Monday, April 06, 2009

திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்

மேற்குலகம் சீனாவுடன் நேரடி மோதல்களை, அல்லது எதிர்கால யுத்தமொன்றை தவிர்த்து வந்தாலும், வேறு விதமாக சொன்னால், சீனாவை நட்புசக்தியாக காட்டினாலும், திரைமறைவில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சீனாவில் உற்பத்தி செய்த பண்டங்கள் ஐரோப்பிய-அமெரிக்க சந்தைகளில் வந்து குவிவதால், திறந்த பொருளாதார கொள்கையில் இதெல்லாம் சகஜம் என்பதால், அதனை தடுக்க முடியாமல் திணறும் மேற்குலக அரசுகள் "குழந்தைகளின் விளையட்டுப்பொருட்களில் நஞ்சு ..." போன்ற கதைகளை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றன. இதுவரை காலமும், தமது பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தே பணக்காரர்களான மேற்குலக நாடுகள், இன்று அதே வேலையை சீனா செய்வதை ஜீரணிக்க முடிவதில்லை. அதே நேரம் சீன முதலீட்டு வங்கி, பெரும் மூலதனத்துடன் அவர்களது நிருவனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவும் மேற்குலகம் காட்டிய வழி தான்.

ஐரோப்பாவில் அமெரிக்க கம்பெனிகள் முதலீடு செய்யும் போதே( வழக்கமாக நடந்து கொண்டிருப்பது தான், ஆனால் தடுக்க முடிவதில்லை ) "நமது தேசம் விலை போகிறது, யாராவது காப்பாற்றுங்கள்." என்று ஒப்பாரி வைப்பார்கள். உலகமயமாக்கல் என்ற போர்வையில் தாம் பிற நாட்டு நிறுவனங்களை வாங்கும் போதும், அந்நாடுகளில் எழும் எதிர்ப்புகளை முறியடிக்க, "திறந்த பொருளாதாரக் கொள்கை", "சந்தைப்பொருளாதாரம்", "சுதந்திரம்" என்று இனிப்பான வார்த்தைகளை கூறி அவர்களது வாயை அடைத்து விடுவார்கள். தான் மற்றவர்களுக்கு செய்யும் அதே வேலையை, தனக்கு மற்றவர்கள் செய்யக்கூடாது என்ற சந்தர்ப்பவாத தத்துவம் திரைமறைவில் கோலோச்சுகின்றது. சீனா தனது "படுமோசமான கம்யூனிச பொருளாதாரத்தை" விட்டு விட்டு முதலாளித்துவத்தை பின்பற்றினால் நாடு சுபீட்சமையும் என்றார்கள். பின்னர் அப்படி மாறிய சீனாவை உலக வர்ததக கழகத்தில் சேர்க்கமாட்டோம் என்றார்கள். தமது நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய சுதந்திரம் வேண்டும் என்றார்கள். தமது நுகர்பொருட்களுக்கு சந்தையை திறந்துவிட வேண்டும் என்றார்கள். சீனா இவையெல்லாவற்றிற்கும் சம்மதித்த பிறகு தான், அதே திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் சீனா தமது நாடுகளில் முதலீடு செய்வதையோ, அல்லது நுகர் பொருட்களை விற்பதையோ விரும்புகிறார்கள் இல்லை. இந்த இரட்டை அளவுகோலுக்கு காரணம், சீனா இன்னொரு மூன்றாம் உலக நாடாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான்.

மூன்றாம் உலகநாடுகளுக்கு என்று சில தனித்தன்மைகள் இருக்கின்றன. அவை முதலாம் உலகின் தொழிற்துறை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யும். அதற்குமாறாக நுகர்பொருட்களை, இயந்திரங்களை, தொழில்நுட்பத்தை இன்னபிறவற்றை முதலாம் உலகில் இருந்து இறக்குமதி செய்யும். இந்த வர்த்தக பாகுபாடு, முதலாம் உலகம் செல்வந்த நாடுகளாக இருக்கவும், மூன்றாம் உலகம் வறிய நாடுகளாக இருக்கவும் உதவியது. ஏழைகளும், பணக்காரர்களும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்றனர் என்பது இயற்கையின் இரகசியங்களில் ஒன்று.

சோவியத் யூனியனின் மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில், அமெரிக்காவை விரும்பாத அல்லது பகைத்துக் கொண்ட நாடுகளுடன் சீனா வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியது. மிலோசொவிச்சின் யூகோஸ்லேவியா, சதாமின் ஈராக் ஆகியன மட்டுமல்ல இன்றைக்கும் தொடரும் ஈரான், சூடான் போன்ற நாடுகள் உடனான உறவுகள் பல முனைகளில் இருந்தும் விமர்சனத்துக்குள்ளாகின்றன. இவையெல்லாம் இயற்கைவளம் கொண்ட, கேந்திர முக்கியத்துவம் உள்ள நாடுகள் என்பதும், அதனாலேயே அமெரிக்கா சீனாவை அந்த நாடுகளில் இருந்து விரட்டுவதில் குறியாக உள்ளது என்பதும் இரகசியமல்ல.
ஆப்பிரிக்க கண்டத்தில் சீனாவுடன் வர்த்தக உறவுகளை கொண்டிராத நாடு எதுவுமே இல்லை எனலாம். சூடான், சிம்பாப்வே போன்ற சில நாடுகளின் பெருமளவு ஏற்றுமதி/இறக்குமதி வணிகம் சீனாவுடன் நடக்கின்றது. சீன தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், அது கச்சா எண்ணை, அல்லது பிற கனிமப் பொருட்களானாலும், அனைத்தும் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. அதற்கு பதிலாக ஆப்ரிக்காவுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பிற பவானைப் பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற முன்னாள் காலனிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளுடன் இது போன்ற வர்த்தக தொடர்பை வைத்திருக்கின்றன. அதனை சுட்டிக்காட்டும் மேலைத்தேய ஊடகங்கள் சில, சீனாவையும் புதிய காலனியாதிக்க நாடாக கட்ட விளைகின்றனர். ஆனால் ஆப்பிரிக்கர்கள் இத்தனை மறுக்கின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இரண்டுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக தெரிந்தாலும், வேற்றுமைகளும் உள்ளன.

பல காலனிய நாடுகளில் கட்டப்பட்ட நகரமயமாக்கல், பெருஞ்சாலைகள், இன்னபிற கட்டுமானப் பணிகள் யாவும் ஐரோப்பிய காலனிய அரசாங்கம் அமைத்தவை. இவை காலனிய நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை, எவ்வாறு ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வது என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. உதாரணத்திற்கு கடலோரமாக துறைமுகம் கொண்ட தலைநகரம், அதனை நோக்கி செல்லும் சாலைகள் போன்றன. இன்று நகரமயமாக்கல் சீன நிறுவனங்களின் ஒப்பந்த அடிப்படையில் நடக்கின்றன. இதனால் அந்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்த கூலி போகின்ற அதேநேரம், குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. அதாவது இரண்டு பக்கமும் நன்மை. ஒன்றை உருவாக்குவதில் தொழில்நுட்ப அறிவோ, முதலீட்டு பலமோ இல்லாத நாடுகள், அது உள்ள பிற நாடுகளில் இருந்து தான் பெற்றுக்கொள்ள முடியும். அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் தொழில்நுட்ப அறிவை சொல்லிக்கொடுத்தால் பிற நாடுகள் தம்மை விட முன்னேறிவிடும் , அல்லது தமக்கு தொடர்ந்து வருவாய் வராது என்ற அச்சத்தில் நடந்து கொள்கின்றன. அதற்காக பல நிபந்தனைகளை விதிக்கின்றன. உதாரணத்திற்கு உள்ளூரில் "சன்லைட்"சோப் தயாரிக்கும் தொழிலகம், பிரிட்டிஷ் சன்லைட் கம்பெனி க்கு வருடாவருடம் தொழில்நுட்ப உரிமைப்பணம் கட்ட வேண்டும்.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் ஏற்றத்தாழ்வான வர்த்தக உடன்படிக்கைகள் பல ஆப்பிரிக்க நாடுகளை வறிய-அடிமை நாடுகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே இயற்றப்பட்டுள்ளன. அவர்களின் இராணுவ-அரசியல்-பொருளாதார பலம் இதனை சாத்தியமாக்குகின்றது. மேலும் காலனிய மக்களை நிரந்தர விசுவாசிகளாக மாற்றும் பொருட்டு ஐரோப்பிய மதம், கலாச்சாரம் என்பன திணிக்கப்படுகின்றன. இவற்றோடு ஒப்பிடும் போது, சீனா வெறும் வர்த்தக மேலாண்மையை மட்டுமே வைத்திருக்கின்றது.
அமெரிக்க-ஐரோப்பியர்கள் எதற்கெடுத்தாலும் இப்படித்தான் ஆட்சி செய்ய வேண்டும், இப்படித்தான் பொருளாதாரம் நடக்க வேண்டும் என்று போதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதாவது தாம் பின்பற்றும் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள், விதிகள், சட்டங்கள் எல்லாம் உலகம் முழுக்க ஒன்றாக இருக்க வேண்டும்(ஏனெனில் அவை தான் சிறந்தவை என்று பதில் வரும்) என்று புத்தி கூறுவார்கள். சீனா அதுபோன்ற காரியங்கள் எதிலுமே ஈடுபடுவதில்லை. கண்ணியமாக வியாபாரத்தை மட்டும் கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். இந்த வேறுபாடு சில சமயம் ஐ.நா. மன்றத்திலும் எதிரொலிக்கும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் ஏதாவதொரு நாட்டின் மீது தடை கொண்டுவந்தால் சீனாவும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறுவார்கள். (அதேநேரம் சீனா மீதும் அதே குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்).

காலனிய காலத்தில், "உலகை நாகரீகப்படுத்துவது வெள்ளை மனிதனின் கடமை" என்று போற்றப்பட்ட நிறவாதக் கருத்துகள் இன்று வெளிப்படையாக பேசப்படுவதில்லை. அதற்குப்பதிலாக "மனித உரிமை பாதுகாத்தல்", "பயங்கரவாத எதிர்ப்பு", "கலாச்சார மோதல்", "மனிதாபிமான தலையீடு", போன்ற பெயர்களில் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. 20 ம் நூற்றாண்டில் இருந்து தான் மனித உரிமைகளையே ஐரோப்பா கண்டுபிடித்தது. அதுவரை ஆளும் வர்க்கம் மட்டுமே உரிமைகளை கொண்டிருந்தது. குறிப்பாக சமூக நீதி கோரிய தொழிலாளர் போராட்டங்கள் தான் மனித உரிமைகளை அனைத்து மக்களுக்குமான உரிமையாக்கியது. இவ்வாறு நீண்ட சரித்திரத்தை கொண்ட ஐரோப்பா, பிற நாடுகள் தம்மிடமிருந்து கற்றுக்கொண்டால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடும் என்று நினைப்பது பேதைமை. அவ்வவ் நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி அடையும் போது, தாங்களாகவே மக்கள் சக்தியை புரிந்து கொள்ளும் காலம் வரும். அப்படியிருக்கையில் பல அழுத்தங்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

உலகில் எந்த சாம்ராஜ்யமும் நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை. உலகில் பெருமளவு நிலப்பரப்பை (பெய்ஜிங் முதல் பெர்லின் வரை) ஆட்சி செய்த மொங்கோலியர்கள் இன்று ரஷ்யாவுக்கும், சீனாவுக்குமிடையில் நசிபடும் சிறு துண்டுக்குள் அடங்கிப்போயுள்ளனர். அதே போன்றே ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும், அதன் தொடர்ச்சியான அமெரிக்காவும் 21 ம் நூற்றாண்டிலும் நிலைத்து நிற்பதற்கு எல்லா வழிவகைகளையும் செய்து வந்தாலும், அது பலிக்கப்போவதில்லை. இப்போதே அதன் அறிகுறிகள் தெரியவாரம்பித்து விட்டன. நிதி நெருக்கடிக்குள் சிக்கி திவாலான வங்கிகளுடன் அமெரிக்கா போராடிக் கொண்டிருந்த வேளை, சீனா தனது விண்வெளி வீரர்களை அண்டவெளிக்கு அனுப்பி நடை பழக வைத்தது.

உலகில் அமெரிக்காவின் மேலாண்மையை சீனா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. தற்போதே அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. உலகின் மூன்றாவது மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனா, ஆசியக் கடலில் ஆதிக்கம் செலுத்த வருகின்றது. இதுவரை ஜப்பான் மட்டுமே, (இலங்கை முதல் ஜப்பான் வரையான) சர்வதேச கடற்பரப்பின் பாதுகாப்பை பொறுப்பு எடுத்திருந்தது. அதற்கு காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எண்ணைக் கப்பல்கள், அல்லது பிற சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆகும். அண்மையில், ஆசியாவில் தலைமை மாறுவதைக் காட்ட, அந்தப் பகுதியில் சீனா தனது யுத்தக் கப்பல்களை ரோந்து விட்டு பார்த்தது. பலவீனமான ஜப்பான் எதுவும் கூறவில்லை.

பனாமா கால்வாய் போல, தாய்லாந்தின் சிறிய நிலப்பரப்பை (மலேசியாவுக்கு அருகில்) ஊடறுக்கும் கால்வாய் அமைக்க சீனா விரும்புகின்றது. இதனால் இந்து சமுத்திரத்திற்கும், பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையிலான தூரம், பயண நேரம் குறையும். மேலும் எண்ணை, மற்றும் எரிவாயு விநியோக குழாய்களை பர்மா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அமைக்கும் திட்டமும் உண்டு. இவற்றை விட சீனா எதிர்காலத்தில் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது குறிப்பிடத்தக்கது. அதற்காக பிராந்திய நாடுகளில் நிரந்தர சீன கடற்படைத்தளங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. சீனா அதற்கு தெரிந்தெடுத்த நாடுகளாவன: பர்மா, பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான்..... இந்த வரிசையில் இலங்கையும் (ஹம்பாந்தோட்டை) அடங்குகின்றது. ஒருகாலத்தில் இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கிக் கொண்டிருந்த ஜப்பானை, தற்போது சீனா மிஞ்சி விட்ட செய்தி, யானை வருமுன் கேட்கும் மணியோசையாகும்.
****************************************************

இந்தக்கட்டுரையின் முதலாவது பகுதியை வாசிப்பதற்கு:
1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்

(இந்தக் கட்டுரை "உயிர்நிழல்" ஜூலை-டிசம்பர் 2009 இதழில் பிரசுரமாகியது)



3 comments:

Anonymous said...

உங்கள் இப்பதிவை இங்கே இணைத்துள்ளோம்

http://www.thamilbest.com/

Sathis Kumar said...

எளிமையான நடையில், பலருக்கும் புரியும் வகையில் பல விடயங்களை புட்டுபுட்டு வைக்கிறீர்கள். தங்களின் பரந்த அறிவை பாராட்டியே ஆகவேண்டும்.

தொடர்ந்து பல சுவையான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவும்.

வாழ்த்துகள்.

Kalaiyarasan said...

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, சதீஸ்குமார்.