Showing posts with label பாஸிசம். Show all posts
Showing posts with label பாஸிசம். Show all posts

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.

Monday, May 26, 2014

"முன் தோன்றிய மூத்த குடி, தொன்மையான மொழி" : சிங்கள பாசிஸ இனப் பெருமிதம்


சிங்கள பாசிஸ்டுகளும், "உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி சிங்கள இனம் தான்..." என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதை அரசியல் கொள்கையாக கொண்டுள்ளனர்.

இலங்கையில் பிரபலமான சிங்கள பாசிஸ கட்சியான "ஜாதிக ஹெல உறுமய" கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அண்மையில் பாரிஸ் நகரில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறேன். சிங்கள இனவாதிகள் பேசுவதற்கும், தமிழ் இனவாதிகள் பேசுவதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? தமது இனத்தின், மொழியின் பழம் பெருமை பேசுவதில், இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.

சம்பிக்க ரணவக்கவின் உரையில் இருந்து: 

  •  "எமது மொழி மிகவும் பழமையானது. மூவாயிரம் வருடங்களுக்கும் அதிகமாக, இந்தியாவில் சமஸ்கிருதம் வருவதற்கு முன்பிருந்தே, எமது மொழி அழியாமல் இருந்து வருகின்றது."
  •  "இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று எந்த தேசமும், தனக்கென்று பொதுவான மறை நூலைக் கொண்டிருக்கவில்லை. எமக்கும், இஸ்ரேலிய யூதர்களுக்கும் மட்டுமே அது உண்டு. உலகிலேயே தொன்மையான, எமது இனத்திற்கென்று பொதுவான நூல் அது.
  •  "எமது நாடு உலகிலேயே பழமையான நாடு. எமது ஸ்ரீபாத (சிவனொளிபாத) மலை, இமய மலையை விடப் பழமையானது."

"தமது இனம் எந்தத் தவறும் இழைப்பதில்லை. புழு, பூச்சிக்கு கூட தீங்கிழைப்பதில்லை. எதிரி இனத்தவர்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள்..." இவை உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளின் வழமையான பிரச்சாரம். அதற்காக, தர்க்கங்களையும் தயாரித்து வைத்திருப்பார்கள்.


சம்பிக்க ரணவக்க ஆற்றிய உரையில் இருந்து:

  • "டெல்லியில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப் பட்டார். அதற்கு பதிலடியாக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், எமது ஜனாதிபதி பிரேமதாசவை தமிழ் தீவிரவாதிகள் கொன்றார்கள். நாங்கள் கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் மேல் கை வைத்தோமா?"
  • "குஜராத்தில் கோத்ரா ரயில் வண்டி எரிப்பில் இந்துக்கள் கொல்லப் பட்டார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக நடந்த கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். எமது நாட்டில், புலிகள் கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வைத்து, பல நூறு சிங்கள மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பழிவாங்குவதற்காக தமிழர்களை கொன்றோமா?"
  • "போர் நடந்த காலங்களில், சுரேஷ் பிரேமச் சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வசித்தார்கள். வடக்கில் ஒரு சிங்களவர் இல்லை. எல்லோரும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வடக்கில் இருந்து சிங்களவர்கள் விரட்டப் பட்டதை பற்றி யாரும் பேசுவதில்லை."

சம்பிக்க ரணவக்க முன்வைக்கும் தர்க்கங்கள் தான், சிங்கள பாசிசத்தின் அடிப்படைகள். பாஸிசம் எப்போதும் ஒரு பக்கச் சார்பான கதைகளையும், அரைவாசி உண்மைகளையும், திரிபுபடுத்தப் பட்ட வரலாற்றையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் 83 கலவரம் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டது போன்று, டெல்லி கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப் பட்டது போன்று, கொழும்பு கலவரத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பலின் கொலைவெறி, பலியான மக்களின் அவலம், கலவரம் நடத்தப் பட்ட பொறிமுறை, எல்லாமே ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன.

83 கலவரம் பழிவாங்கும் நடவடிக்கை என்றால், அதற்கு முன்னர் நடந்த கலவரங்களுக்கு காரணம் என்ன? சிங்கள ஸ்ரீ எழுத்தை அழித்தார்கள், என்பன போன்ற உப்புச் சப்பற்ற காரணத்திற்காக எல்லாம், தமிழர்கள் கொல்லப் படவில்லையா?

பிரேமதாச கொல்லப் பட்ட போதும், கொழும்பில் குண்டுவெடித்த போதும், தமிழர்களுக்கு எதிரான கலவரம் எதுவும் நடக்காத காரணம், "சிங்கள மக்களின் சகிப்புத் தன்மை" அல்ல. கொழும்பில் கலவரம் நடந்தால், அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கெட்ட பெயர் உண்டாகும் என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். அப்போது போர் நடந்து கொண்டிருந்ததால், வடக்கு கிழக்கில் போரிடும் சிங்களப் படையினர், "பழிவாங்கும் வேலையை" கவனித்துக் கொள்வார்கள் என்ற "நம்பிக்கை", இன்னொரு காரணம்.

முஸ்லிம்கள் மாதிரி, வடக்கில் வசித்து வந்த சிங்கள மக்களும் விரட்டப் பட்டார்கள் என்பது ஒரு திரிபு படுத்தல். பாதுகாப்பு அச்சம் காரணமாக, எண்ணிக்கையில் குறைவாக இருந்த சிங்களவர்கள் தாமாகவே வெளியேறிச் சென்றனர். வவுனியா, கிழக்கு மாகாண எல்லையோரக் கிராமங்களிலும், அது தான் நிலைமை. போரினால் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராம மக்கள் மட்டுமே வெளியேறினார்கள். அது கூட, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ்க் கிராம மக்களுடன் ஒப்பிடும் பொழுது, எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனாலும், பாசிஸ்டுகள் எப்போதும், தம்மின மக்களின் பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். மற்ற இன மக்களின் அவலம் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சம்பிக்க ரணவக்கவின் உரையானது, இஸ்ரேலிய அரசின் பிரச்சாரங்களை நினைவு படுத்துகின்றது. "பாலஸ்தீன தீவிரவாதிகள் எமது மக்களை கொன்றார்கள். நாங்கள் அதற்குப் பதிலடியாக டெல் அவிவ் நகரில் வாழும் அரபு மக்களுக்கு தீங்கு இழைத்தோமா?" என்றெல்லாம் கேட்பார்கள். சிங்களவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக, சம்பிக்க ரணவக்க தனது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். சிங்களப் பாஸிசம், சியோனிசப் பாசிசத்திடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்பது உண்மை தான்.



சம்பிக்க ரணவக்கவின் முழுமையான உரை:





Thursday, May 08, 2014

நவ- நாஸி அரசுக்கு எதிரான உக்ரைனிய மக்கள் எழுச்சி



  


இந்தச் சிறுவனின் வயது 17 மட்டுமே. உக்ரைனில், ஒடெஸ்ஸா நகரில், உக்ரைனிய- பாசிஸ்டுகளினால் தொழிற்சங்க கட்டிடத்திற்குள் நெருப்பு வைத்து படுகொலை செய்யப் பட்ட 40 அப்பாவி மக்களில், இவனும் ஒருவன். 
நவ- நாஸி கொலைகாரர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்க விசுவாசிகளும், பாசிசத்தை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய பொது மக்களை, "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய- ஆதரவாளர்கள்" என்று தொடர்ந்தும் கொச்சைப் படுத்தி வருகின்றனர்.


உக்ரைனில் ஏற்பட்ட பாசிஸ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, கிழக்கு உக்ரைனில் ஒரு மக்கள் எழுச்சி தோன்றியது. முதலில் டொனியேட்ஸ்க் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து பிற நகரங்களும் சேர்ந்து கொள்ள, டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பாசிஸ ஆட்சியாளர்களும், அவர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும், மக்கள் எழுச்சியை கொச்சைப் படுத்தும் விதத்தில் பிரச்சாரம் செய்தன. "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய ஆதரவாளர்கள்" என்று உண்மைக்கு மாறான கட்டுக்கதைகளை பரப்பி விட்டன. மேற்கத்திய ஊடகங்கள் பொய்யைச் சொன்னாலும், அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் தமிழ் ஊடகங்களும் அப்படியே ஒப்புவித்தன.

டொனியேட்ஸ்க் நகரில் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணம் என்ன?

கிழக்கு உக்ரைனில் பாசிஸ அரசை எதிர்த்துப் போராடும் மக்களை, "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்" என்று கூறுவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. பலர் அறியாமை காரணமாக, மேற்கத்திய பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முதல் தடவையாக மக்கள் எழுச்சி ஏற்பட்ட டொனியேட்ஸ்க் நகரம், "ஒரு ரஷ்ய நகரம்" அல்ல. அங்கு வாழும் எல்லோரும் "ரஷ்ய இனத்தவர்களும்" அல்ல!

உலகின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வம்சாவளியினர் தான் டொனியேட்ஸ்க் நகரில் செறிந்து வாழ்கின்றார்கள். பின்லாந்து, எஸ்தோனியா, கிரேக்கம், தாஜிகிஸ்தான் போன்ற பல தேசத்தவரும், யூரல் மலைத் தொடரில் இருந்து, அட்லாண்டிக் சமுத்திரம் வரையிலான ரஷ்யாவின் பல நகரங்களில் இருந்தும், தொழில் வாய்ப்பு தேடி டொனியேட்ஸ்க் நகரத்தில் வந்து குடியேறினார்கள். (NRC Handelsblad, 7-5-2014) 

உண்மையில், டொனியேட்ஸ்க் நகரம் பல்லின குடியேறிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் எல்லோருக்கும், ரஷ்ய மொழி பிரதானமான தொடர்பாடல் மொழியாக இருந்தது.  இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினருக்கு அதுவே தாய்மொழியாகி விட்டது. இதனை லண்டன் நகரில் வாழும், பல்லின மக்களோடு ஒப்பிடலாம். லண்டனில் வசிக்கும், ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகளின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருக்கலாம். அதற்காக, அவர்களை "ஆங்கிலேயர்கள்" என்று அழைப்பது அபத்தமானது.

மேற்கத்திய பிரச்சாரகர்களுக்கும், மேலைத்தேய அடிவருடிகளுக்கும் வரலாறு தெரிவதில்லை. டொனியேட்ஸ்க் நகரத்தை வடிவமைத்து உருவாக்கியவர் ஒரு பிரிட்டிஷ்காரர்! வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த John Hughes என்ற தொழிலதிபர், 1869 ம் ஆண்டு, அந்த நகரை ஸ்தாபித்தார். சோவியத் காலத்தில், அது ஒரு முக்கியமான தொழிற்துறை நகரமாக உருவானது. அந்த நகரத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.

டொனியேட்ஸ்க் நகரில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாசாரம் அதிகம். உக்ரைனின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டால், அது ஒரு "படித்தவர்களின் நகரம்" ஆகும். நாற்பது வயதிற்குட்பட்ட அனைவரும், ஏதாவது ஒரு தொழிற்கல்வியை, அல்லது உயர்கல்வியை முடித்துள்ளனர். ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் மத்தியில் கூட, கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. "படியுங்கள்... படியுங்கள்... மேலும் மேலும் படியுங்கள்..." என்பது லெனினின் மேற்கோள். சோவியத் காலத்தில், டொனியேட்ஸ்க் நகர நிர்வாகம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. 

சோவியத் யூனியன் உடையும் வரையில், டொனியேட்ஸ்க் உக்ரைனின் பணக்கார நகரமாக இருந்தது. அதற்குக் காரணம், அங்கு வளர்ந்து வந்த சுரங்கத் தொழில் மற்றும் அதனோடு சேர்ந்த பிற தொழிற்துறைகள்.  இன்று, IMF, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுரங்கத் தொழிலுக்கு ஆப்பு வைக்க வந்துள்ளன. அவை சுரங்கங்களை மூடி விட விரும்புகின்றன. டொனியேட்ஸ்க் நகரில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, அதுவே முக்கிய காரணம் ஆகும். (NRC Handelsblad, 7-5-2014) 

********

உலகில், பல "தேசியவாதிகள்", உண்மையான தேசியவாதிகள் அல்லர். உக்ரைனிய தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், கீவ் நகரில் கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய உக்ரைனிய தேசியவாதிகள், குறிப்பாக தலைநகர் கீவ், மற்றும் மேற்கு உக்ரைன் நகரங்களில் இருந்த லெனின் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள்.

"லெனின் சிலைகள், உக்ரைனிய தேசியவாதிகளால் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் சின்னமாக கருதி வெறுக்கப் பட்டதால், அவற்றை உடைத்தனர்..." என்று மேற்கத்திய நாடுகளிலும் காரணம் கூறப் பட்டது. உண்மையில், உக்ரைனில் முன்பிருந்த ஸ்டாலின் சிலைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தான் லெனின் சிலைகள் வைக்கப் பட்டன. ஸ்டாலினுக்குப் பின்னர் பதவியேற்ற, ஒரு உக்ரைனியரான குருஷேவ் காலத்தில் தான் அவை நிறுவப் பட்டன.

ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி ஏற்படும் வரையில், உலக வரைபடத்தில் உக்ரைன் என்ற ஒரு நாடு இருக்கவில்லை. வரலாற்றில் என்றுமே இருக்கவில்லை என்றும் கூறலாம். "உக்ரைன்" என்றால், அதன் அர்த்தம்: எல்லைப் புற நாடு. சார் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இன்றைய கிழக்கு உக்ரைன் "நோவோ ருசியா"(புதிய ரஷ்யா) என்று அழைக்கப் பட்டது. இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி, முன்பு ஆஸ்திரியா- ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது.

லெனின் தலைமையிலான, போல்ஷெவிக் கம்யூனிச புரட்சியாளர்கள், இரண்டையும் இணைத்து உக்ரைன் என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். உக்ரைனியர்கள் என்ற தனியான கலாச்சார அடையாளத்தை, அவர்களே வளர்த்து விட்டார்கள். சோவியத் ஒன்றியத்தில் தேசியங்களை வரையறுத்த ஸ்டாலின், உக்ரைனை தனியான தேசியமாக அங்கீகரித்திருந்தார்.

உண்மையில், போல்ஷெவிக் புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், உக்ரைன் என்ற தேசம் உருவாகி இருக்க மாட்டாது. அதனால் தான், தொலைக்காட்சியில் உக்ரைன் பிரச்சினை தொடர்பாக உரையாடும் பொழுது, புட்டின் போல்ஷெவிக் புரட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார். கிழக்கு உக்ரைனிய பகுதிகளை குறிப்பதற்கு, "நோவோ ருசியா" என்ற சொற்பதத்தை பாவித்தார்.

உக்ரைனிய தேசியவாதிகள் உண்மையான தேசியவாதிகளாக இருந்திருந்தால், அவர்கள் உக்ரைனிய தேசியத்தை உருவாக்கியதற்காக லெனினுக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்கள். அதற்கு மாறாக, லெனின் சிலைகளை உடைத்தமைக்கு "மத்திய கால ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் பற்றிய பிரமையும், வலதுசாரிகளின் கம்யூனிச வெறுப்பும்" பிரதான காரணங்களாக உள்ளன. அதனால் அவர்களை "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று அழைப்பதை விட, "உக்ரைனிய பாசிஸ்டுகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.




பாசிஸ கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, ஆயுதமேந்தியுள்ள வீரப் பெண்மணி. தென் கிழக்கு உக்ரைனிய மக்களின் எழுச்சி, தற்போது நவ- நாஸிகளுக்கு எதிரான மக்கள் யுத்தமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக, பல சாதாரண குடும்பத் தலைவிகள் கூட தற்பாதுகாப்புக்காக ஆயுதமேந்தியுள்ளனர்.


வீடியோ: 
உக்ரைனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள நவ- நாஸிகள். இவர்களைத் தான், மேற்குலக நாடுகள் "ஜனநாயகவாதிகள்" என்று கூறி ஆதரிக்கின்றன. 

