Showing posts with label பழனி முருகன். Show all posts
Showing posts with label பழனி முருகன். Show all posts

Thursday, December 15, 2011

பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஏழாம் பாகம்)

"சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும் தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன. " என்று சுய தம்பட்டம் அடிக்கும் தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர். தமிழ்ச் சித்தர்கள் பலர், சீனா, அரேபியா சென்று தாம் அறிந்தவற்றை கற்பித்துள்ளனர். பண்டைய தமிழர்கள் நம்மைப் போல குறுகிய சிந்தை கொண்ட இனவாதிகளாக இருக்கவில்லை. இருந்திருந்தால், இன்று நாங்கள் சித்தர் அறிவியலுக்காக பெருமைப் பட்டிருக்க முடியாது. அறிவியலை ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக உரிமை பாராட்டுவது பேதைமை. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழகம் வருவதும், தமிழ் நாட்டு அறிஞர்கள் வெளிநாடு செல்வதுமாக, சர்வதேச தொடர்புகள் காரணமாகவே தமிழர் அறிவியலும் வளர்ந்தது.

சித்தர் மரபில் முக்கியமானவராக கருதப்படும் அகத்தியர், சீன தேசத்தில் இருந்து வந்தவர் என்பதை முன்னரே பார்த்தோம். இம்முறை, மேலும் இரண்டு சீனர்களின் பங்களிப்பை விரிவாகப் பார்ப்போம். இவர்களில் ஒருவராவது சீனர் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும், பதினெட்டு சித்தர்களின் பட்டியலில், பெயர் குறிப்பிடப் பட்டவர்களைப் பற்றி மட்டுமே, நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களை விட பல சீன நாட்டு சீடர்கள், அறிவியல் கற்க வந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அதே போன்று, பல தமிழ் சீடர்கள் அறிவுத் தேடல் காரணமாக சீனா சென்று தங்கி விட்டனர். "சீனர்களுக்கு நாம் தான் அறிவு புகட்டினோம்" என்பது தற்புகழ்ச்சி. "சீனர்களுடன் நாம் அறிவியலை பகிர்ந்து கொண்டோம்", என்பதே மெய்யான வரலாறு. எம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டனர். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

போகநாதர் என்ற சித்தரின் கதை அதனை உறுதிப் படுத்துகின்றது. தமிழகத்தில் போகர் அல்லது போகவா முனிவர் என அறியப் படுபவர், சீனாவில் போ யங் (Bo Yang ) என அழைக்கப் படுகிறார். பிறப்பால் அவர் சீனர் என்று நம்பப் படுகின்றது. அதே நேரம், போகநாதர் ஒரு இந்தியர் என்றும் சிலர் கூறுகின்றனர். இரண்டுமே இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை. எந்தவொரு சித்தரும் தன்னை ஒரு இனத்தை, அல்லது தேசியத்தை சேர்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. அத்தகைய அடையாளத்தை ஏற்றுக் கொள்ள விரும்பியதுமில்லை. போகநாதர் தமிழகத்தில் மட்டுமல்லாது, சீனாவிலும் அறிவியலை போதித்தார். இரண்டு நாடுகளும், சித்தர்களின் அருஞ்செயல்களால் நன்மை அடைந்துள்ளன. உண்மையில், போகவா முனிவரை தமிழகம் மறந்து விட்டது. ஆனால், சீனர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். சீனாவில் டாவோயிசம் என்ற மதத்தை உருவாக்கிய லாவோசியும், போகநாத சித்தரும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.(பார்க்க :
Becomes known as Lao-Tzu, founder of Taoism)

வட இந்தியாவில், காசியில் பிறந்த காளிங்க நாதர் என்ற சித்தர், சீனா சென்றிருந்த சமயம், போகநாதர் அவரது சீடரானார். இந்திய ஞானிகள் சீனா சென்று போதனை செய்வது, 5000 அல்லது 3000 வருடங்களுக்கு முன்னர், வழக்கமாக நடந்து கொண்டிருந்த விடயம். பௌத்த மதமும் அவ்வாறு தான் பரவியது. அந்தளவுக்கு பண்டைய இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. காளிங்க நாதர், சீனாவில் தனது சீடர்களுக்கு, தத்துவ ஞானம் போதிக்கும் பள்ளிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான், போக நாதர் அவருக்கு அறிமுகமானார். அடுத்த தடவை இந்தியா செல்லும் பொழுது, போக நாதரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இருவரும் பழனியில், சித்தர்கள் கல்லூரியை ஸ்தாபித்தனர். காளிங்க நாதர் தனது சக்தி முழுவதையும், தலைமைச் சீடரான போக நாதருக்கு தாரை வார்த்தார். அதே போன்று, போகநாதர் சமாதி அடைவதற்கு முன்னர், புலிப்பாணி சித்தருக்கு தனது சக்திகளை தாரை வார்த்தார்.

போகநாதர் காலத்தில் தான், பழனியில் சித்தர்களின் கல்லூரி அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. நமது கால கல்வி முறையுடன் ஒப்பிட்டால், அன்றிருந்தது ஒரு கல்லூரி தான். "பழனி சித்த அறிவியல் கல்லூரி" யில் தமிழ் சித்தர்கள் மட்டுமே படித்ததாக நினைப்பது தவறு. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், சீனா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பன்னாட்டுச் சித்தர்கள் வந்து படித்தார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். போக நாதருக்கு பின்னர், கல்லூரியின் தலைமைப் பொறுப்பேற்ற புலிப் பாணிச் சித்தர், ஒரு சீனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. புலிப் பாணிச் சித்தரின் நிஜப் பெயர் "யி"(Yi). சந்தேகத்திற்கிடமின்றி, புலிப் பாணிச் சித்தர் ஒரு சீனர் என்பதை, அனைத்து தரவுகளும் நிரூபிக்கின்றன. அந்தக் காலத்தில், சீனச் சித்தர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த நேரம், தமிழ்ப் பெயர் ஒன்றை தெரிவு செய்வது வழக்கம். Bo Yang என்ற சீன நாட்டு போகரும், அவ்வாறே தமிழராக கருதப் பட்டிருக்க வாய்ப்புண்டு.

காளிங்க நாதர், தனது வாரிசான போகரை சீனாவில் தேர்ந்தெடுத்தார். போகநாதரும் அதே வழி முறையை பின்பற்றினார். தனக்கு அடுத்தாக, பழனி சித்தர்களை தலைமை தாங்குவதற்கு, புலிப் பாணிச் சித்தரை (யி) சீனாவில் இருந்து கூட்டி வந்தார். சீனாவில் இருந்து வந்த தலைமைச் சித்தரான யி, வசியக் கலையில் வல்லவர். புலியை வசியம் செய்து, அதன் மேல் அமர்ந்து சவாரி செய்வார். மந்திரம் சொல்லி தண்ணீரை உறைய வைப்பார். அதனால் தான் அவருக்கு "புலிப் பாணி சித்தர்" என்ற பெயர் வந்தது. சித்தர்கள் மரபில், மெஸ்மரிசம் எனப்படும் வசியக்கலை புலிப் பாணிச் சித்தர் மூலமாகத் தான் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியது. இன்றைய தமிழர்களின் உணவுப் பழக்கம் கூட, சீனத் தொடர்பால் பெருமளவு மாறி விட்டது. பண்டைத் தமிழர்கள் அரிசியை கண்ணால் கண்டிருக்கவில்லை. சீனாவில் இருந்து அறிமுகமான அரிசியை, நாம் இன்று நாளாந்த உணவாகப் புசிக்கின்றோம். போகநாதர் சீனாவில் இருந்து கொண்டு வந்த உப்பு, தமிழகத்தில் "சீனாக் காரம்" என்ற பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது.

சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றது, பழனி முருகன் ஆலயம். தமிழகத்தில் பெருமளவு வருமானத்தை ஈட்டும் முருகன் கோயில். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. சிவன், பார்வதியிடம் இருந்து ஞானப்பழத்தை பெறுவதற்காக, முருகனும், விநாயகரும் போட்டி போட்டார்கள். யார் முதலில் உலகை சுற்றி வலம் வருவது, என்பதே போட்டி. அண்ணன் விநாயகர், தாய், தந்தையை சுற்றி வந்து ஞானப் பழத்தை வாங்கிக் கொண்டார். மயில் மீதேறி உலகை சுற்றி வந்த முருகன், கோபித்துக் கொண்டு சென்று, பழனி மலையில் தங்கி விட்டார். இது புராணக் கதை. பெரும்பாலான முருக பக்தர்கள் அறியாத நிஜக்கதை ஒன்றுண்டு. அதுவே தண்டாயுதபாணி எனும் பழனி ஆண்டவரின் இரகசியம். பழனியின் சிறப்பு, கோயில் மூலவர் சிலையிலும், அதைச் செதுக்கிய சித்தர்களிலும் தங்கி உள்ளது. பழனி முருகனை பிரதிஷ்டை செய்த போகநாதரின் சமாதியும் அங்கே தானுள்ளது.

பழனியில் கூடிய சித்தர்கள் மகாநாட்டில், பழனி முருகன் சிலை அமைப்பது பற்றி முடிவெடுக்கப் பட்டது. சித்தர்களும், பொது மக்களும் வழிபடுவதற்காக மட்டுமல்லாது, புதிய வேதியியல் அற்புதமான கண்டுபிடிப்பொன்றை காட்சிப் படுத்துவதற்காகவும் அந்த சிலையை செதுக்க விரும்பினார்கள். அதாவது, பழனி முருகனின் "தெய்வ சக்தி", சித்தர்களின் விஞ்ஞான அறிவியலுக்கு எடுத்துக் காட்டாகும். பழனி முருகன் சிலையை செதுக்கும் பொறுப்பு போக நாதரிடம் விடப்பட்டது. அந்தச் சிலை கல்லில் செதுக்கப் படவில்லை. மூலிகைகளால் தயாரிக்கப் பட்டது. ஒன்பது இரசாயன கலவைகளை கொண்டு தயாரிக்கப் பட்ட முருகன் சிலை, பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும், இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பழனியில் அபிஷேகம் செய்யும் முறை கூட, விஞ்ஞான முறைப்படி அந்த சிலையை பராமரிக்கும் யுக்தியாகும். பழனி முருகன் சிலை செய்வதற்கு பயன்படுத்தப் பட்ட இரசாயன சூத்திரம், இன்றைக்கும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. நவ பாஷாணங்கள் என்று அழைக்கப் படும் வேதியல் நச்சுப் பொருட்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன, ஒன்றைத் தவிர. பாதரசம் (Mercury) என்ற பதார்த்தம் இன்றி அந்தச் சிலை முழுமை அடைந்திராது. பாதரசம் இந்தியாவில் எங்கேயும் கிடைக்கவில்லை. போகநாதர் அதனை சீனாவில் இருந்து கொண்டு வந்தார். பழனி முருகன் சிலை, சித்தர்களின் அறிவியல் சாதனையை மட்டும் பறைசாற்றவில்லை. சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக, இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (
Siddha Bhoganāthar: An Oceanic Life Story)

இரசாயனவியல் (வேதியியல்) எனும் அறிவியலை ஐரோப்பியர்களே கண்டுபிடித்தார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு அல்ல. அந்த அறிவியலைக் குறிக்கும் பெயரான Chemistry, ஒரு ஆங்கிலச் சொல் அன்று. Al - Chemi என்ற அரபுச் சொல்லில் இருந்து உருவானது. (அரேபியர்களும் கிரேக்க மொழியில் இருந்து கடன் வாங்கியிருந்தனர்.) வேதியியல் (இரசாயனவியல்) கல்வியை, ஐரோப்பியர் அரேபியரிடம் இருந்து கற்றனர். கிரேக்கர், எகிப்தியர், (இஸ்லாமிற்கு முந்திய) அரேபியர் ஆகிய பண்டைய மேற்காசிய ஞானிகளின் குறிப்புகள், பிற்காலத்தில் அல்கெமி என்ற கற்கைநெறியாக தொகுக்கப் பட்டது. பண்டைய காலத்தில், சீனர், அரேபியர், கிரேக்கர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, தமிழர்களும் இரசாயனவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். (George Lockemann, The Story of Chemistry, Philosophical Library, U.S.A, 1959, pp.30-31.) பழனியாண்டவர் சிலையை செய்ய பயன்பட்ட சீனப் பாதரசம், தமிழகத்தில் வேதியியல் அறிவியலை தோற்றுவித்தது. பாதரசம் என்ற சொல்லில் இருந்து தான், சித்தர்கள் பயன்படுத்திய "ரசவாதம்" என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பீங்கான் மட்பாண்டம் செய்வதற்கான தொழில்நுட்ப அறிவை, சீனாவில் இருந்து வந்த சித்தர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதே போன்று, பட்டுத் துணி நெசவு செய்யும் தொழில் நுட்பமும், சீனச் சித்தர்களின் தொடர்பால் பெறப் பட்டிருக்கலாம்.

பண்டைய காலத்தில் நிலவிய, சீனர், அரேபியர், தமிழர்களுக்கு இடையிலான நெருக்கமான உறவு எவ்வாறு அறுந்து போனது? "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வரவில்லை", என்று மறுக்கும் வரலாற்று அறிஞர்களும், தென்னிந்தியா ஆரிய மயமானதை மறைக்க முடியாது. சமஸ்கிருதம் பேசிய, பிராமண- இந்து மதத்தை பின்பற்றிய வட நாட்டு மன்னர்கள், தென்னிந்தியப் பகுதிகளை படிப்படியாக ஆக்கிரமித்தார்கள். அந்தக் காலங்களில், வட நாட்டு மன்னர்களும், தென் நாட்டு மன்னர்களும் மாபெரும் போர்க் களங்களில் மோதிக் கொண்டார்கள். அந்தப் போர்களைப் பற்றிய தகவல்கள், தமிழில் புறநானூறு என்ற பெயரில் குறித்து வைக்கப் பட்டன. அதாவது, அந்நிய "இந்து" ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட, தமிழர்களின் வீரஞ் செறிந்த வரலாறு தான் புறநானூறு ஆகும். அன்று ஆரிய மன்னர்களுக்கு காட்டிக் கொடுத்து, அவர்களைப் போலவே "சமஸ்கிருதம் பேசும் இந்துக்களாக" மாறியவர்களின் வாரிசுகள்,இன்று "தமிழரின் புறநானூற்று வீரம்" பற்றி பேசுவது வேடிக்கையானது. அவர்கள் தான், பண்டைய தமிழர்களின் நண்பர்களான சீனர்களையும், அரேபியர்களையும் எதிரிகளாக கருதிக் கொண்டார்கள். உண்மையான தமிழர்கள் ஒன்றில் போரில் மாண்டு விட்டனர், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகள் என்ற பெயரில் அடிமைகளாக்கப் பட்டனர்.

ஆரிய ஆக்கிரமிப்பின் கீழ் இந்துக்களாக மாறிய தமிழர்கள், சித்தர்களையும், சர்வதேச நட்புச் சக்திகளையும் மறந்தார்கள். வட நாட்டவரின் இந்து மதம், சித்தர்களின் அறிவியலை புறக்கணித்தது. போலிச் சாமியார்கள், மந்திரம், பில்லிசூனியம் போன்ற தீய நோக்கங்களுக்காக சித்த அறிவியலை பயன்படுத்தி வரலாயினர். தமிழகத்தில் ஒரு இருண்ட காலம் வரப்போகின்றது என்பதை, சித்தர்கள் அன்றே அறிந்திருப்பார்கள். அதனால், கடுமையாக உழைத்து, ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த அறிவியல் குறிப்புகளை எல்லாம், தாமே அழித்து விட்டுச் சென்றனர். அன்றிலிருந்து பல போலிச் சித்தர்கள் தோன்றினார்கள். பிற்காலத்தில் தமிழில் எழுதப் பட்ட, சித்தர்களின் அறிவியல் நூல்கள் பல போலியானவை என்று தெரிய வருகின்றது.

போகநாத சித்தர், ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை உருவாக்கும்
தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தார். (அவர் அவற்றை எல்லாம் சீனர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.) அதே போன்று, ஜெருசலேம்
சென்ற போகநாத சித்தர், புகை கக்கும் மோட்டார் வாகனத்தில் சவாரி செய்ததாகவும் ஒரு தகவல். அவர் மெக்காவில் முகமது நபிகளை சந்தித்து முஸ்லிம் ஆக மாறினார். (Bogar.3.222and 3.227). சீன, அரேபிய தரவுகளைக் கொண்டு அந்தத் தகவல்களை உறுதிப் படுத்துவதற்கு ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பல விஞ்ஞான அற்புதங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அவை குறித்த சாத்தியப்பாடுகளை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தார்கள். சீன, அரேபிய மூலங்களில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பியர்கள் அவற்றை பரிசோதனை செய்து மீளக் கண்டுபிடித்தார்கள்.

(தொடரும்)

மேலதிக விபரங்களுக்கு:
1.
Arulmigu Dandayudhapani Swami Devasthanam, Palani
2.
Hindu Web site
3.The Encyclopaedia Of Indian Literature (Volume Five)
---------------------------------------------


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்