Showing posts with label சிலுவைப் போர். Show all posts
Showing posts with label சிலுவைப் போர். Show all posts

Thursday, March 12, 2015

தெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேபியரிடம் இந்திய வாள்கள்


உலகம் முழுவதையும் காலனிப் படுத்திய ஐரோப்பியர்கள், அதற்குப் பிறகு உலக வரலாற்றை தமக்கேற்றவாறு திரிபு படுத்தி எழுதி வந்தனர். பல உண்மையான வரலாற்றுத் தகவல்களை இருட்டடிப்பு செய்து வந்தனர். நாங்கள் இன்றைக்கு ஐரோப்பியர் எழுதிய பொய்களையும், புனைவுகளையும் உண்மை என்று நம்பி படித்துக் கொண்டிருக்கிறோம்.

16 ம் நூற்றாண்டில், காலனிய கால கட்டத்திற்கு பின்னரே, ஐரோப்பியர்கள் "ஆப்பிரிக்காவை கண்டுபிடித்தனர்", அதற்குப் பிறகு தான் கருப்பின மக்களும் ஐரோப்பியருக்கு அறிமுகமானார்கள் என்று சில அறிவுஜீவிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக, அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வாணிபத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, அப்படியொரு புனைவை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ரோம சாம்ராஜ்யமாக இருந்த பண்டைய இத்தாலியில், ஆப்பிரிக்க கருப்பின மக்களும் ரோமாபுரியின் குடி மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அது ஒரு சாதாரணமான விடயம். ஏனெனில், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா வரையும் ரோம சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. இன்று முன்னாள் காலனிய நாடுகளை சேர்ந்த மக்கள், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறி வாழவில்லையா? அது போன்று தான் அந்தக் காலத்திலும் இருந்துள்ளது.

எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஆப்பிரிக்க கருப்பர்கள், கணிசமான அளவில் இத்தாலியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பண்டைய ரோமர்கள் காலத்தில் குடியேறிய "யூத டயஸ்போரா" இருக்கலாமென்றால், "ஆப்பிரிக்க டயாஸ்போரா" இருந்திருக்காதா? அநேகமாக, யூதர்கள் தனியான மதப் பிரிவாக பழமைவாதத்தை பேணி வந்தது மாதிரி, ஆப்பிரிக்கர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளூர் இத்தாலி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர்.

அதனை நிரூபிக்கும் வகையில், பண்டைய நகரமான பொம்பெய்யில் ஒரு பாழடைந்த இசிஸ் ஆலயம் இன்றைக்கும் உள்ளது. இன்றைய நேப்பிள்ஸ் நகருக்கு அருகில் உள்ள பொம்பெய், திடீரென வெடித்த எரிமலைத் தணல்களால் மூடப் பட்டிருந்தது. அந்த நகரின் இடிபாடுகளில், இன்னமும் அழியாத சுவரோவியம் ஒன்றில், இசிஸ் ஆலயம் ஒன்றின் படத்தை பார்க்கலாம். இசிஸ் என்பது, பண்டைய எகிப்தியரால் வழிபடப் பட்டு வந்த பெண் தெய்வம் ஆகும். (இஸ்லாமிய தேசம் எனும் ISIS உடன், இதனை குழப்பிக் கொள்ளக் கூடாது.)

பொம்பெய் ஓவியத்தில், கருப்பின பூசாரி ஒருவர் இசிஸ் எனும் பெண் தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைப் பார்க்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்களும், இத்தாலியர்களும் வழிபட்டு வந்த இசிஸ் ஆலயம், இன்றைய இந்துக் கோயில்கள் போன்று இருப்பதையும் அவதானிக்கலாம். 

இந்துக்களின் கோயில்களில் நடப்பதைப் போன்று, ஆப்பிரிக்கர்களின் இசிஸ் ஆலயத்திலும், பக்தர்கள் இரண்டு பக்கமும் வரிசையாக நின்று கும்பிடுகிறார்கள். (வெள்ளையின, கருப்பின பக்தர்கள் கலந்திருப்பது சுவரோவியத்தில் தெளிவாகத் தெரிகின்றது.) ஒரு கருப்பினப் பூசாரி தீபாராதனை காட்டுகிறார். கோயில் முற்றத்தில் கற்பூரம் கொளுத்துவதற்கு வசதியாக, கல்லால் செய்த ஒரு சதுர வடிவிலான தட்டு வைத்திருக்கிறார்கள். நான் சொல்வதை நம்பாதவர்கள், பொம்பெய்க்கு நேரில் சென்று பார்க்கலாம்.

ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்களின் வரலாற்றை மட்டும் இருட்டடிப்பு செய்யவில்லை. அரேபியர்கள், தமிழர்கள் (அல்லது தென்னிந்தியர்கள்) இடையிலான வர்த்தக, இராணுவத் தொடர்புகளையும் மறைத்து வந்தனர். அந்தக் காலங்களில், இந்தியாவும், அரேபியாவும், நாகரிக வளர்ச்சியில் ஐரோப்பாக் கண்டத்தை விட பல மடங்கு சிறப்பான நிலையில் இருந்துள்ளன.

உலகில் ஐரோப்பியர்கள் மேன் நிலைக்கு வந்தமைக்கு, அவர்களிடம் இருந்த நவீன ஆயுதங்கள் காரணம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் ஆயுத பலத்தில் மிகவும் பின்தங்கி இருந்தனர். கிறிஸ்தவ ஐரோப்பா, இஸ்லாமிய மத்திய கிழக்கை விட நாகரிகத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. 

சிலுவைப் போர் நடந்த காலத்தில், இன்றைய சிரியா வரையில் படையெடுத்து வந்த ஐரோப்பியர்கள், அந்தக் காலத்தில் மிகவும் நவீனமான ஆயுதங்களை கண்டு வியந்தனர். அதில் ஒன்று "டமாஸ் (Damatz) வாள்". அரேபியர்கள் பயன்படுத்திய டமாஸ்கஸ் வாள் என்பது மருவி, ஐரோப்பியர் வாய்களில் டமாஸ் வாள் என்று அழைக்கப் பட்டது. 

அப்படி அந்த வாளில் என்ன விசேஷம்? போர்க்களத்தில் எப்படிப் பாவித்தாலும் உடையவே உடையாது. அந்தளவு உறுதியான உலோகத்தால் செய்யப்பட்டது. பாவிக்க இலகுவானது. அது ஐரோப்பியரின் வாள்களைப் போன்று, கவசத்தை குத்தித் துளைப்பதற்கானது அல்ல. ஆனால், ஆழமாக வெட்டக் கூடியது. 

அதை எப்படி செய்தார்கள்? இரும்பை உருக்கி, 1600 பாகை வெப்பத்தில் திரவமாக்குவார்கள். பின்னர் அந்த இரும்புக் குழம்புக்குள் மரக் கரியும், சில குறிப்பிட்ட இலைகளும் கலப்பார்கள். நீண்ட காலமாக, டமாஸ் வாள் எப்படித் தயாரிக்கப் பட்டது என்பது, ஐரோப்பியருக்கு புரியாத புதிராக இருந்தது. தொழில்முறை இரகசியம் தெரியாத படியால், யாராலும் போலியாக தயாரிக்க முடியாமல் இருந்தது. (Historia, Nr.3/2015)

இந்தக் காலத்தில் படையினரால் விரும்பிப் பாவிக்கப் படும், AK - 47 துப்பாக்கிக்கு உள்ள மதிப்பு, அந்தக் காலத்தில் டமாஸ் வாளுக்கு இருந்துள்ளது. உண்மையில், அரேபியர்களும் அதனை தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தனர். இந்திய மன்னர்கள் பயன்படுத்தியதாக, படங்களில் பார்க்கும் அதே வாள் தான். வரலாற்றில் கடைசியாக திப்பு சுல்த்தானால் பயன்படுத்தப் பட்டது. கி.மு. 300 இலிருந்து தென்னிந்தியர்களினால் தயாரிக்கப் பட்ட டமாஸ் வாள், அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் விலையானது. 

இந்தியா ஒரு காலத்தில், உலகில் மிகச் சிறந்த ஆயுதங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்து வந்துள்ளது. அதாவது, இன்று அமெரிக்கா ஆயுதங்களை தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் போன்று, அன்று இந்தியா அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. பண்டைய வணிகத் தொடர்பு காரணமாக, அன்று இந்தியாவும், அரேபியாவும் உலகில் நாகரிகமடைந்த நாடுகளாக இருந்துள்ளன. பிற்காலத்தில் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்த, ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மூடி மறைந்த வரலாறுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, November 19, 2013

மனித மாமிசம் உண்ட சிலுவைப் படை வீரர்கள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] (பாகம் : 6)


மனித மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள்

அந்தியோக்கியாவை அடுத்திருந்த மாறா என்ற ஊரில் இடம்பெற்ற சம்பவம் எமது இரத்தத்தை உறைய வைக்கும். நீண்ட கால முற்றுகைப் போராட்டத்தினால், பட்டினி நிலைக்கு தள்ளப்பட்ட சிலுவைப் படையினருக்கு உணவு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களிலும் உணவுப் பற்றாக்குறை. அப்படியான தருணத்தில் மாறா மீது படையெடுத்த சிலுவைப் படையினர், "சரசேனர்களின் (முஸ்லிம்கள்) இறைச்சியை புசிக்க வேண்டும்..." என்று வெறியோடு வந்தார்கள். படுகொலைக்கு ஆளாகி இறந்தவர்களின் உடல்களை ஆளுயர பானைகளுக்குள் போட்டு கொதிக்க வைத்து உண்டார்கள்! குழந்தைகளை ஈட்டியில் செருகி நெருப்பில் வாட்டி ருசித்து ருசித்து சாப்பிட்டார்கள்!! நரமாமிசம் உண்ட ஐரோப்பிய காட்டுமிராண்டிகளின் கதை உண்மையா?

சிலுவைப்படையினரின் கொடூரத்தை, அந்தப் பிரதேச மக்கள் இப்போதும் நினைவு கூறுகின்றார்கள். அரபு சரித்திர ஆசிரியர்கள் மட்டும் இதனை பதிவு செய்யவில்லை. அன்று சிலுவைப் படையினரின் முன்னேற்றத்தை பாப்பரசருக்கு அறிவித்துக் கொண்டிருந்தவர்களும் எழுதியுள்ளனர். சிலுவைப் படையினர் பட்டினி கிடக்கும் தருவாயில் "வேறு வழியின்றி" மனித இறைச்சி உண்டதாக, பாப்பரசருக்கு வந்த ஓலையில் எழுதப் பட்டிருந்தது.
(These events were also chronicled by Fulcher of Chartres, who wrote: "I shudder to tell that many of our people, harassed by the madness of excessive hunger, cut pieces from the buttocks of the Saracens already dead there, which they cooked, but when it was not yet roasted enough by the fire, they devoured it with savage mouth." )

ஜெருசலேம் நோக்கி புறப்பட்ட சிலுவைப்படையினரை எதிர்க்க அன்று யாரும் இருக்கவில்லை. இன்று லெபனான் இருக்கும் இடத்தில் இருந்த குட்டி தேசங்களின் எமிர்கள் எல்லோரும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதற்காக நிறைய பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்கள். சிலுவைப் படைகள் ஜெருசலேம் மதில் சுவரை வந்தடைந்தனர். தற்போது இன்னொரு ராஜதந்திர நெருக்கடி உருவானது. அன்று ஜெருசலேம் எகிப்தை ஆண்ட கலீபாவின் கீழ் இருந்தது.

"பாத்திமி" என்று அழைக்கப் பட்ட அரசவம்சம் ஷியா முஸ்லிம்களின் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தது. சுன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் ஒருவரை மற்றவர் பார்க்க விரும்பாத பகைவர்களாக இருந்தனர். வடக்கே சுன்னி-முஸ்லிம் சாம்ராஜ்ய அதிபதிகளான செல்ஜுக் துருக்கியரை பாத்திமி வம்சத்தினர் எதிரிகளாக கருதினார்கள். அதனால் கிரேக்க-கிறிஸ்தவ சக்கரவர்த்தியுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தனர். சிலுவை படையின் முன்னேற்றத்தையும், அவர்கள் அன்று தமக்கு சார்பான அரசியல் மாற்றமாக கருதியிருப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு, பிராந்திய நல்லுறவு பற்றிய அக்கறை இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஜெருசலேமில் ஒரு ஐரோப்பிய காலனியை நிறுவுவது.

ஜெருசலேம் ஐரோப்பியரின் காலனியாகிறது

ஜெருசலேமை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் நினைவுகூருவது பொருத்தமானது. அன்றைய இஸ்லாமியப் படைகளின் தளபதி உமார், ஜெருசலேமில் உள்ள இயேசுவின் தேவாலயத்திற்கு (இயேசு மரித்த, உயிர்த்தெழுந்த இடமாக கருதப்படுகின்றது) விஜயம் செய்தார். அப்போது தொழுகைக்கான நேரமாகி விட்டதால் தனது பாயை விரிக்க ஒரு இடம் கேட்டார். அப்போது தலைமை பாதிரியார் தேவாலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழுகை நடத்துமாறு கூறினார். உமார் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தேவாலயத்தின் வெளியே ஓரிடத்தை தெரிவு செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: "பின்னர் ஒரு காலத்தில், இது தான் உமார் தொழுத இடம் என்று முஸ்லிம்கள் உரிமை கோரக்கூடாது." அவ்வாறு பிற மதத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவம் சிலுவைப் படைகளுக்கு இருக்கவில்லை. ஜெருசலேமை கைப்பற்றிய சிலுவைப் படைகள் முதலில் அங்கிருந்த யூதர்களை அவர்களது ஆலயத்தோடு சேர்த்து கொளுத்தினார்கள். பின்னர் அல் அக்சா மசூதியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை வெட்டிக் கொன்றார்கள்.

