Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Saturday, March 17, 2018

ஆப்பிரிக்கக் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு ஆரோகரா!


தமிழர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை பற்றி, ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளனர். சொத்து வழி உறவு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உழவுத் தொழிலில் பயன்படுத்தும் சாதனங்கள், போன்றவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.

இந்திய உப கண்டத்தில் மட்டுமல்லாது, ஆபிரிக்காவிலும் வேரூன்றியுள்ள சாதிய சமுதாய அமைப்பும், ஒரே பூர்வீகத்தை உறுதிப் படுத்துகின்றது. காசி நகரம் திராவிடர்களுடையதாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவின் பண்டைய குஷி ராஜ்யத்தின் பெயருடன் ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.

பண்டைய எகிப்தியரின் ஓசிரிஸ்-இசிஸ் கதை, தமிழர்களின் கோவலன்- கண்ணகி கதையுடன் ஒற்றுமைகளை கொண்டுள்ளது. கண்ணகி அம்மன் வழிபாடு, பண்டிகைகள் சில ஆப்பிரிக்க மதங்களிலும் காணப் படுகிறன. எகிப்தியரின் ஆமுன் தெய்வத்திற்கும், அம்மனுக்கும் இடையிலான பெயர்ப் பொருத்தமும் கவனிக்கத் தக்கது.

ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்!

தமிழர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் என்று நிரூபிப்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இருந்தாலும், தமிழினவாதிகள் எப்பொழுதும், தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மூத்த குடிப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஆபிரிக்கர்களுடனான ஒற்றுமைகளை புறக்கணிப்பதன் காரணம் என்ன?

தமிழினவாதக் கோட்பாடு, ஒரு ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு. ஐரோப்பியர்களை நாகரீகத்தில் உயர்ந்தவர்களாகவும், ஆப்பிரிக்கர்களை நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காட்டுமிராண்டிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம்: //ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”). இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது.//
(https://www.facebook.com/rosyrascalring/posts/1268068239894446?hc_location=ufi)

சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

Sunday, August 17, 2014

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.

மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.

யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். 

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.

முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள். அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)

இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)

சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல. ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.

தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன. இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.

“முருகன் வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர். முருகன் வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருகன் வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.

ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருகன் வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.

யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை "பிர்" என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர். அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை  "கவ்வல்" என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் "கவ்வாலிகள்" ஆவர். 

இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் "காவாலி" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். 

ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை. குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர். யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர். 

அலெக்சாண்டரின் காலத்திலேயே,  ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன. ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.

யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது. ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.

உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 - 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா "யாசிட்" இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது. இன்றைய லெபனானில் பிறந்த "அடி பின் முஸாபர்" (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார். அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.

ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.

இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை. ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை. 

19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர். அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.

2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.

அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி - இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர். 

யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.

ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர். யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.

துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன. அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.

வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர். தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர். 

யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.


யேசிடி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

Saturday, December 24, 2011

எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"



[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]
(பத்தாம் பாகம்)



இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.

"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.

இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.

சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:
A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam)

இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.

துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.

இன்றைக்கு, சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, தமிழினவாதிகள் எல்லாளனை தமது நாயகனாக மகிமைப் படுத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றை திரிக்கின்றனர். அன்று நடந்ததை சிங்கள-தமிழ் யுத்தமாகவோ, அல்லது பௌத்த-இந்து முரண்பாடாகவோ பார்ப்பது தவறு. கதிர்காமம், அன்றில் இருந்து இன்று வரையில், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான புண்ணியஸ்தலமாகும். முஸ்லிம்களும் கதிர்காமம் சென்று வழிபடுவது வியப்பை உண்டாக்கலாம். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) இன்று அங்கே, "இந்துக் கதிர்காமம்", "பௌத்த கதிர்காமம்", "இஸ்லாமிய கதிர்காமம்" என்று மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக வாழ்ந்த மக்களை, பிற்காலத்தில் வந்த மதங்கள் மூன்றாகப் பிரித்து வைத்துள்ளன. (ம்ஹ்ம்... மனிதன் மாறி விட்டான்... மதத்தில் ஏறி விட்டான்...)

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது கவனத்திற்கு உரியது. ஏனெனில், பொதுவாக, "நாகரீகமடையாத காட்டுமிராண்டி கால பழங்குடி சமுதாயங்கள்", தமது கடவுளை வீர சூர பராக்கிரமசாலிகளாகவே சித்தரிப்பார்கள். முருகனின் விடயத்தில் அது தலைகீழாக நடந்துள்ளது. ஆதிகாலம் தொடக்கம் கதிர்காமத்தில் முருகனை பூஜித்து வரும் பழங்குடி இனமான வேடுவர்கள், "உலகில் உள்ள அனைத்து அறிவையும் திரட்டி வைத்திருந்த ஞானியாகவே" முருகனை வழிபடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட வேடுவர்களைப் பொறுத்த வரையில், வேட்டைக்கான நிபுணத்துவத்திற்கு மட்டும் கந்தனின் அருள் போதுமானதாக இருந்துள்ளது.

"சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக", இந்தியாவில் இந்து மதம் கந்தனைப் போற்றுகின்றது. அதே போன்று, "புத்தருக்கு ஞானோபதேசம் செய்ததாக", சீனாவில் பௌத்த மதம், முருகனை போற்றுகின்றது. ஆதி கால முருகனின் கையில், போர்க் கருவியான ஈட்டி (வேல்) இருக்கவில்லை. (கதிர்காம கோயிலின் மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப் பட்டிருப்பதால், பல சந்தேகங்கள் எழுவது இயற்கை. அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை.) ஆதி கால முருகக் கடவுளின் கையில் ஒரு ஊன்று கோல் இருந்தது. பழனி முருகனும், கையில் ஒரு தடி வைத்திருப்பதால், "தண்டாயுதபாணி" என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை சேர்ந்த வேடுவர்கள், முருகனை ஒரு கிழவனாகவே வழிபட்டுள்ளனர். ஒரு வயோதிபரின் கையில் ஊன்றுகோல் இருப்பது வழமை தானே? இலங்கையில் வாழ்ந்த வயதான ஞானி (தீர்க்கதரிசி) யின் பெருமைகள், மேற்கு ஆசிய நாடுகளிலும் அறியப் பட்டுள்ளன. (அந்த விபரங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)

"எதற்காக நமது தெய்வங்களின் கைகளில், எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கின்றது?" என்பது பல இந்துக்களின் மனத்தைக் குடையும் கேள்வி. அதற்கான விடை இது தான். இவை எல்லாம் ஆரிய மயமாக்கப் பட்ட தெய்வங்கள். முருகன் மட்டுமல்லாது, சிவன், கிருஷ்ணன் போன்ற பல இந்திய தெய்வங்கள் ஆதி காலத்தில் ஆயுதங்களோடு காட்சியளிக்கவில்லை. (உதாரணத்திற்கு, திபெத்திய சிவனின் கையில் சூலாயுதம் கிடையாது.) என்றைக்கு, ஆரிய இனத்தவர்களும் அவற்றை தமது கடவுளராக ஏற்றுக் கொண்டனரோ, அன்றில் இருந்து அவர்கள் கைகளில் ஆயுதங்கள் முளைத்து விட்டன.

அந்நிய வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட உள்நாட்டு கறுப்பின மக்கள், சில போர்த் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். காளி, பைரவர் போன்ற தெய்வங்கள் போரின் நிமித்தம் முக்கியத்துவம் பெறுவதால், அவற்றின் கைகளில் ஆயுதங்கள் இருந்துள்ளன. பிற்காலத்தில், போரில் வென்ற இந்துக்களான ஆரியர்கள், போர்த் தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம், உள்ளூர் மக்கள் மீது கலாச்சார அடிமைத்தனம் திணிக்கப் பட்டது. இந்த அடிமைத்தனம் இன்றைக்கும் பலரின் மனதில் காணப்படுகின்றது.

வரலாற்றில் ஆரிய இனம், அறிவு சார் சமுதாயமாக இருக்கவில்லை. மற்றைய இன மக்கள் மீது போர் தொடுத்து, அடிமைப் படுத்தி, சொத்துகளை சூறையாடி வாழ்ந்த நிஜமான காட்டுமிராண்டி சமுதாயமே ஆரிய இனம் ஆகும். அவர்களைப் பொறுத்த வரையில், விவேகத்தை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில், வெறித்தனமான வீரம் தான் அவர்களை பல நாடுகளுக்கு அதிபதிகளாக்கியது. பிறர் செல்வங்களை கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது. (இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. ரிக் வேதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.) இன்றைக்கும், இனவெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், ஆரியரின் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை கண்கூடாக காணலாம். "மூத்தகுடித் தமிழர்கள்", ஆரியர்கள் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. ஒரு அறிவு சார்ந்த சமுதாயமாக, நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், தமிழர்கள் என்றைக்கு இந்து மதத்தை பின்பற்றத் தொடங்கினரோ, அன்றில் இருந்தே தமிழரின் பெருமைகள் மறக்கப் பட்டு விட்டன.

இன்றைய நவீன யுகத்திலும், இந்து மதத்தவர்கள், முருகனை ஒரு யுத்தக் கடவுளாகத் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும், முருகன் கோயில்களில் நடைபெறும் "சூரன் போர்" அதற்கு சான்று பகர்கின்றது. முருகன் கனரக ஆயுதங்களுடன் சூரனோடு போரிட்ட காட்சியை, மதச் சடங்கு என்ற பெயரில் மேடையேற்றுகின்றனர். சூரனின் படைகளை துவம்சம் செய்த முருகன், சூர சம்ஹாரத்திற்குப் பிறகு கதிர்காமத்தில் தங்கி விட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர். (எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு யுத்தக் கடவுளான முருகனிடம் ஆசீர்வாதம் வேண்டியதில் வியப்பில்லை.)

மகாவம்சமும் ஆரிய மயப் பட்ட மன்னர்களின் வரலாற்றை தான் கூறுகின்றது. மகாவம்சம் மட்டுமல்ல, எந்தவொரு இந்துப் புராணமும், இதிகாசங்களும் பூர்வீக மக்களின் கதைகளை எழுதியதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், அந்த மக்களை "நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகம்" என்று தான் கூறுகின்றன. உதாரணத்திற்கு, இராவணனின் மக்களை அரக்கர்கள் என்று, இந்துக்களின் இராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. பௌத்தர்களின் மகாவம்சம், இலங்கையில் புத்தரின் வருகைக்கு முன்னர், பேய்களை போன்ற தோற்றம் கொண்ட மக்கள் (இயக்கர்கள்) வாழ்ந்ததாக எழுதுகின்றது. "அரக்கர்கள், இயக்கர்கள்", இவை போன்ற இழி சொற்களினால், மூத்த குடிகளின் நாகரீகம் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டன.

மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார ஆதிக்கம் என்பதைப் பலர் உணருவதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம், எந்தப் பிரிவினரின், அல்லது சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பது தான் முக்கியமானது. பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் வரையில், அந்தப் பிரிவினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். தமிழ் தேசியத்தை புரட்சிகரமான மாற்று அரசியலாக முன் வைக்க வேண்டுமானால், மதங்களுக்கு எதிரான தார்மீகப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அல்லது அறிய முயற்சிக்காமல், "முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவதில் பயனேது?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்

Sunday, December 18, 2011

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 8]
(எட்டாம் பாகம்)

"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்." என்று சொல்லப் படுகின்றது.
சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?

முருகன் வழிபாடு தமிழகத்திற்கு மட்டுமே உரிமையானதல்ல. பிற திராவிட இனங்களான மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்கள் கூட முருகக் கடவுளை வழிபடுகின்றனர். (http://en.wikipedia.org/wiki/Murugan) இலங்கையில், ஈழத் தமிழர் மட்டுமல்லாது, சிங்களவர்களும் முருகனை தமது விருப்பத்திற்கு உரிய தெய்வமாக கருதுகின்றனர். ஆகவே, முருகன் ஒரு "தமிழ்க் கடவுள்" என்பதற்கு அப்பால், "திராவிடக் கடவுள்" என்று வரையறுக்கலாமா? அது கூட அத்தனை சுலபமானதல்ல. கம்போடியா, வியட்நாம் ஆகிய தூர கிழக்காசிய நாடுகளில், பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னர் முருக வழிபாடு நிலவியது. அங்கெல்லாம், கைவிடப் பட்ட கோயில் கல்வெட்டுகளில் முருகனின் உருவம் தெளிவாகத் தெரிகின்றது. அதற்கும் அப்பால்? "இந்துக்களின் தாயகமான" சீனா, திபெத் ஆகிய நாடுகளில்? மத்திய கிழக்கு நாடுகளில்? முருகனுக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் என்ன தொடர்பு?

வட சீன மாநிலமான மஞ்சூரியாவில், ஒரு குகைக்குள் இருந்து பண்டைய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. பௌத்த மதத்தின் வருகைக்கு முந்திய, புராதன சீன மக்களின் தெய்வங்கள் அவை. அவற்றில் ஒரு தெய்வம், ஆறு முகத்துடன், மயிலுடன் காணப் பட்டது. அதைக் கண்ட அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலருக்கு, மயிலை வாகனமாகக் கொண்ட ஆறுமுகக் கடவுள் நினைவுக்கு வந்தார். ஆயினும், அந்த உருவம் சீனக் கடவுளான மஞ்சுசிறி உடையது. (பார்க்கவும் :
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China) மஞ்சு சிறிக் கடவுள் இன்றைய சீனர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். இருப்பினும், நமக்குத் தெரிந்த முருகனின் உருவத்துடன் ஒத்துப் போகவில்லை. மஞ்சு சிறி தெய்வத்தைப் பற்றிய கதைகளும், முருகனைப் பற்றிய புராணக் கதைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், திபெத்தில் நிலவும் மஞ்சு சிறி பற்றிய கதை ஒன்று, நமது புருவத்தை உயர்த்த வைக்கும்.

திபெத்திய பௌத்த மதமானது, இந்தியாவின் தாந்திரிய மதக் கூறுகளை உள்வாங்கியுள்ளது என்பதை முன்னர் பார்த்தோம். அது இன்றைக்கும், சாமிப் படங்களாக, மங்கள சின்னங்களாக, புராணக் கதைகளாக நிலைத்து நிற்கின்றது. மஞ்சு சிறிக் கடவுள் பற்றிய புராணக் கதை ஒன்று, சூர சம்ஹாரத்தை நினைவு படுத்துகின்றது. ஆனால், திபெத்தில் சூரனின் இடத்தில் யமனை வைத்து சொல்லப் படுகின்றது. யமன் என்ற மரண தேவதை, இந்து சமயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பம்சமல்ல. சீனாவிலும், ஈரானிலும், "மனிதர்கள் இறந்த பின்னர் தீர்ப்பு வழங்கும் யம தர்மன்" பற்றிய நம்பிக்கை நிலவுகின்றது. அந்த நாடுகளில், யமனுக்கு எதிரான போரை, தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே நோக்கினார்கள். இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், அந்தக் கதையை தமது அரசியல் நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை சூர சம்ஹாரம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா?

அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி அது. அண்மைய உதாரணத்திற்கு, லத்தீன் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளலாம்.

பூர்வீக மக்களான செவ்விந்தியரின் கடவுளரும், வழிபாட்டு முறைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினால் உள்வாங்கப் பட்டன. இன்றைக்கும் அந்த நாடுகளில் நடைபெறும் மத வழிபாட்டு விழாக்களில் அதனை அவதானிக்கலாம். தென்னிந்தியாவிலும் அது போன்றே, தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. ஆரியரின் கலாச்சார ஆதிக்கம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு, இது ஒரு சான்றாகும்.

தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைய "நாகரீகமடைந்த தமிழர்கள்", குறவர்கள் போன்ற "நாகரீகமடையாத" பழங்குடியினரை தமது மூதாதையர் என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். "குறவர்களின் தெய்வமான முருகனை கடவுளாக கும்பிடுவோம். ஆனால் குறவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் ஒதுக்கி வைப்போம். ஏனென்றால் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோம்."

முருகனை தமிழ்க் கடவுள் என்று அழைக்கலாம் என்றால், முருகனை "குறக் கடவுள்" என்றும் அழைக்கலாம் அல்லவா? இவ்விரண்டு எடுகோள்களும் சரியானவை அல்ல. உண்மையில், தமிழ்ப் பழங்குடி இனங்கள் முருகன் வழிபாட்டை கைவிடாமல் காப்பாற்றி வந்துள்ளன. இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் முருகன், வள்ளி போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர், அதற்கு மாறாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. அன்றிருந்த வசதி படைத்த பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்றிருந்தனர்.

சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், "கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்" போன்ற பெயர்களில் உள்ளன. சுப்பிரமணியன் என்பதை விட, கந்தன் என்பது முருகனுக்கு நெருக்கமான பெயர். (முருகன் என்பதும் சமஸ்கிருதப் பெயராக இருக்கலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம்.) ஆச்சரியப் படத் தக்கவாறு, "ஸ்கந்தன்" என்ற பெயர் இந்து மதத்தில் மட்டும் அறியப் பட்ட ஒன்றல்ல.

பௌத்த மதத்திலும் ஸ்கந்தன் என்ற பெயர் வருகின்றது. ஆனால், பௌத்த மதம் புத்தரை முதன்மைப் படுத்தியதால், ஸ்கந்தனை காவல் தெய்வமாக தரம் தாழ்த்தி விட்டது. இன்றைக்கும், இலங்கையில் உள்ள புராதன பௌத்த விகாரைகளை
பார்வையிடும் ஒருவர், காவல்தெய்வமான ஸ்கந்தன் சிற்பத்தை நேரில் காணலாம். சீனாவிலும், பௌத்த கோயில்களின் முன்பு ஸ்கந்தன் சிலைகள் காணப் படுகின்றன. சில அறிஞர்கள், ஸ்கந்தன் என்ற சொல்லை, கந்தா என்ற பௌத்த தத்துவத்துடன் சேர்த்துப் பார்க்கின்றனர். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தா, அல்லது பாளி மொழியில் கந்தா என்பது, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வேதனைகளின் தொகுப்பு பற்றிய தத்துவம் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை சேர்க்க வேண்டியுள்ளது. சரித்திரத்தில் ஆரியர்களின் படையெடுப்பு நடக்கவில்லை என்று வாதிக்கும் அறிஞர்கள், சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வேதங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். சம்ஸ்கிருத மொழியும், தேவநாகிரி எழுத்து வடிவமும் இந்தியாவுக்கு உரியது என்பது உண்மை தான். ஆனால், சமஸ்கிருதத்திற்கு முன்னரும், பழமையான மொழிகள் இந்தியாவில் இருந்துள்ளன. பிராமி, பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு தனித்து ஆராயப் பட வேண்டியது. இத்தகைய பொதுவான சர்வதேச மொழிகளின் ஊடாகத் தான், மதங்களும், தத்துவங்களும் பரவியுள்ளன. இல்லாவிட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், சீனர்களும், தமிழர்களும் எவ்வாறு கலந்துரையாடி இருப்பார்கள்? சித்த வைத்திய அறிவியலை கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்த சீன தேச அகத்தியரும், தமிழ்க் கடவுளான முருகனும் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?

அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்று கருதப் படுகின்றது. உளவாளிகள் சேகரிக்கும் தகவல்கள் சில நேரம், உலக ஒழுங்கை மாற்றியமைக்கின்றன. கடல் கொண்ட பாண்டிய நாட்டில் நிலவிய முருக வழிபாடு, அகத்தியர் உதவியால் இன்றைய தமிழகத்தின் பொதிகை மலையில் மீளுயிர்ப்பு கண்டது. திருவள்ளுவர் என்பது ஒருவரைக் குறிக்குமா, என்ற சர்ச்சை போன்று தான், அகத்தியர்கள் பலராக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. அதாவது, பண்டைய காலங்களில், சீனாவில் இருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும், பிற்காலத்தில் அகத்தியர் என்று ஒரு நபராக கருதப் பட்டிருக்கலாம். சித்த மருத்துவம் மட்டுமல்ல, வான சாஸ்திரம் போன்ற பிற அறிவியல் துறைகளிலும், சீனர்-தமிழர் கூட்டுறவு இருந்துள்ளது. முருகனின் பூர்வீகத்தை பற்றிய இரகசியம் அதனை நிரூபிக்கின்றது.

முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லா, அல்லது பழந்தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பா? தமிழர்கள் மட்டுமல்லாது, உலகின் பிற பாகங்களில் வாழ்ந்த மக்களும் முருகனை வழிபட்டனரா? யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தோற்றத்திற்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளில் முருக வழிபாடு பரவியிருந்ததா? அப்படியானால், பண்டைய நாகரீகங்களில் முருக வழிபாடு பல்வேறுபட்ட இனங்களுக்கு பொதுவான மதமாக இருந்துள்ளதா? உலகில் மறைந்து போன நாகரீகத்திற்கும், முருகனுக்கும் தொடர்புண்டா? முருகக் கடவுளின் பூர்வீகம் என்ன? எங்கே உள்ளது?

சர்வதேசியத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டைத் தமிழன் உலகம் போற்ற வாழ்ந்தான். இனத் தேசியவாதத்தால் மதி மயங்கிய இன்றைய தமிழன், இழி நிலைக்கு தள்ளப் பட்டான். முருகன் தமிழ் இனத்திற்கு மட்டுமே சொந்தமான கடவுள் அல்ல. மாறாக, தமிழ் சர்வதேசியவாதிகளுக்கு உரிமையான கடவுள்.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Murugan
Skanda
Manjusri
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China
--------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !