Showing posts with label போப்பாண்டவர். Show all posts
Showing posts with label போப்பாண்டவர். Show all posts

Friday, September 25, 2015

முதலாளித்துவத்தை எதிர்க்கும் போப்பாண்டவரின் பொன்மொழிகள்




முதலாளித்துவ சாத்தானுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு போப்பாண்டவர் அறைகூவல்! உலக கத்தோலிக்கர்களின் தலைவர், போப்பாண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார். 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த பொழுது, 21 ம் நூற்றாண்டின் சோஷலிசத்தை பின்பற்றும் எக்குவடோர், பொலீவியா போன்ற நாடுகளுக்கே முதலில் சென்றிருந்தார். அது அந்த அரசுக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப் படுகின்றது.

பராகுவே நாட்டுக்கு சென்ற போப்பாண்டவர், தலைநகர் அசுன்சியோனில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவரது உரையில் முதலாளித்துவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. "தற்போதைய பொருளாதாரம் பிசாசின் சாணம்... பணத்தின் மீது பேராசை கொண்ட சர்வாதிகார அமைப்பு..., காலனியாதிக்கம் போன்று ஆண்களையும், பெண்களையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது..." என்று அவர் முதலாளித்துவத்தை கடுமையான சொற்களின் மூலம் தாக்கினார்.


கத்தோலிக்க போப்பாண்டவருக்கு, கம்யூனிச சின்னம் பொறித்த பரிசுப்பொருள் வழங்கப் பட்டது! சிலுவையுடன், அரிவாளும், சுட்டியலும் சேர்ந்த வித்தியாசமான பரிசுப் பொருள் ஒன்றை, பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொராலேஸ், போப் பிரான்ஸிஸிடம் கொடுத்தார்.

எண்பதுகளில் பொலிவியாவை ஆண்ட வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் Luis Espinal, அதே மாதிரியான சின்னம் ஒன்றை வைத்திருந்தார். ஸ்பெயினில் பிறந்த பாதிரியார் லூயிஸ், பொலிவிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார்.

எசுயிஸ்ட் கத்தோலிக்க பாதிரியாரான லூயிஸ், பொலிவியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளராகவும், இடதுசாரி பத்திரிகையாளராகவும் இருந்தார். 21 மார்ச் 1980, வீட்டுக்கு வரும் வழியில் அவரைக் கடத்திச் சென்ற வலதுசாரி துணைப் படையினர், பல மணிநேரம் சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக் கொன்றனர்.

இடதுசாரி பாதிரியார் லூயிஸின் பிரபலமான கூற்று ஒன்று, அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளப் போதுமானது.
 "மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."



"அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு கருப்பரும், போப்பாண்டவராக ஒரு லத்தீன் அமெரிக்கரும் வரும் காலத்தில், அமெரிக்கா எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தும்." என்று 1973 ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கூறிய தீர்க்கதரிசனம் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஆனால், போப்பாண்டவர், நேரடியாகவே தனது வீட்டுக்கு வந்து வாழ்த்துவார் என்று, பிடல் காஸ்ட்ரோ எதிர்பார்த்திருக்க மாட்டார். 

"நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!" - அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.

கியூபாப் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவுக்கு சென்ற போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது.

அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் "இடதுசாரி" என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக "லிபரல்" என்று தான் அழைப்பார்கள்.
Pope Francis: I Am Not a Liberal 
http://time.com/4044971/pope-francis-i-am-not-a-liberal/


"பல சக்தி வாய்ந்த மனிதர்கள் சமாதானத்தை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தால் வாழ்கிறார்கள். ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்று, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு எதிராக திருப்பி விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்." - போப்பாண்டவர் பிரான்சிஸ் 
http://theantimedia.org/10-things-pope-francis-said-that-may-signal-dark-sides-demise/%EF%BB%BF

Friday, October 17, 2014

அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!


அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்!

போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச அதே மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. "தேர்தலில் உதவுபவனே உண்மையான நண்பன்!"

வத்திக்கான் திருச்சபையின் வரலாறு நெடுகிலும், போப்பாண்டவர்கள் சர்வாதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர். ராஜபக்சவுக்கு வத்திகானின் ஆசீர்வாதம் கிடைப்பதை எதிர்த்து, எந்தவொரு போலித் தமிழ் உணர்வாளரும் முணுமுணுக்கக் கூட இல்லை. "ஆண்டவரின் மண்ணுலக பிரதிநிதியை" பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்.

போப்பாண்டவரின் இடத்தில், காஸ்ட்ரோ, ஏவோ மொராலேஸ், அப்பாஸ் இருந்திருந்தால், இந்நேரம் அதைப் பற்றி ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்லித் திரிந்திருப்பார்கள். என்னதான் தமிழ் தேசியவாதி வேடம் போட்டாலும், முதலாளிய வர்க்க பாசம் அவர்களை அறியாமல் தலை காட்டி விடுகின்றது.

கம்யூனிஸ்டுகளை கண்டியுங்கள் என்று சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேட்கின்றனர். அப்படியே செய்யலாங்க... ஆனால் ஒரு பிரச்சினைங்க... "தொண்ணூறுகளில் கம்யூனிசம் இறுதி மூச்சை விட்டது. புதைகுழிக்குள் சென்று விட்டது..." என்று மெத்தப் படித்த அறிவாளிங்க சொன்னாங்க... அதை எல்லோரும் நம்பிட்டோமுங்க... இப்போது "கம்யூனிச ஆவிகள் நடமாடுகின்றன" என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க... அது எப்படி என்று அறிவுஜீவிகள் மக்களுக்கு விளக்கி சொன்னா நல்லதுங்க...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி இவற்றைப் பற்றி யாரும் பேசக் காணோம். முழு இலங்கையிலும், வட-கிழக்கு மாகாணங்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு தமிழ் உணர்வாளரும் பேசுவதில்லை. போலி சிங்களதேசியவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அதிகாரத்தை பங்கு போடுவதை பற்றிப் பேசும் பல மணி நேரத்தில், ஒரு துளியாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு செலவளிப்பதில்லை.

தனது நலன்களை மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கும், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு எந்தப் பிரயோசனமுமற்ற வெற்று அரசியல் கோஷங்கள், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப் படும்.

அனைத்து வகை அதிகாரங்களையும், தமிழ் உழைக்கும் மக்கள் கைக‌ளில் குவிப்பதற்காக போராடுவதே உண்மையான தமிழ் தேசியம். அதற்கு மாறாக, தமிழ் முதலாளிகளின் ஆட்சியை கொண்டுவர விரும்புவது போலித் தமிழ்தேசியம் ஆகும்.

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)



இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Thursday, March 14, 2013

புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!




Habemus Papam! (அபெமுஸ் பாப்பம்! எங்களுக்கு ஒரு போப்பாண்டவர் கிடைத்து விட்டார்!)

அப்பாடா... ஒரு வழியாக போப்பாண்டவரை தெரிவு செய்து விட்டார்கள். ஆர்ஜென்தீனா நாட்டை சேர்ந்த Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவானதும் முதலாம் பிரான்சிஸ் என்ற நாமத்தை சூட்டிக் கொண்டார். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட, லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவானது, இது தான் முதல் தடவை. இருந்தாலும், கடந்த கால வத்திக்கான் அரசியலை வைத்துப் பார்க்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரிவு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என சந்தேகப் பட வைக்கின்றது.

புதிய போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஒரு போர்க்குற்றவாளியா? புதிய பாப்பரசர், அவரது தாயகமான ஆர்ஜெந்தீனாவில் பிஷப்பாக கடமையாற்றிய காலத்தில், இரண்டு அரசியல் கொலைகளில் நேரடியாக பங்கெடுத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. 1976 - 1983 காலகட்டத்தில், ஆர்ஜென்தீனாவை ஆண்ட இராணுவ சர்வாதிகார அரசு, இடதுசாரிகளுக்கு எதிரான போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளும், பிற இடதுசாரி ஆர்வலர்களும் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பலர் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு காணாமல்போயுள்ளனர். (விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தினுள் தூக்கிப் போடப்பட்டனர்.)

ஹொர்கெ மாரியோ  போர்கொயியோ (Jorge Mario Bergoglio)  என்ற இயற்பெயரைக் கொண்ட, எமது புதிய போப்பாண்டவர், இராணுவ கொலைகாரர்களுடன் நெருக்கமாக உறவாடியிருக்கிறார். (Bergoglio ocultó la complicidad del Episcopado argentino con la Junta Militar del dictador Videla , http://www.publico.es/internacional/452122/bergoglio-oculto-la-complicidad-del-episcopado-argentino-con-la-junta-militar-del-dictador-videla) அவரது மேற்பார்வையின் கீழ், இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போயுள்ளமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு, இராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது Cristian Federico என்ற பிஷப் கொலைக் குற்றச்சாட்டில் ஆஜர் படுத்தப் பட்டார். நமது புதிய போப்பாண்டவர், அந்த கொலைக் குற்றவாளியுடன் ஒரே இயேசு சபையில் பணியாற்றி உள்ளார். கம்யூனிசத்திற்கு எதிரான இயேசு சபையினரின் வெறுப்புணர்வு ஊரறிந்த ஒன்று. இந்த விபரங்கள், Horacio Verbistky என்ற ஆர்ஜந்தீனிய ஊடகவியலாளர் எழுதிய, "el Silencio" (2005) என்ற நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 

சில நாட்களுக்கு முன்னர் , புதிய போப்பாண்டவரின் தாயகமான ஆர்ஜென்தீனாவுக்கு அருகில் உள்ள மால்வினாஸ் (Falkland) தீவில் ஒரு தேர்தல் நடைபெற்றது. (Falklands referendum: Voters choose to remain UK territory, http://www.bbc.co.uk/news/uk-21750909) இன்னமும் பிரிட்டனுக்கு சொந்தமான காலனியான போல்க்லாந்து தீவுகளில் வாழும் அனைவரும் பிரிட்டனில் இருந்து சென்று குடியேறியோர் ஆவர். 99% மானோர், பிரிட்டனோடு சேர்ந்திருக்க விரும்புகிறோம் என்று வாக்களித்ததில், எந்த ஆச்சரியமும் கிடையாது. போல்க்லாந்து தீவுகளை, மால்வினாஸ் என்ற பெயரில் அழைத்து வரும் ஆர்ஜெந்தீனா, அந்த தீவுகள் தனக்கே சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றது. 1982 ம் ஆண்டு, பலாத்காரமாக தீவை ஆக்கிரமித்த ஆர்ஜெந்தீன படைகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் பெரும் யுத்தம் நடைபெற்றது. அந்தப் போரில் பிரிட்டன் வென்ற போதிலும், ஆர்ஜன்தீனாவின் உரிமை கோரல் தொடர்கின்றது. அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளை, ஆர்ஜன்தீனாவின் இன்றைய ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்ஷ்ணர் நிராகரித்துள்ளார். 

போல்க்லாந்து தீவுகளில் நடந்த கேலிக்குரிய "தேர்தலுடன்" ஒப்பிடும் பொழுது, சர்வாதிகார நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் அதிக ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக கூற முடியும். பிரிட்டன் அவசர அவசரமாக, அங்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டிய காரணம் என்ன? தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், போல்க்லாந்து தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு, எண்ணை ஆகிய இயற்கை வளங்களை 2017 ம் ஆண்டளவில் ஏற்றுமதி செய்யப் போவதாக, Borders and Southern Petroleum என்ற நிறுவனம் அறிவித்திருந்தது. (கார்டியன் பத்திரிகையில் ஜனவரி மாதம் வெளியான செய்தி, இணையத்தில் அழிக்கப் பட்டுள்ளது. செய்தியின் இணைப்பு: http://www.guardian.co.uk/uk/2013/jan/28/falkland-islands-british-oil-exploration? )

நிச்சயமாக, மால்வினாஸ் தீவுக்கு உரிமை கோரும் ஆர்ஜன்தீனா, இவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில், பிரிட்டனிடம் இருந்து போல்க்லாந்து தீவுகளை பறித்து விட வேண்டும் என நினைக்கும். மீண்டும் ஒரு போர் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், அது நடக்காது என்றும் சொல்ல முடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் இடையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறது. போல்க்லாந்து தீவுகளில் எரிபொருள் கண்டுபிடிக்கப் பட்டதும், பிரிட்டனின் காலனிய உரிமையை நிலைநாட்ட நடந்த தேர்தலும், இறுதியில் ஆர்ஜன்தீனாவை சேர்ந்த போப்பாண்டவரின் தெரிவும்.... எல்லாமே தற்செயல் நிகழ்வுகள் தானா?


ஆர்ஜென்தீனா பற்றிய முன்னைய பதிவுகள்:
ஆர்ஜெந்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி

 போப்பாண்டவர் பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
2."பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு