Monday, August 27, 2012

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவை நோக்கி...

(குறிப்பு: இந்தக் கட்டுரை நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் அரசியல் - சமூக வார இதழான Vrij Nederland இல், டச்சு மொழியில் பிரசுரமானது.  தமிழ் பேசும் மக்களுக்காக,  அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பா
 (Een democratisch communistisch Europa)

- இல்யா லெயோனார்ட் பைபர் (Ilja Leonard Pfeijffer)

1989 ம் ஆண்டு, மதில் வீழ்ந்த பொழுது, அது முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாக கொண்டாடப் பட்டது. சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கிய பொழுது, கம்யூனிச அமைப்பு செயற்பட முடியாது என்பதற்கான ஆதாரமாக புரிந்து கொள்ளப் பட்டது. கம்யூனிசத்தின் எதிர்மறை விம்பமான பாஸிசம், நாற்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னர், பெர்லின் இடிபாடுகளுக்குள் புதைக்கப் பட்டதோடு ஒப்பிட்டு, மிகப்பெரிய அரசியல் சித்தாந்தங்களின் முடிவு காலம் வந்து விட்டது என்று சொன்னார்கள். வெற்றிவாகை சூடிக் கொண்ட, சுதந்திரமான மேற்குலகம் என்று அழைக்கப்படும் நாடுகளின் அரசியல் பொருளாதாரமானது, எந்த வகையான சித்தாந்தந்திற்கும் உட்படாதது என்று கருதப் பட்டது. அது பன்முகத் தன்மை வாய்ந்த பாராளுமன்ற ஜனநாயகத்திலும், பொருளாதார தாராளவாதத்திலும் தங்கியிருந்தது.

மேற்கத்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், சுதந்திர சந்தையின் சட்டங்கள், இயற்கை வகுத்த சட்டங்களுக்கு ஒப்பானது. அவற்றை எதிர்ப்பதோ, அல்லது ஒதுக்குவதோ, பிரயோசனமற்றதும், முட்டாள்தனமானதுமாகும். கம்யூனிசமும், பாசிசமும் திவாலான நிலையில்; இறுதியில், சந்தையின் செயல்முறையே நம்பத் தகுந்ததாக கருதினார்கள். அதுவே முன்னேற்றத்தையும், சுபீட்சத்தையும், நீதியையும் அளிப்பதற்கான உத்தரவாதமாக கருதப் பட்டது. அப்படித் தான் நினைத்துக் கொண்டார்கள். சிலர் இதனை, சரித்திரத்தின் முடிவு என்ற அர்த்தத்தில் பேசினார்கள். உலகம் முழுவதும், தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் ஆயிரம் வருட ராஜ்ஜியம் ஆரம்பமாகியது. 

ஆயிரம் வருட கால சாம்ராஜ்யத்தில், நாம் வெறும் இருபது வருடங்களை மட்டுமே அனுபவிக்க முடிந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து, அடுத்தடுத்து நெருக்கடிகள் எம் தலை மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதிய நெருக்கடியும், முன்னையதை விட மோசமானதாக இருக்கின்றது. எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் முடிவு தெரியவில்லை. ஒன்று மட்டுமே உறுதியானது: "மிகவும் மோசமான நெருக்கடி இனிமேல் தான் வரப் போகின்றது." எமது அரசியல்வாதிகளும், பொருளாதார கொள்கை வகுப்பாளர்களும் நல்லதே நடக்கும் என்ற நினைப்பில் சந்தை மீது நம்பிக்கை வைத்துப் பேசுகின்றனர். நுகர்வோரின் நம்பிக்கையை பாதிக்கக் கூடாது என்பதற்காக அப்படி நடந்து கொண்டாலும், இந்த அமைப்பு உள்ளுக்குள் விழுந்து நொறுங்கி கொண்டிருக்கிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை. 

கடந்த மாதங்களாக, இந்த துறை பற்றி பேசிக் கொண்டிருந்த தகமையாளர்கள் அனைவரும் மிகவும் நொடிந்து போயுள்ளனர். கிரேக்க நாடு நெருக்கடியில் இருந்து மீளும் சாத்தியம் எதுவும் இல்லை. கடன் நெருக்கடி ஸ்பெயினுக்கு தாவி விட்டது. அடுத்ததாக பிரான்சும் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. அதற்குப் பிறகு, யூரோ நாணயத்தின் கதை முடிந்து விடும். அது தெளிவானது. அது இலட்சக் கணக்கான மக்களின் பொருள் இழப்பு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப் படுவதில் கொண்டு சென்று முடிக்கும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமல்ல, யூரோ நாணயம் பயன்படுத்தும் நாடுகள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும். 

நெதர்லாந்தில்  நாம், "மூன்று A தராதரம்" என்ற பாதுகாப்பான அணைக்கட்டுக்குப் பின்னால் நின்று கொண்டு, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தேவைப்பட்டால், எமது பழைய, நம்பிக்கைக்குரிய கில்டர் நாணய காலத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது நாணயம் பற்றிய பிரச்சினை அல்ல. எமது ஓய்வூதிய நிதியம் போன்றவையே பிரச்சினை ஆகும். யூரோவில் கணக்கிட்டாலும், அல்லது கில்டரில் கணக்கிட்டாலும், பெரும்பாலான (ஓய்வூதிய) நிதியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றப் போவதில்லை. எனது கருத்தை மறுதலிக்கும் நிபுணர் யாரையும் நான் காணவில்லை. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன.  அதன் அர்த்தம், எமது வயோதிப காலத்திற்காக நாம் சேமித்த பணம், வட்டியோடு திருப்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் காப்புறுதி நிதியத்தில் வைப்பிலிட்ட பணம், இனிமேல் எமக்கு கிடைக்கப் போவதில்லை. 
"மன்னிக்கவும். ஓய்வூதியம் கிடையாது." 
"ஆனால், அது எமது சொந்தப் பணம். அதைத் தானே நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்?" 
துரதிர்ஷ்ட வசமாக, பணம் அங்கே இல்லை. எமது  பணம், எந்த வித பெறுமதியுமற்ற சிக்கலான பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.  

"அப்போ? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வறுமையில் வாட வேண்டுமா?" துரதிர்ஷ்டவசமாக, எமக்கு வேறெந்த வழியும் இல்லை. ஒரு வேளை, வீட்டை  விற்று விடலாம். ஆனால், வீட்டு மனை சந்தை ஏற்கனவே வீழ்ந்து விட்டது.  யாரும் அதை இப்போது ஒரு சந்தையாகவே கருதுவதில்லை, ஏனென்றால் வீட்டின் விலை குறைந்து கொண்டு செல்கிறது. மறு பக்கத்தில், அடைமான செலவு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அத்தோடு, ஒரு பக்கத்தில் அலுவலக கட்டிடங்கள் வெறுமையாகக் கிடக்கின்றன. அவற்றை வீடுகளாக மாற்றலாம் என்று சிலர் ஆலோசனை கூறுகின்றனர். நாங்கள் வசதியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு, "எதுக்கும் பிரயோசனமற்ற கிரேக்கர்களை" மீட்டு விட்டோம்.  ஆனால், நாங்கள் விற்கவும் முடியாத, செலவையும் ஈடுகட்ட முடியாத வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஓய்வூதியமும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.  எமது மருத்துவ காப்புறுதித் தொகையும் கட்ட முடியாத அளவு உயர்ந்து விட்டது. சுருங்கி வரும் பொருளாதாரத்தில், எல்லோரிடமும் செலவளிப்பதற்கான பணம் குறைந்து வருகின்றது. அதனால் வேலை வாய்ப்பும் குறைந்து வருகின்றது. அரசாங்கத்தினால் அறவிடப் படக் கூடிய வரியின் அளவு குறைந்து வருவதால், சமூகநல திட்டங்களையும் தொடர்ந்து பேண முடியாது. இந்தப் பிரச்சினை எல்லாம், கிரேக்கர்களாலோ அல்லது யூரோவினாலோ ஏற்படவில்லை. இவையெல்லாம் சந்தையின் கடுமையான சட்டங்கள். சந்தையின் இரும்புக் கரங்களில் இருந்து எம்மை நாமே விடுதலை செய்து கொள்ளா விட்டால், அதனை தடுத்து நிறுத்த முடியாது.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு சுயதேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் தீர்க்கதரிசனம். சரிந்து வரும் பங்குகள், பொருள் இழப்பு, நிறுவனங்கள் திவால் ஆதல், இவற்றில் எல்லாம் ஊகவணிகம் செய்யலாம். அதிலே நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ஒரு பொருள் நஷ்டத்தில் ஓடப் போகின்றது என்று எல்லோரும் நினைத்தால், அதிலே ஊகவணிகம் செய்யலாம்.

ஏதாவது ஒரு பொருளில் நஷ்டம் வராது என்று நம்பினால், அது ஊக வணிகர்களின் பொருளாக இருக்கும். அந்தப் பொருளை நஷ்டமடையச் செய்வதற்கு, அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஏராளமான பணத்தை அதிலே முதலிட்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை ஊக வணிகர்கள் சிந்திக்கிறார்களோ, அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று நிச்சயப் படுத்தப் பட்டால், இன்னும் அதிகமான ஊக வணிகர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள். இது குறள் வடிவில் அமைந்த முதலாளித்துவம்.  

நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு முன்னேறுவதற்கு, தற்போதைய நெருக்கடி ஒன்றும் தற்காலிகமான வசதிக் குறைபாடல்ல. அது அடுத்த நெருக்கடிக்கான ஊற்றுக்கண். அந்த நெருக்கடி இன்னொரு நெருக்கடியை உருவாக்கும். 2008 ம் ஆண்டில் இருந்து தொடரும், ஒன்றோடொன்று தொடர்பு பட்ட நெருக்கடிகள் யாவும், முதலாளித்துவத்தின் உடன்பிறப்புகள். தவணை முறையில் திருத்திக் கொள்வதற்கு, இவை எல்லாம் சந்தையின் சுயமான ஊசலாட்டங்களல்ல. மாறாக, சந்தைப் பொருளாதார அமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. இப்பொழுது நடப்பது மாதிரி, எப்போதும் நடக்கப் போவதில்லை என்பதில் எல்லோரும் ஓரளவு ஒரு மனதாக கருதுகின்றனர். நாம் வாரியிறைக்கும் கோடிக்கணக்கான மீட்பு நிதிகள், பிரச்சினையை ஒரு சில மாதங்கள் தள்ளிப் போடலாம். செயற்படக் கூடிய தீர்வுகள் எதுவும் இல்லை. நாம் இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுக வேண்டும். 

ஏற்கனவே எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடி பற்றி, மயிர் சிலிர்க்க வைக்கும் துல்லியத்துடன் எதிர்வு கூறப் பட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னர். தொழிற்புரட்சிக் காலகட்டத்திற்கு பின்னரான இங்கிலாந்தின் நிலைமைகளை வைத்து, கார்ல் மார்க்ஸ் "அரசிய பொருளாதாரம் மீதான விமர்சனங்களை" எழுதியிருந்தார். முதலாளித்துவ அமைப்பின் குறைபாடுகள் பற்றிய அவரின் ஆய்வுகள், முன்னெப்போதையும் விட இன்று தான் பொருந்திப் போகின்றன.  

மார்க்ஸ் கூறியதன் படி,  சங்கிலித் தொடரான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கும். அவை வர வர தீவிரமடையும், ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வரும். மிகச் சரியாக, அதனை நாங்கள் இன்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மார்க்ஸ் கூறினார்: "இலாபம் ஒருவரின் தனிச் சொத்தாக இருக்கும் அதே நேரத்தில், நஷ்டத்தை பொது மக்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர்."  மிகச் சரியாக, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருட காலமாக வங்கியாளர்களுக்கு கிடைத்த இலாபத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால், திவாலானான வங்கிகளை மீட்பதற்கான பொறுப்பு அனைத்து வரி செலுத்துவோரின் தலைகளிலும் விழுகின்றது.  

மார்க்சின் மிகப் பிரபலமான, மூலதனக் குவிப்பு பற்றிய கோட்பாடு ஒன்றுண்டு. அதாவது, முதலாளித்துவ அமைப்பு, மூலதனம் குவிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகின்றனர். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகின்றனர். "எங்கேயோ போகும் கோடிக் கணக்கான யூரோக்கள் எல்லாம் மண்ணில் வந்து விழுவதில்லை." நெருக்கடியை புரிந்து கொள்வதற்காக, ஒரு பார வாகன சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியது மிகச் சரியானது.  சந்தைகள் இயற்கையான தோற்றப்பாடுகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

சந்தைகள் நெருக்கடிகளை உருவாக்குவதால், வெள்ளத்தை தடுக்க ஆணை கட்டுவதைப் போல அவற்றை நாங்கள் தடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சந்தைகள், உண்மையில் மக்களைக் குறிக்கும். ஒரு சிறு தொகை ஊக வணிகர்கள், நெருக்கடியினால் நாறிப் போகுமளவிற்கு பணத்தை அள்ளுகின்றனர். மண்ணில் வந்து விழாத கோடிகள் எல்லாம் அங்கே தான் போகின்றன.  ஒரு இயற்கையான தோற்றப்பாட்டை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், மனிதர்களின் துர் நடத்தையை தடை செய்யலாம். கோடிக் கணக்கான மக்களுக்கு பாதகமான முறையில், செல்வம் சேர்க்கும் ஒரு சிலருக்கு மட்டுமே உதவுமாக இருந்தால், அப்படிப் பட்ட சந்தைகளை தடை செய்வதற்கு அதுவே ஒரு சிறந்த காரணமாக இருக்கும். 

தாராளவாதம் என்பது சாலச் சிறந்தது. பல தடவைகளாக தவறாக பயன்படுத்தப் பட்ட சுதந்திரம் என்ற சொல்லானது, ஒவ்வொரு அரசியல் அமைப்பினதும் உயரிய இலட்சியமாக உள்ளது. "அனைத்து பிரஜைகளினதும் தனித்துவமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது. ஒரு தனிநபர் அதிக பட்சம் முன்னேறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது. ஒவ்வொருவரும் அவர் விரும்பியவாறு வாழ அனுமதிப்பது."  அதுவே ஒவ்வொரு அரசினதும், ஒரேயொரு, புனிதமான கடமையாக உள்ளது. 

அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, சுதந்திரத்திற்கான பாதை செப்பனிடப் பட வேண்டியுள்ளது. ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தி, இன்னொருவரின் சுதந்திரம் குறைக்கப் படுகின்றது. அடுத்தவரின் சுதந்திரத்தில்  தலையிடுவதும், பாதிப்பதுமான நடத்தைகள் தடை செய்யப் பட வேண்டும். அதனால் தான், நாங்கள் சில நேரம் பிரஜைகளின் சுதந்திரத்தை பறிக்கிறோம். இன்னொருவரின் கழுத்தை அறுப்பதற்கு, இன்னொருவரின் பொருளை திருடுவதற்கு, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனமோட்டுவதற்கு, அயலவரின் வீட்டை எரிப்பதற்கு, இது போன்றவற்றுக்கு எல்லாம் சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, எமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்வதை நாங்கள் சாதாரணமாக எடுக்கிறோம். 

தாராளவாதம் (லிபரலிசம்) என்ற சொல்லை, கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் ஒத்த கருத்துள்ள சொல்லாக புரிந்து கொள்கிறோம். பண்பாட்டு தாராளவாதத்திற்கும், பொருளியல் தாராளவாதத்திற்கும் இடையில் பாகுபாடு காட்டப்பட வேண்டும். சிந்திப்பதற்கு, நம்புவதற்கு, கருத்துக் கூறுவதற்கான சுதந்திரமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரமும் ஒன்றல்ல.  சுதந்திரமான சந்தை, குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றது. அதனால், அது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கருதப்பட வேண்டும். அதனாலேயே தடை நியாயப் படுத்தப் படுகின்றது, அத்தோடு அவசியமானதும் கூட. ஆனால், அதற்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளன. கட்டற்ற சுதந்திர சந்தையை தடை செய்வதென்பது, உண்மையில் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு ஒப்பானது. அந்த இடத்தில் இனி வரப்போவது, அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் என்று அறியப் பட்டாலும், நாங்கள் அதனை கம்யூனிசம் என்றழைப்போம். 

இத்தகைய மாற்றத்தை தான் மார்க்ஸ் கண்டார். ஆனால், அதைக் கேட்டவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஏனென்றால், கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எமக்கு எந்த விருப்பமும் கிடையாது. கம்யூனிசம் நடைமுறைச் சாத்தியமில்லாதது என்று,  நாங்கள்  இருபது வருடங்களுக்கு முன்னரே முடிவு செய்து விட்டோம். "ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்தி, வறுமையையும், பஞ்சத்தையும் மட்டுமே உண்டாக்கும்", அரசியலாளருடன் கம்யூனிசத்தை ஒன்று படுத்திப் பார்க்கிறோம். ஆனால், அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் குறித்து நாங்கள் அச்சப் படத் தேவையில்லை. 

அரசு என்பது ஒரு காவல் நிலையம் அல்ல. ஒரு ஜனநாயக அமைப்பில், (மக்களாகிய) நாங்கள் தான் அரசாங்கம்.  எல்லாவிதமான அவலங்களையும் எமக்களித்த சுதந்திர சந்தையினால், மக்களாகிய நாங்கள் பொருளாதாரத்தை எமது கையில் எடுப்பதை தடுக்க முடியுமா? ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப் படும் பொருளாதாரத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்காவது இருக்கிறதா?  தங்களுக்கு மட்டுமே செல்வம் சேர்க்கும், மனச்சாட்சியே இல்லாத ஊக வணிகர்களிடம் நாங்கள் அதனை விட்டு விட முடியுமா? 

அதனால் தான், மதில் வீழ்ந்ததையும், சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கியதையும் உதாரணமாக காட்டி,  "கம்யூனிசம் நடைமுறையில் சாத்தியப் படாது" என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட முடியாது.  அங்கே இருந்தது கம்யூனிசம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் இருந்த, இப்போது இருக்கும் ஒரு சில, "கம்யூனிச நாடுகள்" என்று கருதப் பட்ட நாடுகள் எல்லாம், உண்மையில் கூட்டுத்துவ அமைப்பு நாடுகள். 

மார்க்சின் அடிப்படைச் சுலோகத்தின் படி, மக்களின் கைகளில் உற்பத்திச் சாதனங்கள் இருந்தால் தான் அது கம்யூனிசம் என்று அறியப்படும். ஆனால், கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்ட எந்த நாட்டிலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. மக்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. மதிலின் வீழ்ச்சியானது எமக்கு எதனை உறுதிப் படுத்தியுள்ளது என்றால், "சர்வாதிகாரம் நடைமுறையில் சாத்தியப் படாது." மக்கள் ஜனநாயகமான உண்மையான கம்யூனிசம், சரித்திரத்தில் என்றுமே முயற்சிக்கப் படவில்லை. 

நிச்சயமாக,  அதற்கேற்ற ஜனநாயக கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த நிலைமை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. Occupy இயக்கமானது, கட்டற்ற சுதந்திர சந்தைக்கு எதிராக எழுச்சியுறும் போராட்டங்கள் பற்றிய நற்செய்தியை அறிவித்த முதலாவது தூதுவன். இந்த இயக்கமானது பெருமளவு ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணம், அது அடித்தட்டு மக்களிடம் இருந்து தானாக கிளர்ந்தெழுந்தது.  19 ம் நூற்றாண்டில் மார்க்ஸ் திட்டமிட்டதைப் போல, அது ஒரு பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி. 

Occupy இயக்கத்தினரால் குறைந்தளவு தாக்கம் மட்டுமே செலுத்த முடிந்ததது. அத்தோடு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தார்கள். இப்போது இருக்கும் நிலைமை, என்றென்றைக்கும் தொடரப் போவதில்லை. வருங்காலத்தில், நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்கள் இந்த உணர்வைப் பெறுவார்கள்.  ஓய்வூதியம் கிடைக்கப் போவதில்லை என்றால், யாருமே வீட்டை விற்க முடியாது என்றால், அது விரைவில் நடக்கும். நாங்கள் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சமூகத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் கருதுவதையும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவில் நான் வாழ விரும்புகின்றேன். ஒரு தடவை, நாங்கள் அதனை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

(நன்றி: Vrij Nederland , 11 ஆகஸ்ட் 2012 )

(மூலப் பிரதியை இங்கே வாசிக்கலாம்: http://www.vn.nl/boeken/essay-2/een-democratisch-communistisch-%E2%80%A8europa/)


அடிக்குறிப்பு: 
Vrij Nederland ஒரு "வழக்கமான இடதுசாரிகளின் பிரச்சார சஞ்சிகை" அல்ல. நாஜிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த நெதர்லாந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் குரலாக ஒலித்தது. சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்கத்தின் குறை நிறைகளை விமர்சித்து எழுதி வருகின்றது. சர்வதேச மட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் தவறுகளையும், சோஷலிச நாடுகளின் தவறுகளையும் சுட்டிக் காட்டி எழுதி வந்துள்ளது. நேர்மையான ஊடகவியல் காரணமாக, வலது, இடது பாகுபாடின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப் படுகின்றது. மேலதிக தகவல்களை விக்கிபீடியா இணைப்பில் வாசித்து அறிந்து கொள்ளலாம். 


No comments: