Showing posts with label அணு குண்டு. Show all posts
Showing posts with label அணு குண்டு. Show all posts

Thursday, June 22, 2017

பிகினி நீச்சல் உடையில் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்


பிகினி நீச்ச‌ல் உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்!

பேஷ‌ன் உல‌கில்‌ பிகினி நீச்ச‌ல் உடை அறிமுக‌மான‌த‌ற்குப் பின்னால் நூற்றுக் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் க‌ண்ணீர்க் க‌தை ம‌றைந்திருக்கிற‌து. முத‌லில் அத‌ற்கு ஏன் பிகினி என்ற‌ பெய‌ர் வ‌ந்த‌து என்ற‌ விப‌ர‌ம் ப‌ல‌ருக்குத் தெரியாது.

ப‌சுபிக் ச‌முத்திர‌த்தில் உள்ள‌ மார்ஷ‌ல் தீவுக‌ள், இன்று அமெரிக்காவின் கீழான‌ "சுத‌ந்திர‌மான‌ நாடு". அது ஆயிர‌ம் மைல் தூர‌த்திற்குள் உள்ள‌ தீவுக் கூட்ட‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. அதில் ஒன்று தான் பிகினித் தீவு. இர‌ண்டாம் உல‌க‌ப் போர்க் கால‌த்தில் ஜ‌ப்பானிய‌ர் வ‌சமிருந்த‌ மார்ஷ‌ல் தீவுக‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி த‌ன‌தாக்கிக் கொண்ட‌து. அது பின்ன‌ர் அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ க‌ட‌ல் க‌ட‌ந்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் ஒன்றான‌து.

1946 ம் ஆண்டு, உல‌கின் முத‌லாவ‌து ஹைட்ர‌ஜ‌ன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அணு குண்டை விட‌ ச‌க்தி வாய்ந்த‌ ஹைட்ர‌ஜ‌ன் குண்டு ப‌ரிசோதிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், பிகினித் தீவில் இருந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அமெரிக்க‌ இராணுவ‌ம் அவ‌ர்க‌ளுக்கு பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கி இன்னொரு தீவில் த‌ங்க‌ வைத்த‌து.

சில‌ வார‌ங்க‌ளில் ஊர் திரும்ப‌லாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிக‌ள், வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ அக‌திக‌ளாக‌ வாழ‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

1970 ம் ஆண்ட‌ள‌வில், க‌திர்வீச்சு அபாய‌ம் இல்லையென்றும், திரும்பிச் செல்வ‌து பாதுகாப்பான‌து என்றும் சொல்ல‌ப் ப‌ட்ட‌து. அதை ந‌ம்பி திரும்பிச் சென்ற‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கு புற்றுநோய் வ‌ந்த‌து. குழ‌ந்தைக‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் என்றில்லாம‌ல் ப‌ல‌ர் குறுகிய‌ காலத்திற்குள் ம‌ர‌ண‌முற்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையே பிகினித் தீவு ம‌க்க‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் நிர‌ந்த‌ர‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌து. அதாவ‌து, ஹைட்ர‌ஜ‌ன் குண்டு வெடிப்பால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பாதிப்புக‌ளை ஆராய்வ‌த‌ற்காக‌, அவ‌ர்க‌ளை ப‌ரிசோத‌னை எலிக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. சில‌ர் அமெரிக்கா கொண்டு செல்ல‌ப் ப‌ட்டு ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அப்போதெல்லாம் அமெரிக்க‌ அர‌சு அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌வே ம‌திக்க‌வில்லை.

க‌திர்வீச்சின் தாக்க‌ம் இர‌ண்டாம் த‌லைமுறையின‌ரையும் விட்டு வைக்க‌வில்லை. அத‌னால் த‌ம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிக‌ள் அமெரிக்க‌ அர‌சை கேட்டுக் கொண்ட‌ன‌ர். ஆனால் அந்த‌ வேண்டுகோள் செவிட‌ன் காதில் ஊதிய‌ ச‌ங்காயிற்று. இறுதியில் கிறீன்பீஸ் அமைப்பின் க‌ப்ப‌ல் வந்து தான் அவ‌ர்க‌ளை பாதுகாப்பான‌ இட‌த்திற்கு அழைத்துச் சென்ற‌து.

ஹைட்ர‌ஜன் குண்டு ப‌ரிசோத‌னையின் விளைவாக‌ ஏற்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளுக்கு ந‌ஷ்ட‌ஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷ‌ல் தீவுக‌ளுக்கு "சுத‌ந்திர‌ம்" கொடுப்ப‌தாக‌ அமெரிக்கா தெரிவித்த‌து. ஆனால் ந‌ஷ்ட‌ஈட்டுப் ப‌ண‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் ம‌ருத்துவ‌ச் செல‌வுக்கே போதாது.

இர‌ண்டாம் உல‌க‌ப் போர் வ‌ரையில் பிகினித் தீவில் வ‌றுமை என்ற‌ சொல்லே இருக்க‌வில்லை. இன்று இன்னொரு தீவில் அக‌திக‌ளாக குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இன்றி வ‌றுமைக்குள் வாழ்கின்ற‌ன‌ர்.

அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் இராணுவ‌வெறி பிகினித் தீவுட‌ன் நின்று விட‌வில்லை. மார்ஷ‌ல் தீவுக‌ளில் ஒன்றில் ந‌வீன‌ ஏவுக‌ணை த‌ள‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்குள்ள ஏவுகணைகள் சீனாவை நோக்கி குறி வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

ஏவுக‌ணை த‌ள‌ம் உள்ள‌ தீவில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்டு அய‌லில் உள்ள‌ தீவில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் தின‌ச‌ரி ப‌ட‌கில் சென்று ஏவுக‌ணைத் த‌ள‌ ப‌ராம‌ரிப்பு வேலைக‌ளை செய்கின்ற‌னர். முன்பு அந்த‌ மக்க‌ளுக்கு சொந்த‌மான‌ நில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌ அமெரிக்க‌ இராணுவ‌ம், அவ‌ர்க‌ளை அங்கு வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ள் ஆக்கியுள்ள‌து. அந்த ம‌க்க‌ளின் குடியிருப்புக‌ள் இருந்த‌ இட‌த்தில் கோல்ப் விளையாட்டு மைதான‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கிருக்கும் புல்த‌ரைக்கு த‌ண்ணீர் ஊற்றும் வேலையிலும் அந்த‌ ம‌க்க‌ளே ஈடுப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

பிகினித் தீவில் ஹைட்ர‌ஜன் குண்டு வெடித்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து, ச‌ரியாக‌ நான்காவ‌து நாள் பிகினி என்ற‌ நீச்ச‌ல் உடை உல‌க‌ ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. ஒரு பிரெஞ்சு ஆடை அல‌ங்கார‌ நிபுண‌ர் த‌யாரித்த‌ பிகினி உடை, அப்போது உல‌கம் முழுவ‌தும் பிர‌ப‌லமாகப் பேச‌ வைக்க‌ப் ப‌ட்ட‌து.

இத‌னால் அமெரிக்க‌ இராணுவ‌த்தின் அணுகுண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. இன்று எல்லோருக்கும் பிகினி என்றால் நீச்ச‌ல் உடை தான் நினைவுக்கு வ‌ரும். யாருக்கும் அமெரிக்க‌ அணு குண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றித் தெரிய‌ வ‌ராது.

பிகினி உடைக்கும், அணுகுண்டு ப‌ரிசோத‌னைக்கும், அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்திற்கும் தொட‌ர்பிருக்கிற‌து என்று சொன்னால் இன்று யார் ந‌ம்ப‌ப் போகிறார்க‌ள்?


Wednesday, March 23, 2016

ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா


உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது. ஆயினும் அந்த "நியாயம்" அப்போதே சந்தேகிக்கப் பட்டது. 

அமெரிக்கா அணுகுண்டு போடுவதற்கு முன்னரே, ஜப்பான் சரணடையத் தயாராக இருந்தது. உண்மையில், அப்போது வளர்ந்து வரும் உலக வல்லரசாக கருதப்பட்ட, சோவியத் யூனியனை மிரட்டும் நோக்கில் ஜப்பானில் அணுகுண்டு போடப் பட்டது. ஏனெனில், சோவியத் செம்படைகள் ஜப்பானை பிடிப்பதற்கு தயாராக இருந்தன. அதற்கு முதல் அமெரிக்கா முந்திக் கொண்டது.

1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா, நாகசாகி மீது, எந்தத் தேவையுமில்லாமல் அணுகுண்டு போடப் பட்டது. இதனை அமெரிக்க மரைன் உளவுத்துறை அதிகாரி அட்மிரல் Ellis Zacharias, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Dwight D. Eisenhower ஆகியோர் தமது நினைவுக்குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

"அணுகுண்டு போட்டிருக்காமலே 15 செப்டம்பர் 1945 அன்று ஜப்பான் சரணடைந்து இருக்கும்" என்று எல்லிஸ் சகாரியாஸ் எழுதி உள்ளார். "ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் முற்றுமுழுதாக தேவையற்ற விடயம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே ஜப்பானை வென்று விட்டோம்." என்று ஐசன்ஹோவர் எழுதினார்.

"100 வருட கால உலக சரித்திரம் 1870-1970" (100 jaar Wereldgeschiedenis 1870-1970) என்ற நூலில் பேராசிரியர் A. Stam பின்வருமாறு எழுதி இருக்கிறார்:"ஜூலை 1945 ஜப்பான் அரசு சரணடைவதற்கு தயாராக இருந்தது. ஏற்கனவே ஜப்பானிய ரகசியத் தகவல்களை உளவறிந்த அமெரிக்கர்கள் அதைத் தெரிந்து கொண்டனர். இருப்பினும், அணு குண்டு போடுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதன் மூலம், சோவியத் யூனியன் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும்." 

பிப்ரவரி மாதம் நடந்த யால்ட்டா உச்சி மகாநாட்டில், ஐரோப்பாவில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. ஸ்டாலின் ஒரு பக்கம், ரூஸ்வெல்ட், சர்ச்சில் ஆகியோர் மறுபக்கம் முரண்பட்டனர். ஸ்டாலின் யால்ட்டா ஒப்பந்தத்தை தனக்கு விரும்பியவாறு மொழிபெயர்க்கப் பார்க்கிறார் என்று ரூஸ்வெல்ட் குற்றம் சுமத்தினார். ரூஸ்வெல்ட்டை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த ட்ரூமன் அணுகுண்டு போடும் முடிவை எடுத்தார். அமெரிக்காவிடம் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஆகவே, ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதிலும், 5 - 9 ஆகஸ்ட் 1945, ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப் பட்டன. அதன் விளைவாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக, 250.000 ஜப்பானியர்கள் கொல்லப் பட்டனர். அடுத்து வந்த வருடங்களில், மேலும் இலட்சக் கணக்கானோர் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்தின் மேலாதிக்க வெறிக்காக, ஸ்டாலினை தமக்கு கீழே அடிபணிய வைப்பதற்காக அந்த உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன.

அணுகுண்டு வீச்சாளர் ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரே தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜூன் 1941 ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்தது. அப்போது The New York Times பத்திரிகை பேட்டியில் பின்வருமாறு கூறினார்: 
"ஜெர்மனி வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வகையில் அவர்கள் முடிந்த அளவு மக்களை கொன்று குவிக்கட்டும் என்று விட்டு விடுவோம்."

இலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்த ஈழப்போரிலும், அமெரிக்கா இதே மாதிரியான அணுகுமுறையை தான் கடைப்பிடித்தது. சிறிலங்கா இராணுவம் வெல்லப் போகிறது என்று தெரிந்தால் புலிகளுக்கு உதவினார்கள். புலிகள் வெல்லப் போகிறார்கள் என்று தெரிந்தால், சிறிலங்கா இராணுவத்திற்கு உதவினார்கள்.

அந்த வகையில் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான தமிழர்களும், சிங்களவர்களும் செத்து மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தார்கள். அப்படியான அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக நீதியாக நடந்து கொள்ளும் என்று நம்பும் அப்பாவிகள் இன்றைக்கும் உள்ளனர். 

Monday, April 26, 2010

நெதர்லாந்தில் அணுவாயுத அபாயம்!

இன்று சர்வதேச கவனம் முழுவதும் ஈரானின் அணுவாயுதங்கள் மீது திரும்பியிருக்கிறது. அதே நேரம் சமாதானம் பேசும் மேற்குலக நாடுகள் சில அணுவாயுதங்களை நிறுத்தி வைத்துள்ளன. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நெதர்லாந்தில் Volkel என்னும் இடத்தில் அணுவாயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. அங்கே எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன, அவற்றின் தாக்குதிறன் என்ன, என்பன எல்லாம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப் படுகின்றன. சில நூறு சமாதான ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டத்தால், இந்த விவகாரம் நெதர்லாந்தின் வெகுஜன ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இங்கே நான் இரண்டு வீடியோக்களை இணைத்துள்ளேன். முதலாவது, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினது. இரண்டாவது நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
On the 3rd of April, European action day to ban the bomb, 200 people protested against the nuclear weapons at the military base in Volkel, the Netherlands. With shopping trolleys they came to dismantle the base. Dutch spoken with english subtitles.


sitestat

Wednesday, April 01, 2009

வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்


நாடுகள் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன: ஒரு அந்தஸ்த்தின் அடையாளம், வல்லரசாகிவிட்டதற்கான அறிவிப்பு, பாதுகாப்பின் உறுதிப்பாடு, எதிரிநாட்டைப் பேரழிவிற்குள்ளாக்கும் நோக்கம் என இன்னபிற காரணங்கள். ஆனால் வட கொரியா அணுகுண்டு தயாரித்ததன் நோக்கம் வேறு. தற்கால சர்வதேச அரசியலில் அந்தக் குறிப்பிட்ட காரணமே முக்கியத்தவம் பெறுகின்றது.

உலகின் எதிர்பாராத மூலையில் இருந்து வந்த இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு ராஜதந்திரச் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஈராக், ஈரான், வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் "தீயநாடுகளின் அச்சு" என அமெரிக்க ஜனாதிபதி புஷ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தானும் தாக்கப்படலாம் என அஞ்சுகிறது ஈரான். அதுவும் முடிந்தால் அநேகமாக வடகொரியாவின் முறைவரும். உலகில் தீய சக்திகளின் அச்சு எதுவும் கிடையாது என்று பலரும் அமெரிக்க அரசுக்கு எடுத்துக் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் செவிமடுத்தால் இந்த மூன்று நாடுகளின் கணக்கைத் தீர்க்கவிரும்பும் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறாது.

பனிப்போரின் முடிவில் மாபெரும் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததால் பல
சோஷலிஸ நாடுகள் தமது அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வடகொரியா அவ்வளவு இலகுவாக மாறவில்லை. பொருளாதார ரீதியாக சில தளர்வுகளுக்கு இந்நாடு ஒத்துக்கொண்டுள்ளபோதும் (சுதந்திர வர்த்தக வலையங்கள் நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளது.), முழுமையான திறந்த பொருளாதாரப் போக்கிற்கு இன்னமும் இங்கு இடமில்லை. சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்தப் பட்டதால் தேசியப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இடையில் வெள்ளப்பெருக்கு, வரட்சி போன்ற இயற்கை அழிவுகளால் விவசாயமும் பாதிக்கப்பட பஞ்சமேற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். அப்படியெல்லாமிருந்தும் திறந்த சந்தைப் பொருதாரத்தை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் வடகொரியாவில் தங்கியிருந்த ரஷ்ய இராணுவம் வெளியேறியது. ஆனால், தென் கொரியாவில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவம் இன்றுவரை வெளியேறவில்லை. இரு வேறு முகாம்களில் இருந்த "கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள்", "வடக்கு-மேற்கு யேமன்கள்" ஒன்றிணைந்தன. ஆனால், வட-தென் கொரியாக்கள் இன்றுவரை ஒன்றுசேரவில்லை. அதற்குத் தடையாகவிருப்பதும் அமெரிக்காதான். இரண்டு நாடுகளுக்கிடையிலான எல்லையில் இன்றும் "கொரிய மதில்சுவர்" பாதுகாக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் தென் கொரியாவும், ஜப்பானும் வடகொரியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட வர்த்தகத் தொடர்புகள் அமெரிக்காவின் அரைமனதுடன்தான் ஏற்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் சோவியத் படைகள் ஆக்கிரமித்த வடகொரியாவிலும், அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த தென் கொரியாவிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. எதிர்பாராதவிதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிச் சக்திகள் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று மக்கள் மன்றங்கள் நிறுவப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை. முன்பு ஜப்பானியருடன் ஒத்துழைத்த கொரிய இராணுவ அதிகாரிகள் அமெரிக்க உதவியுடன் திடீர்ச் சதிப்புரட்சி மூலம் தென்கொரியாவில் இராணுவச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினர். இதனை வடகொரியாவில் பலமாகவிருந்த கிம்-உல்-சுங்கின் கொரில்லாப்படைகள் பார்த்துக்கொண்டு சும்மாவிருக்கவில்லை. கொரியாவை இணைக்கும் போர் ஆரம்பித்தது. இப்போர் ஆரம்பித்துச் சில நாட்களிலேயே கிம்-உல்-சுங்கின் படைகள் தென்கொரியாவின் 90 வீதமான பகுதியைக் கைப்பற்றியிருந்தனர். அமெரிக்க இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் பிற நேசநாடுகளின் படைகளுடன் கொரியாமீது படையெடுத்தது. பின் வாங்கிய வடகொரியப் படைகளுக்கு உதவ சோவியத் யூனியனும் சீனாவும் முன் வந்தன. யாரும் வெல்ல முடியாத சூழ்நிலையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு வடக்கே கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசும், தெற்கே கொரியக் குடியரசும் ஆரம்பிக்கப்பட்டன.

தென்கொரியா நீண்டகாலம் இராணுவ சர்வாதிகார ஆட்சியின்கீழ் இருந்தது. இடையிடையே தேர்தல்கள் நடாத்தப்பட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. கொரியாக்களின் இணைப்பைக் கோரிய மாணவர் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. இவற்றைவிட , அமெரிக்க இராணுவம் தென்கொரியாவில் அணுவாயுதங்களை கொண்டு வந்து வைத்திருப்பது வெளியில் அதிகம் தெரியாத செய்தி. அமெரிக்க இராணுவ முகாம்கள் முன் தென்கொரியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்ங்கள் வழமையாகிவிட்டன. அமெரிக்க இராணுவச் சிப்பாய்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் போதெல்லாம் இந்த ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடிப்பதும் வழமைதான். இவை தவிர, தென்கொரியா மேற்கு நாடுகளுக்கு நிகரான உயர்ந்த தனிநபர் வருமானம்,வசதிகளைக் கொண்டிருந்தாலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறைவாகவேயுள்ளது. இதனால் எங்காவது ஒரு தொழிற்சாலை மூடப்பட்டாலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் நாட்டையே ஸ்தம்பிக்கவைக்கும். அங்கேயுள்ள தொழிற்சங்கங்கள் சிறப்பாக நிறுவனமயப்பட்டுள்ளதுடன், போர்ககுணமும் மிக்கவை.

மேற்குறிப்பிட்ட காரணங்களால், வட-தென் கொரியாக்களின் இணைவு ஒரு பலமான அமெரிக்க எதிர்ப்பு நாட்டை எதிர்காலத்தில் உருவாக்குமென அமெரிக்கா அஞ்சுகிறது. மேலும், ஒன்றிணைந்த கொரியாவில் கம்யூனிஸ்ட் அல்லது இடதுசாரிச் சக்திகள் எந்தளவிற்குச் செல்வாக்குப் பெறுவார்கள் என்பதும் கணிக்க முடியாதுள்ளது. இப்போதுள்ள நிலையில், இரண்டு கொரியாக்களும் இப்படியே இருக்கவேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம். இதனால் இன்றைய தென்கொரிய அரசும் வடகொரிய அரசுடன் மெதுவாகவே உறவுகளை ஏற்படுத்தி வருகின்றது. வடகொரியாவை முன்னர் பகைநாடாகப் பார்த்த தென் கொரியாவின் பார்வையும் இன்று மாறியுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே இன்றைய வடகொரிய அணுகுண்டுப்பிரச்சினையை அணுகவேண்டும். பழைய வர்த்தகக் கூட்டாளிகள் மறைந்து போனதாலும், அமெரிக்காவின் கோபத்திற்குப் பயந்து புதிய கூட்டாளிகள் வராததாலும் தனிமைப்பட்ட வடகொரியா வருமானத்திற்காக புதிய வழியைக் கண்டுபிடித்தது. ஏற்கெனவே முன்னேறியிருந்த தொழில்நுட்பத்தை வைத்து ஏவுகணைகளைத் தயாரித்துத் தேவைப்படும் நாடுகளுக்கு விற்றது. ஈரான் போன்ற நாடுகளுக்கு வடகொரிய ஏவுகணைகள் போய்ச்சேர்ந்தபோது அமெரிக்கா கண்டனக் கணைகளை வீசியது. இவ்வாறே பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கமான அணுவாராய்ச்சி நிலையத்துடன் அணுகுண்டு தயாரிப்பது சம்பந்தமான விபரங்கள், ஆவணங்களைப் பெறுவதற்காக தொலைதூரம் பாயும் ஏவுகணைகள் கொடுத்து பரிமாறியிருக்கலாமென கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் 11 செப்டம்பர் 2001 க்கு முன் நடைபெற்ற சம்பவங்கள். இப்பரிமாற்றங்கள் பற்றி அமெரிக்காவும் அறிந்திருந்தது. பாகிஸ்தானில் அணுவாயுதப் பரிசோதனைச் சாலையை நிறுவிய கான் என்ற விஞ்ஞானியே (இந்தியாவில் அப்துல் கலாம் போல இவர் பாகிஸ்தானில் பிரபலமானவர்) இந்தப் பரிமாற்றத்திற்கு முன்நின்றதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் பரிசோதனை முயற்சியாக ஏவிய கௌரி ஏவுகணை வடகொரியாவின் "நொடொங்" ஏவுகணைப் பாணியில் கானின் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்டது. பாகிஸ்தானிய அரசு இன்றுவரை இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துவருகின்றது.

வடகொரியாவின் அணுகுண்டு தயாரிப்புப் பற்றிய செய்திகள் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே வெளிவரத்தொடங்கியிருந்தன. அப்போது எழுந்த ஆரவாரம் அமெரிக்க அரசுக்கும் வடகொரிய அரசுக்குமிடையிலான ஒப்பந்தமொன்றில் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க அரசு வடகொரியாவிற்கு உணவுப் பொருட்களையும் வேறு அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. அத்துடன் அணுஉலை மின்சார உற்பத்தி நிறுவனம் அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்தது. இவையெல்லாம் அன்றைய கிளிண்டன் அரசின் வடகொரியாவுடன் சமரசம் செய்துகொள்ளும் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக ஏறபட்டவை.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகம் வடகொரியாவுடன் பகையை வளர்த்து யுத்தத்திற்குப் போகும் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இதனால் அமெரிக்காவில் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற சமயம் பார்த்து அணுகுண்டு பற்றிய செய்தியைக் கசியவிட்டிருக்கும் வடகொரியா, தன்னை "விரோதியாகப் பார்க்கும் அரசியல் கொள்கையை அமெரிக்கா கைவிட்டால்" தானும் அணுகுண்டு தயாரிப்பதை கைவிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் வடகொரியா அணுகுண்டைக்காட்டி இராஜதந்திர அரசியல் நடாத்தி சில நன்மைகளைப் பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் நடந்து கொள்கிறது. வடகொரியா மீதான போர் ஈராக்கைப்போன்று அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என அமெரிகாவில் உள்ள கொரிய அவதானிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ ஆய்வறிக்கையொன்று, மிகப்பெரும் செலவுடன் எடுக்கப்படும் நடவடிக்கை வடகொரியாவைத் தோல்வியுறச் செய்ய ஆறு மாதங்கள் எடுக்குமென்கின்றது. அப்போது கூட, தென்கொரியத் தலைநகர் சோல் வடகொரிய ஆட்டிலறி ஷெல்களால் அழிக்கப்பட்டுவிடும். அமெரிக்க உதவி கிடைப்பதற்குள் ஜப்பான்மீது ஏழு நிமிடங்களில் ஏவுகணைகள் வந்துவிழும்.