 Ukraine Crisis Today: Democracy caught on camera 
(This will never be shown on mainstream media) 






உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:


Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, September 18, 2012

இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(இரண்டாம் பாகம்)

"சீமான், வைகோ ஆகிய தமிழினக் காவலர்கள், ராஜபக்சவின் தீவிர எதிரிகள். இவர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பேயில்லை. அதனை நாங்கள் நம்ப மாட்டோம்." என்று பலர் பிடிவாதமாக மறுக்கலாம். இப்படி மறுப்பவர்கள், பாஸிசத்தின் தனித் தன்மையை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டினதும் பாஸிச சக்திகள், ஒன்றை மற்றது எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும். ஏனெனில் இது அடிப்படையில் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆகும். ஆனால், சந்தர்ப்பம் வாய்த்தால், அனைத்து நாடுகளிலும் உள்ள பாஸிச சக்திகள் ஒன்று சேர்ந்து விடும். இதற்கு சிறந்த உதாரணம், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஐரோப்பா. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையில் நடந்த நூறாண்டு கால போரின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் வெறுப்புணர்வு உச்சத்தில் இருந்தது. இருப்பினும், பிரான்ஸ் நாசிகளினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர், தென் பிரான்ஸில் "வீஷி அரசு", நாஜிச நட்பு நாடாக இயங்கவில்லையா? 

இன்று சில தீவிர வலதுசாரி தமிழர்கள், ஹிட்லரை ஆராதிப்பதுடன், நாஜி கொள்கைகளை நியாயப் படுத்தி வருகின்றனர்.  அதே நேரம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வெள்ளையின நவ-நாஜி இயக்கங்கள், தமது நாடுகளில் வாழும் தமிழர்களை விரட்டியடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. இந்த உண்மை நமது தமிழ் நாஜிகளுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள்? அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை  தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா?  ஒவ்வொரு மொழி பேசும் இனத்தையும், அதற்கென்று ஒதுக்கப் பட்ட நாடுகளில் வாழ வைப்பது, தீவிர தேசியவாதிகளின்  அடிப்படை தத்துவம் என்பதை நாம் மறந்து விடலாகாது. 

சீமான், வைகோ போன்றவர்களைக் கண்டு, ராஜபக்ச அன் பிரதர்ஸ் லிமிட்டட் அஞ்சுவதாக, தமிழ் நாட்டில் ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ, சிங்கள ஊடகங்களோ, இவர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை. சீமான், வைகோ கோஷ்டியினரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு அச்சுறுத்தலாக கணக்கெடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால், உடனே சிங்கள அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வரிந்து கட்டிக்  கொண்டு எதிர்க்கத் கிளம்பி விடுவார்கள். அவர்கள் சீமான், வைகோ வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணம் என்ன? இலங்கையில் ஆளும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும், தமிழகத்தின் பாஸிச சக்திகளுக்கும் இடையிலான நுண்ணரசியல், எமது கண்ணுக்குப் புலப்படாது.  தமக்கு உண்மையான நண்பர்கள் யார், உண்மையான எதிரிகள் யார் என்பதில், அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். 

தமிழ் நாட்டில் மட்டுமே அதிகளவு சினிமாக்காரர்கள் அரசியலில் குதிக்கின்றனர். இதனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. நாம் அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும், "மொக்கு  சிங்களவர்கள்"  கூட, அரசியலில் நுழைந்த சினிமாக் காரர்களை, தேர்தலில்  வெல்ல வைக்கவில்லை.  தமிழகத்தில், சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து முதலமைச்சராக இருந்துள்ளனர். 21 ம் நூற்றாண்டு தமிழ் தேசிய இயக்கத்திற்கும், சினிமாத் துறையை சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்திருக்கலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சீமான் கிடைத்தார். ஒரு காலத்தில் பெரியாரிசம், நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த சீமான், 180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார்.  அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.

தமிழீழத் தேசியத்தில், "பெரியாரிசம் அல்லது நாஸ்திகம்  சிறிதளவு தாக்கத்தைக் கூட செலுத்தவில்லை," என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சீமான், பெரியாரிசத்தில் இருந்து தமிழ் தேசியத்தில் குதித்தவர். நாளைக்கே இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இறுதியில் அது தான் நடந்தது. மும்பை சென்று, இந்து மதவெறி பாசிஸ்டுகளான சிவ சேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னால், "நாடு கடந்த தமிழீழ அரசு" க்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அமெரிக்காவில் சி.ஐ.ஏ.யின்  கண்காணிப்பின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், தனக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியும், சிறிலங்கா அரசின் புனர்வாழ்வுத் திட்டத்தின் அறங்காவலருமான கே.பி. உருவாக்கியது தான், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை பலர் மறந்து விட்டனர். புலிகள் இயக்கத்தில், தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, சர்வதேச தொடர்பாளரான கே.பி.,  2007 ம் ஆண்டளவில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.('KP arrested' in Thailand, http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070911_kp_arrested.shtml) ஆனால், பின்னர் கைது செய்யப்படவில்லை என்ற அறிவிப்பும் வந்தது. ஒன்றுக்குப் பின் முரணான தகவல்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன.  அன்றிலிருந்து சி.ஐ.ஏ., மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் உளவாளியாக செயற்பட்டு வந்திருக்க வேண்டும். 

வைகோ, சீமான் ஆகியோருக்கும், சிறிலங்கா அரசுக்கும் தொடர்பிருப்பதாக, எந்தவொரு தமிழ் உணர்வாளரும் கற்பனை பண்ணக் கூட  மாட்டார். ஆனால், மேற்குறிப்பிட்ட தரவுகள், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை தெரிவிக்கின்றன. தமிழகத்தில், ஈழத் தமிழர் பெயரால் அரசியல் நடத்தும் எந்தவொரு தலைவரும், இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்கவில்லை. மாறாக, இனவாதக்  கருத்துகளை பரப்புவதிலும்,  இனவெறி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களவர்களை விரட்டி அடிப்பதை, இன மானம் காத்த வீரச் செயலாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். ஏற்கனவே, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள், தமிழர்களை கொன்ற கொடியவர்கள்." என்பன போன்ற கருத்துக்கள் வெகுஜன ஊடகங்களாலேயே பரப்பப் பட்டு வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவம், புலிகளையும், தமிழ் மக்களையும் வேறு படுத்தி பாராமல் கொன்று குவித்தது.  தமிழினவாதிகளும், "சிங்கள இராணுவத்தையும், சிங்கள மக்களையும் தம்மால் வேறு படுத்தி பார்க்க முடியாது," என்று வாதாடுகின்றனர்.   தனது வாழ்நாளில் ஒரு சிங்களவனைக் கூட கண்ணால் கண்டிராத தமிழக மக்களை, தம் பக்கம் இழுப்பது சுலபம் என்று தமிழினவாதிகள் நம்புகின்றனர். அந்த வகையில், சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அவதானத்தைப் பெறுவதுடன், நிறைய ஆதரவாளர்களையும் தேடித் தரும் என்று கணக்குப் போட்டுள்ளனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், சிங்கள இனவாதிகளும் இதே மாதிரியான அரசியலை கடைப்பிடித்தனர். சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை தாக்கும் இனவாத அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணினார்கள். ஆனால், தமிழகத்தில் இனவாதிகள் ஆட்சிக்கு வருவது, இன்றைய நிலையில் நடக்க முடியாத ஒன்று. அதனால், பாஜக போன்ற இந்து பேரினவாதிகளுடன் கூட்டுச் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் அகில இந்திய பாஸிச அரசு அமைப்பதற்கு துணை போகலாம். 

ஏற்கனவே சிறிலங்காவில் பாஸிச ஆட்சி நடத்தும் ராஜபக்சவுக்கும், இந்தியாவில் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஒன்று, பல தசாப்தங்களாக கொழும்பு நகரில் இயங்கி வருகின்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் தூதுவர்கள், சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும், ஒரே இந்துத்துவா கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர். பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள், சைவ சமயத்தை பின்பற்றும் இந்துக்களாக இருப்பதால், புலிகளை ஒரு இந்து விடுதலை இயக்கமாக மாற்ற முயன்றுள்ளனர். மறு பக்கத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் "புனிதப் போருக்கும்" ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பில் கிறிஸ்தவ சபை, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால், இந்துத்துவா வாதிகளின் கரங்களும் மறைந்திருக்க வாய்ப்புண்டு.
The VHP, an affiliate of the Rashtriya Swayamsewak Sangh (RSS), India's most influential Hindu group, has already opened about a dozen units across Sri Lanka in a bid to build up unity among the country's Tamil-speaking Hindu minority....  Vigyananand, 38, dressed in giveaway saffron robes like a wandering monk, attended the April 10 press conference of LTTE leader Velupillai Prabhakaran as an accredited representative of a VHP publication. Although he has been to Sri Lanka 10 times since 1999, this was the first time he went to LTTE-held areas....   Vigyananand, who knows only Hindi and English, seemed to have no objection to Buddhism and sought to emphasise that Buddhism was also facing threats from the clergy. "I advised Buddhist monks to go to villages to spread their religion and to counter Christianity like we have done in India," he said. "As a religion nobody is suppressing Hinduism in Sri Lanka. But with the exodus of Tamils and Christian influence growing, Hindus here face problems." He also accused the clergy of playing a major role in fuelling the Tamil separatist conflict that has claimed around 60,000 lives in Sri Lanka since 1983 and blamed it for causing a military showdown between the Tigers and India in 1987-90. 
(VHP now building up Hindu unity in Sri Lanka, http://india.indymedia.org/en/2002/04/1069.shtml)  

பத்து வருடங்களுக்கு முன்னர், இந்துத்துவா நிதியில், மலையகத்தில் ஒரு இராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கே பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும் கட்டப்பட்டது. சீதையை இராவணன் சிறை வைத்திருந்த  இடத்தை அனுமான் வந்து பார்த்த கதையை நினைவு கூறுகிறார்கள் போலும்.  அண்மைக் காலமாக, இலட்சக் கணக்கான வட இந்திய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் எவரும், இராமாயணக் கதை நடந்த இடத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு சுற்றுலா நிறுவனங்கள், இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றன. வருங்காலத்தில், அகண்ட இந்து சாம்ராஜ்யம் உருவாவதற்கு, இந்த சுற்றுலாத் திட்டம் உதவலாம். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்தால், அதனால் இரண்டு தரப்பும் இலாபமடைய வேண்டாமா? இலங்கையும் தனது பிரஜைகளை இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது, இந்துத்துவா வாதிகளின் அன்பான வேண்டுகோள்.

முன்பெல்லாம் எண்ணிக்கையில் குறைந்த சிங்களவர்கள் தான் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களும், வட இந்தியாவில் புத்த மதம் சம்பந்தமான இடங்களைத் தான் பார்வையிட்டு திரும்புவது வழக்கம். தமிழ் நாட்டுக்கும் சிங்களவர்கள் வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும், மாணவர்களாக அல்லது வர்த்தக நோக்கோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு இது வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.  புலிகளை இழிவுபடுத்தும், "பிரபாகரன்" என்ற சிங்களத் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளருக்கு அடித்த சம்பவத்தை தவிர, வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 2012, செப்டம்பர் மாதம், பூண்டி மாதா கோயிலுக்கு விஜயம் செய்த யாத்திரீர்கள் கூட, தாம் கடந்த 15 வருடங்களாக வந்து செல்வதாக கூறினார்கள். இந்த விபரம் எல்லாம், தமிழகத் தமிழினவாதிகளுக்கு தெரியாது என்று கூற முடியாது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று, "சிங்களவர்கள் எப்போது, எங்கே வருகிறார்கள்?"  என்பன போன்ற விபரங்களை கொடுக்கின்றது. சிங்கள யாத்திரீகர்கள் மேல் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுகிறது.

(இன்னும் வரும்)

மூன்றாம் பாகம்:
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!

Wednesday, April 28, 2010

ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.