Monday, June 24, 2013

நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (நான்காம் பாகம்)

2009 ஏப்ரல், நோர்வே ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயம், ஈழத் தமிழ் இளையோரால் ஆக்கிரமிக்கப் பட்டு, உடைத்து நாசமாக்கப் பட்டது. ஈழப்போரின் எதிரொலியாக, புலம்பெயர்ந்த நாடொன்றில், இலங்கை அரச நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அது இராஜதந்திர விஷயத்தில், இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விடயமும் ஆகும். முன்னாள் ஐரோப்பிய காலனி நாடொன்றின் இனப் பிரச்சினை, காலனிய எஜமானர்களின் தாயகத்தில் எதிரொலித்தது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, 1966 ம் ஆண்டு, நெதர்லாந்து, ஹேக் நகரில் அமைந்துள்ள இந்தோனேசிய தூதரகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. அந்த தாக்குதலை நடத்தியவர்கள், புலம்பெயர்ந்த மொலுக்கு இளையோர். ஈழத் தமிழ் இளையோரும், இந்தோனேசிய மொலுக்கு இளையோரும், அவர்களது பெற்றோரால் தான் அரசியல் மயப் படுத்தப் பட்டனர்.

நிச்சயமாக, புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மற்றும் மொலுக்கு பெற்றோர்கள், ஐரோப்பிய கனவான்களைப் பற்றி பெரு மதிப்பு வைத்திருந்தார்கள். (ஐரோப்பிய) பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த அரசியல் நடவடிக்கையையும் தவறாக கருதியவர்கள். ஆனால், சிறு வயது முதல் புலம்பெயர்ந்த மண்ணில் வளர்ந்த இளையோரிடம் அந்த மனப்பான்மை இருக்கவில்லை. தமது பெற்றோர் புலம்பெயர்ந்து வந்த தாயகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதை புரிந்து கொண்டார்கள்.

நெதர்லாந்து காலனிய எஜமானர்களுக்கு, மொலுக்கு சமூகம் செய்த சேவை அளப்பெரியது. இருப்பினும், இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நாள் முதல், காலனிய எஜமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வெளிப்படையாகவே இந்தோனேசிய அரசுக்கு சார்பாக நடந்து கொண்டனர். தம்மை நம்பி இருந்த  மொலுக்கு சமூகத்திற்கு துரோகம் இளைத்தனர். நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு வரப் பட்ட முன்னாள் காலனியப் படைவீரர்கள் கூட நல்ல முறையில் நடத்தப் படவில்லை.

அன்றைய காலத்தில், நெதர்லாந்து நாட்டில் எல்லோருக்கும் வீடு கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனால், அரசு மொலுக்கு அகதிகளை முகாம்களில் குடியமர்த்தியது. இந்த முகாம்களில் சில, இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்தன. அங்கே யூதர்களை தற்காலிகமாக அடைத்து வைத்திருந்து, அருகில் இருந்த வெஸ்டர்போர்க் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு அனுப்பி, நச்சுவாயு செலுத்தி கொன்று குவித்தமை வரலாறு. முன்னாள் நாஜி தடுப்பு முகாம்களில், மொலுக்கு அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள விபரம், அவர்களுக்கு சொல்லப் படவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர், அகதிகள் தாமாகவே அறிந்து கொண்டனர். அப்போது அந்த அகதிகளின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பதை, இங்கே விபரிக்கத்  தேவையில்லை. 

மொலுக்கு அகதிகள் ஆறு மாதங்கள் மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருப்பார்கள் என்று அரசு கூறி வந்தது. அதனால், அகதிகளும் டச்சு சமூகத்துடன் ஒன்று கலக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அரசும் வற்புறுத்தவில்லை. விளைவு? மொலுக்கு சமூகம் தீவு போன்று தனித்து விடப் பட்டது. பாடசாலை செல்லும் வயதில் இருந்த பிள்ளைகள், முகாம்களுக்குள் இருந்த பாடசாலைகளில் மட்டுமே படித்தனர். அவர்கள் நெதர்லாந்து மொழியில் படித்தாலும், பாடத்திட்டம் மொலுக்கு கலாச்சாரத்திற்கு அமைய உருவாக்கப் பட்டது.

பெற்றோரும் தமது பிள்ளைகளை மொலுக்கு கலாச்சாரத்துடன் வளர்க்க விரும்பினார்கள். பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு கீழ்ப் படிதல், தெய்வ நம்பிக்கை, கண்டிப்பு, கட்டுப்பாடு போன்றன போதிக்கப் பட்டன. இவை சில நேரம் நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு மாறாக இருந்த போதிலும், அரசு தலையிடவில்லை. என்றாவது ஒரு நாள், மொலுக்கு நாட்டுக்கு (தற்போது இந்தோனேசியா) திரும்பிப் போகப் போகிறவர்கள் என்ற எண்ணம், இரண்டு தரப்பிலும் மேலோங்கிக் காணப் பட்டது.

காலம் உருண்டோடியது. மாதங்கள் வருடமாகின. இப்படியே ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அது வரைக்கும் மொலுக்கு அகதிகள், நாடற்றவர்களாக முகாம்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர். நெதர்லாந்து அரசுக்கு அவர்களைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை. அதற்கு வேறு பிரச்சினைகள் இருந்தன.  ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், மொலுக்கர்களுக்கு டச்சுக் குடியுரிமை கொடுத்து, வீடுகளில் தங்க வைப்பதென்று அரசு முடிவெடுத்தது. அப்போது தான், "தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை, மொலுக்கர்கள் உணர்ந்து கொண்டார்கள்."

ஆரம்பத்தில் மொலுக்கர்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுச் சீட்டும், வழக்கமான கடவுச்சீட்டை விட வித்தியாசமானதாக இருந்தது. "இதனை வைத்திருப்பவர், நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்" என்று அதில் எழுதப் பட்டிருந்தது. இது பல பிரச்சனைகளை உருவாக்கியது. "நெதர்லாந்து பிரஜை போன்று நடத்தப் பட வேண்டும்...." இந்த வாக்கியம் பிற நாடுகளில் இருந்த எல்லைப் பாதுகாவல் அதிகாரிகளுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. மொலுக்கர்கள் தாயக பூமிக்கு சுற்றுலாப் பயணியாக செல்ல விரும்பினாலும் தடைகள் ஏற்பட்டன.

இந்தோனேசியா குடிவரவுத் திணைக்களம், குறிப்பிட்ட பயணி வாழும் உள்ளூராட்சி சபையில் இருந்து கடிதம் கொண்டு வருமாறு கேட்டது. அது பற்றி உள்ளூராட்சி சபையிடம் விசாரித்தால், அவர்கள் அப்படி ஒரு கடிதம் தர மறுத்தார்கள். "நீங்கள் நெதர்லாந்து பிரஜைகள். உங்களுக்கு வதிவிட விபரம் பற்றிய கடிதம் தேவையில்லை." என்று விளக்கம் கூறப் பட்டது. இந்தோனேசிய தூதுவராலயம் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இந்த இழுபறி நிலைமை ஒரு முடிவுக்கு வந்து, மொலுக்கர்கள் "வழமையான" குடியுரிமை பெறுவதற்கு சில வருடங்கள் எடுத்தன.

குடிவரவு-குடியகல்வு துறையில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதிலும், மொலுக்கர்கள் சுற்றுலாப்பயணியாக தாயகம் சென்று வருவதை நெதர்லாந்தும், இந்தோனேசியாவும் ஊக்குவித்தன. இதனை, ஈழப்போர் முடிந்த பின்னர், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், சுற்றுலாப்பயணிகளாக இலங்கை சென்று திரும்புவது போன்ற நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். "அங்கே நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது. யுத்தம் முடிந்து விட்டதால், மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அங்குள்ள மக்கள் எந்தளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்த்து விட்டு வாருங்கள்...." இது தான் அரசுகள் தெரிவிக்க விரும்பிய செய்தியின் சாராம்சம். அது இந்தோனேசியாவிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான விளைவுகளை உண்டாக்கியது.

உண்மையில் நேரில் சென்று பார்த்தால், அங்குள்ள மக்கள் "கடந்த கால யுத்தத்தை மறந்து, எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்வதாக" தோன்றும். அரசியலற்ற சாதாரண மக்கள், "எங்களுக்கென்ன பிரச்சினை" என்று தான் கேட்பார்கள். தாயகம் சென்று வரும் சுற்றுலாப்பயணிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வைத்திருப்பார்கள். குடும்பத்துடன் தாயகத்திற்கு பயணம் செய்து, அங்கே தமது உறவினர்களுடன் பொழுதுகளை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். ஐரோப்பாவுக்கு திரும்பியதும், தாயகத்தில் நிலைமை எந்தளவு மோசமாக இருந்தது என்றும், மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் கதைப்பார்கள். இவை எல்லாம் ஏதோ ஒரு பகுதி உண்மையை மட்டுமே கூறுகின்றன. எல்லோரும் தமது சமூக நலன்களையும், அது சார்ந்த அரசியலையும் மட்டுமே பேச விரும்புகின்றனர்.

இதற்குள் உண்மையான இனப் பிரச்சினை கவனிக்கப் படுவதில்லை. 1963 ம் ஆண்டுடன், ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டாலும், இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்தோனேசிய அரச படைகள், ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் போல நடந்து கொள்கின்றன. மொலுக்கு தேசியவாதத்திற்கு ஆதரவானவர்களின், சுதந்திரம் பறிக்கப் படுகின்றது. கொடியேற்றுவது கூட குற்றமாக பார்க்கப்பட்டு, தண்டிக்கப் படுகின்றனர். மொலுக்கு பிரதேசத்தில், இந்தோனேசிய ஆக்கிரமிப்புப் படைகளின் அத்துமீறல்கள் குறித்து, சர்வதேச மன்னிப்புச் சபை விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக தாயகம் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் கூறிய கதைகளும், அதை வைத்து புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்படும் அரசியலும், இளைய தலைமுறை மொலுக்கர்களை தீவிரவாதப் பாதை குறித்து சிந்திக்க வைத்தது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் எல்லோரும் தற்போதைய மொலுக்கு தேசிய தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். நாடு கடந்த தமிழீழ அரசு மாதிரி, "நாடு கடந்த மொலுக்கு அரசு" ஒன்று நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. (அது இப்போதும் இருக்கின்றது.) ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, இனிமேல் அஹிம்சாவழிப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக உறுதி பூண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்திரகுமாரன் மாதிரி, நாடு கடந்த மொலுக்கு அரசின் பிரதமரான யோப் மனுசம்மா ஒன்றுமே செய்ய முடியாத மிதவாதி என்ற எண்ணம், இளையோர் மத்தியில் காணப்பட்டது.

இந்த இடத்தில், புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளினதும், மொலுக்கு தேசியவாதிகளினதும் அரசியல் பாதைகள் வேறுபட்டு பிரிந்து செல்கின்றன. அதாவது, தாயகத்தில் நிறுத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் தொடர வேண்டும் என்று, மொலுக்கு இளையோர் முடிவெடுத்தனர். அதற்கு கட்டியம் கூறுவதைப் போல, இந்தோனேசிய தூதுவராலயத்தின் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, நெதர்லாந்து மகாராணி யூலியானாவை கடத்திச் செல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டது. ஆனால், அந்த திட்டத்தில் ஒரு பெரிய குழு ஈடுபட்டதால், ஓட்டைகள் அதிகமாகி, யாரோ ஒருவர் மூலம் தகவல் கசிந்து விட்டது. அதனால் இராணியை கடத்தும் திட்டம் கைவிடப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற, உலகை உலுக்கிய ஆறு ஆயுதபாணித் தாக்குதல்களை, நெதர்லாந்து புலனாய்வுத் துறையால் துப்புத் துலக்க முடியவில்லை. என்ன காரணம்?

(தொடரும்)

உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html

இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

No comments: