Saturday, November 15, 2014

ரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பாடம்


இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், 1989 நவம்பர் 13, ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, அரச படையினரால் கொல்லப் பட்டார். சிறிலங்கா அரசு, தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத அரசு என்பது மட்டுமே, உலகம் முழுவதும் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அது ஒடுக்கப்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிரான தரகு முதலாளிய அரசு என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

சிறிலங்கா அரசுக்கு சவாலாக விளங்கிய, ஜேவிபி கிளர்ச்சியை அடக்கிய விதமும், அதன் தலைவர் ரோகன விஜேவீரவின் படுகொலையும், இனவாதத்தால் நடக்கவில்லை. அதற்கு, வர்க்க வெறுப்பு காரணமாக இருந்தது.

சிங்கள உயர் சாதி - மேட்டுக்குடி வர்க்கத்தினர், சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கத் துவேஷத்தை வெளிப்படுத்திய காலங்கள் அவை. அந்தக் காலங்கள் மீண்டும் வராது என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை.

UNP, SLFP ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள், இலங்கை வரலாறு முழுவதும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. அதன் தலைமை எப்போதும், கொவிகம உயர்சாதி மேட்டுக்குடியினர் கைகளில் தான் இருந்து வந்தது.

ரோகன விஜேவீர, தென்னிலங்கையில் பிற்படுத்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அன்று முதல் இன்று வரை, சிங்கள பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினரே ஜேவிபி உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

1982 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில், ரோகன விஜேவீரவும் போட்டியிட்டார். வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனால் கணிசமான அளவு தமிழ் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். அனேகமாக, அது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தை தொடர்ந்து ஈழப் போர் வெடித்தது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜேவிபி யை தடை செய்தார். அதனால் தலைமறைவாக இயங்கிய ஜேவிபி, ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

"தமிழர்கள் போரை விரும்பினால், நான் போருக்கு தயாராக இருக்கிறேன்." என்று ஜே.ஆர். பகிரங்கமாக சவால் விட்டார். ஆனால், அதனை சிங்கள மக்களுக்கு எதிராகக் கூறவில்லை. "வடக்கில் புலிகளும், தெற்கில் ஜேவிபியும் ஒன்று சேர்ந்து மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக..." பிரிட்டிஷ் ஊடகமொன்றுக்கு ஜே.ஆர். பேட்டி கொடுத்திருந்தார்.

அதாவது, தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், சிங்களவர்களின் வர்க்கப் போராட்டமும் ஒரே அளவுகோலின் கீழ் ஒடுக்கப் பட வேண்டியவை என்பதை அன்று குறிப்பால் உணர்த்தி இருந்தார். 2009 ஆம் ஆண்டு, புலிகளும், அவர்களுக்கு ஆதரவான தமிழர்களும் எவ்வாறு அழிக்கப் பட்டனர் என்பதை இங்கே விளக்கிக் கூறத் தேவையில்லை. ஆனால், அதற்கு முன்னோடியான சம்பவங்கள், எண்பதுகளின் இறுதிப் பகுதியிலேயே நடந்திருந்தன.

இலங்கையின் வரலாற்றில், ஜேவிபியின் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளது என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. (ஒரு சிலர் தமது வர்க்க வெறுப்புணர்வு காரணமாக மூடி மறைப்பதுண்டு.) ஆயினும், 1971 ம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி ஆயுதப் போராட்டம், சில வருடங்களுக்கு பின்னர் வட பகுதியில் இயங்கிய ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. 

அன்று, ஜேவிபி இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கிய, குமார் குணரட்ணத்தின் ஒன்று விட்ட சகோதரர், PLOTE இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும் சில ஜேவிபி உறுப்பினர்கள், புளொட் இயக்கத்தில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். அவர்களின் உதவியால் தான், நிக்கவரட்டியா என்ற சிங்களப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் வெற்றிகரமாக தாக்கப் பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. 83 கலவரத்திற்கு முன்னர், ஈழ விடுதலைப் போராளிகள் சிங்களப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  

ஆரம்ப காலகட்ட புலிகள் இயக்கத்திலும் ஜேவிபி தொடர்பிருந்ததை மறுக்க முடியாது. புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த ராஜினியின் கணவர் திராணகம ஒரு முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஆவார். ஜேவிபி ஆதரவு சிங்களப் புத்திஜீவிகள் சிலரும் புலிகளை ஆதரித்தார்கள். ஆனால், அந்தக் காலகட்டம் வேறு. அப்போது புலிகளும் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொண்டது. 

ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப் பொது மக்கள், ஜேவிபியை வெறுக்கவில்லை. "எதற்காக ஈழ விடுதலை இயக்கங்கள், ஜேவிபியுடன் சேர்ந்து போராடவில்லை?" என்று பிரச்சாரக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். தமிழீழம் அடைவதற்கு அது சிறந்த தந்திரோபாயமாக இருக்கும் என்று நம்பினார்கள். பிற்காலத்தில் புலிகள் இயக்கத் தலைமைக்குள் வலதுசாரிகளின் கை ஓங்கியதும், ஜேவிபி உடனான கூட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் ஜனாதிபதியான பிரேமதாச, இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார்.  "ஒரு தலித் ஜனாதிபதியான" பிரேமதாசாவை கொண்டு, சிங்கள தலித் மக்களை அழிப்பதற்கு, சிங்கள ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம். பதவிக்கு வந்த பிரேமதாச, புலிகள் அமைப்பில் இருந்த வலதுசாரி சக்திகளுடன் தந்திரோபாய கூட்டணி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், இலகுவாக ஜேவிபி இனை அழிக்க முடிந்தது. ஜேவிபி அழிக்கப் பட்டு, இந்தியப் படைகளும் வெளியேற்றப் பட்ட பின்னர், பிரேமதாச அரசும், புலிகளும் மோதிக் கொண்டனர். 

எண்பதுகளின் இறுதியில், தென்னிலங்கையில் ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப் பட்டனர். இறுதியில் பிடிபட்ட ரோகன விஜெவீரவையும் விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்றனர். 2009 ஆம் ஆண்டு, அதே வரலாறு முள்ளிவாய்க்காலில் திரும்பி வந்தது. நாங்கள், வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று இன்னமும் பிடிவாதமாக இருக்கிறோம்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

2 comments:

Kalaiyarasan said...

இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்:

Villa Anandaram:
//"பிரேமதாச, புலிகள் அமைப்பில் இருந்த வலதுசாரி சக்திகளுடன் தந்திரோபாய கூட்டணி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், இலகுவாக ஜேவிபி இனை அழிக்க முடிந்தது" - உண்மை. ஜெ.வி.பி யை அழிக்கும் வரை புலிகள் அரசாங்கத்திடம் உறவாடிக் கொண்டிருந்தார்கள்.//

Ganeshalingam Kanapathipillai:
//ஜே வி பியும் பிரேமதாச அரசும் புலிகளும் இந்தியஎதிர்ப்புக்கோட்பாட்டில் ஒருபுள்ளியில் இணைந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் குறைந்தபட்ச ஐக்கியம் கூட இருக்கவில்லை. இந்தியப்பொருட்களுக்கு பிரேமதாசவும் தடைவிதித்திருந்தார் அதேவேளை ஜேவிபியும் அதனைச்செய்தது. இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதிசெய்த சண்முகம் முதலாளியை பிரேமதாசவின் புலனாய்வு அமைப்பு கொன்றது. இதில் புலிகளுக்கும் பங்குண்டு. இலங்கை இராணுவத்தின் குடும்பங்களை பிரேமதாச புலிகளின் உதவியோடு கொன்றுவிட்டு ஜேவிபிதான் செய்தது என்று பிரச்சாரம் செய்யப்பட்டன. இதில் பிரேமதாச வெற்றியும் கண்டிருந்தார். பிரேமதாசவிற்கும் பிரபாகரனுக்கும் ஒப்பந்தம் ஒன்று நடந்தது. அது என்னவெனில் தெற்குப்பகுதியான கொழும்பைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஈழவிடுதலையின் மாற்று அமைப்புக்கள் மறைந்து வாழ்ந்தபோது அவர்களைக்கொல்வதற்கு அரசு உதவி செய்யவேண்டும் எனப்புலிகளும் தெற்குப்பயங்கரவாதிகளை(ஜேவிபி) அழிக்க புலிகள் அரசிற்கும் உதவிசெய்ய வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தமாகும் இதனடிப்படையில் கொல்லப்பட்ட இளைஞர்கள் களனிகங்கையிலே கண்கள் புடுங்கப்பட்டும் சிறுநீரக உறுப்பு எடுக்கப்பட்டும் சடலங்களாகக்காணப்பட்டனர். இந்த இளைஞர்கள் வேறுயாருமல்ல தமிழர்களே! இங்கே எதிரியும் எதிரியும் இணைந்துகொண்டனர் வர்க்கநலன் அடிப்படையில்.//

Kalaiyarasan said...

இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்:

Villa Anandaram:
//விஜெயவீர தலைமையில் இருந்த ஜெ.வி.பி க்கும் தற்போதய கட்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை, பெயரைத்தவிர. கட்சி துவங்கிய காலத்தில் கொழும்பிலிருந்த இடதுசாரி பல்கலைகழக மாணவர்களில் ஒருவனாக அவர்களுடன் எனது நட்பும் எதிர்ப்பும் பல பரிணாமங்கள் கொண்டது. அக்காலத்தில் தொழிளாளர் புரட்ச்சி பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்த கட்சி சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. தொழிற்சங்கம் மூலம் சில வன்முறை போராட்டங்களையும் நடத்தினார்கள். அனால் அவர்களால் அப்போராட்டத்தை தொடர்ந்து நாடு தளாவிய ஆயுத போராட்டமாக வளர்த்தெடுக்க முடியவில்லை. இதை சண்முகதாஸன் தனது அரசியல் நினைவுகளில் "ஒரு தெளிவான புறட்சீகர தொலை நோக்கின்றி தொழிற்சங்க வேலை செய்து வந்துள்ளேன்" என்று ஒப்புக்கொண்டு சுயவிமர்சனம் செய்கிறார். அது மட்டுமல்ல மவோவின் சிந்தனைகளின் அடிப்படையில் நீண்டகால தொழிளளர் போராட்டம் என்ற கோட்பட்டில் சிக்கிக்கொண்டு படித்த வேலையற்ற இளைஞர்களின் பிரச்சனையை கவனியாது விட்டார்கள்.

இந்த இளைஞார்களின் உணர்வை, தேவையை விஜயவீர பிரதிபலித்தார். பொறுமையிழந்த இளைஞர் கூட்டத்தை அவர் பிரதிநிதிப்படுத்த முனைந்ததால் அவர் கட்சியமைப்பு ஒரு கற்பனாவாத, தனிந‌பரின் சாகச்செயலில் நம்பிக்கை வைத்த கட்சியாக உருவானது. இவர்கள் ஒரு ஆயுதம் தாங்கிய அர்ப்பணிப்பான குழு அதிகாரத்தை திடீர் புரட்ச்சி மூலம் கைப்பற்றுவதன் பின்னர் வெகுஜனங்களை அதை நோக்கி கவரலாம் என்ரு கருதியது. இந்த தனிநபர்வாதப் போக்கால் இத‌ன் முக்கிய உறுப்பினர்களாக‌ கிராமப்புற ஆசிரியர்கள், ஏழை இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள் சேர்ந்தார்கள். தொழிளரோ, விவசாயிகளோ அதிகம் பங்கு பெறவில்லை. அவர்களது ஆதரவு தங்கள் பிள்ளைகளை ஆதரிக்கும் நிலைக்கு அப்பால் போகவில்லை. மாறாக பௌத்த குருமாரின் ஆதரவு கிராமமட்டத்தில் கிடைத்தது. இதே போன்ற ஒற்றுமைகளை புலி அமைப்பின் சித்தாந்தத்துடனும் வளர்ச்சியுடனும் பார்க்க முடியும். விஜயவீர 5 வகுப்புகளில் அரசியல் கற்பித்து இளைஞர்களை போராட்டத்திற்க்கு தயாராகினார். அதில் முக்கியமாக "இந்திய விஸ்தரிப்பு வாத" எதிர்பு என்னும் தேஸீயவாத கருத்தை முவைத்தார். இது தமிழருக் கெதிரானதாக இல்லாவிட்டாலும் தோட்டத் தொழிளாரை இந்தியாவின் ஏஞெண்டுகளாக கற்பிப்பதன் மூலம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டார்.

சீனசார்பு கட்சியுடன் தொடர்பிலிருந்த பல்கலைகழக மாணவனான எனக்கு அப்போது தனிநபர் சாகச்செயலின் கவர்சியாலும் விரைவில் பலன் காணவேணும் என்ற எண்ணத்தாலும் எனது சக மாணவர்களான ஜே.வி.பி இளைஞர்களுடானா தொடர்பாலும் அவர்கள்பால் கவ‌ரப்பட்டேன். வேறு பல்கலைகழக மாணவர் போராட்டங்களில் அவர்கள் சிங்களத்தில் பேசுவதை தமிழில் மொழிபெயர்கவும் செய்திருக்கிறேன். அதேசமயம் நடுத்தர வர்க்க சிந்தனையோடிருந்த எங்களை தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்களை வர்க்க உணர்வு மிக்க போராளிகளாக மாற்றுவது பற்றி தெளிவான சிந்தனையுடன் விமல்யாப்பாவின் தலைமையில் சண்முகதாஸனின் கட்சிக்குள் உண்டானபிரிவு தெளிவடைய வைத்தது. ஆனால் இதை தொடர்ந்து நடந்த ஜெ.வி.பி யின் அவசர ஆயத்த மற்ற போராட்டத்தால் தொழிளாளரிடையே வேலைசெய்ய முடியாமல் போனது மட்டுமல்லாமல் பல முன்னணி செயல்பாட்டாளர்கள் ஜெ.வி.பி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பெய‌ரில் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஜெ.வி.பி யின் இந்த செயலால் புரட்சி ஆரம்பத்திலேயே காட்டிக்குடுக்கப்பட்டு அரசையும் புரட்சிக்கு எதிராக வலிமையான ஆயுதம்தாங்கியாக மாற்றிவிட்டது.

கருத்து வேறு பட்டாலும் அக்காலத்தில் மிக அருமையான சிங்கள ஜெ.வி,பி நண்பர்கள் வாய்த்தார்கள். இவர்களில் சிலர் கிளர்ச்சியின் போது மரணமானார்கள். சில சிறைபிடிக்கப் பட்டவர்களை பிற்காலத்தில் சந்திக்க நேர்தது. இவர்கள் சிரிமாவோ தங்களுக்கு பொது மன்னிப்பு அளித்ததை நன்றியோடு நினைவுகூர்ந்து அரசாங்க ஆதரவாளராக மாறி விட்டிருந்தார்கள். 5 நாள் மட்டும் அரசியல் கற்பித்தன் விளைவு அது. இவையெல்லாம் 80 களுக்கு முந்திய நினைவுகள்.//