Thursday, April 08, 2010

கோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

("லண்டன் உங்களை வரவேற்கிறது!" - நான்காம் பகுதி)

லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில் இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர்.

லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ் வழக்கறிஞர் தமக்கு சாதகமாக வாதாடுவார் என்று எதிர்பார்க்கின்றனர். பல தடவை அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போகின்றது. தம்மிடம் வரும் அப்பாவி தமிழர்களை பணம் கறக்கும் காராம்பசுவாகவே வக்கீல்கள் கருதுகின்றனர். ஒரு வழக்கு வென்றாலும், தோற்றாலும் தனக்கு வருமானம், என்பதே பல வழக்கறிஞர்களின் நிலைப்பாடு. கரிசனையுடன் வழக்காடும் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் ஏனோ, தானோ என்றே நடந்து கொள்கின்றனர். இதயசுத்தியுடன் நேர்மையாக தொழில் செய்பவர்கள் பாடுபட்டாலும் பலன் கிடைக்காதது வேறு விஷயம்.

தஞ்சம் கோரும் அகதிகளின் வழக்குச் செலவுகளை அரசு பொறுப்பேற்கிறது. பிரிட்டிஷ் அகதிகள் தொடர்பான சட்டம் வழங்கும் மனிதாபிமான சலுகைகளை பல தமிழ் அகதிகள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. லண்டன் வந்தவுடன் உறவினர், நண்பர்களுடன் தங்கிக் கொள்வது காரணமாக இருக்கலாம். "முதலாவது தலைமுறையை" சேர்ந்த அவர்களது உறவினர்களும் வந்தவுடன் வேலை தேடுவதிலேயே குறியாக இருந்திருப்பார்கள். தமது சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்திருக்காது. பெரும்பாலான தமிழர்களின் அறியாமையை பல தமிழ் வக்கீல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒரு அகதியின் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு ஆகும் செலவை அரசே கொடுக்கின்றது. பிரிட்டனில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான அரச நிதியில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகின்றது. பொதுவாகவே பணக்கார வாடிக்கையாளரை வைத்துக் கொள்ளுமளவு அதிர்ஷ்டமற்ற வக்கீல்களும், புதிதாக தொழில் முனைவோருமே அகதிகளுக்காக ஆஜராகின்றனர். இதனால் அப்படியானவர்களை ஊக்குவிக்கவும் சட்ட செலவுகளுக்கான அரச மானியம் பயன்படுகின்றது. ஆனால் எனக்கு பல அகதிகள் கூறிய கதைகள் திடுக்கிட வைத்தன. ஒரு பக்கம் வழக்குக்கு அரச நிதியை பெற்றுக் கொண்டே, மறு பக்கம் அகதியிடம் இருந்தும் குறைந்தது ஆயிரம் பவுனாவது அறவிட்டுள்ளனர். எப்பாடு பட்டாவது பிரிட்டனில் தங்குவதற்கு விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகதிகளும் இரவாய்ப், பகலாய் பாடுபட்டு உழைத்த பணத்தை வக்கீலிடம் கொட்டுகின்றனர். அப்படி பணத்தை வாரியிறைத்து, எதுவும் கிடைக்காது ஏமாந்த அகதிகள் பலர்.

பிரிட்டனில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் இருந்த போதிலும், தமிழர்கள் லண்டனை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பார்த்த அளவில் பிரிட்டன் வரும் பன்னாட்டு அகதிகள், அரசு வழங்கும் சமூக நலன் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டு, முகாம்களில் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பிரிட்டன் முழுவதும் காணப்படும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். எங்கேயோ தொலை தூரத்தில், ஸ்கொட்லாந்து மலைகளில் கூட இந்த முகாம்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு அரிது. மேலும் லண்டனில் வசிக்கும் உறவினர்களிடம் வருவதென்றால் நீண்ட நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். இன்னோரன்ன காரணங்களால் தமிழ் அகதிகள் அரச செலவில் முகாம்களில் இருக்க விரும்புவதில்லை. லண்டனில் ஒரு முகவரியை எடுத்துக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கி விடுகின்றனர்.

லண்டனில் தங்க விரும்புவதற்கு வேலை வாய்ப்பு மட்டும் காரணமல்ல. லண்டனில் வாழ்வதற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை. தாய்மொழியான தமிழிலேயே அனைத்துக் கருமங்களையும் ஆற்ற முடியும். தமிழ்க் கடையில் வேலை செய்வதற்கு தமிழ் தெரிந்தால் போதும். சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நோய் வாய்ப்பட்டால் தமிழ் வைத்தியர்கள் இருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்க தமிழ் தொலைக்காட்சி இருக்கிறது. அரட்டை அடிக்க தமிழ் வீட்டுக்கு பக்கத்திலே தமிழ் நண்பர்கள் வசிக்கிறார்கள். அப்படியும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? தமிழ்க் கோயில்கள் இருக்கின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முன்னோர்கள் கூறிவிட்டார்களாம். அதனால் கோயில் இல்லாத லண்டனுக்கு வந்த தமிழர்கள், தமது இஷ்ட தெய்வங்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். லண்டனில் ஏற்கனவே வட இந்தியர்கள் கட்டிய இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபடலாம், என்று யாருக்கும் தோன்றவில்லை. தென்னிந்திய கட்டிடக்கலையில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் மட்டுமே, தமிழ் இந்துக்கள் முக்தி பேறடைவார்கள் என்றொரு ஐதீகம் போலும். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் செறிந்து வாழும் டூட்டிங், ஈஸ்ட்ஹாம், வெம்பிளி போன்ற புற நகர்களில் பத்துக்கும் குறையாத இந்து-தமிழ் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கட்டினால் மட்டும் போதுமா? அக்கம் பக்கம் இருக்கும் வெள்ளையருக்கும், பிற இனத்தவர்களுக்கும் நமது மத கலாச்சாரத்தை அறிமுகப் படுத்த வேண்டாமா? லண்டன் தெருக்களில் தேர் இழுக்கும் ஊர்வலம் அனைவரையும் ஈர்க்கும்.

ஒரு இடத்தில் ஒரு கோயில் மட்டும் இருந்தால் போதுமா? சிவன் கோயில் இருந்தால், அதற்குப் போட்டியாக அம்மன் கோயில் வரும். ஏற்கனவே இரண்டும் இருக்கிறதா? புதிதாக முருகன் கோயில் கட்டப்படும். நல்ல வேளை, இந்து மதத்தில் தெய்வங்களுக்கு குறைவில்லை. எந்தத் தெய்வத்திடம் போனால் கூடுதல் அருள் கிடைக்கும் என்று தெரியாமல் பக்தர்கள் திண்டாடுகிறார்கள். பக்தர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மூலஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் இருந்தால், அதை சுற்றி பிற தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். மறக்காமல் எல்லா தெய்வங்களுக்கும் முன்னால் ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்கள். உண்டியலுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய அறிவிப்பு. "நீங்கள் போடும் பணத்திற்கு அரசிடம் வரிச் சலுகை பெற வேண்டுமா? இந்தப் படிவத்தை நிரப்புங்கள்."

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :

1. லண்டன் உங்களை வரவேற்கின்றது!
2.உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்
3.பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலக்குகிறீர்கள். தாங்கள் லண்டனில் இருந்துதானா? எழுதுகிறீர்கள். ஆச்சரியமாக இருக்கு!
கோவில் என்பது அந்தந்தக் குடும்பத் தொழிற்சாலை. அதானால் பல உருவாவது தவிர்க்க முடியாது.
கோவிலுக்குள் நடப்பது பற்றி விரிவாக எழுதக் கூடாதா?

பனித்துளி சங்கர் said...

///மூலஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் இருந்தால், அதை சுற்றி பிற தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். மறக்காமல் எல்லா தெய்வங்களுக்கும் முன்னால் ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்கள்.////////


அப்புறம் எப்படி சாமி உங்க வேண்டுதலை நிறைவேற்றுவார் ??????????

Kalaiyarasan said...

பனித்துளி சங்கர், யோகன் பாரிஸ், ஆர்வத்துடன் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.
நான் தற்போது லண்டனை விட்டு வெளியேறி விட்டேன். (ஓஹோ, அது தான் இவ்வளவு தைரியமாக எழுதுகிறேனா என்று கேட்பீர்கள்!) அங்கே தங்கி நின்ற சில வாரங்களிலேயே பல தகவல்களை சேகரித்துக் கொண்டேன். மேலும் இதற்கு முன்பும் பல தடவை லண்டன் சென்று வந்த அனுபவக் கதைகளையும் சேர்த்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைத் தொடர் லண்டன் பற்றிய அறிமுகம் மட்டும் தான். பிற்காலத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி விரிவாக எழுதலாம்.

குலவுசனப்பிரியன் said...

லண்டன் வரவேற்பு நன்றாக இருக்கிறது.

//லண்டனில் ஏற்கனவே வட இந்தியர்கள் கட்டிய இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபடலாம், என்று யாருக்கும் தோன்றவில்லை.//

சேர்ந்தே கட்டினாலும் வடக்கத்திக்காரர்கள், உங்க முருகன் இருந்தால் அந்தக் கோயிலுக்கு எங்கள் பெண்கள் வர மாட்டார்கள் என்கிறார்கள். என்ன விசயம் என்று பார்த்தால்தான் கடவுள்கள்களின் யோக்கியதை தெரிகிறது. அப்படியும் மக்கள் அவற்றை விட்டொழியமாட்டேன் என்கிறார்கள்.

Kalaiyarasan said...

நன்றி குலவுசனப்பிரியன், நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. கோயில் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது குறிப்பிட்ட சமூகத்தினர் கூடுமிடம்.

செங்கதிரோன் said...

அண்ணே சூப்பர் ..

Unknown said...

மனிதனின் முட்டாள்தனம் இங்கே தான் வெளிப்படுகிறது. கோயிலை கட்டி முக்தி பெற்றுவிடலாம் என்று மண்டையில் விவரமே இல்லாதவங்கள் ஜோசிக்கிறபடியால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. கடவுளா கேட்டார் புதுசு புதுசா கோயில் கட்டி என்னோட மவுசை காட்டு என்று? பழைய கோவில் ஒன்றை புதுபொலிவுடன் சீரமைபதே முக்திக்கு வழிவகுக்கும். ஏனெனில் "நான்" கட்டிய கோவில் என்று தப்பட்டம் அடித்து வாழ்வதைவிட, யாரோ ஒருவர் கட்டிய கோவிலுக்கு புனரமைக்கும் வேலைக்கு என்னாலான உதவியை செய்ய முடிந்தது என்று நினைப்பதே மோட்சத்துக்கு வழிவகுக்கும். கடவுளுக்கு சேவை செய்யவே நாம், நான் கட்டின கோவிலில்தான் நீ இருக்கணும் என்று கடவுளுக்கு சொல்ல நாம் யார்?