Saturday, April 20, 2013

இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்


"ஆயுதப்போராட்டம் அல்லது அரசியல் வன்முறை" என்பது மூன்றாமுலக நாடுகளின் தோற்றப்பாடு என்றும், முதலாம் உலக நாடுகளில் அதற்கு இடமில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகப் பெருமை வாய்ந்த அமைதிப்பூங்காவான மேற்கத்திய நாடுகளில், பல ஆயுதப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இயங்கிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்கள் பற்றி, இன்று பலருக்குத் தெரியாது.

எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால், அது "இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று, உடனேயே பலர் முடிவு கட்டி விடுகின்றனர். எழுபதுகளில், எண்பதுகளில் இருந்த உலகம் வேறு. அன்று எங்காவது ஒரு குண்டுவெடிப்பு நடந்தால், அது "இடதுசாரி தீவிரவாதிகளின் தாக்குதல்" என்று முடிவெடுத்து விடுவார்கள். இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இஸ்லாமிய தீவிரவாதத்தை வெளிநாட்டுக் குடியேறிகளுடன் முடிச்சுப் போடுவார்கள். ஆனால், இடதுசாரி தீவிரவாதத்துடன், உள்நாட்டு பூர்வீக வெள்ளையின மக்கள் சம்பந்தப் பட்டிருப்பார்கள். "இஸ்லாமிய தீவிரவாதம்" ஒரு மதம் சார்ந்தது. அதே நேரம், "இடதுசாரி தீவிரவாதம்" ஒரு கொள்கை சார்ந்தது. இருப்பினும், அரசு இரண்டு தரப்பினரையும் ஈவிரக்கமின்றி அடக்கி வந்துள்ளது. சந்தேகப்பட்டால், சுட்டுக் கொல்லவும் தயங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில், அரசின் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், எழுபதுகளிலேயே தொடங்கி விட்டன.

ஜெர்மனியில் இயங்கிய RAF என்ற ஆயுதமேந்திய இடதுசாரி இயக்கத்தின் போராட்டம், ஏற்கனவே வெளியுலத்திற்கு தெரிந்திருந்தது. எழுபதுகளில், எண்பதுகளில், ஆயுதப்போராட்டம் நடைபெறாத மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகக் குறைவு எனலாம். ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகளும், அரசியல் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன. சிறிய அளவிலான இடதுசாரி ஆயுதக்குழுக்கள் அதற்கு காரணமாக இருந்தன. அதே காலகட்டத்தில், நெதர்லாந்திலும் ஒரு இடதுசாரி ஆயுதக்குழு இயங்கி வந்தது. அந்தக் குழு பல அரசியல் வன்முறைகளில் ஈடுபட்ட போதிலும், அவர்களின் தாக்குதல்களில் யாரும் கொல்லப்படவுமில்லை, காயமடையவுமில்லை.

17 செப்டம்பர் 1987, ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள, மாக்ரோ (MAKRO) பல்பொருள் அங்காடி தீப்பிடித்து எரிந்தது. நெதர்லாந்தின் மிகப்பெரிய வர்த்தக நிலையம், முற்றாக எரிந்து நாசமாகியது. தீப்பிடிக்கக் கூடிய குண்டு ஒன்றை வெடிக்க வைத்து அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. குண்டு இரவில் வெடித்ததால், அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. யாரும் காயமடையவில்லை. இதனால், MAKRO நிறுவனத்திற்கு, 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. பங்குச் சந்தையில், அதன் பங்குகள் சரிந்ததால், மேலதிக நஷ்டம் ஏற்பட்டது. MAKRO பல்பொருள் அங்காடி தாக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகள், எண்பதுகளின் இறுதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு, அந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணம் என்று எல்லோராலும் நம்பப் படுகின்றது. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சோஷலிச நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளையும் பெரிதும் பாதித்திருந்தது. உண்மையில், ஐரோப்பா அன்றிருந்த நிலையில், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் வீழ்ச்சி அடைந்திருக்கா விட்டால், மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் வீழ்ச்சி அடைந்திருக்கும்! நிலைமை அந்தளவு மோசமாக இருந்தது. நெதர்லாந்தும் நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள் இடதுசாரி தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப் பட்டனர்.

நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மக்களின் கோபத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்புவதில், இடதுசாரி இயக்கங்கள் வெற்றி கண்டன எனலாம். அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதில் இருந்தே அதனை அறிந்து கொள்ளலாம். அன்றிருந்த இடதுசாரி அலை, வெளிநாட்டு குடியேறிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இன்றைக்கு, பொருளாதார நெருக்கடியை  பயன்படுத்திக் கொண்டு, வலதுசாரி தீவிரவாதிகள் வெளிநாட்டவர் எதிர்ப்பு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். என்பதுகளுக்கும், தொண்ணூறுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை பார்க்கும் பொழுது, அரசே திட்டமிட்டு வலதுசாரி தீவிரவாதிகளை ஊக்குவித்திருக்கலாம் என்ற ஐயம் எழுகின்றது.

ஏற்கனவே, "ஸ்டாலினிச ஒழிப்பு" என்ற பெயரில், கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பு பலவீனப் படுத்தப் பட்டு விட்டது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யவில்லை. ஆனால், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டதால், கட்சி பலவீனப் படுத்தப் பட்டது.  சமூகத்தில் இருந்து ஒதுக்கப் பட்டது. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை, அனார்கிஸ்டுகள் (அரச மறுப்பாளர்கள்) எனப்படும், புரட்சிகர இடதுசாரிகள் நிரப்பினார்கள். அரச கட்டமைப்பிற்கு இடமற்ற கம்யூனிச சமுதாயத்தை இலக்காக கொண்ட அனார்க்கிஸ்டுகள், உலகில் எந்த நாட்டிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க மாட்டார்கள். (ஆட்சி  என்ற சொல்லே அவர்களது கொள்கைக்கு முரணானது.) ஒரு பக்கம் முதலாளித்துவ நாடுகளையும், மறுபக்கம் சோஷலிச நாடுகளையும் கடுமையாக விமர்சிப்பார்கள். ஆகையினால், இவ்விரண்டு முகாம்களிலும் சேர விரும்பாத, இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்கள், அனார்க்கிச கொள்கைகளால் கவரப்பட்டனர்.

ஆம்ஸ்டர்டாம் மாநகரில், குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகும். இதனால், மாணவர்களும், இளைஞர்களும் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்பட்டனர். அதேநேரம்,   பல பழைய  கட்டிடங்கள்,  ஒருவருக்கும் பிரயோசனமில்லாமல் கைவிடப்பட்டிருக்கும். அப்படியான கட்டிடங்களின் கதவுகளை  உடைத்து உள்சென்று , அவற்றை வீடற்ற மக்களின்  வதிவிடமாக மாற்றிக் கொள்ளும் போக்கு தோன்றியது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களில், புரட்சியாளர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கிருந்து போராட்டங்களுக்கான திட்டங்களை வகுப்பார்கள்.

புரட்சிகர இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, வீட்டுமனை முதலாளிகள் உரிமை கோருவார்கள். அவ்வாறு ஒரு தடவை, எண்பதுகளின் தொடக்கத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை கைப்பற்றி முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான போலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, "அமைதிப்பூங்காவான சுதந்திர தேசத்தில்" வாழ்ந்த மக்கள், அரச அடக்குமுறைக்கு முகம் கொடுத்தார்கள். "அடடா, அரசு என்பது இது தானா? வாருங்கள்...நாங்களும் தயாராக இருக்கிறோம். எம் மீது தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்..." நெதர்லாந்து அரசை நோக்கி பகிரங்க சவால் விடுக்கப் பட்டது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் தடவையாக, ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் யுத்த தாங்கிகள் உருண்டோடின. பொலிசை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்த, இந்த  பொலிஸ் அடக்குமுறையானது, பல இளைஞர்களை ஆயுதப்போராட்டம் குறித்து சிந்திக்க வைத்தது. போர்க் குணாம்சம் கொண்ட இளைஞர்கள் "இயக்கம்" ஒன்றை உருவாக்கினார்கள். தலைமறைவாக இயங்கிய படியால், அது "இயக்கம்" (De Beweging) என்ற பெயரிலேயே  குறிப்பிடப்பட்டது. இயக்கம், பல்வேறு குழுக்களையும், பலதரப்பட்ட போராட்ட வழிமுறைகளையும் உருவாக்கியது. அதில் ஒன்று தான், "இனவெறிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கை" எனும் அமைப்பு. டச்சு மொழியில், "Revolutionaire Anti Racistiese Aktie". சுருக்கமாக "RaRa" (ராறா).

அந்தக் காலத்தில், தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு ஆட்சி நடத்தியது. அது, Apartheid என்ற பெயரில், இன ஒதுக்கல் கொள்கை மூலம், கறுப்பின பெரும்பான்மையினரின் உரிமைகளை பறித்தது. தென்னாப்பிரிக்கவில் குடியேறிய வெள்ளையினமான, "ஆப்பிரிக்கானர்கள்" என்றழைக்கப் படுவோர், டச்சுக்காரர்களின் வம்சாவளியினர் ஆவர். அவர்கள் பேசும் "ஆப்பிரிக்கான் மொழி", கிட்டத்தட்ட டச்சு மொழி போன்றிருக்கும். இந்த தொடர்பு காரணமாக, பல நெதர்லாந்து நிறுவனங்கள் தென்னாபிரிக்காவில் முதலிட்டு வந்தன. இந்த வர்த்தக தொடர்பு, எண்பதுகளிலும் தொடர்ந்தது. உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க இன ஒதுக்கல் கொள்கையை கண்டித்து பொருளாதாரத் தடை கொண்டு வந்திருந்தன. அப்போது கூட, நெதர்லாந்து கம்பனிகள் வழமை போல வர்த்தகம் செய்து வந்தன. தென்னாபிரிக்காவில் சில முதலீடுகளில், நெதர்லாந்து அரச குடும்பத்திற்கும் பங்கிருந்தது.

MAKRO  பல்பொருள் அங்காடி தாக்குதலுக்கு, RaRa  உரிமை கோரியது. MAKRO  வின் தலைமை நிறுவனத்தின் பெயர்: Steenkolen Handelsvereniging (SHV). SHV, தென்னாபிரிக்காவில் முதலிட்டு, வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. "நிறவெறி கொள்கையை கடைப்பிடிக்கும் தென்னாபிரிக்காவில் இருந்து வெளியேறுமாறு, நாம் பல தடவைகள் எச்சரித்தும் கேட்காததால், இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறோம்." என்று RaRa  வெளியிட்ட உரிமைகோரும் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. உண்மையில், ஆரம்பத்தில் MAKRO நிர்வாகம் இந்த பயமுறுத்தலை பொருட்படுத்தவில்லை. மீண்டும் கடையை திறந்து, வழக்கம் போல வியாபாரம் செய்து வந்தது. 18 டிசம்பர் 1986 அன்று, மீண்டுமொருமுறை மாக்ரோ தீப்பிடித்து எரிந்தது. இம்முறையும், பல கோடி சேதம். அரசு இந்தத் தாக்குதல்களை "பயங்கரவாதம்" என்று கூறியது. ஆனால், "பயங்கரவாதத்தினால் பலன் கிடைத்தது." SHV தனது முதலீடு முழுவதையும், தென்னாபிரிக்காவில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. அந்த விடயத்தில், RaRa வுக்கு வெற்றி கிட்டினாலும், போராட்டம் ஓயவில்லை.

"ஒரு சில தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களால், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை மண்டியிட வைக்க முடியும்," என்ற உண்மை, அரசிற்கு சங்கடத்தை உண்டாக்கியது. நாலா பக்கமும் இருந்து பறந்து வந்த கண்டனக் கணைகளில் இருந்து தப்புவதற்காக, அரசு ஒரு சிறப்புப் படையணியை உருவாக்கியது. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு இரகசியமான இடத்தில் இயங்கிய, 26 பேர் கொண்ட ஆய்வாளர் குழுவிற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சாதாரண கிரிமினல்களை விட, மிகவும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் இயங்கிய RaRa  வை பிடிக்க முடியவில்லை.

முதலில், "Bluf" என்ற இடதுசாரி சஞ்சிகை ஆசிரியர், வைனண்ட் டைவன்டாக்  (Wijnand Duyvendak) மீது சந்தேகம் எழுந்தது. வைனன்ட் பின்னர் சில வருடங்கள், Groen Links  என்ற பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவர் மீது சந்தேகப்பட வைத்த ஒரே காரணம்: "RaRa  உரிமை கோரும் பிரசுரம் அவரின் சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது தான்!" பகிரங்கமாக இயங்கிய வைனண்ட், தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக சாத்வீக வழியில் போராடி வந்தார். தான் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறி வந்தார். ஆயினும், அவரை பிடித்து விசாரித்த போலிஸ், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விட்டு விட்டது.

புலனாய்வுத்துறைக்கு தகவல் கொடுக்கும் ஒரு உளவாளி, "வைனன்ட் RaRa அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்" என்று கூறியுள்ளார். ஆயினும் என்ன? அதனை உறுதிப் படுத்தும் ஆதாரம் எதுவும் கிடையாது. RaRa தலைவர்கள் யார் என்பது, இன்று வரைக்கும் மர்மமாகவே உள்ளது. RaRa இயக்கத்தில், மொத்தம் எத்தனை பேர் இயங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும், இன்று வரையும் யாருக்கும் தெரியாது. இரகசியம் பேணல் மட்டுமல்ல, உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்புகள் இல்லாமையினாலும், புலனாய்வுப் பிரிவின் கழுகுக் கண்களுக்கு தப்ப முடிந்தது.

RaRa, தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் நின்று விடவில்லை. நெதர்லாந்து அரசு, அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தை எதிர்த்து வந்தது. அகதிகள், வெளிநாட்டவரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் இறுக்கத்தை கடைப்பிடிக்கும் நெதர்லாந்து அரச கொள்கைக்கு எதிராக போராட முடிவெடுத்தது. ஜனவரி 1988, Schiedam எனுமிடத்தில் உள்ள கடவுச்சீட்டு அச்சிடும் தொழிற்சாலைக்கு குண்டு வைக்கப் பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அலாரம் அடித்ததால், குண்டு வெடிக்காமலே, வைத்தவர்கள் ஓடி விட்டார்கள். வெடிக்காத குண்டில் இருந்த கைரேகை அடையாளத்தை வைத்து, ரேனே ரூமெர்ஸ்மா (René Roemersma) என்ற நபர் பிடிபட்டார்.

BVD  என்ற புலனாய்வுத்துறையும், பொலிசின் சிறப்புப் பிரிவும் இணைந்து, தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இடதுசாரி இயக்கங்களினுள் ஊடுருவியிருந்த உளவாளிகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 150 பேரைக் கொண்ட பொலிஸ் படை, ஆம்ஸ்டர்டாம் நகரில் பல வீடுகளில் சோதனை நடத்தி, ஒன்பது பேரைக் கைது செய்தது. குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடையாததால், கைது செய்யப்பட்ட பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ரேனே க்கு மட்டும், ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இருப்பினும், தேடுதல் வேட்டையின் போது, ஆதாரங்களை திரட்டுவதில் பொலிஸ் சில தவறுகளை விட்டமை தெரிய வந்ததால், அந்த தண்டனையும் குறைக்கப் பட்டு, 18 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

RaRa அமைப்பில், மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று பொலிஸ் நம்பியது. அவர்கள் அனைவரையும் பிடித்து விட்டதால், அந்த இயக்கம் அழிந்து விட்டது என்று நினைத்திருந்தது. அதாவது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டு விட்டாலும், தொடர்ந்தும் பொலிஸ் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களால் வன்முறைகளில் ஈடுபட முடியாது. ஆனால், சில மாதங்களில் வெடித்த குண்டு ஒன்று, பொலிசின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாகியது.

ஹில்வெர்சும் (Hilversum) நகரில், Shell Thermo Centrum மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அதனை அடுத்து, ஆர்னெம் (Arnhem), ஒல்டென்சால் (Oldenzaal) நகரங்களில் அமைந்திருக்கும், மிலிட்டரி - போலிஸ் முகாம்களுக்கு அருகில் குண்டுகள் வெடித்தன. இறுதியாக, 1991 ம் ஆண்டு, உள்துறை அமைச்சகம் சக்தி வாய்ந்த குண்டினால் தாக்கப்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், அமைச்சு உயர் அதிகாரி  ஆட் கோஸ்டோ (Aad Kosto) வீட்டிலும் குண்டொன்று வெடித்து, வீடு கடுமையாக சேதமுற்றது. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம், RaRa உரிமை கோரியது.

நெதர்லாந்து அரசு, பொலிஸ், புலனாய்வுத் துறை எல்லாவற்றிற்கும் பெரியதொரு தலையிடி வந்தது. யார் இந்த RaRa? இன்னமும் பிடிபடாத பழைய உறுப்பினர்களா? அல்லது புதிதாக யாராவது அந்தப் பெயரில் இன்னொரு இயக்கம் தொடங்கி இருக்கிறார்களா? பொலிஸ் அதனை, "இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்களின் இயக்கம்" என்று சந்தேகிக்கின்றது. விடுதலையான ரேனே ரூமெர்ஸ்மா அது குறித்து கருத்து தெரிவிக்கையில்: "RaRa என்பது ஒரு புரட்சிகர சித்தாந்தம். அதற்கு காப்புரிமை எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரில் இயங்கலாம்." என்று தெரிவித்தார். நம்பினால் நம்புங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடாக இருந்த நெதர்லாந்தில், இரண்டாம் தலைமுறையை சேர்ந்த RaRa உறுப்பினர்கள் இன்னமும் பிடிபடவில்லை! அது மட்டுமல்ல, அவர்கள் யார், என்ன பெயர் என்ற விபரம் எதுவும் தெரியாது. உலகில் இன்று வரையும் துலக்கப்படாத மர்மங்களில் அதுவும் ஒன்று.

************

RaRa பற்றிய ஆவணப்படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டு பாகங்களை கொண்ட ஆவணப்படத்தின் இணைப்புகளை இங்கே தருகிறேன்.

De explosieve idealen van RaRa 

No comments: