Thursday, April 09, 2020

பட்டினியால் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் இத்தாலியர்கள்


இலங்கை, இந்தியாவில் வாழும் மக்களே! இன்று இத்தாலியில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை நாளை உங்களுக்கும் வராது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. நாளை கொரோனா தொற்று இல்லாமல் போனாலும், பொருளாதாரப் பிரச்சினை உங்களை விட்டு போகப் போவதில்லை. இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது. ஆனால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக நிலவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்த மக்களின் சேமிப்பில் இருந்த பணம் கரைந்து விட்டது. வேலையில்லாத காரணத்தால் வருமானமும் இல்லை.  வறுமை அதிகரிக்கிறது. 

குறிப்பாக தெற்கு இத்தாலியில் வாழும் பல குடும்பங்களிடம் அத்திவாசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட  கையில் பணம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். சிலர் தமது கஷ்டங்களை கூறும் வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பெட்டிக் கடைகளில் பொருளை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்கின்றனர். பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் சூறையாடப் பட்டுள்ளன. ஒரு சமூகப் புரட்சிக்கான அறைகூவல்கள் கேட்கின்றன.

குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தெற்கு இத்தாலியில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையை நம்பியிருந்த சிறு வணிகர்களின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. உள்ளூர் தொழிலதிபர்கள் அனைத்தையும் இழந்து இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பற்றிய அச்சம் அகன்று, நிலைமை வழமைக்கு திரும்பினாலும் அவர்களால் முன்னரைப் போன்று செயற்பட முடியாது. இதனால் சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் நிலவுகிறது.

இத்தாலி மக்களிடம் உணவு வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால், கடைகளில் சென்று பொருட்களை வாங்கி விட்டு காசில்லை என்று கையை விரிக்கிறார்கள். சிறிய பெட்டிக் கடைகளில் இலவசமாகக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். கடைக்காரர்களும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். இதனால் அவர்களும் கடைகளை மூடி விட்டுச் செல்கின்றனர்.

பெரிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. தள்ளுவண்டிகளில் பொருட்களை நிரப்பிக் கொண்டு, காசாளரிடம் பணம் கொடுக்காமல் ஓடி விடுகிறார்கள். கும்பலாக நுழைந்து சூறையாடுகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள். இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னால் பொலிஸ் காவல் போட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் அரசு இயங்குகிறது என்று காட்டுவதற்காக நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக் குழுவொன்று சூப்பர் மார்க்கெட்டுகளை சூறையாடுமாறு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தளத்தில் ஒரு புரட்சிக்கான அறைகூவல்களும் கேட்கின்றன. காவல்துறையினர் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கிரிமினல்மயப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பட்டினி கிடக்கும் மக்கள் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் செயற்பாடுகளில் தன்னெழுச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கிகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்க பணமில்லை என்று கதறும் மக்களின் குரல்கள் கேட்கின்றன. அவர்களை அமைதிப் படுத்தும் பொலிசாரிடம் வீட்டுக்கு வந்து நிலைமையை நேரில் பார்க்குமாறு கூறுகின்றனர். சில இடங்களில் போலீஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது சாப்பிடக் கொடுக்கிறார்கள். பல இடங்களில் பொலிசாரும் மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும், இன்று வரையில் கைகலப்புகள், வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை. இத்தாலியில் நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் உணவிடும் அளவிற்கு அரசிடமும் பணம் இருப்பதாக தெரியவில்லை. இத்தாலி அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை எதிர்பார்க்கிறது. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதியுதவி வழங்குவதை தடுத்து வருகின்றன. இது சுகாதார நெருக்கடி என்றும், பொருளாதார நெருக்கடி அல்ல என்றும் சாட்டுக் கூறி வருகின்றன.

Lockdown எனப்படும் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்த பலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. குறிப்பாக பதியாமல் களவாக வேலை செய்தவர்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு முன்னர், தெற்கு இத்தாலியில் நிறையப் பேர் பதிவில்லாமல் (சட்டவிரோதமாக) வேலை செய்து வந்தனர். அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளும் அரசுக்கு வரி கட்டாமல் ஏய்ப்பதற்காக அந்த நடைமுறையை பின்பற்றினார்கள். அதை விட சாதாரணமாக குறைந்த வருமானம் எடுத்து வந்தவர்களிடம் சேமிப்புப் இருக்கவில்லை. அப்படியானவர்கள் தற்போது கையில் பணம் இல்லாமல் உணவுக்கு வழியின்றி கஷ்டப் படுகிறார்கள். அரசு தலையிட்டு அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளை வழங்கா விட்டால், விரைவில் இத்தாலியில் ஒரு மக்கள் எழுச்சியை எதிர்பார்க்கலாம். No comments: