Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)

No comments: