Saturday, September 03, 2016

ஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் தான்மன்னிக்கவும், இதைச் சொன்னவர் "சர்வதேச சமூகத்தை சண்டைக்கு இழுக்கும் இடதுசாரி ஈழப் புரட்சியாளர்" அல்ல. இறுதிப் போரில் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் தைரியமற்ற தமிழ்த் தேசியவாதி:

 //தமிழினம் அழிக்கப்பட்டபோது தடுக்க
 திராணியற்றிருந்த பான் கீ மூன் - இன்று தன்னிலை மறந்து வந்து கைகூப்புகின்றார்... 
நாங்கள் கடவுள்கள் அல்லவே 
 உங்களை மன்னிக்க...//

பிற்குறிப்பு: இப்படிச் சொன்னதற்காக தமிழர்கள் எல்லோரும் "இடதுசாரி புரட்சியாளர்கள்" என்று தவறாக நினைத்து விடாதீர்கள், பான் கீ மூன் அவர்களே! மீண்டும் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. விடம், அதாவது உங்கள் காலில் வந்து விழுவோம். மீண்டும் ஜெனீவாவை நோக்கி ஊர்வலம் நடத்துவோம்.

ஏகாதிப‌த்திய‌த்தின் சுய‌ரூப‌ம் இப்போது தானா தெரிந்த‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளே? ஈழப் போர் கூட ப‌ரிசோத‌னைக் க‌ள‌மாக‌, ஆயுத நிறுவனங்களின் இலாபத்திற்காக நடந்தது. க‌ட‌ன் கொடுக்கும் உல‌க‌ வங்கிகளுக்கும் சம்பந்தம் உண்டு. இது தெரியாம‌ல் இன்றைக்கும் "ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டு த‌மிழீழ‌ம் வாங்கித் த‌ரும்" என்று காத்திருக்கும் முட்டாள்க‌ளைப் ப‌ற்றி, என்ன‌த்த‌ சொல்ல‌? ஈழப்போர் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் மட்டுமல்ல, அது ஒரு வர்க்கப் போராட்டமும் தான்.

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் காணாமல் போனோரின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. எதிர்க் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது அரசியல் ஆதாயங்களுக்காக சம்பந்தர், சுமந்திரனை திட்டுவதுண்டு. ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு (இந்த இடத்தில் பான் கீ மூன்) எதிராக முணுமுணுக்கவும் மாட்டார்கள்.

அது ஒரு புறமிருக்கட்டும். அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, காணாமல் போனவரின் தாய் ஒருவர் அங்கு நின்ற சிங்களப் பொலிசாருடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. (பார்க்க: https://www.youtube.com/watch?v=kJeblNa2Pz4) அவர் அந்தப் போலிஸ்காரரிடம் கூறுகின்றார்:"காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!"

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் "இடதுசாரி" என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

ஈழப் போர் நடந்த காலம் முழுவதும், ஏழைகளே அதிகளவில் பாதிக்கப் பட்டனர். வசதிபடைத்தோரும், பணக்காரர்களும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.  காணி, பூமி வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அல்லது அடகு வைத்து விட்டு சென்றார்கள். வெளிநாடு செல்ல முடியாதவர்கள், கொழும்பு நகரில்  அல்லது தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள்.

ஈழத்தில் எஞ்சியிருந்த, நிலமற்ற, சொத்துக்கள் ஏதுமற்ற ஏழைகள் தான் போராடச் சென்றனர். ஏனென்றால், ஏழைகள் தான் போரினால் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் இழந்து நின்றனர். "இதற்கு மேல் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர்  தான் போராட முன்வருவார்கள்." என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன பொன்மொழி ஈழப்போரிலும் நிரூபிக்கப் பட்டது. 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்! சிங்கள அரசும், சிங்கள இராணுவமும், எந்தளவு கொடூரமான இனவெறியர்களாக இருந்தாலும், காசைக் காட்டி மயக்க முடிந்தது. அதனால் பல பணக்காரத் தமிழர்கள், பண பலத்தால் தப்பியிருக்கிறார்கள். இறுதிப் போரில் தப்பிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கூட, காசு வாங்கிக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளே, விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டாலும், சில நாட்களில் பெருந்தொகைப் பணம் கொடுத்து வெளியே வந்தார்கள். சிறிலங்கா இராணுவம், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க வசதியில்லாத ஏழைகளின் பிள்ளைகள், இன்று வரைக்கும் சிறை வைக்கப் பட்டுள்ளனர். கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்போராக உள்ளனர். பலர் கொல்லப் பட்டு விட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப் பட்டுள்ளனர்.

"அப்படி அல்ல, ஈழத் தமிழ் சமூகத்தில் அனைத்து வர்க்கத்தினரும் வெளிநாடுகளுக்கு போனார்கள். பணமில்லாதவர்கள் கடன் வாங்கிச் சென்றனர்." என்று சிலர் வாதாடலாம். அது விதண்டாவாதம். ஏனெனில், கடன் வாங்க முடியாத தமிழர்களும் ஈழத்தில் வாழ்கின்றனர். பெருந்தொகைப் பணம் கடனாக எடுப்பதென்றால் நகைகள் அல்லது காணி அடகு வைக்க வேண்டும். அது கூட இல்லாத ஏழைகள் ஏராளம்.

மேலும், ஈழப் பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் இருந்து சம அளவில் புலம்பெயரவில்லை. பணக்காரர்கள், வசதிபடைத்தோர் பெருமளவில் வாழும் யாழ் மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். அதிலும் குறிப்பாக யாழ் நகரத்தை அண்டிய பிரதேசம், வலிகாமம் போன்ற இடங்களில் தான் செல்வந்தர்கள் செறிவாக வாழ்ந்து வந்தனர். மேலும் தீவுப் பிரதேசங்களை சேர்ந்தோர், போர் தொடங்குவதற்கு முன்னர் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து வந்தனர். இன்று மேற்கத்திய நாடுகளில் வாழும் ஈழத் தமிழரில் கணிசமான அளவினர், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து சென்றவர்களே.

இந்தியா மாதிரி ஈழத்திலும் வர்க்கமும், சாதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளன. சரியான புள்ளிவிபரம் எடுக்கப் படுமாக இருந்தால், மேட்டுக்குடி அல்லது உயர் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை உயர்த்தப் பட்ட சாதிகளில் இருந்து வந்திருப்பார்கள். அதற்கு மாறாக, ஏழைகளும், வசதியற்றவர்களும் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பார்கள். இது குறித்து ஆய்வு செய்த பரம்சோதி தங்கேஸ், மல்லாகம் கிராமத்தில் இருந்த இடம்பெயர்ந்தோர் அகதிமுகாம்களை உதாரணமாகக் காட்டுகின்றார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை, பலாலி முகாம்களை விஸ்தரிக்கும் நோக்கில், சிறிலங்கா இராணுவம் சுற்றியிருந்த கிராமங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தது. வசாவிளான், மயிலிட்டி போன்ற பல ஆக்கிரமிக்கப் பட்ட கிராமங்கள், போர் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர் தான் விடுவிக்கப் பட்டன. அந்தப் பிரதேச மக்கள் தொண்ணூறுகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்து சென்ற உயர்த்தப் பட்ட சாதியினர் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர். அவர்களிடம் அந்தளவு வசதி இருந்திருக்கிறது. ஆனால், தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தினர் தசாப்த காலமாக அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களிடம் எந்த வசதியும் இல்லாத படியால், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் உயிர்பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இந்தத் தகவல் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

*****


வீடியோ: "காசுள்ளவனிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு போக விடுகிறீர்கள். ஆனால், ஏழைப் பிள்ளைகளை (சிறைகளில்) அடைத்து வைத்திருக்கிறீர்கள்!" 
UN Secretary General, Ban Ki-Moon Visit to Jaffna

No comments: