Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

No comments: