Wednesday, December 07, 2011

இனம் மாறும் தமிழர்கள் !

[இலங்கை என்ற இழந்த சொர்க்கம்] (பகுதி - 2)

கொழும்பு நகரின் மத்தியை அண்மித்துள்ளது கொட்டாஞ்சேனை. சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கொட்டஹென என்று அழைக்கப் படுகின்றது. இன்று கொழும்பில் வாழும் தமிழர்கள் பலர், அந்தப் பெயரை அதிகமாக பாவித்து வருகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாழ்ந்த காலத்தில், "கொட்டாஞ்சேனை" என்ற தமிழ்ப் பெயர் எமது நாவில் அடிக்கடி தவழும். கொழும்பு நகரில், தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் கொட்டாஞ்சேனையும் அடங்கும். தென் கொழும்பில் மத்தியதர வர்க்க குடியிருப்புகளை அதிகமாக கொண்ட வெள்ளவத்தையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. வெள்ளவத்தையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதற்கு மாறாக, கொட்டாஞ்சேனையில் இந்திய வம்சாவழித் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

அவர்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்திய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், நகைக்கடை முதலாளிகள், போன்ற பணக்கார இந்தியத் தமிழர்களும் அங்கே தான் வசிக்கின்றனர். அதே நேரம், அந்தப் பிரதேசத்தை அண்மித்துள்ள கொழும்புத் துறைமுகத்தில் கூலித் தொழில் செய்ய வந்த, வறிய இந்தியத் தமிழர்களும் பெருமளவில் வாழ்கின்றனர். கொட்டாஞ்சேனையில் எந்த தெருவில் நுழைந்து, எதிரில் வரும் எவருடனும் தமிழில் பேசலாம். தமிழ் கடைகள், உணவு விடுதிகள் மட்டுமல்ல, தினசரி தமிழ்த் திரைப்படம் மட்டுமே காண்பிக்கும் மூன்று திரையரங்குகள் உள்ளன. இந்துக் கோயில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, "அற்புதம் நிகழ்ந்த இடமாக" கருதப்படும் அந்தோனியார் தேவாலயத்திலும் தமிழ்க் குரல்கள் ஒலிக்கும்.

கொட்டாஞ்சேனையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழி பேசும் மக்கள் என்பதால், அங்கிருக்கும் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டதில் வியப்பில்லை. வசதியானவர்கள் தமது பிள்ளைகளை கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் கான்வென்ட் பாடசாலைகளுக்கு அனுப்புவார்கள். கீழ் மத்தியதர, உழைக்கும் வர்க்க மக்கள் தமது பிள்ளைகளை, அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவார்கள். நானும் "கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயத்தில்" தான் ஆரம்பக் கல்வி கற்றேன். பொதுவாக மிஷனரி, அரசுப் பாடசாலைகள் இரண்டிலும், தமிழ் மொழி மூலம் கல்வி அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சில மிஷனரி பாடசாலைகள் அப்போதே சிங்கள மொழி வாரிக் கல்வியை புகுத்தத் தொடங்கி விட்டன.

பல வருடங்களுக்கு பிறகு, கொட்டாஞ்சேனை மிஷனரிப் பாடசாலைகளில் படித்த நடுத்தர வர்க்க தமிழர்கள் பலரை, இங்கிலாந்தில் நான் சந்தித்தேன். அவர்களில் பலர் பாடசாலைக் கல்வி முழுவதும் சிங்கள மொழி மூலம் படித்திருந்தனர். அவர்களின் பெற்றோர் முதலாளிகளாகவும், வியாபாரிகளாகவும் இருந்ததனர். தமது பிள்ளைகள் "அந்தஸ்தில் உயர்ந்த" மிஷனரிப் பாடசாலையில், சிங்கள மொழியில் கல்வி புகட்டுவதை விரும்பினார்கள். தாம் தமிழில் படிக்க முடியவில்லையே என்ற கவலை, பிள்ளைகளுக்கும் இல்லை. அதற்கு மாறாக, அரசு பள்ளிக்கூடமான மகா வித்தியாலயத்தில் தமிழில் படித்த என்னைப் போன்றவர்களை தரக்குறைவாக கருதுவதை உணர முடிந்தது.

இலங்கையில் இனப்பிரச்சினையின் (மொழிப் பிரச்சினையின்?) நதிமூலம் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானது. நாற்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட, கொழும்பில் தொழில் புரிந்த நடுத்தர வர்க்க தமிழர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்க மறுத்து போராடினார்கள். அதே நேரம், அவர்களில் ஒரு பிரிவினரும், இந்திய வம்சாவழி நடுத்தர வர்க்கமும், சிங்கள மொழி மூல கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டது. அதற்குக் காரணம் அவர்களது வர்த்தக அபிலாஷைகள். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியில், தமது பிள்ளைகள் பாண்டித்தியம் பெறுவது, எதிர்கால வர்த்தக நோக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினார்கள். (மதத்தால் கத்தோலிக்கர்கள் என்றால் "தமிழ் இனவுணர்வு" அவர்களுக்கு அறவே கிடையாது.) இருந்த போதிலும், இனக்கலவரங்களின் போது, அவர்களது வீடுகள், வர்த்தக ஸ்தாபனங்கள், சிங்களக் காடையரால் தாக்கப்பட்டன.

இந்தியாவில், குஜராத்தில் முஸ்லிம் விரோத கலவரம் நடந்த அதே பாணியில் தான், கொழும்பில் தமிழர் விரோத கலவரங்கள் இடம்பெற்றன. தமிழர்களைக் கொல்வதற்கு, சொத்துக்களை நாசமாக்குவதற்கு சிங்கள உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப் பட்டனர். சிங்கள அரசியல்வாதிகளும், முதலாளிகளும் பின்னுக்கு நின்று அவர்களை ஏவி விட்டனர். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, தமிழர்கள் மீதான இனத்துவேஷத்தின் வெளிப்பாடாகத் தெரியும். உண்மையில் தமிழ் மேட்டுக்குடியினரின், வசதியான மத்தியதர வர்க்கத்தின் செல்வத்தை கொள்ளையடிப்பது உள்நோக்கமாக இருந்தது. அவர்களின் வர்த்தகத்தை சிங்கள முதலாளிகள் அபகரித்துக் கொண்டனர். அவர்களின் பதவிகள், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரிடம் போய்ச் சேர்ந்தது. இலங்கையில் இவ்வாறு தான் சிங்கள மேலாண்மை நிலை நிறுத்தப் பட்டது. வெளிப்பார்வைக்கு அது இனப்பிரச்சினை. ஆழமாக ஆராய்ந்தால், பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்படுத்தல்.

மேற்குறிப்பிட்ட விபரங்களை தந்தவர்கள் எனது கொட்டாஞ்சேனை நண்பர்கள். அவர்களுக்கு தமக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு, அரசியலை பகுத்துணரும் தன்மை இருக்கவில்லை. சராசரி தமிழ்த் தேசியவாதிகளைப் போன்று, சிங்கள அரசின் கொடுங்கோன்மை பற்றி எல்லாம் திட்டித் தீர்த்தாலும், தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. வர்த்தகத்தை மட்டுமே மையப் படுத்திய வாதப் பிரகாரம், தமிழீழம் கிடைத்தால் அவர்கள் இழக்கப் போவது அதிகமாகவிருந்தது. மேற்கத்திய சார்பு, முதலாளித்துவ நலன் பேணும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள்.

கொழும்பு வாழ் தமிழ் சமூகம், இன்றைக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவுத் தளமாகவே உள்ளது. ஐ.தே.க. ஆதரவு அரசியல், வட கொழும்பில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களையும், தென் கொழும்பு யாழ்ப்பாணத் தமிழர்களையும் ஒன்று சேர்க்கின்றது. தமிழ் தேசியம், இன்று கொழும்பு வாழ் தமிழர்களையும் வசீகரித்துள்ளது. அதற்குப் பின்னால், ஐ.தே.க. வின் நுண்ணரசியல் இழையோடியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இது குறித்து பின்னர் விரிவாக ஆராயலாம். அதற்கு முன்னர், இனக்கலவரத்தின் பின்னர் கொழும்பு தமிழரை பாதித்த இனப்பிரச்சினைகளின் கூறுகளை சிறிது பார்க்கலாம்.

இனப்பிரச்சினை எங்கே இருக்கின்றது என்பதை, நான் படித்த பாடசாலைக்கு பழைய மாணவனாக சென்ற பொழுது உணர முடிந்தது. கொட்டாஞ்சேனை மகா வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலை, வீதியின் இரு மருங்கிலும் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. பாடசாலையின் பெரும் பகுதி, சிங்களப் பாடசாலையாக மாறி விட்டிருந்தது. நாங்கள் விளையாடிக் களித்த மைதானத்தின் ஒரு பகுதியில் புத்த விகாரை எழுப்பப் பட்டிருந்தது. நான் படித்த காலத்தில் அப்படி எதுவும் இருக்கவில்லை. ஒரு கணம், சரியான இடத்திற்கு வந்திருக்கிறேனா? என்ற சந்தேகம் எழுந்தது. பாடசாலையின் உள்ளே சென்ற போது, எங்களை வரவேற்ற அதிபர் ஒரு சிங்களவர். நாம் கொண்டு சென்ற கமெராவினால் படம் எடுக்க விரும்பிய போது தடுத்தாட்கொண்டார். " தமிழர்கள் என்றாலே கெட்டவர்களாக இருப்பார்கள்," என்ற நினைப்பு அவர் மனதில் வந்திருக்கலாம்.

வெளியே வந்து, சுற்று முற்றும் தலையைத் திருப்பிப் பார்த்தேன். வலது பக்க கட்டிடங்களின் முன்னால் இருந்த அறிவுப்புப் பலகையில் "இந்து பாடசாலை" என்று எழுதப் பட்டிருந்தது. அருகிலேயே புதிதாக ஒரு கோயில். குழப்பம் மேலும் அதிகரித்தது. முன்பு கொட்டாஞ்சேனையில் சிங்களவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நான் படித்த காலத்தில், அந்தப் பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர்: "கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை". அன்று அது ஒரு மதச்சார்பற்ற பாடசாலை. இன்று அது, "பௌத்த பாடசாலை", "இந்துப் பாடசாலை" என்று இரண்டாக பிளவுபட்டு விட்டது. இனப்பிரச்சினை மொழி சார்ந்தது மட்டுமல்ல, மதம் சார்ந்ததும் தான். "இந்துப் பாடசாலை" என்று மத அடையாளத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு, "பௌத்த பாடசாலையை" எதிர்க்கும் யோக்கியதை கிடையாது. சிறுபான்மை மதங்களுக்கு சலுகைகள் கொடுத்து வாயை மூட வைத்திருப்பதால் தான், பௌத்த-சிங்கள மேலாதிக்கம் ஆட்சி செய்கின்றது.

கொட்டாஞ்சேனையில் புதிதாக முளைத்த கிறிஸ்தவ சபைகளின் சுவரொட்டிகள் பரவலாக காணப்பட்டன. இதுவும் இருபது ஆண்டுகளுக்குள் நான் கண்ட மாற்றம். முன்பெல்லாம் "மரபுவழி மதங்களை" சேர்ந்தோரே அதிகமாக இருந்தனர். தற்போது வெளிநாட்டு நிதியில் இயங்கும் கிறிஸ்தவ சபைகள் பெருகி வருகின்றன. பௌத்தம், இந்து போன்ற பெரும்பான்மை மதங்களை சேர்ந்தோரே, "புதிதாகப் பிறந்த கிறிஸ்தவர்களாக" ஞானஸ்நானம் பெற்று வருகின்றனர். இவர்களில் 99 % ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க மனப்பான்மை கொண்ட தமிழர்கள், "மதம் மாறிகளை" பரிகசிப்பது வழக்கம். "சாப்பாட்டுக்கு வழியற்றவர்கள்... பணம் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மதம் மாறுகிறார்கள்..." இவ்வாறெல்லாம் இளக்காரமாக பேசி வந்தனர். இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், தனியொருவனுக்கு உணவளிக்க வக்கற்ற மதத்தால் என்ன பிரயோசனம்? மேலும், இந்து மதத்தில் நிலவும் சாதிய கட்டுப்பாடுகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. காலங்காலமாக, உயர்சாதியினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செல்வம்,வசதி,வாய்ப்பு கிடைப்பது எப்படி? ஒரு சாதிய சமூகத்தில் முன்னுக்கு வர வாய்ப்பற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறினால் வாழ்வு வளமாகும் என்பது நப்பாசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவுக்கெட்டிய வரையில் தெரிந்த வழி அது தான். அவ்வாறு மதம் மாறியிருந்த, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிழைக்கச் சென்றவர்களை சந்தித்திருக்கிறேன்.

(தொடரும் )


தொடரின் முதலாவது பகுதி:
1.
இலங்கை என்ற இழந்த சொர்க்கம்

3 comments:

ஜோதிஜி said...

இந்த வருடத்தில் நான் படித்த சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று. இன்னும் இதைப் போல உள்ளே உள்ள முரண்பாடுகளை எழுதுங்க.

இந்த நடை வரிக்கு வரி படிக்க வைத்தது.

எஸ் சக்திவேல் said...

>அதற்கு மாறாக, அரசு பள்ளிக்கூடமான மகா வித்தியாலயத்தில் தமிழில் படித்த என்னைப் போன்றவர்களை தரக்குறைவாக கருதுவதை உணர முடிந்தது.

ஆம் உங்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்தவற்றில் ஒன்று. ஆனால், இலங்கையில் இருப்பது/இருந்தது இனப்பிரச்சினைதான், வர்க்கப்பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?

Kalaiyarasan said...

//இலங்கையில் இருப்பது/இருந்தது இனப்பிரச்சினைதான், வர்க்கப்பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறார்கள்? //

இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எல்லா நாடுகளில் இப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள். சீனாவிலும், ரஷ்யாவிலும் சோஷலிசப் புரட்சிக்கு முன்னரும், நிலைமை அப்படித் தான் இருந்தது. இனப்பிரச்சினையை வெறும் இனவாத அடிப்படையில் நோக்காமல், அதனை ஆழமாக புரிந்து கொள்ள முயற்சித்தால் தான், வர்க்கப் பிரச்சினை எங்கே வருகின்றது என்பது தெரியும்.