வழிபாட்டுத்தலத்தில் இனப்படுகொலை செய்ததற்காக சிலுவைப் படையினர் யாரும் வருந்தவில்லை. மாறாக இரத்தக் கறை படிந்த கைகளோடு நேராக இயேசுவின் தேவாலயம் சென்று, அமைதியாக பிரார்த்தனை செய்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை (கிறிஸ்தவர்கள் அல்லாத) மனிதர்களைக் கொல்வது ஒரு மதக்கடமை. அங்கு நடந்த சம்பவங்களை எழுதி வைத்த Fulcher இன் வார்த்தைகள் இவை: "இந்த நாளுக்காக எம்மவர்கள் ஏங்கிக் கிடந்தனர். நாட்களிலேயே மகிமை பொருந்திய நாள் இதுவே. செயல்களிலே அரும் பெறும் செயல் இதுவே!"
(Fulcher of Chartres, A History of the Expedition to Jerusalem, 1095-1127) 

அவர்கள் ஜெருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் சும்மா விட்டு வைகக்கவில்லை. ஜகொபிய, மறோனிய, ஆர்மேனிய, எகிப்திய கிறிஸ்தவ பிரிவுகளை சேர்ந்த அனைவரையும் வெளியேற்றினார்கள். இயேசுவை அறைந்த சிலுவையின் துண்டு ஒன்று ஜெருசலேமில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிலுவைப் படையினர் நெருக்கினார்கள். ஜெருசலேம் கிறிஸ்தவர்கள் யாரும் அந்த இடத்தை காட்டிக் கொடுக்காததால் சித்திரவதைக்கு உள்ளானார்கள். இதனால் ஜெருசலேம் கிறிஸ்தவர்கள், ஐரோப்பிய கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தனர்.

ஜெருசலேம் மண்ணின் மக்கள் அனைவரும், ஒன்றில் கொல்லப்பட்டனர், அல்லது விரட்டியடிக்கப் பட்டனர். அதன் பிறகு அங்கே "புனித ஜெருசலேம் ராஜ்ஜியம்" என்ற பெயரில் ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலை நாட்டப்பட்டது. அதனோடு சேர்த்து தற்போது மத்திய கிழக்கில் மூன்று ஐரோப்பிய காலனிகள் உருவாக்கி விட்டன. எடேசா, அந்தியோகியா, ஜெருசலேம் ஆகிய புதிதாக உருவான தேசங்களில் தற்போது வெள்ளையின ஐரோப்பியர்கள் குடும்பங்களோடு வந்து குடியேறி இருந்தனர். அடுத்த நூறாண்டுகளாவது நிலைத்து நிற்கப் போகும் நாடுகளில், அங்கேயே பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையும் உருவாகியது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மத்திய கிழக்கை தமது தாயகமாக கருதினார்கள். ஆனால்... இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த ஐரோப்பிய காலனிகள் நிலைத்து நிற்கப் போகின்றன?

தம்மை மீள ஒருங்கமைத்துக் கொண்ட இஸ்லாமியப் படைகள், ஐரோப்பியரிடம் பறிகொடுத்த மண்ணை மீட்டெடுக்க புனிதப்போரை அறிவித்தனர். கொள்கைப்பற்றுள்ள தளபதிகள் தலைமையில் ஜிகாத் என்று அழைக்கப்பட்ட மண்மீட்புப் போர் ஆரம்பமாகியது. ஐரோப்பியர்களை போஸ்னியா வரை விரட்டிச் சென்றார்கள். அன்று ஓடிய ஐரோப்பியர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் மீண்டும் காலடி எடுத்து வைத்தார்கள்.

(முற்றும்)

(இந்தத் தொடரை நூலுருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் " கருப்பு பிரதிகள்"  பதிப்பகத்தினால் வெளியிடப்படும்.)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
5.கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

Friday, May 31, 2013

கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : 5)


கிறிஸ்தவ ஆர்மேனியா ஆக்கிரமிக்கப்படுகின்றது

துருக்கியில் எதிர்ப்பின்றி முன்னேறிய சிலுவைப் படைகள் ஆர்மேனிய நாட்டின் தலைநகரம் எடேசாவை வந்தடைந்தனர். இன்றிருக்கும் ஆர்மேனியா நாட்டை போல மும்மடங்கு பிரதேசம் அன்றைய ஆர்மேனிய மன்னராட்சியின் கீழ் இருந்தது. ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி பிற்காலத்தில் துருக்கியின் பகுதிகளாகி விட்டன.

ஆர்மேனியர்கள் (90%) கிறிஸ்தவர்கள். இருப்பினும் தமக்கென விசேஷ வழிபாட்டு முறையை கடைப்பிடித்தனர். சின்னச்சிறு ஆர்மேனிய நாட்டிற்கு, இரண்டு பக்கமும் எதிரிகள் இருந்தனர். இஸ்லாமிய துருக்கியர்களும், கிறிஸ்தவ கிரேக்கர்களும் ஆர்மேனியாவை விழுங்கி விடத் துடித்தார்கள். அவர்கள் மேற்கத்திய சிலுவைப் படைகளையும் நம்பவில்லை. இருப்பினும் ஆர்மேனிய மன்னன், துருக்கியருக்கு எதிராக சிலுவைப் படைகளின் பாதுகாப்பை நாடினான். அது எவ்வளவு பெரிய தவறு என்பது சில நாட்களின் பின்னர் புரிந்தது.

பவ்டவைன் (Boudewijn : பெல்ஜியத்தை சேர்ந்தவர்) என்ற தளபதியால் தலைமை தாங்கப்பட்ட சிலுவைப் படையணியே, ஆர்மேனியாவின் எடேசா நகருக்கு சென்றது. எடேசாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், தனக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டார் பவ்டவைன். அதாவது ஆர்மேனிய மன்னனின் அடியாளால் போன்று இருக்க முடியாது. ஆனால், அரச குடும்பத்தில் ஒருவனாக கருதப் பட வேண்டும்.  மூப்படைந்த கிழவனான ஆர்மேனிய அரசன், கிறிஸ்தவ சகோதரத்துவ உணர்வு காரணமாக, பவ்டவைனை பிள்ளையாக தத்தெடுப்பதாக அறிவித்தார். 

ஆர்மேனிய வழக்கப் படி பொது மக்களின் முன்னிலையில் நடந்த, ஒரு வாலிபனை தத்தெடுக்கும் சடங்கு, அந்தக் கால கிசு கிசு செய்தியாக, மத்திய கிழக்கு முழுவதும் வலம் வந்தது. அப்படி என்ன விசேஷம் அந்த சடங்கில் உள்ளது? அரசனும், அரசியும் இரண்டு பெரியதொரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு மேடையில் வீற்றிருப்பார்கள். தத்தெடுக்கப்படும் பிள்ளை நிர்வாணமாக அங்கிக்கு உள்ளே தவழ்ந்து சென்று மார்போடு மார்பு உரச வேண்டும். அன்று, பவ்டவைன் என்ற திடகாத்திரமான வாலிபனை, குழந்தை போல பலர் முன்னிலையில் தத்தெடுத்த கதை, ஒற்றர்கள் மூலம் துருக்கிய படைகள் மத்தியில் பரவியது. அவர்கள் அதனை தமக்குள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்.

இந்த வேடிக்கையான தத்தெடுப்பு நாடகம் பல காலம் நீடிக்கவில்லை. தத்தெடுக்கும் வைபவம் முடிந்த சில நாட்களில், பவ்டவைனின் அடியாட்கள், ஆர்மேனிய அரசனையும், அரசியையும் வீதியில் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றார்கள். அந்த கொடுஞ் செயலை, "வளர்ப்பு மகன்" தடுக்கவில்லை. அடுத்த சில நாட்களில் ஆர்மேனியாவின் ஆட்சி பவ்டவைன் கைகளுக்கு மாறியது. அவர் தனது நம்பிக்கைக்கு உரிய சிலுவைப் படைவீரர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 

முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு பிரதேசம், மேலைத்தேய ஐரோப்பியரின் ஆளுமையின் கீழ் வந்தது. வருங்காலத்தில் வரப்போகும், காலனியாதிக்க காலகட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல, அந்த சம்பவம் அமைந்திருந்தது.


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தியோக்கியா முற்றுகை

அந்தியோகியா (இன்று: Antakya, துருக்கி) என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மத்தியதரைக் கடலோரம், இன்றைய சிரியா எல்லையில் அமைந்துள்ள அந்த நகரம் பற்றிய குறிப்புகள் விவிலிய நூலிலும் வருகின்றன. இன்றைக்கும் நிலைத்து நிற்கும் உலகிலேயே பழமையான கிறிஸ்தவ தேவாலயம் (புனித பீட்டரின் குகை) அந்நகருக்கு சிறப்பு சேர்க்கின்றது. 

ஆதி கால கிறிஸ்தவ சமூகம் அங்கே தோன்றியிருந்தது. முன்னொருகாலத்தில் சீனாவுக்கு சென்று வரும் வியாபாரிகளின் இடைத்தங்கல் முகாமாக இருந்ததது. அதன் வர்த்தக முக்கியத்துவம் காரணமாக ரோமர்களின் காலத்திலேயே மிகப் பெரிய நகரமாக திகழ்ந்தது. 20 ம் நூற்றாண்டில் நவீன சிரியாவின் பகுதியாக இருந்தது. பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் அதனை துருக்கிக்கு விற்று விட்டனர். துருக்கியின் ஹத்தை மாகாணமாக அறியப்படும் பகுதியில், இன்றைக்கும் அரேபியர்களே (முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்) பெரும்பான்மை இனம்.

சிலுவைப்போர் காலத்தில், அந்தியோக்கியா "யாகி சியான்" என்ற துருக்கி இனத்தை சேர்ந்த முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிலுவைப் படைகள் வருகின்றன என்று அறிந்தவுடனேயே, யாகி சியான் நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டான். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு குறைபாடு இருந்தது. நகரை சுற்றி கட்டப்பட்டிருந்த மிக நீண்ட மதில் சுவர் தான் அந்த குறைபாடு. 

அந்தக் காலங்களில், சிங்கப்பூர் மாதிரி குட்டி நாடுகள் அதிகம். தலைநகரத்தையும், சில கிராமங்களையும், சுற்றியுள்ள வயல் பரப்புகளையும் மட்டுமே தேச எல்லைகளாக கொண்ட நாடுகள். மதில்களால் சூழப்பட்ட அந்தியோக்கியாவில் நகரபகுதி மட்டுமல்லாது, விவசாய நிலங்களும் இருந்தன. இதனால் அன்றிருந்த 40000 மக்களுக்கு உணவிடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் ஒரேயொரு பிரச்சினை, சீனப் பெருஞ்சுவர் போல முடிவில்லாது நீண்டு சென்று கொண்டிருந்த மதில்களை பாதுகாப்பது எப்படி?

அந்தியோக்கியா 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1084 வரை, கொன்ஸ்டான்டிநோபில் தலைமையின் கீழ் கிரேக்க சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. ஒரு இஸ்லாமிய அரசனான யாகி சியான் ஆட்சியின் கீழே, கிறிஸ்தவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஆர்மேனிய, ஜாகொபிய, மறோனிய, கிரேக்க பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் கிரேக்க சக்கரவர்த்தி, இம்முறை சிலுவைப்படை என்ற கூலிப்படையை  அனுப்பி அந்தியோக்கியாவை இணைக்கப் பார்க்கிறார், என்ற அச்சம் நிலவியது. அப்படியான நோக்கில் படையெடுப்பு இடம்பெற்றால், அந்தியோக்கியா கிறிஸ்தவர்கள் கட்சி மாறி விடுவார்களோ என்று மன்னன் அஞ்சினான். 

இதனால் யாகி சியான், அனைத்து கிறிஸ்தவ ஆண் பிரஜைகளையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். அவர்கள் நகரின் பாதுகாப்பு மதில்களுக்கு வெளியே வசிக்கும் படி உத்தரவிட்டான். அவ்வாறு நகரின் வெளியே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களின் மனைவி, பிள்ளைகளை, யாகி சியான் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டான். பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினர் நலன் கருதி, கிறிஸ்தவர்கள் அந்தியோக்கியா அரசுக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தியோக்கியாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட சிலுவைப்படைகளின் உள்ளே ஒற்றர்களாக செயற்பட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்கள் நீடித்த முற்றுகை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. அந்தியோக்கியா மன்னன் எதிர்பார்த்தது போலவே, கோட்டை வாயில் கதவு ஒரு துரோகியினால் திறக்கப்பட்டது. அதன் மூலம் சிலுவைப் படைகள் அந்தியோக்கியாவினுள் நுழைந்தன. எதிரிக்கு காட்டிக் கொடுப்பவர்கள் எல்லா மதத்திலும், இனத்திலும் இருப்பார்கள். அன்று சிலுவைப்படைகள் நுழையும் வழியை திறந்து விட்டது, பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம். அவன் ஒரு முறை மந்திர, தந்திரங்களில் ஈடுபட்ட காரணத்தால் தண்டிக்கப் பட்டவன். அதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டு பழி வாங்கினான். 

பீருஸ் என்ற அர்மேனிய முஸ்லிம், இரவு நேரத்தில் இரகசியமாக,நுளை  வாயில் கதவுகளை திறந்து விட்டான். அந்தச் செயல், சிலுவைப் படைக்கு வைக்கப்பட்ட பொறி இல்லை என்று நிரூபிப்பதற்காக,  ஏற்கனவே தனது மகனை எதிரிப் படையினர் பக்கம் அனுப்பி வைத்திருந்தான். அப்படி ஒரு காட்டிக் கொடுப்பு இடம்பெற்றிரா விட்டால், சிரியாவில் இருந்து வந்த மேலதிக படைகள் அந்தியோக்கியாவை காப்பாற்றி இருக்கும். அதை விட நீண்ட கால முற்றுகையை தாக்குப் பிடிக்கக் கூடியவாறு, போதுமான உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்தன.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Tuesday, May 14, 2013

இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : நான்கு)



உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்

உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், ஏராளமான நவீன வைத்தியர்கள் இருந்தனர். மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது. 

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார்.  "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்,"    என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார். 
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள்  The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? சில ஆயிரம் சிலுவைப் படைவீரர்களை ஒரு சாம்ராஜ்யத்தால் எதிர்க்க முடியாமல் போனதெப்படி? ஐரோப்பாவில் இருந்து சிலுவைப்படைகள் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பாக்தாத் சக்கரவர்த்தி அந்நியப்படைகளினால் ஆட்டுவிக்கப் படும் பொம்மையாக மாறியிருந்தார். மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

செல்ஜுக் துருக்கியர்கள் நிலங்களை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, குறுநில மன்னர்களைப் போல (ஆனால் இறைமையுள்ள ஆட்சியாளர்களாக) ஆட்சி செய்தனர். ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


துருக்கி யுத்தத்தில் சிலுவைப் படைகளின் வெற்றி

அன்று கிரேக்க-துருக்கிப் பகுதிகளுக்கு இடையிலான யுத்தம், மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரச்சினையாக தோன்றும். ஆனால் நிலைமை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. (கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார். 

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும்,  வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம்  தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. 

கொள்ளைக்காரர்களும், யாத்ரீகர்களும் நிறைந்திருந்த காடையர் கூட்டத்தை, அன்று துருக்கிப் படைகள் இலகுவாக விரட்ட முடிந்தது. ஆனால் தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே, கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.


(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, May 10, 2013

கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்


[சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] 
(பாகம் : மூன்று)

அழிவை நோக்கிய போருக்கு ஆள் திரட்டும் பாப்பரசர்

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டுவதற்காக, பாப்பரசர் உர்பானுஸ் தனது பரிவாரங்களுடன் பிரான்சின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எதற்காக பிரான்சை தெரிவு செய்தார்கள்? பாப்பரசர்கள் உர்பானுசும், கிரகொரியும் பிராங் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மன் சக்கரவர்த்தி காரல் காலத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறி நவீன பிரெஞ்சு மொழி பேசுவோரே "பிராங்" (Frank) இனத்தவர்கள். (அவர்களிடம் இருந்து தான் பிரான்ஸ் என்ற சொல் வந்தது.) முதலாவது சிலுவைப்போரில் நிறைய பிராங் இன வீரர்கள் காணப்பட்டனர். அதனால் மத்திய கிழக்கில், சிலுவைப் போர்வீரர்களை "பிராங்கியர்கள்" என்றும் அழைத்தனர். 

பாப்பரசர் உர்பானுசின் கோரிக்கைக்கு, பலர் செவி சாய்த்தனர்.  அவர் சென்றவிடமெல்லாம், மக்கள் கூட்டம் வரிசையில் நின்று சிலுவைப்படைகளில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லையாதலால், குடிமக்களுக்கும் மன்னனைத் தெரியாது. (இன்றிருப்பதைப் போல தொலைக்காட்சி ஊடகம் அன்றிருக்கவில்லை.)  அப்படியான காலத்தில் ஒரு மதத்தலைவர், அதுவும் "ஆண்டவரின் பூலோகப் பிரதிநிதி" பாப்பரசரே நேரில் வருகிறார் என்றால், யார் தான் போக மாட்டார்கள்? எது எப்படியோ, பாப்பரசருக்கு சிலுவைப்படைக்கு ஆள் திரட்டுவதில் சிரமம் இருக்கவில்லை.

சிலுவைப்போருக்கு ஆள் திரட்டும் பிரச்சாரத்தின் பொழுது முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. "முஸ்லிம் மன்னனின் அரசவையில், தங்கத்திலான கடவுள் சிலைக்கு முன்னால் கிறிஸ்தவர்களின் தலை வெட்டப் படுவதாக,"   அன்றைய  பிரச்சார ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றை இன்றைக்கும் ஐரோப்பிய நூதனசாலைகளில் காணலாம். "முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை." என்ற சாதாரண அடிப்படைத் தகவலை, ஐரோப்பாவில் அன்றிருந்த அரசியல் /மதத் தலைவர்கள்  அறிந்திருக்கவில்லை. 

சாதாரண கிறிஸ்தவ குடிமக்களின் சிந்தனைப் போக்கை, இங்கே விளக்கத் தேவையில்லை. அன்றைய சராசரி ஐரோப்பியனின் மனோநிலையானது, "கிறிஸ்தவர்கள் மட்டுமே உலகில் நாகரீகமடைந்தவர்கள்" என்று கருதியது. (அதுவே, காலனிய காலகட்டத்தில், "வெள்ளையினத்தவர் மட்டுமே உலகில் நாகரீகமடைந்த இனம்." என்ற கருத்தியலாக மாறியது.) அவர்களை சுற்றியிருந்த அனைத்து மக்களையும், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற மதங்களை சேர்ந்தவர்களையும் நாகரீகமடையாத காட்டுமிராண்டிக் கூட்டங்களாக கருதினார்கள்.

ஆனால், உன்னத நாகரீகத்தைக் கொண்டதாக கருதிக் கொண்டவர்கள் தான், போர் விதிகளை மதிக்காது, காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டார்கள். எதிரிகளைக் கொன்று, மனித மாமிசம் புசிக்குமளவிற்கு கொடூர மனம் கொண்டிருந்தனர். (அது பற்றிய தகவல்கள் பின்னால் வரும்) அன்றைய ஐரோப்பாவில், நாடாளும் மன்னர்களுக்கு, தமது சொந்த மொழிகளைக் கூட எழுதப் படிக்க தெரிந்திருக்கவில்லை. 

அன்று மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களின் பொதுவான அபிப்பிராயத்திற்கு மாறாக, இஸ்லாமிய உலகம் திகழ்ந்தது. பாக்தாத்தில் பல்கலைக்கழகம் அமைத்து, தலைசிறந்த இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் மதச்சார்பின்மை தத்துவம் வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, இஸ்லாமிய உலகில் நாஸ்திக அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சிரியாவை சேர்ந்த நாஸ்திக புலவர் அபூ அல் மாரி, சிலுவைப்படைகள் ஜெருசலேமை கைப்பற்றுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் காலமாகி இருந்தார்.

சிலுவைப்போருக்கு புறப்பட்ட வீரர்கள், ஆரம்பத்திலேயே தமது சுயரூபத்தைக் காட்டி விட்டனர்.முஸ்லிம்களை கொள்வதற்கு முன்னர் யூதர்களை கொன்று ஒத்திகை பார்த்தார்கள். ஜெர்மனியில் பல நகரங்களில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். பிற்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய, முஸ்லிம் நாடுகளில் நடத்தவிருக்கும் படுகொலைகளுக்கு முன்னோடியாக, யூதர்களை கொன்று பயிற்சி எடுத்திருப்பார்கள் போலும். 

ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யூத இனப்படுகொலைக்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 
1. யூதர்கள் தான் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள் என்ற மதவெறி. 
2. யூத வணிகர்கள் வசதியாக வாழ்ந்தனர். அவர்களைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்து சிலுவைப்போருக்கு நிதி திரட்டினார்கள். சில நகரங்களில் இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், யூத இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை. இருப்பினும் வெறி கொண்ட கூட்டம் அவர்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது நரவேட்டையை தொடர்ந்தது. 
(Chazan, Robert (1997). In the Year 1096: The First Crusade and the Jews. Jewish Publication Society)

சிலுவைப்படைகள் புறப்படுகின்றன

சிலுவைப்போருக்கு சென்ற படையினருடன், கூடவே அவர்களது குடும்பங்களும் சென்றன. தமது மதக் கடமையை நிறைவேற்ற விரும்பிய, கணிசமான அளவு யாத்ரீகர்களும் (இயேசு பிறந்த இடத்தை நோக்கி அல்லவா போகிறார்கள்?) சிலுவைப் படைகளுடன் சென்றனர். இதனால் பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு உணவு தேடுவது சிரமமாக இருந்தது. (இன்றைய செர்பிய தலைநகர்) பெல்கிரேட் நகரை அடைந்த பொழுது, அங்கிருந்த (கிறிஸ்தவ) ஆளுனருக்கு, பெரும்படை ஒன்று வரும் விடயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. அதனால் ஆளுநர், அவர்கள் கேட்ட உணவும், உறைவிடமும் தர மறுத்து விட்டார். அதனால் என்ன? இந்தப் பிரச்சினைக்கு சிலுவைப்படைகளிடம் தீர்வு இல்லையா? நகரம் முழுவதையும் சூறையாடி, வீடுகளுக்கும் நெருப்பு வைத்து விட்டுச் சென்றார்கள். கவனிக்கவும்:  பெல்கிரேட் நகரில் வசித்த குடிமக்களும் கிறிஸ்தவர்கள் தான்.

சிலுவைப் படைகள் கொன்ஸ்டாண்டின் (இன்று: இஸ்தான்புல்) நகரை வந்தடைந்த நேரம், இப்போது தான் வாழ்வில் முதல் தடவையாக, ஒரு நாகரிக உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. கொன்ஸ்டாண்டின் நகரின் பிரமாண்டம் அவர்களை மலைக்க வைத்தது. முழு ஐரோப்பிய கண்டத்திலும், கொன்ஸ்டாண்டின் இரண்டரை லட்சம் மக்கட்தொகையை கொண்ட பெரிய நகரமாக விளங்கியது. அதனோடு ஒப்பிடும் பொழுது, ரோம் முப்பதாயிரம் மக்கட் தொகையையும், லண்டன் பத்தாயிரம் மக்கட் தொகையையும் மக்களையும் கொண்ட, மிகச் சிறிய நகரங்கள். 

சிலுவைப்படையினர் வரும் வழியில், பெல்கிரேட் நகரில் நடத்திய அட்டூழியங்கள், கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியின் காதுகளை எட்டியிருக்கலாம். அடக்கமாக நடந்து கொள்ளும் படி அறிவுறுத்தி விட்டு, சிலுவைப் போர்வீரர்களை பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் கொண்டு சென்று விட்டு விட்டார். பொஸ்போருஸ் கடலுக்கு அப்பால் இருந்த நிலப்பகுதி இன்று துருக்கி என அழைக்கப்படுகின்றது. அன்று அந்தப் பகுதி, இஸ்லாமிய-துருக்கி சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தது. மாலிக் ஷா (மாலிக் (அரபி), ஷா (பார்சி) இரண்டின் அர்த்தமும் மன்னன்.) என்று அழைத்துக் கொண்ட சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம், துருக்கி முதல் வட இந்தியா வரை பரவியிருந்தது.

இன்றைய துருக்கியின் பகுதிகளை, மாலிக் ஷாவின் படைகள் கைப்பற்றிய ஆட்சி செய்த காலத்தில், பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அவர்கள், அக்கரையில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியின் பாதுகாப்பைக் கோரவில்லை. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமிய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறு தொகையை வரியாக செலுத்தி விட்டு மதச் சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும், கிரேக்க கிறிஸ்தவ சக்கரவர்த்திக்கு விசுவாசம் காட்டாமைக்கு,  முக்கிய காரணம் ஒன்றுண்டு.

கிறிஸ்தவ மதம் ஸ்தாபன மயப் படுத்தப் பட்ட ஆரம்ப காலங்களில், அது  பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது. இன்று நமக்கு எல்லாம் தெரிந்த விவிலிய நூலை ஏற்றுக்கொள்ளாத, தமக்கென சொந்தமாக ஒரு விவிலிய நூலை வைத்திருந்த மதப்பிரிவுகள் இருந்துள்ளன. "ஜாகொபியர்கள்", "நொஸ்தாரியர்கள்" இவ்வாறான பல பிரிவுகள் துருக்கியில் வாழ்ந்தன. அவர்கள் மீது கிரேக்க கிறிஸ்தவர்கள் வன்முறை பிரயோகித்து அடக்கப்பார்த்தார்கள். சக கிறிஸ்தவர்களாலே வேட்டையாடப்பட்டு அழிந்து  கொண்டிருந்த கிறிஸ்தவப் பிரிவுகள், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்ததில் வியப்பில்லை. ஆகவே, மதவெறியோடு பாய்ந்து வந்துள்ள சிலுவைப்படைகளுக்கும் அவர்களது ஆதரவு கிட்டப்போவதில்லை.

இன்றைய இஸ்தான்புள் நகரில் இருந்து 150 கி.மி. தூரத்தில் உள்ளது "நிசெயா" (Nicea). கிளிஜ் அர்ஸ்லன் என்ற துருக்கிய குறுநில மன்னன் ஒருவனால் ஆளப்பட்டு வந்தது. சிலுவைப்படைகளின் முதலாவது தாக்குதல் அந்த இடத்தில் இடம்பெற்றது. செரிகொர்டன் (Xerigordon) என்ற கோட்டை, சிலுவைப்படைகளால் கைப்பற்றப் பட்ட போதிலும் சில நாட்களே அவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

செரிகொர்டன் கோட்டைக்கு வரும் தண்ணீர், வெளியே இருந்து தான் கிடைக்கிறது. அந்த நீர்வழியை துருக்கியர்கள் தடுத்து விட்டனர். சிலுவைப் படைவீரர்கள் தண்ணீர் இன்றி விலங்குகளின் குருதியையும், சிறுநீரையும் குடித்து உயிர்பிழைக்க முயன்றார்கள். இறுதியில் இஸ்லாமியப் படைகளிடம் சரணடைந்தார்கள். மன்னன் அவர்கள் முன் இரண்டு தெரிவுகளை வைத்தான்.  முஸ்லிமாக மதம் மாறி உயிர் பிழைப்பது, அல்லது வீர மரணம். பெருந்தொகை சிலுவைப் படைவீரர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். கொள்கையில் உறுதியாக நின்ற மற்றவர்கள் வீர மரணத்தை தழுவினார்கள். 
(August. C. Krey, The First Crusade: The Accounts of Eyewitnesses and Participants,)

துருக்கியில் சிலுவைப்படையினருக்கு கிடைத்த அவமானகரமான தோல்வி, பாப்பரசரின் காதுகளை எட்டியது. பாப்பரசர் வேறு வழியின்றி தென் இத்தாலியை ஆண்ட மன்னரின் உதவியை நாடினார். ராபர்ட், தான்கிரெட் என்ற அரச குடும்ப வீரர்கள், சிலுவைப் படைகளை தலைமை தாங்கி வழி நடத்த முன்வந்தார்கள். இவர்கள் நோர்வீஜிய வம்சாவளியினர். அப்போது தென் இத்தாலியில் உள்ள சிசிலி தீவை நோர்மன்கள் எனப்படும் நோர்வீஜிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். ஒரு காலத்தில் வட ஐரோப்பியாவில் இருந்து படையெடுத்த "காட்டுமிராண்டி வைகிங்" பரம்பரையினர். தென் ஐரோப்பாவில் குடியேறியதும் கிறிஸ்தவர்களாகி நாகரீகமடைந்த மனிதர்களாகி விட்டனர்.

சிசிலியை சேர்ந்த நோர்மன் வீரர்கள், சிலுவைப் படைகளுக்கு தலைமை தாங்க முன்வந்த பொழுது வெற்றி உறுதிப்படுத்தப் பட்டது. அதற்கு காரணம் அவர்களிடம், பிற ஐரோப்பியரைப் போல, முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் இருக்கவில்லை. இன்னும் கூறப்போனால், சிசிலியில் அந்தக் காலத்தில் மசூதிகள் இருந்தன, இஸ்லாமியர்கள் வாழ்ந்தார்கள். சிசிலியை, நோர்மன்கள் அரேபியரிடம் இருந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிறு வயதிலேயே அரேபியரின், முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அறிந்து வைத்திருந்த தான்கிரெட், அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தான்கிரெட் தலைமை தாங்கிய சிலுவைப் படைகள், அனைத்து தடைகளையும் தாண்டி ஜெருசலேம் வரை சென்றன. அங்கே 200 ஆண்டு காலம் நீடித்த கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை நிறுவின.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, April 26, 2013

போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]

(பாகம் : இரண்டு)


கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.

(தொடரும்)



இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல் 

******************************

 சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

Friday, February 06, 2009

சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்


ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டுமே உலகில் சிறந்த நாகரீகத்தை கொண்டிருப்பதாக நம்புவது. இந்தக் கருத்து, முதலில் நவநாசிகள், நவபாசிஸ்டுகள் என்று ஆரம்பித்து, வலதுசாரி ஜனநாயக கட்சிகளிலும் எதிரொலிக்கின்றது. சில புத்திஜீவிகள், வெகுஜன ஊடகங்கள் தனது வாத திறமையால் பெரும்பான்மை மக்களை கவர்கின்றனர்.

ஐரோப்பாவின் பூர்வீகம் என்ன? அவர்கள் கூறும் ஐரோப்பிய நாகரீகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது? அத்தனை காலம் தனித்துவத்தை பேணி வருகின்றதா? பல வரலாற்று உண்மைகள் இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை. ஐரோப்பிய கலாச்சாரத்தின் தோற்றுவாய் என்று காட்டப்படும் கிரேக்க நாகரீகம், அன்று தனக்கு மேற்கில் இருந்த ஐரோப்பாவை கணக்கெடுக்கவில்லை. அவர்களின் வர்த்தக தொடர்பு முழுவதும் மத்தியகிழக்கை சார்ந்தே இருந்தது. இன்று ஐரோப்பிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துகள் பினீசியரிடம்(இன்று லெபனான்) கடன்வாங்கியவை. அரேபியர்கள் ஒன்றுக்கு முன்னாள் பூச்சியம் உண்டு என்று கற்றுக்கொடுத்தார்கள். கூடவே இலக்கங்களையும் இரவல் கொடுத்தனர்.

முதலில் சிலுவைப்போர்களில் இருந்து தொடங்குவோம். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன. அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, ஜெருசலேம் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக காரணம் கூறினார். அன்று அரசன் தொட்டு ஆண்டி வரை மத நம்பிக்கையில் ஊறிப்போயிருந்த காலத்தில், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

ஜெருசலேமும், பிற கிறிஸ்தவ புனிதஸ்தலங்களையும் கொண்ட பாலஸ்தீனா ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த காலத்தில், குறிப்பாக சொன்னால் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காலத்தில் தான், கிறிஸ்தவ மதம் பரவியது. கொன்ஸ்டான்திநோபிலை (இன்று துருக்கியில் உள்ள இஸ்தான்புல்) தலைநகராக கொண்டிருந்த கிழக்கு ரோமப் பேரரசு தான் முதன் முதலில் கிறிஸ்தவத்தை அரசமதமாக்கியது. இருப்பினும் அது கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றியது. இதனால் அன்று இன்றைய கிரேக்கம், துருக்கி, பாலஸ்தீனம், எகிப்து போன்று அவர்களின் அரசியல் ஆதிக்கம் நிலவிய இடங்களில் கிறிஸ்தவம் பரவியிருந்தது. மேற்கு ரோமப் பேரரசில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றும் கிறிஸ்தவ மதம் அரச மதமாகியது.

இதற்கிடையே அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம், அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது. அது ஐரோப்பாவில் பாரிய பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.


அரசியல் தளத்தில் ஒரு உண்மை சரித்திர ஆசிரியர்களால் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு வந்தது. ரோம சாம்ராஜ்யம் ஒருபோதும் வீழ்ச்சியுற்று மறையவில்லை! அது அரச-மதகுருவான பாப்பரசரால் கிறிஸ்தவ மதம் என்ற சித்தாந்தத்தால் மறுவார்ப்பு செய்யப்பட்டது. நமது காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒப்பானது. அந்த வகையில் முன்னாள் ரோம ராஜ்யத்தின் மாகாணமான பாலஸ்தீனம், துருக்கி, எகிப்தை போன்றே எதிரிப்படைகளால் கைப்பற்றப்பட்ட அரசியல் நிகழ்வாக இருந்த போதும், கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர்.

பாப்பரசரின் கோரிக்கைக்கு செவிமடுத்து பல்வேறு விதமான படைகள், அரச இராணுவம், தனியார் இராணுவம், ஆயுதக்குழு இவ்வாறு பலவகை படைகள் அன்று ஜெருசலேமை கைப்பற்ற சென்றன. அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக போர் புரிய சென்றாலும், பல இடங்களில் ஒழுங்கற்ற காடையர் கூட்டமாக தான் நடந்து கொண்டனர். ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப் போர்வீரர்களை புனிதப்போராளிகள் போன்று சித்தரித்தாலும், மறுபக்கத்தில் அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் விபரித்தனர். அது ஒன்றும் ஆதாரமற்ற கூற்றல்ல. கிரேக்க கிறிஸ்தவர்கள் கூட சிலுவைப்போர் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதமே சிறந்தது என்ற மதவெறியால் வழிநடத்தப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள், முஸ்லிம்களை மட்டுமல்ல கிரேக்க கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தனர்.

அப்போது இஸ்லாமிய சுல்தான்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டதால், சிலுவைப்போர் படைகள் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இஸ்லாமியர்கள் சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதியின் கீழ் ஒன்றிணைந்த பின்னர் தான் ஜெருசலேமை ஒரு நூற்றாண்டாக கைப்பற்றி வைத்திருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளை வெளியேற்ற முடிந்தது. இன்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய யூதர்கள் என்பதால், சிலுவைப்போர் ஞாபகங்கள் அரேபியாவில் மீண்டும் வருவதில் வியப்பில்லை.

துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப்படைகள், சீனாவில் இருந்து புதிதாக தருவிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்களின் துணை கொண்டு, துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். பெரும்பாலும் அரசியல் வெற்றிகளைப் பற்றியே எழுதப்பட்டு வந்தாலும், சாதாரண மக்களின் நிலை அதனோடு இழுபட்டே செல்கின்றது. ஒரு காலத்தில் கிரேக்கர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்த மேற்கு துருக்கி மக்கள், பின்னர் மொங்கோலிய படையெடுப்பாளர்களின் துருக்கி மொழியை தமது தாய் மொழியாக்கியதுடன், மன்னர் வழியை பின்பற்றி இஸ்லாமியராகினர். அதே போன்று பொஸ்னிய முஸ்லிம்கள் கூட ஒரு காலத்தில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் தான்.

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியராவதும், இஸ்லாமியர் கிறிஸ்தவராவதும் அந்த இடத்தில் யாருடைய ஆதிக்கம் நிலவுகின்றது என்பதைப் பொறுத்தது. ஒரு காலத்தில் அரேபியராகவும், முஸ்லிம்களாகவும் இருந்த தெற்கு இத்தாலியில் இருக்கும் சிசிலி, சின்னஞ்சிறு மால்ட்டா தீவு மக்கள் பின்னர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் சில வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர். ஆனால் அதிக வரிச்சுமை, அல்லது பாகுபாடுகள் காரணமாக, பலர் முஸ்லிம்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். முரண்நகையாக அன்றைய இஸ்லாமிய அரசாட்சியில் இருந்த "சகிப்புத்தன்மை கொள்கை" இன்றைய ஐரோப்பிய நாடுகளின் அரச நிர்ணய கொள்கையாகி உள்ளது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப்போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை.
இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் அரச உதவியில் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் அரசர்க்கரசனான காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக பாப்பரசர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதால், ஐரோப்பிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிறஸ்தவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் நூறாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்". (இலங்கையில் சோனகர்களை குறிக்கும் "மூர்கள்" என்ற சொல் போர்த்துகேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது.) அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஸ்பெயினில் மூர்களை அடித்து விரட்டிய கிறிஸ்தவப்படைகள் இந்த நூல்களை கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.


கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கும், இஸ்லாமிய அரேபியாவுக்கும் இடையேயான உறவு எப்போதுமே பகைமையாக இருக்கவில்லை. கத்தோலிக்க மதத்திற்கெதிராக கிளர்ச்சி செய்து புரடஸ்தாந்தினராக மாறிய ஒல்லாந்துக்காரர்கள், தம்மை ஸ்பானிய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக 80 ஆண்டு காலம் போர் புரிந்த காலத்தில், மூர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். அத்லாந்திக் சமுத்திரத்தில் ஒல்லாந்து கப்பல்களும், அரேபியரின் கப்பல்களும் ஒன்றிணைந்து ஸ்பானிய கடற்படையுடன் போரிட்டன. மொரோக்கோவின் காசாபிளாங்கா நகரம் அப்போது ஐரோப்பிய கடலோடிகளின் புகலிடமாக இருந்தது. இந்தக் கடலோடிகளில் சிலர் கடற்கொள்ளைக்காரர்கள். அவர்களோடு முன்பு ஸ்பெயின் கிறிஸ்தவ படைகள் வெளியேற்றிய முஸ்லீம் அகதிகளும்(ஸ்பானிய முஸ்லிம்கள்), தமது தாயக மீட்பு போராட்டத்தின் ஒருபகுதியாக, ஸ்பானிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையராக மத்தியதரைக் கடலில் ஆதிக்கம் செலுத்தினர்.

சிலுவைப்போர்கள் தொடர முடியாமற் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஐரோப்பாவில் புரட்டஸ்தாந்து மதத்தின் தோற்றம், பின்னர் நெப்போலியனின் லிபரல் சாம்ராஜ்யம் பாப்பரசரின் மத ஆதிக்கத்தை முற்றாக அடக்கியமை போன்ற காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரேஞ்சுப்புரட்சியும், நெப்போலியனின் நாஸ்திக இராணுவமும் கத்தோலிக்க தேவாலயங்களின் சொத்துகளை பறிமுதல் செய்தன. அதுவரை பெரும் நிலவுடமையாளராக இருந்த தேவாலயங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதால், அவற்றோடு கட்டுண்டிருந்த உழைக்கும் மக்களும் விடுதலை பெற்றனர்.


ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. உலகம் முழுவதும் "கண்டுபிடித்து", காலனியாக்கிய காலங்களை தான், "பொற்காலம்" என்கின்றனர். உண்மையில் நாம் வாழும் நவீன காலம், பின்காலனித்துவ தொடர்ச்சி தான். காலனிகளால் தான் ஐரோப்பா முன்னேறியது. அறிவைப் வளர்த்தது. செல்வத்தை பெருக்கியது. இன்று தாம் பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.

உலகம் எப்போதும் நாம் விரும்புவது போல சுழல்வதில்லை. ஐரோப்பியரின் வருகைக்கு பின்னர் தான் வெளி உலகம் பற்றி, செல்வத்தை பெருக்கும் கலை பற்றி, அறிந்து கொண்ட காலனி நாடுகளின் மக்கள், தாமும் ஐரோப்பியர் அடிச்சுவட்டை பின்பற்றுவது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் ஒரு வித்தியாசம். ஐரோப்பியர்கள் நமது நாடுகளுக்கு ஆட்சியாளராக வந்தார்கள். நமது மக்களோ ஐரோப்பிய நாடுகளுக்கு உழைப்பாளிகளாக செல்கின்றனர். இரண்டுக்குமிடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. ஆதிக்கவாதிகள் விரும்பிய எதையும் அபகரிக்கலாம். ஆனால் உழைப்பாளிகள், தமது உழைப்பை வாங்குபவனை பணக்காரனாக்குகின்றனர்.

இருப்பினும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களை, "காலனியவாதிகள்" என்று குற்றம்சாட்டும் போக்கு இன்றைய ஐரோப்பிய வலதுசாரி அரசியலில் சகஜம். குறிப்பாக முஸ்லிம்களின் வருகை அவர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று, ஐரோப்பியர்கள் தமது காலனிகளில் வாழ்ந்த மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். நான் முன்பு கூறியபடி நெப்போலியன் காலத்தில் நாஸ்திகவாதம் கோலோச்சிய பிரான்ஸ் கூட தனது காலனிகளில் கிறிஸ்தவமதத்தை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த "கிறிஸ்தவமயமாக்கல்" உலகம் முழுவதும் ஐரோப்பாவுக்கு விசுவாசமான மக்கள் கூட்டத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஒரு காலத்தில் தமது காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், பிரத்தியேகமாக உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமை பின்பற்றும் மக்கள், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் கலாச்சார மாற்றங்களை கொண்டுவரலாம்? இவ்வாறு தீவிர வலதுசாரிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசாங்க மட்டத்திலும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனால் பல்வேறு "அகதி தடுப்பு", "குடியேற்ற தடுப்பு" சட்டங்கள் மூலம், வெள்ளை-கிறிஸ்தவ இன அடையாளத்தை பேண விளைகின்றனர். எப்போதும் ஒரு திருடன் பிறரை நம்பமாட்டான் தானே? ஒரு காலத்தில், தாம் உள்நோக்கத்துடன் செய்த வேலைகளை, தம்மிடமே கற்றுக்கொண்ட வித்தைகளை, தமக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு நீங்கள் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஆளும்வர்க்க சிந்தனை அதுதான்.

இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளபடி, சிலுவைப்போர்கள் எவ்வாறு ஐரோப்பாவை நாகரீகப்படுத்தியது என்ற உண்மை இன்றைய/நாளைய தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது. இளம்சமுதாயம் வரலாறு பற்றிய அக்கறை இன்றி இருப்பதும் அதற்கு உதவுகின்றது. ஐரோப்பிய நாகரீகத்தில் பல மேன்மையான அம்சங்கள் இருந்தாலும், அதன் வேர்கள் பிற கலாச்சாரங்களில் இருந்து தான் வருகின்றன. உலக கலாச்சாரங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்கின்றது. பல சிறந்த கலாச்சாரங்களின் கலப்பால் நாகரீகம் உருவாகின்றது. அது தம்மால் மட்டுமே சாத்தியம் என்று எந்த இனமும் ஏகபோக உரிமை பாராட்ட முடியாது. இதனை நவீன ஐரோப்பிய சமுதாயம் உணராவிட்டால், உலகில் வேறொரு கோடியில், ஐரோப்பிய கலாச்சாரத்தை விட மேம்பட்ட பிறிதொரு நாகரீகம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. அது இயற்கை நியதி. உலகில் எந்தவொரு சாம்ராஜ்யமும், நாகரிகமும் நிலைத்து நின்றதில்லை. இது பைபிள் நினைவு கூறும் சாட்சியம்.
******************************************************************