Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

No comments: