Monday, May 03, 2010

சர்வதேச கம்யூனிச அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் நான்காம் பகுதி)

மேற்குலகில் வாழும் அல்லது மேற்குலக சிந்தனை கொண்டவர்களுக்கு, முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்ட விஷயம் தெரியாது. அவை பெரும்பாலும் கம்யூனிச அரசியல் சார்ந்த அகதிகளையே ஏற்றுக்கொண்டு வந்தன. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட உஸ்பெக்கிய, தஜிக்கிய அகதிகள் அனைவருக்கும் தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், சோவியத் யூனியனில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு தாராளமாக கிடைத்தது. மாணவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். இதனால் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலர், சோவியத் யூனியனுக்கு கல்வி கற்க சென்று, பின்னர் உள்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து அங்கேயே தங்கி விட்டிருந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர்களில் பலர் நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் அகதிகளை அங்கீகரிக்கும் ஐ.நா. ஆணையில் கைச்சாத்திட்டிருந்தன. இருப்பினும் கிரீஸ், சிலி போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கே தஞ்சம் வழங்கப்பட்டன. கிரீஸ் அகதிகளின் வருகையுடன் கம்யூனிச நாடுகளின் அகதி அரசியல் ஆரம்பமாகியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம், கிரீசின் பெரும்பாலான பகுதிகளை கம்யூனிச போராளிகள் விடுவித்திருந்தனர். அப்போது பிரிட்டனும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்ததால். கிரீசை விடுவிக்க பிரிட்டிஷ் படைகள் சென்றன. இருப்பினும் சில வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க கம்யூனிஸ்ட்களுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையில் போர் மூண்டது. பிரிட்டனை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஸ்டாலின் கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு உதவி வழங்க மறுத்து விட்டார்.

கம்யூனிஸ்ட்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போராட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் தேசியவாதிகளின் படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை. கம்யூனிஸ்ட் தலைவர்கள், போராளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் சுற்றி இருந்த சோஷலிச நாடுகளில் அடைக்கலம் கோரினர். கிரேக்க அகதிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு, அரசே முன்னின்று வீடுகளையும் வழங்கியது. செக்கொஸ்லோவாகியா போன்ற நாடுகளில் இப்போதும் கணிசமான அளவு முன்னாள் கிரேக்க அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடுகளின் சொந்த மக்களை விட, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் இன்றும் சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதைக் காணலாம். மேற்குலகிலும் இதே போன்ற நிலைமை உள்ளது. அகதிகளாக குடியேறியவர்கள் மேற்கத்திய நாகரீகத்தை அளவுக்கதிகமாகவே பின்பற்றுவதைக் காணலாம்.

ஒரு மூன்றாமுலக வறிய நாடான கியூபா கூட பன்னாட்டு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. சிலி போன்ற தென் அமெரிக்கர்களுக்கும், அல்ஜீரியா, அங்கோலா, நமீபியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியது. ஒரு முறை கியூபா கப்பல்கள், அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்ட அனாதைப் பிள்ளைகளை ஏற்றிவந்தன. ஒரு காலத்தில் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின மாவோயிச இயக்கமான Black Panthers உறுப்பினர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் வீடு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி, முழுமையான கியூப பிரசைகளாக உள்வாங்கப்பட்டு விட்டனர். அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், சில நேரம் கியூப மக்களையும் பொறாமை கொள்ள வைத்தன.

(தொடரும்)

3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

1 comment:

INDIA 2121 said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com