Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Monday, June 06, 2016

ஐரோப்பாவில் வேலையற்றோர் நவீன அடிமைகளாக சுரண்டப் படுகின்றனர்!


மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நலன்புரி அரசின் திட்டங்களில் ஒன்று, வேலையற்றவர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்கப் படுவது. வேலையிழந்தவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட காலம், முன்பு அவர்கள் கட்டி வந்த காப்புறுதிப் பணத்தில் இருந்து மாதாந்த உதவித் தொகை வழங்குவார்கள். தொடர்ந்தும் வேலையில்லாமல் இருந்தால், அரசு நிதியில் இருந்து பணம் கொடுப்பார்கள்.

இதைப் பற்றிக் கேள்விப் படும் பலர், "வேலைக்குப் போகாமல் சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள்..." என்று நினைக்கலாம். ஆனால், உண்மை நிலைமை அதுவல்ல. நீண்ட காலம் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடிய சீக்கிரமே ஏதாவதொரு வேலைக்கு அனுப்புவது தான் அரசின் நோக்கமாக இருக்கும். அதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் செய்வார்கள்.

அது மட்டுமல்ல, ஒருவரது முன்னைய தொழில் அனுபவம், கல்வித்தகைமை எப்படியானதாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த வேலையையும் ஏற்றுச் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் முன்பு மருத்துவராக அல்லது ஆசிரியராக வேலை செய்திருப்பார். அவருக்கு துப்பரவுப் பணி வேலை கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்த உதவித்தொகை வெட்டப் படும்.

குறைந்தது பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்னரான நிலைமை வேறு. அந்தக் காலங்களில் தனியார் நிறுவனங்களை விட, ஏராளமான அரசு நிறுவனங்களும் இருந்தன. ஆகையினால், தனியார் நிறுவனத்தில் தட்டிக் கழிக்கப் பட்ட ஒருவருக்கு அரசு நிறுவனத்தில் வேலை கொடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், கடந்த காலத்தில் அரசு தனது நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது அல்லது அரசு செலவினக் குறைப்பை சாட்டாக வைத்து மூடி விட்டது.

பாதுகாப்புப் படைகள், அரசு அலுவகங்களை தவிர, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் திட்டம் மெல்ல மெல்ல செயற்படுத்தப் பட்டு வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து விட்டன. அதனால் வேலையற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. தற்போதுள்ள பிரச்சினை என்னவெனில், பொருளாதாரம் வளர்வதாக சொல்லப் பட்டாலும், சாதாரண பொதுமக்கள் அதை உணரக் கூடியதாகவில்லை. தனியார் துறை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது.

இதனால் ஒரு பக்கம் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோர், வெளிநாட்டவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். எந்த முதலாளியும் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் வருடக் கணக்காக அரசு உதவித் தொகையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அரசு அவர்களை நவீன அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கின்றது!


நெதர்லாந்தில் நான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

வேலையற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் பொறுப்பேற்றுள்ள நகர சபை நிர்வாகம், அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்குவதில்லை. (வேலை வாய்ப்பு இருந்தால் தானே?) அதற்குப் பதிலாக "வேலை பழகும் நிலையங்களுக்கு" அனுப்புகின்றது. இந்தத் திட்டத்தை மேம்போக்காக பார்த்தால் தொழிற்கல்வி போன்று தோற்றமளிக்கும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

அதாவது, வேலை இல்லாதவர்கள் "தொழிற்கல்வி" படிப்பதற்கு பாடசாலைக்கு செல்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அங்கே எதையும் படிப்பதில்லை. மாறாக, வாரத்திற்கு 32 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் நீடிக்கலாம். ஆனால், நான் சந்தித்த சிலர் இரண்டு வருடங்களாக இலவச வேலை செய்கிறார்கள்.

"வேலை பயிலும் நிலையங்களிலும்" விருப்பமான தெரிவுகள் மிகவும் குறைவு. அனேகமாக, துப்பரவுப் பணி, உணவுச்சாலை (கேட்டரிங்) வேலை, தோட்ட வேலை, பொருள் உற்பத்தி போன்ற அடித்தட்டு தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் தான் கிடைக்கும். இதற்கு முன்னர் ஆசிரியராக, எஞ்சினியராக வேலை செய்திருந்தாலும், அவர் அடித்தட்டு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
கார்ட்டூன்: "தாழ்த்தப் படுதலுக்கு
அடங்கி வாழப்  பழகி விட்டோம்."

