Showing posts with label பயணக்கதை. Show all posts
Showing posts with label பயணக்கதை. Show all posts

Thursday, February 21, 2019

பல்கேரிய பயணக்கதை


"உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌" நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும்.

இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும் தான் வேறு. ம‌ற்றும் ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.

இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் - த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து. 

சுருங்க‌க் கூறின்: 
பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர்.

துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துருக்கியின் பிராந்திய‌ வல்ல‌ர‌சு ஆக்கிர‌மிப்பு ப‌ற்றி பேசுவார்க‌ள்.

அதை விட‌ இருப‌தாம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ள், இன‌ச் சுத்திக‌ரிப்புக‌ள் ப‌ற்றி இன்றும் நினைவுகூருகிறார்க‌ள். அத‌ற்காக‌ நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்க‌ள்.

இன்றைகும் இன‌ முர‌ண்பாடுக‌ளின் விளைநில‌மான‌ பால்க‌ன் பிராந்திய‌த்திற்கு உங்க‌ளை வ‌ர‌வேற்கிறோம்! இன‌ப் பிர‌ச்சினை ப‌ற்றி தெரிந்து கொள்வோமா? நான் சொல்லத் இன்னும் தொட‌ங்க‌வேயில்லை... 
எங்கே த‌லை தெறிக்க‌ ஓடுகிறீர்க‌ள்? 



பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி - இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.

ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர். 

இதைவிட "போமாக்" எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.

துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார். 



வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.

பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.
****** 



நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.

பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவின் 1949 ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.

பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப் பட்டது. 1999 ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப் பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.

ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப் படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை. 
  
 ப‌ல்கேரிய‌ த‌லைநகர் சோபியாவில் முன்பிருந்த‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சிலைக‌ளை எல்லாம் அக‌ற்றி விட்டார்க‌ள். அவ‌ற்றில் சில‌வ‌ற்றை ஓரிட‌த்தில் வைத்து மியூசிய‌ம் ஆக்கி விட்டார்க‌ள்.

அத‌ற்கு அருகில் Socialist art museum என்ற‌ பெய‌ரில் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஓவிய‌ங்க‌ளை காட்சிக்கு வைத்திருக்கிறார்க‌ள். அந்த‌ ஓவிய‌ங்க‌ள் 1989 ம் ஆண்டு முத‌லாளித்துவ‌த்திற்கு திரும்பிய‌தை கொண்டாடுகின்ற‌ன. அந்த‌ வருட‌த்திற்கு முந்திய‌ வ‌ர‌லாற்றை அழித்து விட‌ விரும்புகிறார்க‌ளாம்.

*****


தலைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அங்கு ஒரு ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ரின் விருந்தாளியாக‌ த‌ங்கி இருந்தேன். அந்த‌ ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ருக்கு ஆங்கில‌ம் ஒரு சொல் கூட‌ தெரியாது. இந்த தொட‌ர்பாட‌ல் பிர‌ச்சினை ப‌ற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த‌ ந‌ண்ப‌ரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கு என்ன‌ செய்ய‌லாம் என்று என்னைப் போல் அவ‌ரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ நேர‌ம் "பிரெஞ்சு தெரியுமா?" என்று கேட்டார். ந‌ல்ல‌வேளையாக‌ என‌க்கும் பிரெஞ்சு தெரிந்த‌ ப‌டியால், இருவ‌ரும் பிரெஞ்சில் உரையாடினோம். 


இங்கே முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப் பட வேண்டிய‌ விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. ப‌ல்கேரியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் ஆங்கில‌ம் இர‌ண்டாம் மொழியாக‌ க‌ற்பிக்க‌ப் ப‌ட‌வில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ர‌ஷ்ய‌ன் க‌ற்பித்தார்க‌ள். 90 க‌ளுக்கு பிற‌கு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள்.

தொண்ணூறுக‌ளுக்கு முன்ன‌ர், ர‌ஷ்ய‌ன் இர‌ண்டாம் மொழியாக‌ இருந்தாலும், பாட‌சாலைக‌ளில் இன்னொரு அந்நிய‌ மொழியும் க‌ற்பித்த‌ன‌ர். அது மாண‌வ‌ர்க‌ளின் சுய‌ தெரிவாக‌ இருந்த‌து. மூன்றாம் மொழியாக‌ ஆங்கில‌ம், பிரெஞ்சு, ஜெர்ம‌ன், ஸ்பானிஷ் ஆகிய‌ மொழிக‌ளை க‌ற்ற‌ன‌ர். இதே த‌க‌வ‌லை முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் வாழ்ந்த‌ ப‌ல‌ர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறு தான் என‌து ப‌ல்கேரிய‌ நண்ப‌ருக்கு பிரெஞ்சு பேச‌த் தெரிந்திருக்கிற‌து. ஓய்வு பெறும் வ‌ய‌திலும் அவ‌ர் பிரெஞ்சை ம‌ற‌க்க‌வில்லை. என‌க்கும் ச‌ர‌ள‌மாக‌ பிரெஞ்சு தெரியாது. கொஞ்ச‌ம் தான் தெரியும். ஆனால், அடிப்ப‌டை விட‌யங்க‌ள் ப‌ற்றிய‌ தொட‌ர்பாட‌லுக்கு தேவையான‌ அள‌வு பிரெஞ்சு தெரிந்தால் போதும். 

விராட்சா நகரில் ஒரு பெரிய அர‌ச‌ அச்ச‌க‌ம் இருந்த‌து. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாள‌ர்க‌ள் அங்கு வேலை செய்த‌ன‌ர். தொண்ணூறுக‌ளில் "ஜ‌ன‌நாயக‌ம்" வ‌ந்த‌ பின்ன‌ர் உற்ப‌த்தியை நிறுத்தி விட்டார்க‌ள். விலை உய‌ர்ந்த‌ அச்சு இய‌ந்திர‌ங்க‌ளை, இந்திய‌ நிறுவன‌ம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்ட‌னர். தொன் க‌ண‌க்கிலான‌ கட‌தாசிக‌ளை வீசி விட்ட‌ன‌ர். அங்கு வேலை செய்த‌வ‌ர்க‌ள் வேலையில்லாம‌ல் ந‌டுத் தெருவில் விட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ தொழில‌க‌த்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த‌ க‌ட்டிட‌மாக‌, உள்ளே ஒன்றும் இல்லாம‌ல் வெறுமையாக‌ இருந்த‌து. ஜ‌ன்னல் க‌ண்ணாடிக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு, த‌ரையெங்கும் க‌ண்ணாடித் துண்டுக‌ள் சித‌றிக் கிட‌ந்த‌ன‌. நொறுங்கிய‌ க‌ண்ணாடித் துண்டுக‌ள் போன்ற‌து தான், அந்த‌ ந‌க‌ர‌த்தில் வாழும் பெரும்பாலான தொழிலாள‌ர்க‌ளின் நிலைமையும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌வலைப்ப‌ட‌ யாருமில்லை. 


*****














Sunday, April 11, 2010

லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - தொடரின் இறுதிப் பகுதி)
லண்டன் நகரின் வாகன நெரிசல் அதிகமுள்ள வீதிகளில் ஒன்று. சிக்னல் தரிப்பிடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதற்கெனவே காத்து நின்றது போல, நடைபாதை ஓரமாக இருபது வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஓடி வருகின்றனர். அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள். வெறியுடன் பாய்ந்து கார் கதவை திறந்து, உள்ளே இருந்தவனை வெளியே இழுத்துப் போட்டு... "சதக், சதக்"... மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கிடையில் காரில் வந்த இளைஞனின் உயிர் பிரிகிறது. பட்டப் பகலில் நடந்த அந்த கொலைச் சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப்பட்டவனும் தமிழர்கள். லண்டனில் வழக்கமாகிப் போன குழுச் சண்டையின் கோரக் காட்சி அது.

லண்டனில் பிறந்த வெள்ளையர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர்களின் "மண் பற்று" நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. லண்டன் மாநகரில் தமிழர் அதிகமாக வசிக்கும் பிரதேசமெங்கும் குழுக்கள் காணப்படுகின்றன. "டூட்டிங் குரூப்", "ஈஸ்ட்ஹாம் குரூப்" என்று பல்வேறு ஊர்காவல் படைகள் ரோந்து சுற்றுகின்றன. அந்தந்த ஏரியாக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில். வேறொரு ஏரியாவை சேர்ந்த குழு வந்து வாலாட்டினால், அவ்வளவுதான். சிறு பொறியே பெரும் மோதலுக்கு வழிவகுத்து விடும். காரணம் எதுவாகவும் இருக்கலாம். "....... நம்மூர் பொண்ணு மேலே கை வைச்சுட்டான், டோய்...?"

பிரிட்டன் எதிர்நோக்கும் முக்கியமான சமூக பிரச்சினைகளில் ஒன்று, இள வயது கிரிமினல் கும்பல்கள், அவர்களுக்கிடையே நடக்கும் கோஷ்டி மோதல்கள். முன்பு வெள்ளையின உழைக்கும் வர்க்க பிள்ளைகளிடையே காணப்பட்ட 'Gang ' கலாச்சாரம், தற்போது பிற இனத்தவர்கள் மத்தியில் பரவியுள்ளது. பெருமளவு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் குடிபெயரத் தொடங்கிய அண்மைய இருபதாண்டுகள் குறிப்பிடத் தக்கவை. இவர்களது முதலாவது தலைமுறை கடின உழைப்பின் மூலம் பணக்காரராகலாம் என நம்பியிருந்தார்கள். வருடக்கணக்காக தினசரி 16 மணிநேரம் உழைத்து, சேமித்து; எதிர்கால வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தை அழித்துக் கொண்டார்கள். இரண்டாவது தலைமுறையிடம் அந்தளவு பொறுமை இல்லை. வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இன்றே அனுபவிக்க வேண்டும். வருடக்கணக்காக காத்திருக்க முடியாது. அதற்கான குறுக்கு வழிகளை தேடியவர்கள், "Gang கலாச்சாரத்தை" கண்டுபிடித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் லண்டனில் பாகிஸ்தான், சீக்கிய இளைஞர்களின் குழுக்களுக்கு எதிர்வினையாக, தமிழ் குழுக்கள் உருவானதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதாவது தாம் தமிழ் சமூகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் ஒன்றே போதும். ஒரு தமிழரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு கார் பெட்ரோல் போட்டுக் கொண்டது. வாகன சாரதியான தமிழ் இளைஞர், கட்டணத்தை செலுத்த கொடுத்த கிரெடிட் கார்ட் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே பெட்ரோல் நிலைய உரிமையாளர் போலிசுக்கு அறிவிக்க தொலைபேசியை தூக்கினார். அதற்கு சற்றும் பதற்றப்படாமல் அந்த இளைஞர்: "தாராளமாக போலிசுக்கு அறிவிக்கலாம். மாலை வீடு திரும்பும் போது மனைவி, பிள்ளைகள் உயிரோடு இருக்க மாட்டார்கள்!"

லண்டனில் பல அந்நிய நாட்டவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள், இந்தியர், பாகிஸ்தானியர், வங்காளிகள், துருக்கியர், ஜமைக்கர் இவ்வாறு பல்லின சமூகங்கள் லண்டனை வதிவிடமாக கொண்டுள்ளன. இந்த சமூகங்கள் அனைத்தும் தமக்குள்ளேயே நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் அந்தந்த சமூகங்களுக்குள்ளேயே நடக்கின்றன. அப்படியான தருணங்களில் பெரும்பாலும் வெள்ளயினத்தவரைக் கொண்ட பிரிட்டிஷ் போலிஸ் தலையிடுவதில்லை.

தமிழ் சினிமாவில் வருவது போல, எல்லாம் முடிந்த பிறகு போலிஸ் வந்து குற்றப்பத்திரிகை பதிவு செய்து கொண்டு செல்லும். போலீசைப் பொறுத்த வரை, "இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. அண்மைக்காலமாக பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கூட, (கிரெடிட் கார்ட் மோசடியில்) பல வெள்ளையினத்தவர்கள் பாதிக்கப்பட்டதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

வெளிநாட்டவர் செய்யும் குற்றச் செயல்கள் மீதான ஊடகங்களின் பார்வையானது இனவெறியை வளர்க்கப் பயன்படுகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் பல வெள்ளையினத்தவர்கள் லண்டனை வெளிநாட்டு குற்றவாளிகளின் கூடாரமாக இனங்காணுகின்றனர். ஆங்கிலேய வெள்ளையர்கள், மொத்த லண்டன் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் நகரை விட்டு வெளியேறி வருவதால், அவர்களின் விகிதாசாரம் குறைந்து வருகின்றது. வசதியற்ற வெள்ளையர்கள் கூட, ஓய்வூதியம் பெறும் வயதிலாவது, சைப்ரஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வீடு வாங்கிக் குடியேறுகின்றனர். எங்காவது "கருப்பன் இல்லாத நாட்டில்" சென்று வாழ்வது அவர்களது குறிகோளாக உள்ளது.

இங்கிலாந்தில் 19 ம் நூற்றாண்டிலேயே சில கறுப்பினத்தவர்கள் வந்து குடியேறியுள்ளனர். பிரிட்டனின் காலனியாக இருந்த கரிபியன் தீவுகளில் இருந்தே அவர்கள் வந்திருந்தனர். காலனிகளுக்கான கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற லிவர்பூல் போன்ற துறைமுக நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெருமளவு கறுப்பினத்தவர்கள் லண்டனை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில், வீடு வாடைக்கு விடுவதாக விளம்பரம் செய்தவர்கள், "கறுப்பர்களுக்கு கிடையாது" என்று குறிப்பிடத் தவறவில்லை.

சரித்திர காலம் தொட்டு இங்கிலாந்து ஒரு குடியேற்ற நாடாக திகழ்ந்துள்ளது. ஆங்கிலேயரின் முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்தும், நோர்வேயில் இருந்தும் வந்து குடியேறியவர்கள். அரச குடும்பத்தினர் பிரான்சில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் ஆங்கில மொழியும், இம் மூன்று மொழிகளினதும் கூட்டுக் கலவையாக உள்ளது. அப்படி இருக்கையில் தாமே பிரிட்டனுக்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுவதும், குறிப்பிட்ட சமூகங்களை அந்நியர்கள் என்று வகைப் படுத்துவதும் விசித்திரமானது. ஐரோப்பிய நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை பிரிட்டனையும் வாட்டுகின்றது. நிற அடிப்படையிலான, இனவிகிதாசாரம் மாறுபடுமே என்ற அச்சம் ஒரு காரணம். கணிசமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் (வெளிநாட்டு) உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை மழுங்கடிப்பது இன்னொரு காரணம். இதனால் அரசு ஒரு பக்கம் அவர்களை நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறது. மறுபக்கம் அவர்களின் மீது "குற்றப் பரம்பரை" முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கிறது.

(முற்றும்)



Saturday, April 10, 2010

"நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்" - லண்டன் தமிழர்

("லண்டன் உங்களை வரவேற்கிறது!" பகுதி-5)
முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம் கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கிறிஸ்தவர்களான" தங்களை ஏன் தாக்கினார்கள், என்பது தெரியாமல் விழித்தனர். எப்படியோ கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இங்கிலாந்து வந்து நிரந்தரமாக தங்கி விட்டனர்.

கொழும்பு நகரில் வாழும் தங்கள் உறவினர்கள், "ஆங்கிலம் பேசும் அழகைப் பார்த்து, பிரிட்டிஷ் தூதுவராலய அதிகாரிகளே அசந்து விட்டனர்," என்று லண்டன் மேட்டுக்குடி தமிழர்கள் பெருமையடிக்கின்றனர். குடியேறிய பிரிட்டனில் வளரும், இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் வாசமே அண்ட விடாது வளர்க்கின்றனர். தமது பிள்ளை வெள்ளையின நண்பர்களைக் கொண்டிருப்பதை விரும்புகின்றனர். இரண்டாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர் தமிழ் கலக்காமல் ஆங்கிலம் பேசுகின்றனர். (இதே பெற்றோர் பிற தமிழருடன் கதைத்தால் ஆங்கிலம் கலக்காமல் பேச மாட்டார்கள்.) ஒரு முறை நான் விஜயம் செய்த வீட்டில் இருந்த 16 வயதுப் பையன் தமிழ் கற்க விரும்பினான். உடனே அங்கிருந்த தாய், "நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.

இலங்கைத் தமிழ் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இரண்டு பெயர்கள் வைத்திருப்பார்கள். (தமிழ் கலாச்சாரப் படி) சம்ஸ்கிருத பாணிப் பெயர் ஒன்றும், அதே நேரம் (ஞானஸ்நானத்திற்கு பின்னர்) ஆங்கிலப் பெயர் ஒன்றும் சூட்டிக் கொள்வார்கள். ஞானஸ்நானத்தின் போது வைப்பது கிறிஸ்தவ மதம் சார்ந்த பெயர். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. புழக்கத்தில் உள்ள பல ஆங்கிலப் பெயர்களுக்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற விடயம், உண்மையிலேயே அவர்களுக்கு தெரியாது. லண்டனில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்கள், சில இடங்களில் பிரிட்டிஷ் சமூகத்தில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். லண்டனில் ஒரு தமிழ்ப் பெண்ணின் அனுபவம் இது. அலுவலக வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்த அவரை, நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த வெள்ளையின நிர்வாகி நம்ப முடியாமல் கேட்டார். "விண்ணப்பித்தது நீங்கள் தானா? நான் வேறு யாரையோ எதிர்பார்த்தேன்." ஆங்கிலப் பெயரை சூட்டிக் கொண்டாலும், வெள்ளை நிறவெறி எம்மை சமமானவர்களாக பார்ப்பதில்லை, என்பதை அன்று உணர்ந்து கொண்டார்.

கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள், பிற்காலத்தில் வந்த வட-கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்களிடம் இருந்து மாறுபட்ட அரசியலைக் கொண்டுள்ளனர். வட-கிழக்கு தமிழரில் பலர் சிங்களவரோடு எந்தவித இணக்கப்பாட்டையும் கொண்டிராத தீவிர தமிழ் தேசியவாதிகள். கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள் சிங்கள இனத்தவருடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றனர், ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அறவே வெறுக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலர், கொழும்பில் இருந்த காலங்களில் சிங்கள வழிக் கல்வியை பெற்றிருந்தனர். நான் சந்தித்த நண்பர் ஒருவரின் தந்தை, கொழும்பில் தேயிலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1983 கலவரத்தில் களஞ்சியத்தில் இருந்த தேயிலை மூட்டைகள் யாவும் எரிந்து நாசமாகின. இதனால் அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த போதிலும், தான் சிங்களவர்களை வெறுக்கவில்லை, என்றார் அந்த நண்பர். ஒருவருடைய பொருளாதார பின்னணி தான் அவரது அரசியலை தீர்மானிக்கிறது.

லண்டன் வாழ் கிறிஸ்தவ நண்பர்களுடன், ஒரு ஈஸ்டர் பெருநாளில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு செல்ல நேர்ந்தது. இங்கிலாந்து வெள்ளையர்களில் பெரும்பான்மையானோர் அன்க்லிக்கன் திருச்சபையை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க மதத்தவர்கள் மிகச் சிறுபான்மையினர். லண்டனில் குடியேறிய ஐரிஷ்காரர்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த மக்களும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமூகமளிப்பவர்கள். அதனால் பாதிரியாரும் பிரசங்கத்தில் சியாரா லியோன், இலங்கை ஆகிய நாடுகளில் சமாதானத்தின் தேவை பற்றி கவலை தெரிவிக்க மறக்கவில்லை.

மூன்றாமுலக குடியேறிகள், அகதிகளின் வரவு இல்லாவிட்டால், தேவாலயங்கள் இயங்க முடியாமல் வருமானத்திற்கு திண்டாடியிருக்கும். லண்டனில் பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்று மசூதிகளாக, இந்துக் கோயில்களாக மாறியுள்ளன. புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது மத்திய கால ஐரோப்பிய பண்பாடு. இங்கிலாந்தின் தெற்கே உள்ள கத்தோலிக்க புனித ஸ்தலம் ஒன்றுக்கு வருடா வருடம் கத்தோலிக்க தமிழர்கள் யாத்திரை செல்கின்றனர். இதனால் சில தமிழ் பிரயாண முகவர்கள் போட்டி போட்டுக் கொண்டு "யாத்திரை வியாபாரத்தில்" குதித்துள்ளனர்.

லண்டனில் வசதியாக வாழும் தமிழருடன் பழகுவது ஒரு சுவையான அதே நேரம் கசப்பான அனுபவம். மாற்றிக் கட்டுவதற்கு உடையில்லாத, காலில் போடுவதற்கு செருப்பில்லாத நாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளில், நவநாகரீக ஆடைகளும், விதம்விதமான பாதணிகளும் குவிந்து கிடக்கின்றன. திருமண வீடுகளில் பகட்டுக் காட்டுவது பலருக்கு கைவந்த கலை. குறிப்பாக கலாச்சாரக் காவலர்களான பெண்களின் ரசனையே வேறு. ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள். அதற்கென்று புதிதாக இன்னொரு சேலை வாங்குவார்கள். (வர்ணத்தை மாற்றிக் கொள்வது இன்னும் சிறப்பு.) தப்பித்தவறி யாராவது முன்னர் ஒரு தடவை உடுத்ததையே போட்டு வந்தால், பிற பெண்களின் பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். "இதே நீலக் கலர் புடவையை எங்கேயோ பார்த்தேனே...." என்று கூட்டத்தில் ஒரு பெண் சொல்லத் தொடங்கினால் போதும். அந்தோ பரிதாபம்! உடுத்தி இருப்பதை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓட வேண்டும் போலிருக்கும்.

சேலை மட்டும் தான் என்றில்லை. சினிமா ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் உடுத்தும் கண்ணைக் கவரும் பல வர்ண ஆடைகள் எல்லாம் லண்டனில் கிடைக்கிறது. விலையை மட்டும் கேட்காதீர்கள். அதற்காகவே இன்னொரு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். இருந்தாலும் என்ன? ஒவ்வொரு மாதமும் அழைக்கப்படும் விழாவுக்கு, புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள். அப்படி வாங்கிச் சேர்த்த ஆடைகளைக் கொண்டு ஒரு புடவைக் கடை போடலாம். புடவை மட்டுமல்ல, பாதணிகள், கைப்பைகள் என்பனவும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் மரியாதை போய்விடும். இவ்வாறு மேற்கத்திய நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு தங்களை அறியாமலே அடிமையாகிக் கிடக்கின்றனர்.

நகைகளைப் பொறுத்த வரை, கடந்த இருபது வருடங்களுக்குள் லண்டன் வந்த தமிழர்களே அனேகமாக தங்கம் வாங்கிக் குவிப்பவர்கள். தாயகத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். லண்டன் வந்து ஓரளவு காசு கையில் சேர்த்ததும், தங்க நகை வாங்கிக் குவிக்கத் தொடக்கி விடுவார்கள். நீண்ட காலமாக லண்டனில் 'செட்டில்' ஆகி விட்ட, தம்மை உயர் நடுத்தர வர்க்கமாக கருதிக் கொள்ளும் தமிழருக்கு தங்க நகை சேர்க்கும் ஆர்வமில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தங்கத்தை விட விலை உயர்ந்த, வெள்ளைத் தங்கம், வைர நகைகள் போன்றவற்றை அணிவதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் வெள்ளையின மேல்தட்டு வர்க்கத்தைப் பார்த்து, சூடு போட்டுக் கொண்ட பூனைகள்.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
1. லண்டன் உங்களை வரவேற்கின்றது!
2.உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்
3.பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்
4.கோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

Thursday, April 08, 2010

கோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

("லண்டன் உங்களை வரவேற்கிறது!" - நான்காம் பகுதி)

லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில் இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர்.

லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ் வழக்கறிஞர் தமக்கு சாதகமாக வாதாடுவார் என்று எதிர்பார்க்கின்றனர். பல தடவை அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போகின்றது. தம்மிடம் வரும் அப்பாவி தமிழர்களை பணம் கறக்கும் காராம்பசுவாகவே வக்கீல்கள் கருதுகின்றனர். ஒரு வழக்கு வென்றாலும், தோற்றாலும் தனக்கு வருமானம், என்பதே பல வழக்கறிஞர்களின் நிலைப்பாடு. கரிசனையுடன் வழக்காடும் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் ஏனோ, தானோ என்றே நடந்து கொள்கின்றனர். இதயசுத்தியுடன் நேர்மையாக தொழில் செய்பவர்கள் பாடுபட்டாலும் பலன் கிடைக்காதது வேறு விஷயம்.

தஞ்சம் கோரும் அகதிகளின் வழக்குச் செலவுகளை அரசு பொறுப்பேற்கிறது. பிரிட்டிஷ் அகதிகள் தொடர்பான சட்டம் வழங்கும் மனிதாபிமான சலுகைகளை பல தமிழ் அகதிகள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. லண்டன் வந்தவுடன் உறவினர், நண்பர்களுடன் தங்கிக் கொள்வது காரணமாக இருக்கலாம். "முதலாவது தலைமுறையை" சேர்ந்த அவர்களது உறவினர்களும் வந்தவுடன் வேலை தேடுவதிலேயே குறியாக இருந்திருப்பார்கள். தமது சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்திருக்காது. பெரும்பாலான தமிழர்களின் அறியாமையை பல தமிழ் வக்கீல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒரு அகதியின் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு ஆகும் செலவை அரசே கொடுக்கின்றது. பிரிட்டனில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான அரச நிதியில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகின்றது. பொதுவாகவே பணக்கார வாடிக்கையாளரை வைத்துக் கொள்ளுமளவு அதிர்ஷ்டமற்ற வக்கீல்களும், புதிதாக தொழில் முனைவோருமே அகதிகளுக்காக ஆஜராகின்றனர். இதனால் அப்படியானவர்களை ஊக்குவிக்கவும் சட்ட செலவுகளுக்கான அரச மானியம் பயன்படுகின்றது. ஆனால் எனக்கு பல அகதிகள் கூறிய கதைகள் திடுக்கிட வைத்தன. ஒரு பக்கம் வழக்குக்கு அரச நிதியை பெற்றுக் கொண்டே, மறு பக்கம் அகதியிடம் இருந்தும் குறைந்தது ஆயிரம் பவுனாவது அறவிட்டுள்ளனர். எப்பாடு பட்டாவது பிரிட்டனில் தங்குவதற்கு விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகதிகளும் இரவாய்ப், பகலாய் பாடுபட்டு உழைத்த பணத்தை வக்கீலிடம் கொட்டுகின்றனர். அப்படி பணத்தை வாரியிறைத்து, எதுவும் கிடைக்காது ஏமாந்த அகதிகள் பலர்.

பிரிட்டனில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் இருந்த போதிலும், தமிழர்கள் லண்டனை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பார்த்த அளவில் பிரிட்டன் வரும் பன்னாட்டு அகதிகள், அரசு வழங்கும் சமூக நலன் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டு, முகாம்களில் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பிரிட்டன் முழுவதும் காணப்படும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். எங்கேயோ தொலை தூரத்தில், ஸ்கொட்லாந்து மலைகளில் கூட இந்த முகாம்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு அரிது. மேலும் லண்டனில் வசிக்கும் உறவினர்களிடம் வருவதென்றால் நீண்ட நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். இன்னோரன்ன காரணங்களால் தமிழ் அகதிகள் அரச செலவில் முகாம்களில் இருக்க விரும்புவதில்லை. லண்டனில் ஒரு முகவரியை எடுத்துக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கி விடுகின்றனர்.

லண்டனில் தங்க விரும்புவதற்கு வேலை வாய்ப்பு மட்டும் காரணமல்ல. லண்டனில் வாழ்வதற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை. தாய்மொழியான தமிழிலேயே அனைத்துக் கருமங்களையும் ஆற்ற முடியும். தமிழ்க் கடையில் வேலை செய்வதற்கு தமிழ் தெரிந்தால் போதும். சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நோய் வாய்ப்பட்டால் தமிழ் வைத்தியர்கள் இருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்க தமிழ் தொலைக்காட்சி இருக்கிறது. அரட்டை அடிக்க தமிழ் வீட்டுக்கு பக்கத்திலே தமிழ் நண்பர்கள் வசிக்கிறார்கள். அப்படியும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? தமிழ்க் கோயில்கள் இருக்கின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முன்னோர்கள் கூறிவிட்டார்களாம். அதனால் கோயில் இல்லாத லண்டனுக்கு வந்த தமிழர்கள், தமது இஷ்ட தெய்வங்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். லண்டனில் ஏற்கனவே வட இந்தியர்கள் கட்டிய இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபடலாம், என்று யாருக்கும் தோன்றவில்லை. தென்னிந்திய கட்டிடக்கலையில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் மட்டுமே, தமிழ் இந்துக்கள் முக்தி பேறடைவார்கள் என்றொரு ஐதீகம் போலும். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் செறிந்து வாழும் டூட்டிங், ஈஸ்ட்ஹாம், வெம்பிளி போன்ற புற நகர்களில் பத்துக்கும் குறையாத இந்து-தமிழ் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கட்டினால் மட்டும் போதுமா? அக்கம் பக்கம் இருக்கும் வெள்ளையருக்கும், பிற இனத்தவர்களுக்கும் நமது மத கலாச்சாரத்தை அறிமுகப் படுத்த வேண்டாமா? லண்டன் தெருக்களில் தேர் இழுக்கும் ஊர்வலம் அனைவரையும் ஈர்க்கும்.

ஒரு இடத்தில் ஒரு கோயில் மட்டும் இருந்தால் போதுமா? சிவன் கோயில் இருந்தால், அதற்குப் போட்டியாக அம்மன் கோயில் வரும். ஏற்கனவே இரண்டும் இருக்கிறதா? புதிதாக முருகன் கோயில் கட்டப்படும். நல்ல வேளை, இந்து மதத்தில் தெய்வங்களுக்கு குறைவில்லை. எந்தத் தெய்வத்திடம் போனால் கூடுதல் அருள் கிடைக்கும் என்று தெரியாமல் பக்தர்கள் திண்டாடுகிறார்கள். பக்தர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மூலஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் இருந்தால், அதை சுற்றி பிற தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். மறக்காமல் எல்லா தெய்வங்களுக்கும் முன்னால் ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்கள். உண்டியலுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய அறிவிப்பு. "நீங்கள் போடும் பணத்திற்கு அரசிடம் வரிச் சலுகை பெற வேண்டுமா? இந்தப் படிவத்தை நிரப்புங்கள்."

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :

1. லண்டன் உங்களை வரவேற்கின்றது!
2.உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்
3.பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்

Saturday, April 03, 2010

உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - இரண்டாம் பகுதி)
"Londinium" என்று ரோமர்கள் வைத்த பெயர், இன்று லண்டனாக திரிபடைந்து உலகப் பெரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இங்கிலாந்து என்று அறியப்படும் பிரதேசத்தை கைப்பற்றிய ரோமர்கள், அதை பாதுகாக்க ஜெர்மன் இனக்குழுக்களை குடியேற வைத்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் உருவான பண்டைய ஆங்கிலேய (ஜெர்மன் இனக்குழு ஒன்றின் பெயர்) குடியேற்றங்களில் ஒன்று "ஸ்டேனா" (கல் என்ற அர்த்தம் வரும் பழைய ஆங்கிலச் சொல்.)

இன்று அந்த இடம் ஹீத்ரூ விமான நிலையம் அருகில், லண்டன் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனது தற்காலிக வதிவிடமாக அமைந்தது. வெளிநாட்டவர்களால் நிரம்பி வழியும் லண்டன் புறநகர்ப் பகுதிகளைப் போலன்றி, வெள்ளயினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. அங்கிருந்து சில மைல் தொலைவில் "வின்சர் கோட்டை" அமைந்துள்ளது. இன்று பிரபல சுற்றுலாத் தலமாக இருந்த போதிலும், வின்சர் கோட்டை பெறுமதி மிக்க அரச வம்ச சொத்துகளில் ஒன்று.

நான் குறிப்பிடும் சுற்று வட்டாரத்தில், உலகை மாற்றிய மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிற நாடுகளைப் போல லண்டனிலும் அரசன் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருந்தன. அரசனுக்கு அடுத்ததாக அரசியல் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்கள், அரச அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடினார்கள். இந்த இரண்டு அதிகார மையங்களும் இறுதியில் "மக்னா கார்ட்டா" என்ற பெயரிலான ஒப்பந்தம் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். பிற்காலத்தில் வந்த அரச அமைப்பு சட்டங்களின் முன்னோடியாக, மக்னா கார்ட்டா கருதப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட இடத்தில் தற்போது ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வின்சர் கோட்டை செல்லும் வழியில், அந்த ஹோட்டலில் தங்கி உணவருந்தி விட்டு செல்வது வழக்கம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், குறைந்தது இருபது தமிழர்களாவது வேலை செய்கின்றனர். அவர்களோடு ஒரு சில சிங்கள இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஹோட்டல் அறைகளை சுத்தமாக்குவது, சமையலறையில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, போலந்து நாட்டுக்காரர்கள் சமையல் உதவியாளராகவும், உணவு உபசாரகர்களாகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் இடமாக, ஹோட்டலின் மையப் பகுதியான சமையலறை உள்ளது. எனக்கும் அவ்விடத்தில் ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருபதுக்குமதிகமான தமிழர்கள் வருடக்கணக்காக வேலை செய்து கொண்டிருப்பதால், அங்கே ஆங்கிலத்துக்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது! ஹோட்டலில் பணி புரியும் வேற்றினத்தவர்களும், தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் சிரத்தையோடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேமதுரத் தமிழோசை லண்டனிலும் ஒலிக்கின்றது. தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் 18 ல் இருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள். வேறு எங்கேயும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை என்பதால், ரெஸ்டாரன்ட் வேலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் அண்மைக்கால போலிஸ் கெடுபிடி காரணமாக, அப்படியானவர்களை வைத்திருக்க தொழில் வழங்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை கவரும் மேற்கு ஐரோப்பிய நகரங்களில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரன்ட் தொழிற்துறை யாவும் வெளிநாட்டுத் தொழிலாளரின் உழைப்பில் தங்கி இருக்கின்றன. லண்டனும் அதற்கு விதிவிலக்கல்ல. வேலை தேடித்தரும் முகவர்களும் இடைத்தரகர்களாக தொழில் சந்தையில் குதித்துள்ளனர். பிற வணிக நிறுவனங்களைப் போல உணவு விடுதிகளும் தமக்கு தேவையான தொழிலாளருக்கு முகவர்களை நாடுகின்றன. பெரும்பாலும் அந்நாட்டு வெள்ளையர்களே நடத்தும் முகவர் நிலையங்கள் தெற்காசிய சமூகங்களுக்குள் ஊடுருவ முடிவதில்லை. மொழிப்பிரச்சினை, சரியான தொடர்புகள் இன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அந்தந்த சமூகங்களை சேர்ந்த முகவர்களை நாடுகின்றனர்.

இங்கிலாந்துக்கு புதிதாக வரும் சீனர்களை, சீன உணவுவிடுதிகளில் அடிமை வேலைகளில் ஈடுபடுத்தும் சீன மாபியாக்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அக்கறை காட்டுகின்றன. மாபியா ஆட்கடத்தல்காரர்கள், சீனாவில் இருந்து கிளம்ப பயணச் செலவுக்கு லட்சக்கணக்கில் கடனாக அள்ளிக் கொடுப்பார். பின்னர் ஏதாவதொரு லண்டன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்து, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி அறவிடுகின்றனர். கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலையில் இருந்த இந்தியத் தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவரின் பிரயாணத்திற்கு ஒழுங்கு செய்த ஆட்கடத்தல்கார கும்பல், ஈஸ்ட்ஹமில் (லண்டன் புறநகர்) தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்திருந்தது. ஊரில் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அந்த நபர், வருடக்கணக்காக வேலை செய்து கடனை அடைக்க வேண்டும். இந்த எழுதாத சட்டத்தை மீறி எங்கே தப்பி ஓடினாலும், எப்படி பிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

மாபியாக்களைப் போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தா விட்டாலும், அவர்களின் உழைப்பை சட்டபூர்வமாக சுரண்டும் முகவர்களும் இருக்கிறார்கள். அநேகமாக மதிப்பு மிக்க பிரிட்டிஷ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட் நிர்வாகங்கள் சட்டபூர்வ முகவர்களின் உதவியை நாடுகின்றன. ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு காசு என்று, மனிதர்களுக்கு விலை பேசுகின்றன. குறைந்த விலைக்கு ஆள் பிடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யும், தெற்காசிய சமூகத்தை சேர்ந்த முகவர் ஒருவர், தனது இனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றார். இதனால் தொழிலாளர் நல காப்புறுதிகளை கட்டாமல் நிறுவனங்கள் மிச்சம் பிடிக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் செலவினம் சம்பளமாக கருதப்படாமல், வெளியாரின் சேவைக்கு வழங்கப்பட்ட விலையாக கருதப்படுவதால், வரிச் சலுகை கிடைக்கிறது.

தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவர் எந்த அளவு குறைந்த டெண்டருக்கு எடுத்திருந்தாலும், ஒரு தலைக்கான விலை, எப்படியும் அடிப்படை சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். வெள்ளையின ஆங்கிலேய முகவர்கள் நடத்தும் நிலையங்களைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எப்படியும் சராசரி சம்பள தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே பணம் கிடைக்கிறது. வேலை நேரம், ஓவர் டைம் எல்லாவற்றையும் சரியாக கணித்துக் கொள்கின்றனர். தமது தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் அல்லது ஆசிய முகவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தொழிலாளிக்கு ஒரு கணக்கும், ஹோட்டலுக்கு இன்னொரு கணக்கும், அரசாங்கத்திற்கு வேறொரு கணக்கும் காட்டுகின்றனர்.

பிரிட்டனில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் ஒன்றை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஒருவர் என்ன வேலை செய்தாலும், மணித்தியாலம் 5.80 பவுன் கூலி கொடுக்க வேண்டும் என்பது அரசு போட்ட சட்டம். அது கூட ஒரு சராசரி வாழ்க்கை செலவுக்கு தேவையானதை விட குறைவாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதலாளி அதற்கு குறைவான சம்பளத்தை பதிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெள்ளையின முதலாளிகளே, பெரும்பாலும் ஒப்பந்தப் படி பேசிய கூலியை கொடுக்கின்றனர். தமிழ் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தும் தமிழ் முதலாளியோ, அல்லது முகவரோ தாமாகவே ஒரு சந்தை விலையை தீர்மானிக்கின்றனர்.

ஒரு மணி நேர உழைப்புக்கு நான்கு பவுன் என்பது, தமிழரின் உழைப்புக்கு தமிழ் முதலாளிகள் நிர்ணயிக்கும் சராசரி விலை. (சில இடங்களில் மூன்று பவுன் கொடுக்கிறார்கள்.) கவனிக்கவும்: சட்டப்படி ஒப்பந்தம் செய்தாலும் அதிலே 5.80 பவுன்கள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கையில் கொடுப்பது 4 பவுன். இதனால் ஒரு அப்பாவி தொழிலாளியின் 1.80 பவுன் பெறுமதியான உழைப்பை திருடுகின்றனர். நான் சென்று பார்த்த ஹோட்டலில் எடுத்த அண்ணளவான கணிப்பின் படி, மாதம் 7500 பவுன்கள் இவ்வாறு ஒரு முகவரின் பைக்குள் செல்கின்றது. விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதையே சம்பளமாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மாணவர்கள் போன்ற, தொழில் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமானது. பலர் இந்த திருட்டை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆயினும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், போட்டியும் அவர்களின் வாயை மூட வைக்கிறது.

மணித்தியாலம் 4 பவுனுக்கு வேலை செய்வதால், மாத முடிவில் சொற்ப தொகையே சம்பளமாகக் கிடைக்கிறது. (அதைக் கூட மாத முடிவில் கொடுப்பதில்லை. இரண்டாவது மாதமே கிடைக்கிறது.) இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "ஓவர் டைம்" வேலை செய்கிறனர். பிரிட்டிஷ் சட்டப்படி, மேலதிக வேலை நேரத்திற்கு உரிமையான பிரத்தியேக கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. (ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து விடுகின்றது.) நான் அவதானித்த அளவில், ஒரு தொழிலாளி சராசரி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார். ஹோட்டல்களில் "ஷிப்ட்" முறை உள்ளதால், அட்டவணைப் படி ஓய்வு நாள் கிடைக்கிறது. ஆனால் கடைகளில் சிப்பந்திகளாக பணியாற்றுபவர்கள் தினசரி வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

இலங்கை, இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பலர், காணியை, நகையை அடவு வைத்து கடன் எடுத்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. கடனை அடைக்க வேண்டுமென்றால், உழைப்புச் சுரண்டலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கையறு நிலையை தமிழ் முதலாளிகளும், முகவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்பாவிகளின் உழைப்பை சுரண்டி, லண்டனில் வசதியான வீடு, மெர்செடெஸ் கார் என்று வாங்கித் தள்ளுகின்றனர். இறுதியில் தமிழ் தொழிலாளர்களின் உழைப்பு உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது.

(தொடரும்)

இந்த தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
லண்டன் உங்களை வரவேற்கிறது!

Thursday, April 01, 2010

லண்டன் உங்களை வரவேற்கிறது!

"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்." பாட்டி காலத்து பழமொழியில் வரும் "சீமை" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், "என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.

அடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.
நான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி "செட்டில்" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.

லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. "யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?" என்ன செய்வது? எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது!

நீண்ட காலமாக பிரிட்டனில் "உலகில் சிறந்த சுதந்திர சமூகம்" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். "தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் "இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.

பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. "நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?", "பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா?" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.

கனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, "நான் உழைப்பால் உயர்ந்தவன்" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் "புண்ணியாத்மாக்கள்" பலர் உண்டு.

(தொடரும்)

Wednesday, March 12, 2008

மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.

மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை நகர்த்தியது. இன்று உல்லாச பிரயாணிகளை கவர்ந்திளுக்கும் மொரோக்கோ, fes என்ற நகருக்கு அடுத்தாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மரகேஷ் உல்லாச பிரயாணிகளின் சொர்க்கபுரியக்கி வருகின்றது. இதனால் வருடம் தோறும் வந்திறங்கும் உல்லாச பிரயனிகளுக்காக இன்றைக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப் பட்டு வருகின்றன. மரகேஷ் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, அரச மாளிகை, பள்ளி வாசல்கள், குடியிருப்புகள், அதை சுற்றி கட்டப்பட்ட பாதுகாப்பு மதில் என்பன; பழைய நகரம் எப்படியிருந்திருக்கும் என்று நாம் இப்போதும் நேரே பார்க்கலாம். பழைய நகரத்தின் மதில் சுவருக்கு வெளியே புதிய நகரம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாவனை பொருட்கள் வாங்க கூடிய கடைகள் , அதை மொய்க்கும் இளைஞர் பட்டாளம் என்று இந்த புதிய நகரம் ஒரு சராசரி நவீன நகரமாக காட்சி தருகின்றது. வசதி படைத்தவர்கள் புதியநகரதிலும், வறிய மக்கள் பழைய நகரதிலுமாக மரகேஷ் இரண்டாக பிரிந்துள்ளது.

மொரோக்கோ பல முரண்பாடுகளின் தாயகம். மரகேஷ் நகரில் இருந்து கிழக்கு நோக்கி நூறு கி.மி. சென்றால் பனி படர்ந்த மலைதொடர்கள், மேற்கு நோக்கி நூறு கி.மி. பயணித்தல் அழகிய கடற்கரைகள். தெற்கு நோக்கி இன்னும் சில நூறு கி.மி. பயணம் செய்தல் சஹாரா பாலைவனம். இப்படி நில அமைப்பு மட்டும் மாறவில்லை. மரகேஷ் மொரோக்கோ நாட்டின் மத்தியில் இருப்பதால், அதில் இருந்து மேற்கு, கிழக்கு என்று இரண்டு பிரதேசமாக பிரித்து பார்த்தல் இன,மொழி, பொருளாதார வேற்றுமைகளை கவனிக்கலாம். அட்லாண்டிக் கடலோரம் உள்ள மேற்கு பிரதேசம் அதிவேகமாக நகரமயமாக்க பட்டுள்ளது. தலைநகர் ராபர்ட், வர்த்தக மையம் காசபிலங்கா போன்ற மக்கள் பெருக்கம் கூடிய நவீன நகரங்கள் யாவும் மேற்கு மொரோக்கோவில் உள்ளன. எதிர்பார்த்து போலே பணக்காரர்களும், வசதி படைதோருமான மத்தியதர வர்க்கம் நகரமயமகியுள்ள மேற்குபுறம் தான் காணலாம். இவர்களில் பெரும்பான்மையானோர் அரபு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். படித்தவர்கள் பிரென்ச் காலனி கால பாதிப்பினால், இன்றும் தமக்குள் பிரென்ச் மொழியில் பேசிக்கொள்வது சர்வ சாதாரணம்.

இனி மரகேஷின் கிழக்கு பிரதேசத்தை பார்ப்போம். பெரும்பாலான வறிய மக்கள் அட்லஸ் மலை தொடரை சேர்ந்த கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெர்பர்கள் என்று அழைக்க படுகின்றனர். அவர்களில் பெரும்பன்மயனோருக்கு இன்றும் அரபு மொழி தெரியாது. (ஆனால் அரபு மொழி ஆதிக்கம் காரணமாக, அவர்களது மொழி அடக்கப் பட்டு வந்தது) அரபியர்கள் அவர்களை பெர்பர்கள்(காட்டுமிராண்டி என பொருள்படும் கிரேக்க சொல்) என்று அழைத்தாலும், அவர்கள் தங்களை தமஷிக் என்றும், தங்கள் மொழியை அமஜிக் என்றும் அழைக்கின்றனர். அந்த மொழிக்கென்று வேறுபட்ட எழுது வடிவமும் உண்டு. அந்த மொழியும் தரப்படுத்த படாமல், பிரதேச வேறுபாடுகளை கொண்ட பேச்சு மொழியாக மட்டுமே இன்றுள்ளது. மொரோக்கோ அரசாங்கம் பெர்பர் மக்களை புறக்கணிப்பதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். பலர் வேலை தேடி நகரங்களுக்கு சென்று அங்கேயே குடியேறி அரபியரக மாறி விடுகின்றனர். இதனால் மொரோக்கோவில் தூய அரபியர்கள் மிக குறைந்த வீதத்திலும், அரபியரக மாறிய பெர்பர்கள் குறைந்தது ஐன்பது வீதமகிலும் காணப்டுகின்றனர். மொத்த சனத்தொகையில் பெர்பர்கள் நாற்பது வீதமகிலும் இருக்கலாம்.

பெர்பர்களின் கிராமங்களை அடுத்து "ஹரடீம்" என்ற இன மக்களின் குடியிருப்புக்கள் கானபடுகின்றன. இவர்கள் பெர்பர் மொழி பேசினாலும், கருப்பு நிற தோல் வேற்றினதவர்களாக வித்தியாசம் காட்டுகின்றது. இவர்களும் அரசாங்கத்தால் புறக்கணிக்க பட்டு பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். இந்த கருபினதவரின் முன்னோர்கள் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. ஹரடீம் மக்களின் கர்ணபரம்பரை கதைகளில் ஒன்று, அவர்கள் தான் மொரோக்கோவின் பூர்வீக குடிகள் என்றும், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறிய வெள்ளை நிற பெர்பர்கள், தம்மை அடிமைப் படுத்தி விட்டனர் என்றும் கூறுகின்றனர். பிரெஞ்சு காலனி காலம் வரை ஹரடீம் மக்கள், பெர்பர்களுக்கு சேவை செய்யும் சாதி அடிமைகளாக இருந்தனர். பின்னர் மாற்றமடைந்த நவீன மொரோக்கோவில், படித்து விட்டு உத்தியோகம் பார்த்தும், வர்த்தகம் செய்தும், அல்லது வெளிநாடு போய் உழைத்தோ தமது குடும்பங்களை முன்னேற்றினர். ஹரடீம் மக்கள் மூர் சக்கரவர்த்தியினால் பிற ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இராணுவதிற்காக சேர்க்கப்பட்ட வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சரித்திரம் கூறுகின்றது. நீண்ட காலமாக இந்த கறுப்பின படை சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான சிறப்பு படையணியாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இன மக்கள் அனைவரையும் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே ஒன்று சேர்கின்றது. இதை விட கணிசமான அளவு யூதர்களும் மொரோக்கோவில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் கூட பல்வேறு வர்த்தக துறைகளில் ஈடுபட்டும், பெரிய பதவிகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர். காலங்காலமாக அரபு மக்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தாலும், இஸ்ரேலின் தோற்றம் மொரோக்கோ யூதர்களையும் புலம்பெயர வைத்தது.

இஸ்லாம் கூட இரு வேறு போக்குகளை கொண்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியபடும் "லிபரல் இஸ்லாம்" மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குகின்றது. இதனால் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தோர் ஐரோப்பிய பாணி உடை உடுத்துவதையும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவத்தையும் காணலாம். நகரங்களில் முக்காடு போட்ட பெண்களை பார்ப்பது அரிது. இதற்கு மாறாக கிராமங்களில் வாழும் பெண்கள் மத நம்பிக்கை காரணமாகவோ, சம்பிரதாயம் காரணமாகவோ கலாச்சார ரீதியாக வித்தியாச படுகின்றனர். கிராமங்களில் மத அடிப்படை வாத சக்திகள் மக்களை வென்றெடுக்க பார்கின்றன. இந்த சக்திகள் அரசாங்கத்தால் தடை செய்ய பட்டு, கடுமையாக அடக்கப் பட்டாலும் இவர்களின் செல்வாக்கு கிராம மக்கள் மத்தியில் பெருகி வருகின்றது. இதற்கு அவர்களின் வறுமை, பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணிகள். இதனை என்னோடு கதைத்த சில மத்தியதர வர்க்க மொரோகொகாரர்கள் ஏற்று கொள்கின்றனர்.

மொரோக்கோவில் இப்போதும் மன்னர் தலைமையில் சர்வாதிகாரம் கோலோச்சுகின்றது. மக்கள் தமக்கு முன்னால் நடக்கும் போலிஸ் அத்துமீறல்களை, அதிகாரிகளின் ஊழல்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். "நாம் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து மக்களுக்கும், மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கி தன்னிறைவு காண்போம்." இந்த வாசகங்களை மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கூறி வருகின்றன. ஆனால் அவர்கள் கூறும் தன்னிறைவு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எங்கும் எதற்கும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியமாகும் என்ற நிலைமையால், வறிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மொரோக்கோ பற்றிய கலாச்சார, அரசியல் குறிப்புகளை இத்துடன் நிறுத்தி கொண்டு, நான் சென்று வந்த இடங்களை அறிமுகப் படுத்துகிறேன்.

மரகேஷில் இருந்து அட்லஸ் மலைபிரதேசங்களுக்கு போய் வரும் சுற்றுலக்களே அதிகம். உவாஸர்ஸட் என்ற பண்டைய பெர்பர் நகரம் unesco கலாச்சார பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களிமண்ணும், வைகோலும் கலந்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட அழகிய நகரம் அது. சிறுவர்களின் மாயஜால கதைகளில் வரும் நகரங்களை போலே காட்சியளிக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கை, மனித அழிவுகளுக்கு உட்படாமல் கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றன அந்த செந்நிற கட்டிடங்கள். உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் உவஸர்ஸட் ஒன்றென்றால் அது மிகையாகாது. அந்த நகரின் அருகில் மிகப்பெரிய சினிமா studio ஒன்று உள்ளது. உவசர்சட் வாசிகள் அநேகர் அந்த ஸ்டூடியோவில் தான் வேலை செய்கின்றனர். Ben Hur போன்ற காவியம் படைத்த ஹோலிவூட் திரைப்படங்கள் பல அங்கே தான் தயாரிக்கப் பட்டன. தற்போதும் அமெரிக்கா, ஐரோப்பிய சினிமா தயாரிப்பாளர்களை கவர்ந்திளுகிறது. மலை, பாலைவனம், எகிப்தில் இருப்பது போன்ற செட் போன்ற இன்னோரன்ன விஷயங்களால், அது உலகில் தனித்தன்மை வாய்ந்த ஸ்டூடியோ என்று சொல்லலாம்.

உவசர்சட் நகரம் ஒருகாலத்தில் சஹாரா வாணிபம் காரணமாக செல்வ செழிப்புடன் இருந்தது. இப்போது உள்ளது போல நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. சஹாரா பாலைவனத்திற்கு மறுபக்கம் இருக்கும் நாடோடி மக்கள் அல்லது வணிகர்கள், உற்பத்தி பொருட்களையும், தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களையும் ஒட்டகங்கள் மீதேற்றி ஊர்வலமாக மொரோக்கோ நோக்கி போய் விற்று விட்டு, வேறு பாவனை பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பி வருவார்கள். இந்த வர்த்தக போக்குவரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவும், இடையிலே இருக்கும் நகரங்களில் தங்கி செல்லவுமென, குறுநில மன்னர்களுக்கு கப்பம் செலுத்துவது வழமை. உவசர்சட் பிரதேசத்தை ஆண்ட மன்னன் மட்டுமல்ல, முழு நகரமும், அவ்வாறு இந்த வர்த்தக போக்குவரத்தால் லாபமடைந்தனர். இன்று அதெல்லாம் பழைய கதை.

அட்லஸ் மலை பிரதேச சுற்றுலவிற்குள், அழகிய நீர் வீழ்ச்சியோன்றிற்கு கூட்டி போகின்றனர். ஆபத்தான மலை உச்சிக்கு, ஒடுக்கமான பாதையூடாக போய் வருவது ஒரு த்ரிலான அனுபவம். அதே சுற்றுலவிற்குள் பெர்பர் குடியிருபொன்றை கூட்டிப்போய் காட்டுகின்றனர். அவர்களது வீடு மட்டுமல்ல சில கைப்பணி பொருட்களை செய்யும் இடங்களையும் பார்க்கலாம். இப்படியான சுற்றுலாக்களில் சிலர் வர்த்தக ரீதியாக, உள்ளூரில் உற்பத்தி செய்த எண்ணை, வாசனை திரவியங்கள், கம்பளம் போன்ற பொருட்களை வாங்க சொல்லி எதிர்பார்ப்பதும் நடக்கின்றது. மேலும் உல்லாச பிரயாணிகள் என்றால் அதிக விலை கேட்பார்கள். இப்படி வெளிநாட்டு பயணிகளை ஏமாற்றுவதில் நகரங்களில், டாக்ஸி ஓட்டுனர்களை யாரும் மிஞ்ச முடியாது. இரண்டு கி.மி. போகும் தூரத்திகும் மூன்று மடங்கு விலை கேட்பார்கள். மீட்டர் போட்டால் உள்ள விலை தெரிந்து விடும் என்று போட மறுப்பார்கள். இந்த டாக்ஸி காரர்கள் தங்களை ஏற்றுவதை விட, வெளிநாட்டு பயணிகளை ஏற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக மரகேஷ் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

எனது விடுமுறை முடிவதற்கு சிறிது நாட்களே இருந்த போது, எசயூரா என்ற கடற்கரை பட்டணம் போய் வந்தேன். மொரோக்கோ மக்கள் கூட தமது விதிமுறையை கழிக்க எசயூரா போவது வழக்கம். கருங்கட் பாறைகளை கொண்ட கடற்கரை, அதனருகே கைவிடப் பட்ட போர்த்துகீசிய கோட்டை, கடலுக்குள் போக காத்திருக்கும் மீன்பிடி வள்ளங்கள், வெப்பமான நாட்களிலும் வீசும் தென்றல் காற்று என்று மனோரம்மியமான இடமானதல், வெளிநாட்டு பயணிகளை மட்டுமல்ல, உள்நாட்டு பயணிகளையும் கவர்வதில் வியப்பில்லை.

மரகேஷில் இருந்து கடுகதி ரயில் சேவை காசபிலங்க நகரை இணைகின்றது. காசபிலங்காவிற்கு வர்த்தக நோக்கத்தோடு வருபவர்கள் தான் அதிகம். இருப்பினும் ஹசன் மசூதி மூர்களின் கட்டிடகலையின் நவீன வடிவத்திற்கு சான்று. பிரமாண்டமாக கடற்கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மசூதியை பார்க்க வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் வருகின்றனர். உலகிலேயே (அல்லது வட-ஆப்பிரிக்காவில்) மிகப் பெரிய பள்ளி வாசல் என்று, அரசாங்கத்தால் விளம்பரம் செய்ய படுகின்றது. காலம்சென்ற முன்னால் மன்னன் ஹசன் பெயரில் கட்டப் பட்டுள்ள இந்த பள்ளி வாசல் மில்லியன் டாலர் பணத்தை விரயமாக்கியிருக்கிறது. இதற்கு அனைத்து மொரோக்கோ மக்களிடமும், ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி, பணம் வசூலிக்கப் பட்டது. வர்த்தக நிலையங்கள் நிதியுதவி செய்து பெற்றுக்கொண்ட மசூதியின் படத்தை வைதிருக்கா விட்டால், அவர்களது லைசென்ஸ் மறுக்கப்பட்டது. மன்னர் குடும்பம், என்னதான் இந்த மசூதியினால் பேர் எடுக்க விரும்பினாலும், சாதரண மொரோக்கோ மக்கள் இது தேவையா என்று கேட்கின்றனர். மொத்த சனத்தொகையில் அரைவாசி மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு நாட்டில், இப்படி கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து மசூதி கட்டவில்லை என்று யார் அழுதார்கள்? உலகமெங்கும் ஆளும் வர்க்கம் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். மக்களிடம் சுரண்டி சேர்க்கும் பணத்தில், தங்களுக்கு மாளிகைகளும், இறைவனுக்கு ஆலயங்களும் (கடவுளுக்கே லஞ்சம்?) கட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு தொழில் புரியும் மொரோக்கோ நண்பர் கூறிய வாசகங்கள், அந்நாட்டு அரசியல், பொருளாதார நிலைமையை ஒரு வரியில் சொல்ல போதும். "எமது நாட்டிலும் ஜன நாயக முறையில் தேர்தல்கள் நடக்கும். நான்கு வருடத்திற்கு ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். ஆயியம் கட்சியில் இருப்போர் முடிந்த அளவுக்கு திருடிக் கொண்டு செல்வார்கள். பிறகு அடுத்த தேர்தலில் அடுத்த கட்சி தங்கள் பங்குக்கு திருடுவார்கள். இன்றைக்கும் எமது நாட்டில் ஒரே ஒருவர் மட்டும் நிரந்தரமாக திருடிக் கொண்டே இருக்கிறார். அது தான் மன்னர்! "

வெளிநாடுகளில் இருந்து மொரோக்கோ போகும் உல்லாச பிரயாணிகள், இவை எதை பற்றியும் கவலைப்படாமல் தமது பொழுதை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். எது எப்படியிருந்தாலும் மொரோக்கோ மேற்குலக நட்பு நாடல்லவா? அதனால் அலம் இருண்ட மறுபக்கத்தை கண்டு கொள்வதில்லை. ஒரு விவசாய நாடான மொரோகோ, அதனை அபிவிருத்தி செய்யாமல், உல்லாச பிரயான ஹோட்டல்கள் கட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றது. இதனால் உள்ளூர் தொழில்கள் நலிந்து போக, வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். உலகமயமாதலின் எதிர்வினை என்றும் அழைக்கப்படும் இந்த காட்சியை மொரோகோவிலும் பார்க்கலாம்.

Travel Blogs - Blog Catalog Blog Directory

_____________________________________________

கலையகம்