Thursday, January 05, 2012

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா)

(மெக்சிகோ, பகுதி : இரண்டு)


அது என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும் மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம் ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது.

"பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்." நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்) ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்! எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன. எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான்.

ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள். மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.

மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.

மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த "மெக்சிகோ தேசியத்தை" உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் "peninsulares " வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.

தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் "Caste" என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் "Caste" என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் "கிரயோல்கள்". இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் "Mestizo" என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது. மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.

எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம். மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய "எல் அலெமோ யுத்தம்". ஆனால், அமெரிக்கா அதனை "எல் அலெமோ இனப்படுகொலை" என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் "தேசிய எழுச்சி", மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது. நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, "டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக" அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், "தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத" நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.

நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம். மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், "வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்" அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது. இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. "நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது." என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், "அந்த அவமானகரமான தோல்வியை" நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. "அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்" என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின. ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவு :
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்

3 comments:

anthony said...

எசுயிஸ்ட் (jesuist)என்பதற்கு இயேசு சபையினர் என்ற தமிழ் பதம் உள்ளது ..தோழர்

anthony said...

தகவல்கள் நிறைந்த கட்டுரை

நன்றி

அம்பலத்தார் said...

தெரியாத பல வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொணரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.