Thursday, April 01, 2010

லண்டன் உங்களை வரவேற்கிறது!

"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்." பாட்டி காலத்து பழமொழியில் வரும் "சீமை" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், "என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.

அடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.
நான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி "செட்டில்" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.

லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. "யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?" என்ன செய்வது? எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது!

நீண்ட காலமாக பிரிட்டனில் "உலகில் சிறந்த சுதந்திர சமூகம்" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். "தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் "இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.

பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. "நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?", "பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா?" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.

கனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, "நான் உழைப்பால் உயர்ந்தவன்" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் "புண்ணியாத்மாக்கள்" பலர் உண்டு.

(தொடரும்)

14 comments:

கோவி.கண்ணன் said...

அருமையாக இருக்கிறது இடுகை.

வெளியே பார்த்தால் அத்திப் பழம் அழகு தான் என்பதை நினைவு படுத்துகிறது.

கலையரசன் said...

நன்றி கோவிகண்ணன். எனது லண்டன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன.

சந்துரு Chanthru said...

நானும் முதலில் மாணவர் விசாவில் லண்டனில் இருந்தேன். ஆங்கில முதலாளி வர்க்கம் மட்டுமில்லாது, ஈழத்தமிழ் முதலாளிகளும் நன்றாக உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுகிறார்கள். எவ்வாறு இது நடக்கிறது என்பதை வாசகர்களுக்கு பதிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

வடுவூர் குமார் said...

எது எப்படியோ சீக்கிரமே ஒரு நல்ல வேலையில் அமர வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

நன்றி சந்துரு. ஆமாம், இதைப் பற்றியெல்லாம் விபரமாக, விரிவாக எழுதினால் தான் பலருக்கு நிலைமை தெளிவாகும்.

கலையரசன் said...

நன்றி, வடுவூர் குமார். வேலை கிடைக்கிறதோ இல்லையோ சுவையான அனுபவங்கள் மட்டும் நாள்தோறும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

Anonymous said...

தனது நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தேசத்தின் கடமை தானே. அதை ஏன் தவறாக சொல்கிறிர்கள். இதை எல்லாம் தெரிந்து தானே அங்கே செல்ல விழைந்தோம். அங்கே போய் உட்கார்ந்து கொண்டு குற்றம் சொல்வது சரியா. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் நீங்களும் சேர்ந்து தானே மரணிப்பீர்கள். அவர்கள் தேசத்திற்குள் நுழைந்ததால், உங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது தானே.

கலையரசன் said...

தங்கள் கருத்துக்கு நன்றிகள், கறுப்பு.

ஸ்ரீலங்கா அரசாங்கமும் நீங்கள் கூறிய இதே நியாயத்தை சொல்லித் தான் தமிழர்களை வருத்திக் கொண்டிருக்கிறது என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Anonymous said...

ஸ்ரீலங்கா அரசு தன் தேசத்தின் மக்களின் மீது இந்த அழுத்தத்தை திணிக்கிறது. ஆனால் பிரிட்டன், தன் நாட்டின் மக்களின் மீதா இந்த அழுத்தத்தை தருகிறது.

கலையரசன் said...

//ஸ்ரீலங்கா அரசு தன் தேசத்தின் மக்களின் மீது இந்த அழுத்தத்தை திணிக்கிறது. ஆனால் பிரிட்டன், தன் நாட்டின் மக்களின் மீதா இந்த அழுத்தத்தை தருகிறது.//

ஐயா, கறுப்பு அவர்களே, கீழே உள்ள பந்தியில் குறிப்பிடப்பட்டவர்களும் பிரிட்டிஷ் பிரஜைகள் தான்.

//குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.//

ஈஸ்வரன் said...

வணக்கத்திற்குரிய நண்பரே
முதற்கண் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற
முது மொழி உங்களை எனக்கு அடையாளம் காட்டுகிரகிறது
நல்லது, எனக்கு உள்ள ஐயப்பாடு எல்லாம்
எங்கே சென்றாலும் என் இன மக்கள் தான்
அவமானபடுத்த படுகிறார்கள்
என்பதை காணும் போது எமது நெஞ்சம் கனமாகிறது
கலையரசன்
நேரம் எப்படி உங்களுக்கு கிடைக்கின்றது நல்ல கட்டுரைகளை
பின்னுவதுற்கு .மிக அருமையான எண்ணங்கள் .
உடன் உங்கள்ளுக்கு ஒரு நல்ல வேலை கிட்டிட எமது
உளமார்ந்த வேண்டுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டும்
ஈஸ்வரன்
பெங்களூரு
இந்தியா

கலையரசன் said...

நன்றி ஈஸ்வரன், எத்தனை பிரச்சினை இருந்தாலும் எழுதுவதால் எதையாவது சாதித்து விட்ட திருப்தி நண்பரே.

sugir said...

it is good artical

drogba said...

//"யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?"//

'that is none of ur business' என்று சொல்லி இருக்க வேண்டும். எப்படி கிடைத்தால் அவனுக்கு என்ன?
சில immigration officers அப்படித்தான்.

என்ன செய்வது நாம் தலை விதி. நொந்துகொள்ள மட்டுமே முடியும்