தொழிலகங்களுக்கு பொறுப்பாக ஒரு மனேஜர் இருப்பார். அவர் "வேலை பழகும் ஒப்பந்தம்" செய்வதவுடன் மறைந்து விடுவார். அதற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியாது. ஏதாவது தேவைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் கிடைக்க மாட்டார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டுவார். 

ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். "தவறுகளை" திருத்திக் கொள்வதற்கு இன்னொரு மாதம் சந்தர்ப்பம் தருவதாகவும், அதற்குப் பின்னரே வெளியில் சம்பளத்துடன் கூடிய வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் சொல்வார். ஆனால், எத்தனை மாதங்கள் சென்றாலும் அது மட்டும் நடக்காது. "ஒழுங்காக" வேலை செய்பவர்களுக்கும், அங்கே வேலை இருக்கிறது, இங்கே வேலை இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

தொழிலகங்களில் வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் இருப்பார்கள். உண்மையில் அங்கே அவர்கள் மட்டும் தான் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். ஏனையோர் எல்லோரும் இலவசமாக வேலை செய்யும் நவீன அடிமைகள்! ஒவ்வொரு வாரமும் புதிய புதிய அடிமைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேலைப்பளு, சுரண்டலை எதிர்க்க முடியாத கையாலாகத்தனம் காரணமாக, பலர் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுக்கின்றனர். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே வீட்டில் நிற்பதாக மனேஜர் குற்றம் சாட்டுவார்.

வேலையற்றவர்களின் உழைப்பை அரசு இலவசமாக சுரண்டுகின்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு தடவை நான் பூந் தோட்டம் ஒன்றில் வேலை செய்தேன். கூடாரங்களுக்குள் பூஞ் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். வளர்ந்த செடிகளை கொண்டு சென்று சந்தையில் விற்பார்கள். கடைகளில் பூஞ்செடிகளை வாங்கிச் சென்று வீடுகளில் அழகிற்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அடிமைகளின் உழைப்பால் உருவானது என்ற உண்மை தெரியாது.

நான் இன்னொரு தடவை கேன்டீன் ஒன்றில் கேட்டரிங் வேலை செய்தேன். தினசரி காலையில் சான்ட்விச் தயாரிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அந்த உணவுச் சாலைக்கு மதியம் சாப்பிட வரும் அத்தனை பேரும் நகர சபைக்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள்! நாங்கள் அங்கே சம்பளத்திற்கு வேலை செய்வதாக அவர்கள் அப்பாவித்தனமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அங்கே வைக்கப் பட்டிருக்கும் சான்ட்விச்களை அவர்கள் சாதாரண சந்தை விலைக்கே வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அந்த இடத்தில் சில நேரம் ஒன்றுகூடல்கள் நடக்கும். பெரிய பெரிய அரசு அதிகாரிகள் அங்கே சாப்பிட வருவார்கள். அங்குள்ள மண்டபத்தில் கூட்டங்கள் நடக்கும். சிலநேரம், வெளியாரும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருப்பார்கள். அவர்கள் தமக்கான கேட்டரிங் சேவைக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுவும் சந்தை மதிப்பின் படியே தீர்மானிக்கப் படுகின்றது. ஒன்று கூடல், கூட்டங்களுக்கு ஐம்பது பேர் சமூகமளித்தாலும், அவர்களுக்கான உணவை நாங்கள், அதாவது நவீன அடிமைகள் தான் தயார் படுத்த வேண்டும்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை என்றால், ஓய்வொழிச்சல் இல்லாத வேலையாக இருக்கும். அரை மணிநேர இடைவேளை உண்டு. அப்போது தான் சக தொழிலாளர்களுடன் (அடிமைகளுடன்) மனம் விட்டுப் பேசலாம். அங்குள்ள நிலைமை பற்றி யாரும் நல்லதாக பேச மாட்டார்கள். "கட்டாய வேலை வாங்குகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்...ஏமாற்றுகிறார்கள்..." இப்படிப் பல முறைப்பாடுகளை கேட்கலாம்.

கேட்டரிங் வேலை செய்பவர்களாக இருந்தாலும், விற்பனைக்கு வைக்கப் படும் சான்ட்விச் எதையும் எடுத்து சாப்பிட முடியாது. இறைச்சிப் பதார்த்தங்களை சாப்பிட முடியாது. விலை குறைந்த தரமற்ற பாண் (பிரெட்), பாவனை நாள் முடியும் நிலையில் உள்ள சீஸ், பால் இவற்றை மட்டும் உண்ணலாம்.

எல்லா தொழிலகங்களிலும், மதிய இடைவேளையின் போது மாத்திரம் தொலைபேசி பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை வேலைக்கு விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தால்? பிள்ளைக்கு சுகமில்லை என்று அழைப்பு வந்தால்? இந்தக் குறைகளை யாரிடம் சொல்வது? விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.

மேற்படி கட்டுப்பாடுகள் எல்லாம், இலவசமாக உழைக்கும் நவீன அடிமைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவர்களின் மேற்பார்வையாளர்கள், அதாவது சம்பளத்திற்கு வேலை செய்வோர், நிறைய சலுகைகளை அனுபவிப்பார்கள். அரை மணிநேரத்திற்கும் அதிகமாக, சிலநேரம் இரண்டு மணித்தியாலங்கள் உணவு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, காலையில் ஓரிரு மணிநேரம் வேலை செய்வதோடு சரி. அதற்குப் பிறகு அவர்களை காணக் கிடைக்காது. எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? யாருக்குத் தெரியும்?

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஏன் அடிமை வேலை செய்ய வேண்டும்? வேறு வழி? தனியார் துறை தவறு செய்தால் அரசிடம் முறையிடலாம். அரசே அந்த தவறை செய்தால்? யாரிடம் முறையிடுவது? அதனால் பலர் இதனை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கட்டாய வேலை செய்ய மறுத்தால், உதவித் தொகையை வெட்டி விடுவார்களே என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, அரச உதவித் தொகையில் தங்கி இருப்பவர்கள், அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மாதாந்தம் கிடைக்கும் சொற்பத் தொகை அன்றாட செலவுக்கே கட்டுப்படியாகாது. எப்படியும், வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கால்வாசி தொகை செலவாகிடும். அதையும் வெட்டிக் குறைத்தால் கடனாளியாக வேண்டியிருக்கும். தலைக்கு மேல் எவ்வளவு கடன் ஏறினாலும் அரசு அக்கறைப் படப் போவதில்லை. மீண்டும் கட்டாய வேலை வாங்கும் தொழிலகம் சென்று அவர்களது கட்டுப்பாடுகளுக்கு அடங்கி ஒழுங்காக வேலை செய்யச் சொல்வார்கள்.

உண்மையில் அரசால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் கொடுத்தாவது வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் செய்யப் போவதில்லை. 

வேலையற்றோரின் உழைப்பை இலவசமாக சுரண்டுவதால், அரசுக்குக் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாகும். உண்மையில், அரசு மில்லியன் கணக்கான யூரோக்களை அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து திருடியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் எழுதி உள்ளது. (பார்க்க: Gemeenten verdienen half miljoen aan 'dwangarbeid'http://www.gelderlander.nl/regio/achterhoek/aalten/gemeenten-verdienen-half-miljoen-aan-dwangarbeid-1.4879591

அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டப் பட்ட பணம் எங்கே போகின்றது? ஏன் அதில் ஒரு பகுதியாவது இலவசமாக உழைத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப் படுவதில்லை?

தொழிலகங்களில் சம்பளம் இல்லாத தொழிலாளர்களை வைத்திருந்து, இலவசமாக உழைப்பை சுரண்டுவதால் இரண்டு தரப்பினர் பாதிக்கப் படுகின்றனர். ஒன்று, அடிமை வேலை செய்யும் நபர் சம்பளத்துடன் வேலை செய்யும் தொழில் வாய்ப்பை இழக்கிறார். மற்றது, அப்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் இன்னொருவருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப் படுகின்றது. இதனால் நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லுமே தவிர குறையப் போவதில்லை.

