Showing posts with label கந்தன். Show all posts
Showing posts with label கந்தன். Show all posts

Saturday, December 24, 2011

எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"



[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]
(பத்தாம் பாகம்)



இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.

"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.

இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.

"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.

சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:
A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam)

இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.

துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.

இன்றைக்கு, சிங்கள இனவாதிகள் துட்டகைமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, தமிழினவாதிகள் எல்லாளனை தமது நாயகனாக மகிமைப் படுத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்றை திரிக்கின்றனர். அன்று நடந்ததை சிங்கள-தமிழ் யுத்தமாகவோ, அல்லது பௌத்த-இந்து முரண்பாடாகவோ பார்ப்பது தவறு. கதிர்காமம், அன்றில் இருந்து இன்று வரையில், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான புண்ணியஸ்தலமாகும். முஸ்லிம்களும் கதிர்காமம் சென்று வழிபடுவது வியப்பை உண்டாக்கலாம். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) இன்று அங்கே, "இந்துக் கதிர்காமம்", "பௌத்த கதிர்காமம்", "இஸ்லாமிய கதிர்காமம்" என்று மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக வாழ்ந்த மக்களை, பிற்காலத்தில் வந்த மதங்கள் மூன்றாகப் பிரித்து வைத்துள்ளன. (ம்ஹ்ம்... மனிதன் மாறி விட்டான்... மதத்தில் ஏறி விட்டான்...)

முருக வழிபாடு, இலங்கையில் இருந்தே இந்தியாவுக்கு பரவி இருக்க வேண்டும். இலங்கையின் பூர்வீக மக்களான வேடுவர்களால் கூட, முருகன் அறிவின் கடவுளாக போற்றப் படுவது கவனத்திற்கு உரியது. ஏனெனில், பொதுவாக, "நாகரீகமடையாத காட்டுமிராண்டி கால பழங்குடி சமுதாயங்கள்", தமது கடவுளை வீர சூர பராக்கிரமசாலிகளாகவே சித்தரிப்பார்கள். முருகனின் விடயத்தில் அது தலைகீழாக நடந்துள்ளது. ஆதிகாலம் தொடக்கம் கதிர்காமத்தில் முருகனை பூஜித்து வரும் பழங்குடி இனமான வேடுவர்கள், "உலகில் உள்ள அனைத்து அறிவையும் திரட்டி வைத்திருந்த ஞானியாகவே" முருகனை வழிபடுகின்றனர். எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட வேடுவர்களைப் பொறுத்த வரையில், வேட்டைக்கான நிபுணத்துவத்திற்கு மட்டும் கந்தனின் அருள் போதுமானதாக இருந்துள்ளது.

"சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக", இந்தியாவில் இந்து மதம் கந்தனைப் போற்றுகின்றது. அதே போன்று, "புத்தருக்கு ஞானோபதேசம் செய்ததாக", சீனாவில் பௌத்த மதம், முருகனை போற்றுகின்றது. ஆதி கால முருகனின் கையில், போர்க் கருவியான ஈட்டி (வேல்) இருக்கவில்லை. (கதிர்காம கோயிலின் மூலஸ்தானம் திரை போட்டு மறைக்கப் பட்டிருப்பதால், பல சந்தேகங்கள் எழுவது இயற்கை. அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை.) ஆதி கால முருகக் கடவுளின் கையில் ஒரு ஊன்று கோல் இருந்தது. பழனி முருகனும், கையில் ஒரு தடி வைத்திருப்பதால், "தண்டாயுதபாணி" என்று அழைக்கப் படுவது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை சேர்ந்த வேடுவர்கள், முருகனை ஒரு கிழவனாகவே வழிபட்டுள்ளனர். ஒரு வயோதிபரின் கையில் ஊன்றுகோல் இருப்பது வழமை தானே? இலங்கையில் வாழ்ந்த வயதான ஞானி (தீர்க்கதரிசி) யின் பெருமைகள், மேற்கு ஆசிய நாடுகளிலும் அறியப் பட்டுள்ளன. (அந்த விபரங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)

"எதற்காக நமது தெய்வங்களின் கைகளில், எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கின்றது?" என்பது பல இந்துக்களின் மனத்தைக் குடையும் கேள்வி. அதற்கான விடை இது தான். இவை எல்லாம் ஆரிய மயமாக்கப் பட்ட தெய்வங்கள். முருகன் மட்டுமல்லாது, சிவன், கிருஷ்ணன் போன்ற பல இந்திய தெய்வங்கள் ஆதி காலத்தில் ஆயுதங்களோடு காட்சியளிக்கவில்லை. (உதாரணத்திற்கு, திபெத்திய சிவனின் கையில் சூலாயுதம் கிடையாது.) என்றைக்கு, ஆரிய இனத்தவர்களும் அவற்றை தமது கடவுளராக ஏற்றுக் கொண்டனரோ, அன்றில் இருந்து அவர்கள் கைகளில் ஆயுதங்கள் முளைத்து விட்டன.

அந்நிய வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட உள்நாட்டு கறுப்பின மக்கள், சில போர்த் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். காளி, பைரவர் போன்ற தெய்வங்கள் போரின் நிமித்தம் முக்கியத்துவம் பெறுவதால், அவற்றின் கைகளில் ஆயுதங்கள் இருந்துள்ளன. பிற்காலத்தில், போரில் வென்ற இந்துக்களான ஆரியர்கள், போர்த் தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம், உள்ளூர் மக்கள் மீது கலாச்சார அடிமைத்தனம் திணிக்கப் பட்டது. இந்த அடிமைத்தனம் இன்றைக்கும் பலரின் மனதில் காணப்படுகின்றது.

வரலாற்றில் ஆரிய இனம், அறிவு சார் சமுதாயமாக இருக்கவில்லை. மற்றைய இன மக்கள் மீது போர் தொடுத்து, அடிமைப் படுத்தி, சொத்துகளை சூறையாடி வாழ்ந்த நிஜமான காட்டுமிராண்டி சமுதாயமே ஆரிய இனம் ஆகும். அவர்களைப் பொறுத்த வரையில், விவேகத்தை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில், வெறித்தனமான வீரம் தான் அவர்களை பல நாடுகளுக்கு அதிபதிகளாக்கியது. பிறர் செல்வங்களை கொள்ளையடிக்க கற்றுக் கொடுத்தது. (இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. ரிக் வேதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.) இன்றைக்கும், இனவெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், ஆரியரின் பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை கண்கூடாக காணலாம். "மூத்தகுடித் தமிழர்கள்", ஆரியர்கள் போன்று காட்டுமிராண்டிகள் அல்ல. ஒரு அறிவு சார்ந்த சமுதாயமாக, நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால், தமிழர்கள் என்றைக்கு இந்து மதத்தை பின்பற்றத் தொடங்கினரோ, அன்றில் இருந்தே தமிழரின் பெருமைகள் மறக்கப் பட்டு விட்டன.

இன்றைய நவீன யுகத்திலும், இந்து மதத்தவர்கள், முருகனை ஒரு யுத்தக் கடவுளாகத் தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு வருடமும், முருகன் கோயில்களில் நடைபெறும் "சூரன் போர்" அதற்கு சான்று பகர்கின்றது. முருகன் கனரக ஆயுதங்களுடன் சூரனோடு போரிட்ட காட்சியை, மதச் சடங்கு என்ற பெயரில் மேடையேற்றுகின்றனர். சூரனின் படைகளை துவம்சம் செய்த முருகன், சூர சம்ஹாரத்திற்குப் பிறகு கதிர்காமத்தில் தங்கி விட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர். (எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு யுத்தக் கடவுளான முருகனிடம் ஆசீர்வாதம் வேண்டியதில் வியப்பில்லை.)

மகாவம்சமும் ஆரிய மயப் பட்ட மன்னர்களின் வரலாற்றை தான் கூறுகின்றது. மகாவம்சம் மட்டுமல்ல, எந்தவொரு இந்துப் புராணமும், இதிகாசங்களும் பூர்வீக மக்களின் கதைகளை எழுதியதில்லை. அவ்வாறு குறிப்பிட்டாலும், அந்த மக்களை "நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகம்" என்று தான் கூறுகின்றன. உதாரணத்திற்கு, இராவணனின் மக்களை அரக்கர்கள் என்று, இந்துக்களின் இராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. பௌத்தர்களின் மகாவம்சம், இலங்கையில் புத்தரின் வருகைக்கு முன்னர், பேய்களை போன்ற தோற்றம் கொண்ட மக்கள் (இயக்கர்கள்) வாழ்ந்ததாக எழுதுகின்றது. "அரக்கர்கள், இயக்கர்கள்", இவை போன்ற இழி சொற்களினால், மூத்த குடிகளின் நாகரீகம் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டன.

மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார ஆதிக்கம் என்பதைப் பலர் உணருவதில்லை. ஒரு குறிப்பிட்ட மதம், எந்தப் பிரிவினரின், அல்லது சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பது தான் முக்கியமானது. பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கும் வரையில், அந்தப் பிரிவினரின் ஆதிக்கம் தொடரவே செய்யும். தமிழ் தேசியத்தை புரட்சிகரமான மாற்று அரசியலாக முன் வைக்க வேண்டுமானால், மதங்களுக்கு எதிரான தார்மீகப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். உலகின் முதல் மனிதன் (ஆதாம்?) இலங்கையில் தோன்றியிருக்கலாம், என்று கூறப் படுவதன் சாத்தியப்பாட்டை, தமிழ் தேசிய பிரச்சாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளாத காரணம் என்ன? இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அல்லது அறிய முயற்சிக்காமல், "முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள் நாம்." என்று பெருமை பேசுவதில் பயனேது?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்