Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)

Saturday, September 23, 2023

ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன்!

Image
Gautama Buddha or Jesus Christ? இந்து மத சமூகத்தில் பிறந்த பரிதாபங்கள். 🤭🤭🤭 இவர்கள் யாரும் இயேசு, புத்தர் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை. 🤔🤔🤔

 

 
ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன். அஹிம்சையின் பெயரில் இனவெறி வன்முறை தூண்டி விடப் படுகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்து விடாதிருப்போம். இலங்கையில் இனங்களை பிரித்து ஆள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசும், அதன் தமிழ்த்தேசிய ஒட்டுக்குழுவும் தீயாக வேலைசெய்கின்றன.

இரு பக்கமும் இன உணர்வைத் தூண்டி விட்டு, சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை வளர்த்து விட்டு கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றன. அஹிம்சையின் பேரில் புத்தரும், திலீபனும் வன்முறையை தூண்டி விடும் கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன.

இதனால் நன்மையடையப் போவது சிங்கள- தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமே. இந்த குள்ள நரிகளின் சதித் திட்டத்தை அறியாத அப்பாவி சிங்கள- தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்.

தெற்கில் ராஜபக்சேக்களும், வடக்கில் கஜேந்திரகுமார்களும் நிரந்தர கோடீஸ்வரர்களாக நிலைத்திருப்பதற்காக இந்த இனவெறியூட்டும் அரசியல் நாடகம் அரங்கேற்றப் படுகிறது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.

அன்றாடம் உணவின்றி பட்டினி கிடந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், அதைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி, வயிறார உண்டு களிக்கும் மேட்டுக்குடி கும்பல், திலீபனின் படத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு மக்கள்விரோத அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் திலீபன் வழிபாட்டில் சங்கமிக்கின்றன. யாரை நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்? நாடகமே உலகம். 

"சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை யிரன்காரடீ 
கிளியே செம்மை மறந்தாரடீ. 
நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வரரடி 
கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி 
நாட்டத்திற் கொள்ளரடீ 
கிளியே நாளில் மறப்பாரடீ." 
- பாரதியார்

Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

Sunday, September 17, 2023

"பெரியாரை ஈழத்தில் யாருக்கும் தெரியாது!"

 

- ஈழத்து சங்கிகளின் உளறல்.

மார்பை மறைக்க முடியாத காலத்தில் மேல் சட்டை அணிந்த தமிழ்ப் பெண்களின் சட்டையை கத்தியால் கிழித்தெறிந்த, வெள்ளாள சாதிவெறி ஓநாய்களின் வாரிசுகள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

கோயில் கட்டிய தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத வெள்ளாள சாதிவெறி பேய்களின் வாரிசுகள் கேட்கின்றன "பெரியார் யார்"?

இதெல்லாம் எப்போதோ நடந்த கதை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஈழப் போர் தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட கிராமப்புறக் கோயில் கிணறுகளில் சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தண்ணீர் அள்ளத் தடை இருந்தது. அவர்களது கிராமங்களுக்கு போடப்பட்ட தொலைபேசி/மின்சாரக் கம்பிகள் அறுத்தெறியப் பட்டன.

அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று பொய்யுரைக்கும் அயோக்கியர்கள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

ஆண்ட பரம்பரை சாதியின் நலன்களுக்காக தமிழீழம் கேட்ட வெள்ளாள பேரினவாதிகள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

டச்சுக் காலனிய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளாளர்கள், பூர்வகுடி ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த வரலாற்றை மறைத்து விட்டுக் கேட்கிறார்கள், "பெரியார் யார்"?

சொந்த இனத்தவரான தமிழர்களையே அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அடிமைகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்காக, டச்சுக் காலனிய ஆட்சியாளருக்கு கால் கழுவி விட்டு, தேசவழமை சட்டம் என்ற ஒடுக்குமுறைச் சட்டம் எழுத வைத்த வெக்கங்கெட்ட வெள்ளாள ஒட்டுக்குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

நாகரீக காலத்திற்கு ஒத்துவராத, அடிமைகளை சீதனமாக கொடுப்பதை அங்கீகரித்த, ஒடுக்குமுறை தேசவழமை சட்டத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வெள்ளாள துரோகக் குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"