சமீபத்தில் இந்தப் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ள FNV என்ற தொழிற்சங்கம், பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. கடதாசிப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகம் அமைந்துள்ள Aalten என்ற ஊரில் உள்ள நகர சபை அலுவகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். நகர சபைக்கு வெளியே, ஊடகவியலாளர்கள், ஊர் மக்களை கூட்டி, பொதுக் கூட்டம் நடத்தினார்கள். சோஷலிஸ்ட் கட்சி (SP) பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் (Sadet Karabult; https://twitter.com/sadetkarabulut?lang=nl) அங்கு வந்து உரையாற்றி, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் உடன்...  

நானும் FNV தொழிற்சங்க உறுப்பினர் என்ற படியால், தொடர்ச்சியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். ஏற்கனவே நான் வழங்கிய பல தகவல்கள், அதாவது இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பவை, பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் காதுக்கு எட்டியுள்ளன. அவர் பாராளுமன்றத்தின் உள்ளே இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Monday, March 05, 2012

முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

முற்குறிப்பு: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நெதர்லாந்து நாட்டில் தீவிரமான சோஷலிச அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சியர்கள் போன்று, அவர்களும் கம்யூனிச சமுதாயம் அமைப்பதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தம்மை அராஜகவாதிகள் (அரசு எதிர்ப்பாளர்கள்) என்று அழைத்துக் கொள்வதையே பெரிதும் விரும்பினார்கள். ஹெர்மன் ஸ்ஹியூர்மன் (Herman Schuurman) என்ற சோஷலிசப் புரட்சியாளர் எழுதி வெளியிட்ட (1924), "வேலை செய்வது குற்றம்" என்ற துண்டுப்பிரசுரம் அண்மையில் சில இடதுசாரி ஆர்வலர்களால் மறுபதிப்புச் செய்யப் பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது. நமது அன்புக்குரிய தோழர்கள், இத்தகைய வெளிவராத ஐரோப்பிய புரட்சிகர சிந்தனைகளை, தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
_______________________________________________________________


வேலை செய்வது குற்றம்
நமது மொழியில் வழமையாக பாவிக்கும் சொற்கள், சொற்பதங்கள் சில ஒழிக்கப் பட வேண்டும். ஏனென்றால், அந்தச் சொற்களின் உள்ளடக்கம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை அடிப்படியாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, வினைச் சொல்லான "வேலை செய்தல்", மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சொற்கள்": வேலை ஆள், வேலை நேரம், வேலைக்கான ஊதியம், வேலை நிறுத்தம், வேலையில்லாதவர், வேலை செய்யாதவர்.

வேலை செய்வது என்பது, இதுவரை மனித குலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து, அவமானம் ஆகும். முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பு, வேலை செய்தலை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் எனப்படும் இந்த அமைப்பு, வேலை செய்வதன் மேல் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனிதர்களின் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. மறு பக்கத்தில், வேலை செய்யாத மனிதர்களின் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும். "ஏனென்றால்", (உற்பத்தி சாதனங்களின்) உரிமையாளர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள்: "வேலை செய்யாதவர்கள், சாப்பிட மாட்டார்கள்." மேலும், இலாபத்தை கணக்கிடுவதும், பாதுகாப்பதும் கூட "வேலை" என்று தான் அவர்கள் கூறுகின்றார்கள்.

வேலையில்லாதவர்கள், வேலையே செய்யாதவர்கள் என்று இரண்டு வகை உண்டு. அகராதியில் அவற்றிற்கு என்ன அர்த்தம் எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். "வேலை செய்யாதவர்": வேலை இருந்தும் செய்ய மறுப்பவர். "வேலையில்லாதவர்": அவரது முயற்சிக்கு அப்பாற்பட்ட விதத்தில் வேலை செய்யும் வாய்ப்பற்றவர். வேலை செய்யாதவர்கள், சுரண்டல் காரர்கள், உழைப்பாளிகளின் உழைப்பில் வாழ்பவர்கள். வேலையில்லாதவர்கள் எனப்படுவோர் உழைக்கும் மக்கள், வேலை செய்யும் அனுமதி மறுக்கப் பட்டவர்கள், ஏனென்றால், அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்கள், உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை தீர்மானித்துள்ளனர். தொழில் செய்யும் இடங்களையும் நிறுவியுள்ளனர். உழைப்பாளிகள் பட்டினி கிடந்தது சாகாமல், உயிர் பிழைப்பதற்கு போதுமான அளவு கூலியைப் பெறுகின்றனர். அது அவர்களது பிள்ளைகளின் போஷாக்கை நிவர்த்தி செய்யக் கூட போதுமானதல்ல. பாடசாலை செல்லும் பிள்ளைகள், அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி படிக்கிறார்கள். தொழிலாளர்களை எவ்வாறு வேலை வாங்குவது என்று படிப்பதற்காக, முதலாளிகள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்.

வேலை செய்வது ஒரு சாபம். அது மனிதர்களை ஆன்மாவற்றவர்களாக, ஆத்மா அற்றவர்களாக்குகின்றது. வேலை செய்வதற்காக, ஒருவர் தனது அடையாளத்தையே இழக்கிறார். தவழுவது, சுத்துமாத்துகள் செய்வது, காட்டிக் கொடுப்பது, ஏமாற்றுவது, நேர்மையற்ற செயல் எல்லாவற்றையும் வேலைக்காக செய்கின்றீர்கள். உழைப்பாளிகளின் உழைப்பு, வேலை செய்யாத பணக்காரர்களுக்கு இலகுவான வாழ்க்கையை வழங்குகின்றது. உழைப்பாளிகளுக்கு அது ஒரு அவலத்தின் சுமை, பிறப்பிலிருந்து தொடரும் கெட்ட தலைவிதி. அது உழைப்பாளிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையை தடுக்கின்றது.

வேலை செய்வது (மனித) வாழ்வுக்கு விரோதமானது. "நல்ல வேலையாள்" எனப்படுபவன், வாழ்விழந்த, களையிழந்த முகத்தைக் கொண்ட சுமை தூக்கும் விலங்கினம். எப்போது மனிதன் வாழ்வைப் புரிந்து கொள்கிறானோ, அன்றில் இருந்து வேலை செய்ய மாட்டான். நாளைக்கே ஒருவர், தான் வேலை செய்யும் முதலாளியை விட்டு விலத்திச் சென்று, வேலை இன்றி தெருவில் நிற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. யாராவது அவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டாலும், அது ஒரு துரதிர்ஷ்டமாகும். பல சந்தர்ப்பங்களில், வேலையின்றி இருப்பவர்கள், வேலை செய்யும் தோழர்களின் செலவில் தங்கியிருக்கின்றனர். நேர்மையான குடிமக்கள் கூறுவதைப் போல, ஒரு முதலாளியினால் சுரண்டப் படுவதை தவிர்த்து, (அவனிடமே) திருடவும், கொள்ளையிடவும் தெரிந்தால் நல்லது. அதைச் செய்யுங்கள். ஆனால், அதனால் ஒரு மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள்.

வேலை செய்வது ஒரு சமூக நோய். (இன்றுள்ள) சமூகம் எமது வாழ்க்கைக்கு விரோதமானது, அதனை அழிப்பதன் மூலம் மட்டுமே, அதாவது புரட்சிகளை நடத்துவதன் மூலமே, வேலை மறைந்து விடும். அப்போது மட்டுமே (நிஜமான) வாழ்க்கை உதயமாகும். முழுமையான, செழுமையான வாழ்வு கிடைக்கும். அங்கே அழைத்து வரப்படும் ஒவ்வொருவரும், தமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வார்கள். அந்த மக்கள் இயக்கத்தில், ஒவ்வொருவரும் உற்பத்தியாளர் தான். அவர்கள் விசேடமாக, அவசியமான, அழகான, தரமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அப்பொழுது, தொழிலாளிகள் என்ற வகை மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் மனிதனாக மட்டுமே இருப்பார்கள். மனிதனது வாழ்வாதாரங்களுக்காக, சொந்த தேவைகளுக்காக, சோர்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவிதமான உறவுகளுக்குமான காரண காரியங்களுக்காகவும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அப்போது அங்கே வாழ்க்கை இருக்கும், அற்புதமான வாழ்க்கை, தூய்மையானதும் உலகத்தரமானதாகவும் இருக்கும்.

உற்பத்தி செய்யும் வலுவானது, மனிதர்களின் வாழ்வில் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த உழைப்பானது, நேரம், இடம், சம்பளம், பசி போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் பட்ட வேலையாக இராது. ஒட்டுண்ணிகளால் அந்த உழைப்பு சுரண்டப் படாது. உற்பத்தி செய்வது, வாழ்வின் மகிழ்ச்சியான அனுபவம், வேலை செய்வது வாழ்வின் வேதனையான அனுபவம். தற்கால மாசடைந்த சமூக உறவுகளில், அத்தகைய வாழ்வை உருவாக்க முடியாது. நமது காலத்தில் எல்லா வகையான தொழில்களும் குற்றமாகும். எமக்கு வேலை வேண்டுமென்பதற்காக முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறோம். இலாபம் சம்பாதிப்பதிலும், சுரண்டுவதிலும் கூட்டுச் சேர்கின்றோம். ஏமாற்றுவதில், பொய்யுரைப்பதில், நஞ்சூட்டுவதில், மனித குலத்தை படுகொலை செய்வதில், யுத்தத்திற்கு தயார்படுத்துவதில், எல்லாவற்றிலும் (முதலாளிகளுடன்) கூட நின்று உதவுகின்றோம்.

இவற்றை எல்லாம் நாங்கள் புரிந்து கொண்டால், எமது வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கிடைக்கும். நாம் எமது உற்பத்தி திறனை உணர்ந்து கொண்டால், இந்த வில்லத்தனமான, கிரிமினல் சமுதாயத்தை தகர்க்க முனைவோம். ஆனால், பசியால் சாகும் நிலை வராமல் தடுப்பதற்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்திக்குமேயானால்,இந்த வேலையின் ஊடாக, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். நாங்கள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்காக வேலை செய்யவில்லை என்றால், மனிதநேயத்தின் வீழ்ச்சியை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும். அதனால், நாம் ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனத்தையும் வேண்டுமென்றே நாசப் படுத்துவோம். ஒவ்வொரு முதலாளியும் எமது செயலால் எதையாவது இழக்க வேண்டும். எழுச்சியுற்ற இளைஞர்களாகிய நாம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள், விளைபொருட்களை பாவனைக்கு உதவாதவையாக ஆக்க வேண்டும். எந்த நிமிடமும், இயந்திரங்களின் பாகங்கள் கழன்று போகும், கத்திகளும் கத்திரிக் கோள்களும் உடைந்து விடும், மிகவும் அத்தியாவசியமான கருவிகள் மறைந்து விடும். இந்த செய்முறை விளக்கங்களை, வழிவகைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தினால் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் முதலாளித்துவத்தை அழித்து விட வேண்டும். நாங்கள், அடிமைகள் போன்று வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள், சுதந்திரமான மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றோம். உழைப்பாளிகளின் உழைப்பினால் தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் வேலையாட்களாக வாழ விரும்பவில்லை, வேலை செய்வதை நாசமாக்குவோம்.

********************************************
Herman Schuurman (1897 – 1991), "வேலை செய்வது குற்றம்" (Werken is Misdaad) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியவர். "Mokergroep" என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். (Moker என்ற சொல், நெதர்லாந்து பாட்டாளிகளின் மொழியில் முஷ்டியைக் குறிக்கும்.) புரட்சியில் ஈடுபாடு கொண்ட இளம் பாட்டாளிகளை அந்த அமைப்பு கவர்ந்திருந்தது. 1923 முதல் 1928 வரையில், அந்த அமைப்பு நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள, De Dolle Hond என்ற பதிப்பகம், 1999 ம் ஆண்டு, அந்த துண்டுப் பிரசுரத்தை மறுபதிப்புச் செய்தது.

பதிப்பகத்தின் முகவரி:

De Dolle Hond,
p/a Koffieshop Bollox,
1ste Schinkelstraat 14 – 16
1075 Amsterdam


டச்சு மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம்: Werken is misdaad

Monday, April 12, 2010

வேலை பறிபோகிறதா? முதலாளியை கடத்துங்கள்!

தொழிலகத்தை மூட நினைக்கும் முதலாளியைக் கடத்தி பணயக் கைதியாக வைத்திருப்பது, அண்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டின் புதிய நாகரீகமாகி விட்டது. "உலக பொருளாதார நெருக்கடி காரணமாக திவாலாகிறது," என்று காரணம் கூறி பல தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு நடுத்தெருவுக்கு வருகின்றனர். அவ்வாறு மூடப்படும் நிறுவனங்கள், தொழிலாளருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு போதுமான நஷ்டஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால் நிர்வாகம் அதைக் கூட தராமல் ஓடி விட நினைக்கின்றது. வேலை பறிபோனதால் சீற்றமடைந்த தொழிலாளர்கள், தமக்கான நஷ்டஈட்டை போராடித் தான் பெற வேண்டியுள்ளது.

பிரான்சில் திவாலான சில நிறுவனங்களின் தொழிலாளர்கள், முதலாளிகளை கடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றனர். பிரான்சின் முன்னணி நிறுவனங்களான Molex, Sony, 3M, Hewlett-Packard தொழிலகங்களில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பல நாட்களாக பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அடுத்து வரும் வேலையில்லாத வருடத்திற்கு கொடுப்பனவு வழங்குவதாக உறுதி அளித்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். ஜெர்மனியை சேர்ந்த வளர்ந்து வரும் இடதுசாரிக் கட்சித் தலைவர் Oskar Lafontaine, ஜேர்மனிய தொழிலாளர்கள் பிரெஞ்சுத் தொழிலாளரின் உதாரணத்தை பின்பற்றுமாறு கூறியிருந்தார். (WDR வானொலியில் நேர்காணல்) "தொழிலாளர் பிரச்சினைக்கு அரசு தீர்வொன்றைக் காணா விட்டால், அது தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்." என்று அவர் மேலும் எச்சரித்தார். 'Kidnap the boss,' says German left-wing politician

கடந்த ஏப்ரல் 9 ம் திகதி, ஏதென்ஸ் நகரில் உள்ள கூரியர் நிறுவனமான INTERATTICA வின் தொழிலாளர்கள் தமது பிரெஞ்சு தோழர்களின் உதாரணத்தை பின்பற்றி, தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர். அன்று தொழிலாளர்களை கூட்டிய நிர்வாகம், நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், வேலை செய்து கொண்டிருந்த 205 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விட்டதாக அறிவித்தது. உடனடியாக தொழிலாளர்கள் கம்பனி கட்டிடங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். தொழிலகத்தின் வெளியேறும் வழிகள் யாவும் அடைக்கப்பட்டன. தலைமை நிர்வாக அதிகாரிகள் யாவரும் கைதிகளாக அலுவலகத்தினுள் அடைத்து வைக்கப்பட்டனர்.

சிறிய போலிஸ் படை ஒன்று வருவிக்கப் பட்ட போதிலும், அவர்கள் பின்னர் பின்வாங்கி விட்டனர். இரவு ஏழு மணியளவில், தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க நிர்வாகம் சம்மதித்தது. ஒரு திவாலான கம்பெனி, குறைந்த நேரத்திற்குள் மில்லியன் யூரோ நஷ்டஈட்டுக்கான நிதியை பெற்றுக் கொள்ள முடிந்தது ஆச்சரியமே. நம்புங்கள், அந்த அதிசயம் நடந்தது. அடுத்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பட்ட அளவு தொகைப் பணம் நஷ்டஈடாக கிடைக்கும், என்று நிர்வாகம் எழுத்து மூலம் அறிவித்தது. அனைவருக்கும் ஈட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரையில், தொழிலாளர்கள் தொழிலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.