, இந்திய உப கண்டத்திலேயே பழமையான மொழியாகும். அதன் காரணமாகவே, தமிழை கடவுளின் மொழி என்று, பிற மாநிலத்தவர்கள் மதித்த காலமொன்று இருந்தது. சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது. அதாவது, சித்தர்கள் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை சம்ஸ்கிருத மொழியில் வைத்திருந்தனர். ஆரியர்கள் அந்த அறிவுச் செல்வத்தை கைப்பற்றி, தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்கள், சமஸ்கிருதத்துடன், கூடவே அறிவியலையும், ஆரியரிடம் பறிகொடுத்தார்கள். பல நூறாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா வரையில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அவற்றை ஆரியரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டனர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த பாக்தாத்தில், அறிவியல் குறிப்புகள் யாவும் அரபு மொழியில் எழுதி வைக்கப் பட்டன. அவற்றை பின்னர், ஐரோப்பியர்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொண்டனர். அந்த லத்தீன் மொழிபெயர்ப்புகள் தான், பிற்கால ஐரோப்பியரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தது.

பாக்தாத்தில் கூடிய அறிஞர்கள், தமிழ் சித்தர்களின் குறிப்புகளை மட்டுமல்ல, சீன தேசத்து சித்தர்களின் குறிப்புகளையும் அரபியில் மொழிபெயர்த்தார்கள். கூடவே அரேபிய சித்தர்கள் எழுதிய அறிவியல் நூல்களையும் மறந்து விடலாகாது. இவை எல்லாம் தான், லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டன. இவற்றை எல்லாம் தொகுத்து தான், நவீன விஞ்ஞானம் உருவானது. இந்திய, சீன, அரபு அறிஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஐரோப்பியர் தமது என்று உரிமை கோரினார்கள். மோசடிக் கார ஆங்கிலேயர்கள், தமது கண்டுபிடிப்புகள் என்று சொல்லி, எமக்கு போதித்தார்கள்.

நாம் இன்று பாடசாலைகளில், கல்லூரிகளில் கற்கும் நவீன விஞ்ஞானத்தின் ஒரு பகுதி, ஏற்கனவே சித்தர்களால் தமிழில் எழுதப்பட்டுள்ளன, என்ற உண்மை எமக்குத் தெரியாது. இது எவ்வளவு பெரிய அறியாமை? ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆரியரால் சிறைப் படுத்தப் பட்டிருந்த தமிழரின் அறிவியல், அரேபியரால் விடுதலை செய்யப் பட்டது. வரலாற்றில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்புமுனைகளால் தான், உலகில் நாகரிக வளர்ச்சி சாத்தியமானது. இல்லாவிட்டால், இன்றைக்கு நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.

வட இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆரியர்கள், தென்னிந்தியாவில் மறைந்திருந்த அறிவியலை தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு உளவாளியை அனுப்பி வைத்தனர். இந்துப் புராணக் கதைகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதே நேரம், வடக்கே உள்ள "எதிரி நாடொன்றின்" வரலாற்றுக் குறிப்புகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் கூட, அவரை "தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய மாமுனிவர்" என்று சிலாகித்து பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்த திருமூலரும், அந்தப் பிரபலமான வட நாட்டு ஒற்றர் பற்றி கேள்விப் பட்டிருந்தார். யார் அந்த உளவாளி?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"

19 comments:

M.Senthil Kumar said...

பேர மட்டுமாவது சொல்லிருக்கலாம். இந்த அளவுக்கு சஸ்பென்ஸ்சா? அடுத்த பதிவு எப்போன்னு இனிமேல் டயம் போடுங்கணே!

kumar said...

எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கும் இந்த
தொடரை எழுத.
என் வணக்கங்கள் பல.

kumar said...

ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் எனக்குண்டு.
யூதர்களை நினைத்து புளகாங்கிதம் அடைகிறார்கள் இங்குள்ள
பார்ப்பனர்கள்.இவர்களை நாம் ஆரியர் என்கிறோம்.
ஆரியர்கள் உலகாளப்பிறந்தவர்கள் என்று முழக்கமிட்டு
யூதர்களை ஒழித்துக்கட்டியது ஹிட்லர்.
என்ன முரண்பாடு இது?

Kalaiyarasan said...

//ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் எனக்குண்டு.
யூதர்களை நினைத்து புளகாங்கிதம் அடைகிறார்கள் இங்குள்ள
பார்ப்பனர்கள்.இவர்களை நாம் ஆரியர் என்கிறோம்.
ஆரியர்கள் உலகாளப்பிறந்தவர்கள் என்று முழக்கமிட்டு
யூதர்களை ஒழித்துக்கட்டியது ஹிட்லர்.
என்ன முரண்பாடு இது?//

பார்ப்பனர்கள் ஹிட்லரையும் போற்றுகின்றார்கள்.கொள்கைகளையும் ஏற்கிறார்கள். அதே நேரம், யூதர்களையும் நினைத்து புளங்காகிதம் அடைவதற்கு காரணம், அவர்களது மேற்குலக ஆதரவு நிலைப்பாடு. இன்றைக்கு ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இதற்குப் பின்னணியில் ஒரு இரகசியம் உள்ளது. இன்றைய நவீன இஸ்ரேலியர்கள் உண்மையான யூதர்கள் அல்ல. இனத்தால் அவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள், மதம் இரண்டாம் பட்சம் தான். ஹிட்லரும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து யூதர்களை வெளியேற்ற மட்டுமே நினைத்தான். அதே நேரம், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அமைக்க ஆதரவு தெரிவித்தான். அரேபியரை ஐரோப்பிய வாசலில் வைத்து தடுத்து நிறுத்துவதற்கு யூதர்களின் உதவி தேவைப்படுகிறது.

பாஹிம் said...

யார் அவர்? அகத்தியரா?

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

balakumar said...

balakrishnan

respected kalaiyarasan sir

i have one doubt about indhu religion is come from china or its one part come from china because a book i have read is written by Karna manoharan of title ariyar dravidhar thamizhar. in this book he told the early history of Aryan described most around central Asia by how they are moved form a place to reach other place. the year for the Aryan invasion details from 3000 b.c to 1500 b.c. kindly go through his book you will get some useful detail from his book of the origin place of Aryan i kindly request once again

thank you

balakumar said...

balakrishnan

Respected கலையரசன் sir

i have one doubt about indhu religion is come from china or its one part come from china because a book i have read is written by Karna manoharan of title ariyar dravidhar thamizhar. in this book he told the early history of Aryan described most around central Asia by how they are moved form a place to reach other place. the year for the Aryan invasion details from 3000 b.c to 1500 b.c. kindly go through his book you will get some useful detail from his book of the origin place of Aryan i kindly request once again

thank you

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
1.ஆரியர் வருகை என்பதை ஆதரபூர்வமான வரலாறாக எழுதி இருக்கிறீர்கள்.இது சரியாக நிரூபிக்கப் படாத விவரம் அல்லவா?

2./சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது/
எந்த‌ ஆய்வு? கொஞ்ச‌ம் விவ‌ர‌ம் அளித்தால் ந‌லம்.
3. கிரேக்க‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் ச‌மகால‌த்தில்(?) ப‌ல அறிவிய‌ல்,த‌த்துவ‌ இய‌ல்க‌ளில் முன்னேற்ற‌ம் க‌ண்டு இருந்த‌ன‌ர்.அவ‌ர்க‌ளிட‌ம் இருந்தே மொழி பெயர்க்கப் பட்டு அர‌புக்க‌ளிட‌ம் சென்றது உம்மையாதுக‌ளின் ஸ்பெயின் ஆட்சியில்[756CE_1031AD] ஐரோப்பாவில் அறிவிய‌ல் ப‌ர‌விய‌து.
http://en.wikipedia.org/wiki/Umayyad_Caliphate
இது இந்தியாவில் இஸ்லாம் ப‌ர‌வுவ‌த‌ற்கு முன்பே ந‌டை பெற்ற‌து.

4./ பாக்தாத்தில் கூடிய அறிஞர்கள், தமிழ் சித்தர்களின் குறிப்புகளை மட்டுமல்ல, சீன தேசத்து சித்தர்களின் குறிப்புகளையும் அரபியில் மொழிபெயர்த்தார்கள். கூடவே அரேபிய சித்தர்கள் எழுதிய அறிவியல் நூல்களையும் மறந்து விடலாகாது./

திரு அல் பைருனியை இப்படி கூறலாம்.எனினும் அவர் தமிழ் சித்தர்களின் குறிப்புகளில் இருந்து அறிவியல் கற்றுக் கொண்டார் என கூற சான்றுகள் உண்டா?
http://en.wikipedia.org/wiki/Ab%C5%AB_Ray%E1%B8%A5%C4%81n_al-B%C4%ABr%C5%ABn%C4%AB

5./ வட இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆரியர்கள், தென்னிந்தியாவில் மறைந்திருந்த அறிவியலை தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு உளவாளியை அனுப்பி வைத்தனர்/
யார் அந்த உளவாளி?
அகத்தியர் ஆக இருக்க்லாம்

Kalaiyarasan said...

//1.ஆரியர் வருகை என்பதை ஆதரபூர்வமான வரலாறாக எழுதி இருக்கிறீர்கள்.இது சரியாக நிரூபிக்கப் படாத விவரம் அல்லவா?//

நான் ஆரியர் படையெடுப்பு என்பதை விட, ஆரியர் வருகை என்றே கூற விரும்புகிறேன். ஆரியர் படையெடுப்பு நிரூபிக்கப் படவில்லை. ஆனால், ஆரிய இனங்களின் பும்பெயர்வை நிரூபிக்க முடியும். இனங்கள் நாடு விட்டு நாடு புலம்பெயர்வது உலகம் முழுவதும் நடந்து வருகின்றது. வட இந்திய இனங்களுக்கும், ஐரோப்பிய இனங்களுக்கும் பொதுவான சொற்கள், கலாச்சாரம், தெய்வங்கள் என்பன அதனை நிரூபிக்க போதுமானது.

//2./சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது/
எந்த‌ ஆய்வு? கொஞ்ச‌ம் விவ‌ர‌ம் அளித்தால் ந‌லம்.//

சித்தர்கள் பற்றிய நூல் ஒன்றில் வாசித்திருக்கிறேன். அது எது என்று நினைவுக்கு வரவில்லை. இதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்க முடியும். ஆரியர்களின் படையெடுப்பு நடக்கவில்லை. இந்திய ஆரியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆகையினால், அவர்கள் பேசிய சம்ஸ்கிருத மொழியும் இந்திய மொழி அல்லவா? பிராமி மொழி, தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் முந்திய மொழியாகும். அதிலிருந்து இவ்விரண்டும் கிளை மொழிகளாக பிரிந்து சென்றுள்ளன. இந்த ஆய்வு மொழியியல் அறிஞர்களுடையது.

//3. கிரேக்க‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் ச‌மகால‌த்தில்(?) ப‌ல அறிவிய‌ல்,த‌த்துவ‌ இய‌ல்க‌ளில் முன்னேற்ற‌ம் க‌ண்டு இருந்த‌ன‌ர்.அவ‌ர்க‌ளிட‌ம் இருந்தே மொழி பெயர்க்கப் பட்டு அர‌புக்க‌ளிட‌ம் சென்றது உம்மையாதுக‌ளின் ஸ்பெயின் ஆட்சியில்[756CE_1031AD] ஐரோப்பாவில் அறிவிய‌ல் ப‌ர‌விய‌து.
http://en.wikipedia.org/wiki/Umayyad_Caliphate
இது இந்தியாவில் இஸ்லாம் ப‌ர‌வுவ‌த‌ற்கு முன்பே ந‌டை பெற்ற‌து.//

அதனை நானும் படித்தேன். சித்தர்கள் அரேபியாவுடன் வைத்திருந்த தொடர்பு பற்றிய தகவல்கள் பல ஊகங்களாகவே இருக்கின்றன. இருப்பினும் அது பற்றி அடுத்தடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். நான் இந்தப் பதிவில் எழுதியுள்ளது, சரித்திர நூல்களில் காணப்படும் குறிப்புகளை மட்டுமே. அதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

Kalaiyarasan said...

//யார் அந்த உளவாளி?
அகத்தியர் ஆக இருக்க்லாம்//
ஆமாம், அவரைப் பற்றித் தான் அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.

Kalaiyarasan said...

சார்வாகன், இந்த நூலில் இருந்து சித்தர்கள் பயன்படுத்திய சம்ஸ்கிருத மொழி பற்றிய தகவல் கிடைத்தது.
The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot),

ஆதித்த கரிகாலன் said...

திருமூலர் கஷ்மீர் தேசத்தவர் என்பதுபற்றி எந்தநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Kalaiyarasan said...

//திருமூலர் கஷ்மீர் தேசத்தவர் என்பதுபற்றி எந்தநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது? //

The Encyclopaedia Of Indian Literature, Siddha Literature (Tamil), Page 4092

nakkeeran said...

அறிவியல் பற்றி எழுதும் போது அறிவியல் அடிப்படை கொஞ்சமும் இல்லாது எழுதப்படுவதற்கு இந்தக் கட்டுரை நல்ல எடுத்துக் காட்டு. திருமூலர் கிபி 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவருக்கும் ஆரியர் வருகைக்கும் குறைந்தது 1500 ஆண்டுகள் உண்டு. திருமந்திரத்தின் எளிய தமிழ்நடையே அதற்குச் சான்று. திருமூலரை ஒரு சோசலீசவாதியாகச் சித்தரிப்பது மற்றும் கஷ்மீரில் பிறந்தவர் என்று அடையாளம் காண்பது அறிவீனம். திருமூலர் மதத்தால் சைவர். மொழியால் தமிழர். என்னை இறைவன் நன்றாகப் படைத்தனம் தமிழை நன்றாகச் செய்யுமாறே என்று பாடியுள்ளார். திருமூலர் கஷ்மீரி என்றால் எப்படி இதுபோல் பாட முடியும். இறுதியாக அதென்ன தமிழ் இனவாதிகள்? ஒருவன் தமிழ் மொழியின் சிறப்பை தமிழினத்தின் பெருமையைப் பேசினால் அவன் இனவாதியா?

Kalaiyarasan said...

வீரமா முனிவர் தமிழுக்கு நிறைய தொண்டு செய்துள்ளார். ஆனால் அவர் தமிழர் அல்ல. இத்தாலியை சேர்ந்த பாதிரியார். இந்த உண்மையை நான் கூறினால், ஏற்றுக் கொள்ள மறுப்பீர்களா? அதே போன்று, திருமூலர் ஒரு காஷ்மீரி, ஆனால் தமிழுக்கு தொண்டு செய்தார் என்பதை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்? இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத, குறுகிய எண்ணம் கொண்ட மன நிலையைத் தான் நாங்கள் தமிழினவாதம் என்று குறிப்பிடுகின்றோம். திருமூலர் காஷ்மீரி என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் எழுதுயிருப்பேன் என்று நினைப்பது அறிவீனம். நீங்கள் இன்னும் கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை என்பது தெரிகின்றது. ஏற்கனவே மேலே ஒருவர் கேட்டதற்காக, ஆதாரம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதனை வாசித்து, ஆய்வு செய்யவும். மேலும் ஒருவர் சைவ சமயத்தோடு, சோஷலிசக் கருத்துகளையும் கூறி இருந்தால், அவரை சோஷலிஸ்ட் என்று கூறுவதில் தவறில்லை. நீங்கள் எவ்வாறு திருமூலர் ஒரு தமிழர், சைவர் என்றெல்லாம் உரிமை கோர முடிகின்றது? அதனோடு திருமூலர் ஒரு சோஷலிஸ்ட் என்பதையும் சேர்த்து, கொண்டால் என்ன குறைந்து போய் விடும்?

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

மொழி என்பது அறிவு. மொழியுணர்வும் இன உணர்வையும் தாண்டி அந்த அறிவை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நமது கடமை.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் பல

C M Amrtheswaran said...

இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக ஏற்க முடிய வில்லை. சம்ஸ்கிருதம் தமிழில் இருந்து தோன்றியதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் தமிழில் இல்லாத ஒலிகள் எப்படி வந்தன? அதற்கு பலகாலம் வரை எழுத்து இல்லாமல் இருந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவது போல் உள்ளது.

தென் மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்து தோன்றியவை என்பதை ஆந்திரர்கள் பலர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து தெலுங்கு மொழி பிறந்தது என்பதைக் கூட ஏற்பதில்லை. பிராகிருதத்திலிருந்து சம்ஸ்கிருதம் தோன்றும் போது தெலுங்கும் அதனுடன் சேர்ந்து பிறந்தது என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கின்றனர்.

சித்தர் என்பது கூட தமிழில் உச்சரிக்கப் படுவது போல் இல்லாமல் dh என்ற ஒலியுடன் Sidhdha என்றே உச்சரிக்கப் படல் வேண்டும். அப்படியானால் தமிழில் "த" என்ற எழுத்துக்கு dh ஒலி கிடைக்க வேண்டுமானால் அதற்கு முன்பாக "ந்" வந்தால் மட்டுமே அது சாத்தியம். சித்தர் என்பதற்கு என்ன பொருள். சித்திகளை அடைந்தவர்கள் சித்தர்கள். Sithi அல்ல Sidhdhi. இந்த இரண்டாவது வார்த்தையே தமிழ் வார்த்தை இல்லையே. இப்படிப் பல முரண்பாடுகள் உள்ளன.

C M Amrtheswaran said...

இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக ஏற்க முடிய வில்லை. சம்ஸ்கிருதம் தமிழில் இருந்து தோன்றியதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் தமிழில் இல்லாத ஒலிகள் எப்படி வந்தன? அதற்கு பலகாலம் வரை எழுத்து இல்லாமல் இருந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவது போல் உள்ளது.

தென் மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்து தோன்றியவை என்பதை ஆந்திரர்கள் பலர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து தெலுங்கு மொழி பிறந்தது என்பதைக் கூட ஏற்பதில்லை. பிராகிருதத்திலிருந்து சம்ஸ்கிருதம் தோன்றும் போது தெலுங்கும் அதனுடன் சேர்ந்து பிறந்தது என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கின்றனர்.