Tuesday, January 10, 2012

நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு

சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:



முன்னுரை

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.

நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.

அன்புடன்,
கலையரசன்

Monday, January 09, 2012

மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. ("கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?" - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.

சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.

பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.

இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.

எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.

எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).

அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?


(தொடரும்)

Friday, January 06, 2012

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்

"கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு மக்கள் மனதில் விதைக்கப் படுகின்றது. முன்னரைப் போலவே, இரண்டு அணுவாயுத வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சில இராஜதந்திர சந்திப்புகள், ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அந்த நேரம், அனைத்து ஊடகங்களும், லிபியா, சிரியா என்று மத்திய கிழக்குப் பக்கமே தமது பார்வையை செலுத்தி இருந்தன. புதிய பனிப்போரின் வரவை கட்டியம் கூறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, அந்த சந்திப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.

சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.

வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது.


---------------------------------------------
அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:
திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்

Thursday, January 05, 2012

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா)

(மெக்சிகோ, பகுதி : இரண்டு)


அது என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும் மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம் ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது.

"பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்." நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்) ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்! எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன. எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான்.

ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள். மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.

மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.

மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த "மெக்சிகோ தேசியத்தை" உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் "peninsulares " வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.

தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் "Caste" என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் "Caste" என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் "கிரயோல்கள்". இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் "Mestizo" என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது. மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.

எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம். மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய "எல் அலெமோ யுத்தம்". ஆனால், அமெரிக்கா அதனை "எல் அலெமோ இனப்படுகொலை" என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் "தேசிய எழுச்சி", மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது. நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, "டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக" அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், "தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத" நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.

நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம். மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், "வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்" அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது. இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. "நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது." என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், "அந்த அவமானகரமான தோல்வியை" நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. "அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்" என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின. ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவு :
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்

Monday, January 02, 2012

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்


(மெக்சிகோ, பகுதி : ஒன்று)

மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். "இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் விஜயம் செய்ய இருக்கின்றார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகள் இப்போது முதல் பறிமுதல் செய்யப்படும்.வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்." சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன். மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன. மெக்சிகோ பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி. ஆனால் அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை மேட்டுக்குடியினரினால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்றது. பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ) சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளம் இறக்குமதி செய்கின்றது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)

"கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்ட தான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்." மெக்சிக்கர்களின் நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகின்றது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16 ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள். 19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம். 20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம். இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாண்மை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். உலகில் வேறெந்த நாட்டிற்கும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால் சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள். ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில் தான் சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில் அதன் பெயர் Xocoatl. ("சோகோ" என்றால் சூடு, "ஆடில்" என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது.) அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.


ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21 ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200 - 500) இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200 - 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கின்றது. மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப் படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன.

மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில் தான் Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது. அந்த தேச மக்கள் "மெக்சிகர்கள்" என அழைக்கப்பட்டனர். மெக்சிகர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான, Aztlan னிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது.) இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கின்றது.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes) தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519 , சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma ) வை மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் யாவும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?

Bartolome de las Casas என்ற பாதிரியார் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின் போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, "பாவாத்மாக்களான" பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் அங்கே சென்றார். ஆனால் மெக்சிகோ சென்ற பின்னர் தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப் படுவதை ஏற்க முடியாது, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப் படுகின்றார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San Cristobal de las Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது தாயகமான ஸ்பெயினில் காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்தது தான். "அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு" என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)

இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள். இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத் தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910 ல் வெடித்த சமூக-கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho Villa) வையும் சந்தித்துள்ளார்.

மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் "காலை வணக்கம், கடவுள் இல்லை!" என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக "ஞானஸ்நானம்" பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப் படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள். காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி இருபதாம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

(தொடரும்)