Monday, June 17, 2013

இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை]

(இரண்டாம் பாகம்)

ஐரோப்பிய மையவாத சிந்தனை எமது மனதையும் ஆட்கொண்டுள்ளதால், ஐரோப்பிய காலனியாதிக்கம் உருவாக்கிய "தேசிய அரசுகள்" மட்டுமே எனது கண்களுக்கு தெரிகின்றன. இந்தோனேசியாவை ஒரே மொழி பேசும், ஓரின மக்களின் நாடு என்று தவறாக அனுமானித்தால், அது எம் தவறல்ல. எமக்கு அப்படி நினைக்க கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய மையவாத சிந்தனையால், பல முன்னாள் காலனிய  நாடுகளுக்குள் அடக்கப் படும், சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகள் வெளியுலகில் முக்கியத்துவம் பெறுவதில்லை. மொலுக்கு மக்களின் இனப் பிரச்சினை, ஈழத் தமிழரின் இனப் பிரச்சினை ஆகியன, வெளியுலகின் கவனத்தை கவராத காரணம், காலனிய கடந்த காலத்தினுள் மறைந்திருக்கிறது. உண்மையில், ஐரோப்பிய காலனியாதிக்கம் பூர்த்தி செய்யாமல் தவற விட்ட இடத்தில் இருந்து, இந்தோனேசிய, சிங்கள பேரினவாத அரசுகள் தமது பணியை ஆரம்பித்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,  காலனியாதிக்கத்தின் நவீன வடிவமான நவ காலனித்துவம், இன்றைய ஆட்சியாளர்களுக்கும், ஐரோப்பிய எஜமானர்களுக்கும் மிகவும் வசதியானது.

மொலுக்கு இன மக்கள், அவுஸ்திரேலிய அபோரிஜின் பூர்வ குடிகள் போன்றிருப்பார்கள். ஆனால், இருபதாம் நூற்றாண்டு வரையில் மொலுக்கர்கள் நாகரீகமடையவில்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு, ஜாவா, மலேசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு இருந்தது. இதனால் வர்த்தக நோக்குடன் வந்தவர்கள் அங்கே குடியேறி இருக்க வாய்ப்புண்டு. இன்று மொலுக்கர்கள் பல விதமாக தோன்றுவதற்கு, ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்த இனக் கலப்பு காரணமாக இருக்கலாம்.

மொலுக்கு தீவுகளில் வாழும் மக்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். சிறு சிறு குழுக்களாக நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கென பூர்வீக கதையை கொண்டிருக்கிறது. Saparua தீவில், Ihamahu எனுமிடத்தில் வாழும் இனக் குழுவினர் தம்மை இந்திய வம்சாவளியினர் என்று கூறிக் கொள்கின்றனர். தென் கிழக்கு இந்தியாவில் இருந்த, காலிங்க நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல் உடைந்த பின்னர் இந்தத் தீவில் தங்கி விட்டதாக, ஒரு கர்ண பரம்பரைக் கதை உலாவுகின்றது.

மொலுக்கு தீவுகளில் பெரிய நகரமான அம்பொன், இன்றைக்கும் சனத்தொகை அடர்த்தி கூடிய இடமாகும். அவர்கள் பேசும் "அம்பொன் மொழி", இன்று பெரும்பான்மை மக்களால் பேசப் படுகின்றது. அது பூர்வீக அபோரிஜின் மொழிகளும், மலே மொழியும் கலந்த புது மொழி ஆகும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அதாவது இந்தோனேசியாவில் இஸ்லாம் பரவிய காலத்தில், மொலுக்கு தீவுகளிலும் இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதிருந்தே மொலுக்கு மக்கள் முஸ்லிம்களாக மாறி விட்டனர். 

500 வருடங்களுக்கு முன்னர், போர்த்துக்கேய காலனியாதிக்க வாதிகளின் தொடர்பால், அந்த தீவுகளில் கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியது. போர்த்துக்கேயரிடம் இருந்து டச்சுக் காரர்கள் கைப்பற்றிய பின்னர், கிறிஸ்தவ மதம் பரப்புவோர் முழு மூச்சுடன் செயற்பட்டனர். இன்று, வட மொலுக்கு தீவுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். தென் மொலுக்கு தீவுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தக் கட்டுரை முழுவதும், கிறிஸ்தவ தென் மொலுக்கர்கள் குறித்தும், அவர்களது தனி நாட்டுக்கான போராட்டம் குறித்தும் தான் பேசுகின்றது.

இந்தோனேசியா சுதந்திரம் அடையும் வரையில், முஸ்லிம், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் தோன்றி இருக்கவில்லை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழரும், முஸ்லிம்களும், "பிட்டும், தேங்காய்ப் பூவும் மாதிரி" சகோதர உணர்வுடன் கலந்து வாழ்ந்ததாக சொல்லப் படுவதுண்டு. அதே மாதிரி தான், மொலுக்கு தீவுகளிலும் நிலைமை இருந்தது. ஆனால், டச்சு காலனியாதிக்க ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ மொலுக்கர்களுக்கு பல சலுகைகள் வழங்கி வந்தனர். அது மட்டுமல்லாது, RMS  என்ற தென் மொலுக்கு குடியரசு என்ற தனி நாட்டுக் கோரிக்கை எழுவதையும் ஊக்குவித்தனர். ஆரம்பத்தில், மொலுக்கு தனி நாட்டுக் கோரிக்கையை டச்சுக் காரர்கள் ஊக்குவித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 

1. கம்யூனிச கொள்கை பரவுவதை தடுக்க முடிந்தது. 1965 ம் ஆண்டு, இந்தோனேசியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடி அழித்தொழிக்கப் பட்டனர். ஆனால், மொலுக்கு தீவுகளில் கம்யூனிஸ்டு என்ற பெயரில் யாரும் கொல்லப் படவில்லை. அந்தளவுக்கு, மொலுக்கு தேசியவாதம் "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தி இருந்தது. 
2. காலனிய எஜமானர்களின் வழமையான பிரித்தாளும் சூழ்ச்சி. ஒரு பக்கம் மொலுக்கு சிறுபான்மை இனத்தின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொண்டார்கள். மறு பக்கம் மொலுக்கு தேசியவாதிகளை அழித்தொழித்த இந்தோனேசிய பேரினவாதிகளை ஆதரித்தார்கள். இந்த இரண்டு தரப்பும் தங்களை நம்பும் படி பார்த்துக் கொண்டார்கள். 

கிட்டத்தட்ட இதே மாதிரியான தந்திரோபாய அரசியல், இலங்கையில் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் மேற்கொள்ளப் பட்டது.  

RMS என்ற தென் மொலுக்கு குடியரசு இயக்கம், இராணுவப் பிரிவையும் கொண்டிருந்தது. டச்சு காலனிய படைகளில் (KNIL) இருந்த அதிகாரிகள் அதில் சேர்ந்து கொண்டனர். இந்தோனேசியா சுதந்திரமடைந்த பின்னரும், டச்சு காலனிய படைகள் மொலுக்கு தீவுகளில் இருந்த தளங்களை எடுக்கவில்லை. இந்தோனேசிய அரசின் அழுத்தத்தால், டச்சு படைகளை விலக்கிக் கொள்ள சில வருடங்கள் எடுத்தன. அதற்குப் பிறகு தான், இந்தோனேசிய படை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அப்போது தான், தென் மொலுக்கு குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. (அதனை நெதர்லாந்து உட்பட, உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.) இந்தோனேசிய படைகளுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடந்தது. அதே நேரம், டச்சு காலனிய படைகளில் பணியாற்றிய 4000 வீரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நெதர்லாந்து நோக்கி பயணமானார்கள். 

நெதர்லாந்து வந்து சேர்ந்த கிறிஸ்தவ - தென் மொலுக்கு மக்கள், "நாடற்றவர்" என்ற நிலைக்கு தள்ளப் பட்டனர். அதாவது, அவர்கள் இந்தோனேசிய குடியுரிமையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரம், நெதர்லாந்து அரசு அவர்களுக்கு டச்சு குடியுரிமை கொடுக்க மறுத்தது. ஒரு வகையில், மொலுக்கு அகதிகள் அதனை எதிர்பார்க்கவுமில்லை. ஏனென்றால், அவர்கள் நெதர்லாந்தில் தற்காலிகமாக 6 மாதங்கள் மட்டுமே தங்கப் போகிறார்கள் என்றும், மொலுக்கு தீவுகளுக்கான "சுயநிர்ணய உரிமை" வழங்கப் பட்ட பின்னர் திரும்பிச் செல்லலாம் என்று கூறப் பட்டது. நமது தமிழ் தேசியவாதிகள், சுயநிர்ணய உரிமை என்றால் தனித் தமிழீழம் என்று புரிந்து கொள்வதைப் போன்று தான், அன்றைய மொலுக்கு தேசியவாதிகளும் நினைத்தார்கள். ஆனால், நெதர்லாந்து அரசைப் பொறுத்த வரையில், அது அதிக பட்சம் சமஷ்டியை நோக்கிய அதிகாரப் பரவலாக்கல் மட்டுமே. ஆனால், அந்த உறுதிமொழியை கூட நெதர்லாந்து அரசு நிறைவேற்றவில்லை.

நெதர்லாந்து வந்து சேர்ந்த மொலுக்கு அகதிகள், டிரெந்தெ (Drenthe) எனும் மாகாணத்தில் பல இடங்களில் குடி இருத்தப் பட்டனர். ஜெர்மனி எல்லைக்கு அருகில் உள்ள, வட கிழக்கு மாகாணமான டிரெந்தெ யில், நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தங்கியிருந்தேன். நெதர்லாந்து நாட்டில், அபிவிருத்தியில் பின்தங்கிய, "வறிய" மாகாணம் அது தான். இப்போதும் அங்கே குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொருளாதார விருத்திகள் எதுவும் நடப்பதில்லை. "தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது." என்று அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள், தமது அரசை குறை கூறுவார்கள். 

ஸ்வேலோ (Zweeloo)  என்ற ஒரு சிறிய கிராமத்தில், காட்டுப் பகுதியில் அமைந்திருந்த அகதி முகாமில், ஒரு காலத்தில் நானும் தங்கியிருந்தேன். வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட அந்த முகாமில், ஐம்பதுகளில் மொலுக்கர்கள் தங்க வைக்கப் பட்டனர். அன்றிலிருந்து இன்று வரையில், முகாம் நிலைமை பெரிதாக மாறி விடவில்லை. ஸ்வேலோ கிராமத்தில் இருந்த ஒரு சிறிய நூலகத்தில் தான், முதன் முறையாக மொலுக்கர்களின் வரலாற்றை பற்றி அறிந்து கொண்டேன். அன்று எனக்குத் தெரிந்த அடிப்படை டச்சு மொழி அறிவைக் கொண்டு, அங்கிருந்த பத்திரிகை துணுக்களை வாசித்தேன். அப்போது, நான் அது வரையும் அறிந்திராத சில தகவல்கள் கிடைத்தன. 

இன்று அமைதிப் பூங்காவாக காணப்படும் டிரெந்தெ மாகாணம், எழுபதுகளில் பெரும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான அரசியல் வன்முறைகள் பலவற்றை கண்டது. இந்தோனேசியாவில் வாழும் மொலுக்கு மக்களின் தனி நாட்டுக் கோரிக்கையை உலகம் அறியச் செய்த பல சம்பவங்கள் அங்கே இடம்பெற்றன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1. மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை

No comments: