Wednesday, April 10, 2013

மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்


பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமரான மார்கரெட் தாட்சர், தனது 87 வது வயதில் காலமானார். அவரது மரணச் செய்தியை கேள்விப் பட்ட மக்கள், பிரிக்ஸ்டன், லிவர்பூல், வேல்ஸ் போன்ற இடங்களில் குதூகலத்துடன் கொண்டாடினார்கள். 

1979 ல் இருந்து 1990 வரையில், பிரிட்டனை 11 வருடங்கள் ஆண்ட, முதல் பெண் பிரதமரான   மார்கரெட் தாட்சரை,  பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள்  வெறுக்கக் காரணம் என்ன? அவர் ஒரு சர்வாதிகாரி போன்று கொடுங்கோல் ஆட்சி நடத்தினாரா? பிரிட்டிஷ் மக்கள், எந்தளவு வர்க்க ரீதியாக பிளவு பட்டுள்ளனர் என்பதையும், பிரிட்டனில் வர்க்கப் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதையும், மார்கரெட் தாட்சரின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

ஒரு ஆணாதிக்க கலாச்சாரம் நிலவும் பிரிட்டிஷ் அரசியலில், ஒரு பெண் பிரதமராக வருவது நினைத்துப் பார்க்க முடியாதது. அதுவும் பழமைவாதம் பேணும் வலதுசாரிக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில், யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மார்க்கரெட்டின் தந்தையார் சிறு வணிகராக இருந்தாலும், மெதடிஸ்ட் பாதிரியாராகவும் கடமையாற்றினார். மார்க்கரெட் சிறுமியாக வாழ்ந்த காலத்தில், அவரது வீட்டில் சுடுநீர் வசதி கிடையாது. மலசல கூடம் வீட்டுக்கு வெளியே அமைந்திருந்தது. அவ்வாறான எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் தான், பிரதமரானதும் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையை கூட்டினார். தொழிலகங்களை மூடி, பலரை வேலையில்லாதவர் ஆக்கினார். 

மார்க்கரெட் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி, லண்டன் மாநகரின் ஒரு வட்டாரமான பிஞ்ச்லி (Finchley) ஆகும். வட லண்டனில் உள்ள, பணக்காரர்கள் வாழும் தேர்தல் தொகுதி அது. முதலாம் உலகத்தையும், மூன்றாம் உலகத்தையும் ஒரே நாளில் பார்க்க விரும்பினால், அதற்கு லண்டன் மாநகரம் அருமையான இடம். ஒரு காலத்தில் பாட்டாளி மக்களின் சேரிப் பகுதிகளாக இருந்த ஈஸ்ட்ஹம், டூட்டிங் பகுதிகளில் தான், இன்றைக்கு பெருமளவு இந்தியர்களும், இலங்கையர்களும் வாழ்கிறார்கள். அந்த நகர்ப் பகுதிகளுக்கும், பிஞ்ச்லி பகுதிக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை இன்றைக்கும் நேரில் பார்க்கலாம். 

பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் படித்த காலத்திலும், அரசியலில் நுழைவதையே இலக்காக கொண்டிருந்த மார்க்கரெட்டுக்கு, பெண் என்ற சிறப்புரிமை பெரிதும் உதவியது. உலகப்போரின் பின்னரான லேபர் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த சமூக நலன்புரி அரசை உடைப்பதற்கு, மார்க்கிரட் தச்சர் போன்ற "இரும்புப் பெண்மணி" தேவைப் பட்டார். ஒரு "கறுப்பரான" ஒபாமாவை ஜனாதிபதியாக்கி, அதிரடி அரசியல் நடத்திய அமெரிக்க ஆளும் வர்க்கம் போன்று தான், அன்றைய பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கும். ஒரு பெண்ணை பிரதமராக்கி விட்டு, மக்களின் வயிற்றில் அடிக்கப் போகிறார்கள் என்று அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

"தாட்சரிசம்" என்ற நவ- தாராளவாத தாக்குதல்கள், பிரிட்டிஷ் மக்கள் மேல் நடத்தப் படுவதற்கு முன்னர், பிரிட்டனின் நிலைமை எவ்வாறு இருந்தது? வலதுசாரிக் கருத்தாளர்களைக் கேட்டால், "சாதாரண மக்களுக்கும் நியாயமாகப் படும்" உதாரணம் ஒன்றைக் கூறுவார்கள். "ஒரு வீடு வாங்குவதற்கு மோர்ட்கேஜ் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த காலத்தை" பற்றிக் கூறி அங்கலாய்ப்பார்கள்.  ஆமாம், மார்கரெட் தாட்சர் பிரதமரானதும், வீட்டுக் கடன் கிடைப்பதை இலகுவாக்கினார். ஆனால், அதுவே 2007 ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை மறந்து விடலாமா? லண்டனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர், மாதம் ஆயிரம் பவுன்கள் மோர்ட்கேஜ் கட்டி வந்தார். இத்தனைக்கும் அவரது மாத வருமானம், எண்ணூறு பவுன்கள் தான். அவருக்கு எப்படி வீட்டுக் கடன் கொடுத்தார்கள்? அது தான் "தாட்சரிசம்"! "முதலாளித்துவ அதிசயம்". அதாவது பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை ஏற்றுவதற்காக, வங்கிகள் தகுதியில்லாதவர்களுக்கும் கடன் கொடுத்தன. அதன் விளைவு தான், அண்மைய பொருளாதார நெருக்கடி. அதற்கான அத்திவாரம், தச்சரின் காலத்திலேயே எழுப்பப் பட்டு விட்டது.

அன்றைய காலங்களில், மக்களுக்கு சொந்த வீடு இல்லா விட்டாலும், அரசு மானியம் வழங்கும் மலிவான வாடகை வீடுகள் கிடைத்து வந்தன. மக்களுக்கு அத்தியாவசியமான துறைகள் தேசியமயமாக்கப் பட்டதால், மக்களுக்கு பணிப் பாதுகாப்பு இருந்தது. எந்தப் பிரச்சினை என்றாலும், அரசும், தொழிற்சங்கமும் பேச வேண்டும் என்ற சட்டம் இருந்ததால், தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப் பட்டு வந்தன. தாட்சர் பிரதமரானதும், அந்த சட்டத்தை இரத்து செய்தார்.  அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கினார். இதனால் மேட்டுக்குடியினரும், முதலாளிகளும் இலாபமடைந்தனர். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. ஒரு பக்கம் பணக்காரர்கள் அதிகரித்தனர். மறுபக்கம் ஏழைகள் அதிகரித்தனர்.பிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு உந்துசக்தியாக இருந்த நிலக்கரிச் சுரங்கங்கள், தாட்சரின் காலத்தில் இழுத்து மூடப் பட்டன. இதனால் அவற்றை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வேலையிழக்கவும், அவர்களது குடும்பங்கள் பட்டினி கிடக்கவும் வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  சுரங்கங்களை மூடும் திட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்தார்கள். அந்தப் போராட்டம் மாதக் கணக்காக தொடர்ந்தது. பிற உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு இருந்ததால், தாட்சர் அரசினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1984 ம் ஆண்டு தொடங்கிய வேலைநிறுத்தம் சுமார் ஒரு வருடத்திற்கு நீடித்தது. சுரங்கத் தொழிலாளர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்கத் தலைவர்  Arthur Scargill,  "ஒரு பிரிட்டிஷ் லெனின்" போன்று கருதப்பட்டார்.  மார்கரெட் தாட்சரின் கம்யூனிச வெறுப்பு உலகப் புகழ் பெற்றது.

எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம்கொடுத்து பழக்கமில்லாத மார்க்கிரட் தச்சர், போலிஸ் படையை அனுப்பி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்க முயற்சித்தார். பிரிட்டனில் நடந்த தொழிலாளர் போராட்ட செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்த சோவியத் யூனியனின் TAS  செய்தி நிறுவனம், மார்கரெட் தாட்சருக்கு "இரும்புப் பெண்மணி" என்ற பட்டப் பெயரை சூட்டியது. அவரும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டார். அந்தக் காலங்களில், சோவியத் ஊடகங்களில் மார்கரெட் தாட்சர்  ஒரு வில்லியாக சித்தரிக்கப் படுவது வழக்கம். இன்று தமிழ் ஊடகங்கள் ராஜபக்சவை சித்தரிக்கும் பாணியில், அன்றைய சோவியத் ஊடகங்கள் தாட்சரை பற்றிய பிம்பத்தை வளர்த்து விட்டிருந்தன.

போராட்டம் நீண்ட காலம் இழுத்துச் சென்றதால் களைப்படைந்த, அல்லது குடும்பத்தினரின் வறுமை காரணமாக, குறிப்பிட்டளவு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப சம்மதித்தனர். ஒற்றுமையாக போராடிய தொழிலாளர்கள் இடையே, பிளவு தோன்றியது. இதனால், வேலை நிறுத்தப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டது. ஆயினும், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. அன்று நடந்த பிரச்சினைகள், வேலையிழந்த தொழிலாளர்களின் பிள்ளைகளையும் பாதித்தது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் தான், மார்கரெட் தாட்சரின்  மரணத்தை குதூகலத்துடன் கொண்டினார்கள். பிரிட்டனில் வர்க்கப் போராட்டம், இன்றைக்கும் உயிர்ப்புடன் இருப்பதை, இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஐ.நா. சபை உருவாக்கப் பட்ட பொழுது, அதன் பிரதானமான கோஷமாக, "முழுமையான காலனிய விடுதலை" இருந்தது. ஆனால், இன்றைக்கும் முன்னாள் காலனியாதிக்க நாடுகள், உலகம் முழுவதும் சிறு சிறு தீவுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. ஆர்ஜன்தீனாவுக்கு அருகில் உள்ள போல்க்லாந்து தீவுகள் இன்றைக்கும் ஒரு பிரிட்டிஷ் காலனி தான். பூகோள அடிப்படையில், அந்த தீவு தனக்கே சொந்தம் என்று ஆர்ஜெந்தீனா உரிமை கோரியது. அதிரடியாக வந்திறங்கிய ஆர்ஜெந்தீன படைகள், போல்க்லாந்து தீவுகளை ஆக்கிரமித்தன. ஆர்ஜன்தீனாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் மூண்ட போரானது, மார்கரெட் தாட்சரின் புகழை உயர்த்த பயன்பட்டது. ஆர்ஜன்தீனாவை விட பல மடங்கு ஆயுத பலம் கொண்ட பிரிட்டிஷ் படைகள், போல்க்லாந்து தீவுகளை மீண்டும் கைப்பற்றின. பிரிட்டனில் தாட்சர்  வெற்றிவிழா கொண்டாடினார். "முன்னாள் சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று", பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆங்கிலேய மக்களின் மனதில், பிரிட்டிஷ் பேரினவாதத்தை விதைப்பதற்கு, அந்த வெற்றி விழா பயன்பட்டது.

தாட்சரைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் "நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டமாக" கருதினார். அவரது பேச்சுகளில் தொனித்த, "நாங்கள், அவர்கள்" என்ற சொல்லாடல்கள் உலகை இரண்டாகப் பிரித்தன. மார்கரெட் தாட்சர்  ஆண்ட காலத்தில், ஆர்ஜெந்தீனா மட்டுமே பிரிட்டனின் எதிரியாக  இருக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிரிகள் இருந்தார்கள். உள்நாட்டில் வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. IRA யின் பல வெற்றிகரமான தாக்குதல்கள், தாட்சர் காலத்தில் தான் இடம்பெற்றன. தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக போராடிய, கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா, தாட்சரின் கண்களுக்கு  "பயங்கரவாதியாக" தோன்றினார். இலங்கையில் அப்போது தான் தோன்றியிருந்த ஈழப் போராட்டத்தையும், "மார்க்சியப்" புலிகளையும் அடக்குவதற்கு, சிங்கள பேரினவாத அரசுக்கு உறுதுணையாக நின்றார்.

(மிகுதி இரண்டாம் பாகத்தில் வரும்...)

1 comment:

Nellai Balaji said...

செத்து போறவன எல்லாம் புனிதன் என்று பட்டம் கட்டுகிறது இந்த ஊடகங்கள் ..இது இளம் தலைமுறையினர் மத்தியில் அவர்களை பற்றிய சரியான தகவல் சேராமல் செய்கிறது ..இந்தியாவில் சற்று முன் செத்த பால் தாக்ரே இப்போது பெரிய புனிதர்..நாடு விரைவில் உருப்படும்