Saturday, April 10, 2010

"நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்" - லண்டன் தமிழர்

("லண்டன் உங்களை வரவேற்கிறது!" பகுதி-5)
முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம் கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கிறிஸ்தவர்களான" தங்களை ஏன் தாக்கினார்கள், என்பது தெரியாமல் விழித்தனர். எப்படியோ கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இங்கிலாந்து வந்து நிரந்தரமாக தங்கி விட்டனர்.

கொழும்பு நகரில் வாழும் தங்கள் உறவினர்கள், "ஆங்கிலம் பேசும் அழகைப் பார்த்து, பிரிட்டிஷ் தூதுவராலய அதிகாரிகளே அசந்து விட்டனர்," என்று லண்டன் மேட்டுக்குடி தமிழர்கள் பெருமையடிக்கின்றனர். குடியேறிய பிரிட்டனில் வளரும், இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் வாசமே அண்ட விடாது வளர்க்கின்றனர். தமது பிள்ளை வெள்ளையின நண்பர்களைக் கொண்டிருப்பதை விரும்புகின்றனர். இரண்டாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர் தமிழ் கலக்காமல் ஆங்கிலம் பேசுகின்றனர். (இதே பெற்றோர் பிற தமிழருடன் கதைத்தால் ஆங்கிலம் கலக்காமல் பேச மாட்டார்கள்.) ஒரு முறை நான் விஜயம் செய்த வீட்டில் இருந்த 16 வயதுப் பையன் தமிழ் கற்க விரும்பினான். உடனே அங்கிருந்த தாய், "நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.

இலங்கைத் தமிழ் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இரண்டு பெயர்கள் வைத்திருப்பார்கள். (தமிழ் கலாச்சாரப் படி) சம்ஸ்கிருத பாணிப் பெயர் ஒன்றும், அதே நேரம் (ஞானஸ்நானத்திற்கு பின்னர்) ஆங்கிலப் பெயர் ஒன்றும் சூட்டிக் கொள்வார்கள். ஞானஸ்நானத்தின் போது வைப்பது கிறிஸ்தவ மதம் சார்ந்த பெயர். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. புழக்கத்தில் உள்ள பல ஆங்கிலப் பெயர்களுக்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற விடயம், உண்மையிலேயே அவர்களுக்கு தெரியாது. லண்டனில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்கள், சில இடங்களில் பிரிட்டிஷ் சமூகத்தில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். லண்டனில் ஒரு தமிழ்ப் பெண்ணின் அனுபவம் இது. அலுவலக வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்த அவரை, நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த வெள்ளையின நிர்வாகி நம்ப முடியாமல் கேட்டார். "விண்ணப்பித்தது நீங்கள் தானா? நான் வேறு யாரையோ எதிர்பார்த்தேன்." ஆங்கிலப் பெயரை சூட்டிக் கொண்டாலும், வெள்ளை நிறவெறி எம்மை சமமானவர்களாக பார்ப்பதில்லை, என்பதை அன்று உணர்ந்து கொண்டார்.

கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள், பிற்காலத்தில் வந்த வட-கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்களிடம் இருந்து மாறுபட்ட அரசியலைக் கொண்டுள்ளனர். வட-கிழக்கு தமிழரில் பலர் சிங்களவரோடு எந்தவித இணக்கப்பாட்டையும் கொண்டிராத தீவிர தமிழ் தேசியவாதிகள். கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள் சிங்கள இனத்தவருடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றனர், ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அறவே வெறுக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலர், கொழும்பில் இருந்த காலங்களில் சிங்கள வழிக் கல்வியை பெற்றிருந்தனர். நான் சந்தித்த நண்பர் ஒருவரின் தந்தை, கொழும்பில் தேயிலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1983 கலவரத்தில் களஞ்சியத்தில் இருந்த தேயிலை மூட்டைகள் யாவும் எரிந்து நாசமாகின. இதனால் அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த போதிலும், தான் சிங்களவர்களை வெறுக்கவில்லை, என்றார் அந்த நண்பர். ஒருவருடைய பொருளாதார பின்னணி தான் அவரது அரசியலை தீர்மானிக்கிறது.

லண்டன் வாழ் கிறிஸ்தவ நண்பர்களுடன், ஒரு ஈஸ்டர் பெருநாளில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு செல்ல நேர்ந்தது. இங்கிலாந்து வெள்ளையர்களில் பெரும்பான்மையானோர் அன்க்லிக்கன் திருச்சபையை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க மதத்தவர்கள் மிகச் சிறுபான்மையினர். லண்டனில் குடியேறிய ஐரிஷ்காரர்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த மக்களும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமூகமளிப்பவர்கள். அதனால் பாதிரியாரும் பிரசங்கத்தில் சியாரா லியோன், இலங்கை ஆகிய நாடுகளில் சமாதானத்தின் தேவை பற்றி கவலை தெரிவிக்க மறக்கவில்லை.

மூன்றாமுலக குடியேறிகள், அகதிகளின் வரவு இல்லாவிட்டால், தேவாலயங்கள் இயங்க முடியாமல் வருமானத்திற்கு திண்டாடியிருக்கும். லண்டனில் பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்று மசூதிகளாக, இந்துக் கோயில்களாக மாறியுள்ளன. புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது மத்திய கால ஐரோப்பிய பண்பாடு. இங்கிலாந்தின் தெற்கே உள்ள கத்தோலிக்க புனித ஸ்தலம் ஒன்றுக்கு வருடா வருடம் கத்தோலிக்க தமிழர்கள் யாத்திரை செல்கின்றனர். இதனால் சில தமிழ் பிரயாண முகவர்கள் போட்டி போட்டுக் கொண்டு "யாத்திரை வியாபாரத்தில்" குதித்துள்ளனர்.

லண்டனில் வசதியாக வாழும் தமிழருடன் பழகுவது ஒரு சுவையான அதே நேரம் கசப்பான அனுபவம். மாற்றிக் கட்டுவதற்கு உடையில்லாத, காலில் போடுவதற்கு செருப்பில்லாத நாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளில், நவநாகரீக ஆடைகளும், விதம்விதமான பாதணிகளும் குவிந்து கிடக்கின்றன. திருமண வீடுகளில் பகட்டுக் காட்டுவது பலருக்கு கைவந்த கலை. குறிப்பாக கலாச்சாரக் காவலர்களான பெண்களின் ரசனையே வேறு. ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள். அதற்கென்று புதிதாக இன்னொரு சேலை வாங்குவார்கள். (வர்ணத்தை மாற்றிக் கொள்வது இன்னும் சிறப்பு.) தப்பித்தவறி யாராவது முன்னர் ஒரு தடவை உடுத்ததையே போட்டு வந்தால், பிற பெண்களின் பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். "இதே நீலக் கலர் புடவையை எங்கேயோ பார்த்தேனே...." என்று கூட்டத்தில் ஒரு பெண் சொல்லத் தொடங்கினால் போதும். அந்தோ பரிதாபம்! உடுத்தி இருப்பதை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓட வேண்டும் போலிருக்கும்.

சேலை மட்டும் தான் என்றில்லை. சினிமா ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் உடுத்தும் கண்ணைக் கவரும் பல வர்ண ஆடைகள் எல்லாம் லண்டனில் கிடைக்கிறது. விலையை மட்டும் கேட்காதீர்கள். அதற்காகவே இன்னொரு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். இருந்தாலும் என்ன? ஒவ்வொரு மாதமும் அழைக்கப்படும் விழாவுக்கு, புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள். அப்படி வாங்கிச் சேர்த்த ஆடைகளைக் கொண்டு ஒரு புடவைக் கடை போடலாம். புடவை மட்டுமல்ல, பாதணிகள், கைப்பைகள் என்பனவும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் மரியாதை போய்விடும். இவ்வாறு மேற்கத்திய நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு தங்களை அறியாமலே அடிமையாகிக் கிடக்கின்றனர்.

நகைகளைப் பொறுத்த வரை, கடந்த இருபது வருடங்களுக்குள் லண்டன் வந்த தமிழர்களே அனேகமாக தங்கம் வாங்கிக் குவிப்பவர்கள். தாயகத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். லண்டன் வந்து ஓரளவு காசு கையில் சேர்த்ததும், தங்க நகை வாங்கிக் குவிக்கத் தொடக்கி விடுவார்கள். நீண்ட காலமாக லண்டனில் 'செட்டில்' ஆகி விட்ட, தம்மை உயர் நடுத்தர வர்க்கமாக கருதிக் கொள்ளும் தமிழருக்கு தங்க நகை சேர்க்கும் ஆர்வமில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தங்கத்தை விட விலை உயர்ந்த, வெள்ளைத் தங்கம், வைர நகைகள் போன்றவற்றை அணிவதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் வெள்ளையின மேல்தட்டு வர்க்கத்தைப் பார்த்து, சூடு போட்டுக் கொண்ட பூனைகள்.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
1. லண்டன் உங்களை வரவேற்கின்றது!
2.உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்
3.பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்
4.கோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

16 comments:

ஜோதிஜி said...

உங்களை ஒவ்வொரு ஆக்கமும் என்னை வியப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. நாம் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல என்று ஒவ்வொருவருக்குள்ளும், தங்களுக்குளேயாவது, தனக்குள்ளேயாவது குற்ற மனப்பான்மையில் கொண்டு போய் நிறுத்தும் வல்லமையுடையது உங்கள் அக்கறை.

ஜெரி ஈசானந்தன். said...

"நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.
உண்மை தானோ.

கலையரசன் said...

நன்றி ஜோதிஜி, ஜெரி ஈசானந்தன். ஆண்டாண்டு காலமாக சேர்த்து வைத்த எனது அனுபவங்களை தற்போது எழுத்தில் வடிக்கிறேன்.

வடுவூர் குமார் said...

ல‌ண்ட‌ன் வாழ்ம‌க்க‌ளின் த‌ற்கால‌ நில‌மையை அழ‌காக‌ சொல்லியுள்ளீர்க‌ள்.

Anonymous said...

தமிழன் அழிந்து போவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டீர்களா.

Anonymous said...

http://dantamil.blogspot.com/2010/04/blog-post_08.html# suddu poddan unkal pathivai intha linkil parkkavum ini denmark

Anonymous said...

//ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள்//

அதை இலஙையில் கொண்டுவந்து வெகுநாளாகிவிட்டது.

Anonymous said...

கலை அண்ணை நல்லா போகுது லண்டன் கட்டுரை ...அண்ணை 83க்கு பின்னர் வந்து பெட்டி அடிச்சோ எப்படியோ முன்னுக்கு வந்த ஆட்களை பற்றி எழுதறதோடை ..83 கலவரத்துக்கு முன்னுக்கு வந்து வந்த கல் தோன்றா மண் தோன்ற பெருமையுடன் இருந்து இவையளை பார்த்து அவியும் மூத்த குடியை பற்றியும் கொஞ்ச எழுதுங்கோ ..சரியோ பிழையோ களவோ காருண்யமோ அகதியாய் வந்து உதிரி பாட்டளியாய் இருந்து கொஞ்சம் தன்னை நிமித்தி இருக்கிக்கனம் அதாலை கொஞ்சம் சப்போட் காட்டுங்கோ.இவையள் லண்டன் வந்தா பிறகு முன் தோன்றிய மூத்த குடிக்கு கொஞ்சம் நஞ்சம் எரிச்சல் பாருங்கோ ..நல்லாய் போகுது லண்டன் கட்டுரை தொடருங்கோ..வாழ்த்துக்கள்

கலையரசன் said...

வடுவூர் குமார், கறுப்பு மற்றும் அனானி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
"இனி - டென்மார்க்" வலைப்பூ நடத்துபவர் எனது நண்பர் தான். என்னுடைய ஒப்புதலின் பின்னர் தான் எனது கட்டுரைகளை மறுபிரசுரம் செய்கிறார். சில நேரம் எனது பெயரையோ அல்லது வலைப்பூ முகவரியையோ குறிப்பிட மறந்திருக்கலாம். பொறுத்தருள்க.

Anonymous said...

எனக்கு பொறாமையாக உள்ளது உங்களது லண்டன் பற்றிய அனுபவம் கட்டுரையை பார்த்தபோது, ஏனென்றால் இதை நான் எழுத நினைத்தேன்.இதில் என்னென்ன நான் எழுத நினைத்தேனோ அதை அப்படியே படம் போட்டுக்காட்டி விட்டீர்கள் கத்தோலிகர் நடத்தை உட்பட ஏன்னெறால் அவர்கள் வீட்டில் நான் தீந்தை பூசும்போது கிடைத்தது அனுபவம்.என்னுடைய மனத்திரையில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள் மிக்க நன்றி.2003-2006 காலப்பகுதியில் கோடை கால பல்கலைக்கழக விடுமுறைக்கு நான் லண்டன் சென்று பணம் உழைப்பேன்.இப்பொழுது எனது தாய்மண்ணில் வைத்தியனாக கடமை ஆற்றுகின்றேன்.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா??மிகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து...ST

Anonymous said...

15 வயதில் யாழ்ப்பாணத்தில் இருந்து குடியேறிய பரதேசி என்னுடன் தமிழில் கதைக்க வெக்கமாம்மென்று கைப்பாசையில் என்னுடன் கதைத்த அனுபவம் எனக்கு உள்ளது.தனது சொந்த தாய்மொழியை கேவலமாக நினைக்கும் உலகின் ஒரே இனம் எமது தமிழ் இனம்.அதேநேரம் மொழிக்காக மண்ணுக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த இழைய தலமுறையைக்கொண்டதும் எமது தமிழினம்தான்.

rpj said...

லண்டன் என்றில்லை, மலேசியாவிலும் கூட தமிழர்களின் நடவடிக்கைகள் நிங்கள் வருத்தப்படுவது போல்தான் மாறி வருகிறது...இன்னும் சில வருடங்களில் எங்கே தாங்கள் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் வாழ்பவர்களை போல-சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியில்-மற்ற இனத்தவரிடம் செல்வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காகவும் - தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திக் கொள்வதும் ,தம் இனத்தவரிடமே உழைப்பு மற்றும் பொருளாதார சுரண்டலில் ஈடுபடுவதும அதிகரித்து வருகிறது...மாற்ற வேண்டிய தலைமையும் அவ்வாறே இருக்கிறது என்பதுதான் வருத்தமான செய்தி.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள்.//


இதெல்லாம் ரொம்பவே அநியாயமுங்க :(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்பன்!
வரிக்கு வரி அனுபவம் பேசுகிறது, இந்த ஒரு விழாவில் கட்டிய சேலை அடுத்த விழாவுக்குக் கட்டாதது
பற்றி , நான் சிலசமயம் தெரிந்தவர்களிடம்- சேலையை மாற்றிக் கட்டும் நீங்கள் அதே பழைய புரிசனுடன் அடுத்த விழாவுக்குப் போவது மிகவும் பெருந்தன்மையான கொள்கை.
அதிலும் மாற்றம் கொண்டுவந்து விடாதீர்கள் தாயே!!! என கூறுவதுண்டு
ஆம்- பலரிடம் இருக்கும் புடவையை வைத்து ஒரு கடையே திறக்கலாம்.
முழுவதையும் எழுதி முடிந்ததும் ஒரு சிறு புத்தகமாகப் போடவும்.

கலையரசன் said...

நன்றி யோகன், லண்டன் தொடர் கட்டுரைகள் யாவும் விரைவில் நூல் வடிவில் வரவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். ஆனால் தனியாகவல்லாமல், ஐரோப்பிய புலம்பெயர் வாழ்வு தொடர்பான பிற கட்டுரைகளுடன் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது.
நூல் வெளியானவுடன் எனது வலைப்பூவில் அறிவிக்கிறேன்.

எஸ் சக்திவேல் said...

>> ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள்.
இது ஒரு "crime " என்று நான் சொல்லப் போய், அன்றுடன் நான் அந்தப் பெண்ணின் "எதிரி" ஆனேன்.