Showing posts with label தனி நாடு. Show all posts
Showing posts with label தனி நாடு. Show all posts

Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)

Monday, June 15, 2020

மெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு!


தெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

1994ல் மெக்சிக்கோ அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய மார்க்சிய EZLN குறுகிய காலத்திற்குள் பல நகரங்களையும், கிராமங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அரசின் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து மெக்சிக்கோ முழுவதும் கம்யூனிச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாடளாவிய மக்கள் எழுச்சி கண்டு அஞ்சிய அரச இராணுவம், EZLN புரட்சியாளர்களுடன் போர்நிறுத்தம் செய்து கொண்டது. 

அன்றிலிருந்து இன்று வரை அங்கு கம்யூனிச தன்னாட்சிப் பிரதேசங்கள் தன்னிறைவுப் பொருளாதாரம் மூலம் வளர்ந்து வருகின்றன. அவர்கள் பின்பற்றும் பொதுவுடைமைக் கல்வி அமைப்பு நமக்கு தெரிந்த முதலாளித்துவ கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது மட்டுமல்ல நேரடி ஜனநாயகம் பின்பற்றப் படுகிறது. 

அங்கு பணமில்லாத சமுதாயம் உருவாகி உள்ளது. நகரசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப் படுவதில்லை. அவர்களது உணவு, உடை, உறையுள் அனைத்துக்கும் கம்யூன் பொறுப்பு. இன்றைக்கும் சிறுபான்மை மாயா இன மக்கள் இந்தக் கம்யூன் அமைப்பில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். பன்னாட்டு இடதுசாரி தொண்டர்கள் அங்கு சென்று கம்யூன் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர்.



Saturday, June 13, 2020

அமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு!

அமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, குறைந்தது 6 அடுக்கு மாடி குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து பாரிஸ் கம்யூன் பாணியிலான விடுதலைப் பிரதேசம் அமைத்துள்ளனர். அங்குள்ள பொலிஸ் நிலையம் "மக்கள் நிலையம்" எனப் பெயர் மாற்றப் பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் கம்யூன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன. அனைவருக்கும் இலவச உணவு வழங்கப் படுகிறது. 


நிறவெறிக்கும், பொலிஸ் வன்செயலுக்கும் எதிரான போராட்டத்தை Antifa அமைப்பினர் ஒரு கம்யூனிசப் புரட்சியை நோக்கி நகர்த்த தொடங்கி உள்ளனர். கம்யூன் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் பிரதேசத்தை சுற்றிவர தடையரண்கள் போடப் பட்டுள்ளன. தெருக்களில் இருந்த கமெராக்கள் அகற்றப் பட்டுள்ளன. ஆயுதமேந்திய மக்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

 சியாட்டில் நகரில் காப்பிட்டல்ஹில் பகுதியில் ஒரு "கம்யூனிச தனி நாடு" உருவாகி விட்டதாக அமெரிக்க வலதுசாரி ஊடகங்கள் அலறுகின்றன. ஜனாதிபதி டிரம்ப் இராணுவத்தை அனுப்பி நசுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 9 முதல் அமெரிக்காவில் இருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? அதைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்தின் பின்னணி என்ன? 

பொலிஸ் இல்லாத சமுதாயம் சாத்தியமே என்பதை சியாட்டில் நகரில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கம்யூனிச புரட்சியாளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். "காவல்துறைக்கு நிதி வழங்காதே!" என்பது அமெரிக்க மக்கள் எழுச்சியின் கோஷமாக மாறியுள்ளது.

Seattle protesters take over city blocks to create police-free 'autonomous zone' 

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள எனது இரண்டு வீடியோக்களையும் பார்க்கவும்:
பகுதி : ஒன்று


 பகுதி: இரண்டு

Saturday, June 08, 2019

கத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்


நான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் தெரிய வந்தது. அவரது தாய்மொழி கத்தலான். அதாவது ஸ்பெயினில் சிறுபான்மை இனத்தவர். பெரும்பான்மை சமூகத்தினரின் "பேரினவாத ஸ்பானிஷ் மொழி" கற்பிக்கும் ஆசிரியர்.

நாங்கள் ஸ்பானிஷ் மொழி என்று பொதுவாக சொல்வது கஸ்திலியான் மொழியைத் தான். தலைநகரம் மாட்ரிட், அதை அண்டிய மத்திய ஸ்பெயின் பகுதியில் பேசப்படும் பெரும்பான்மையின மொழி. அதில் நிறைய அரபு மொழிச் சொற்கள் கலந்துள்ளன.

ஸ்பெயினில் அதைத் தவிர, கத்தலான், பாஸ்க், கலேக்கோ மொழிகளை பேசும் சிறுபான்மையின மக்களும் வாழ்கின்றனர். ஆனால், இன்று வரைக்கும் கஸ்திலியான் (ஸ்பானிஷ்) மட்டும் தான் உத்தியோகபூர்வ மொழி.

ஏற்கனவே பாஸ்க் மொழி பற்றி உலகில் பலருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அவர்களது ஆயுதப் போராட்டம். எங்களது ஸ்பானிஷ் ஆசிரியையும் அதைக் குறிப்பிடத் தயங்கவில்லை. "நாங்கள் பாஸ்க்காரர் மாதிரி பயங்கரவாதிகள் அல்ல. மேலும் நாங்கள் தனிநாடு கோரவில்லை." என்றார்.

கத்தலான் ரோம மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இத்தாலி மொழிக்கு நெருக்கமானது. கத்தலான் மக்கள், ஸ்பெயின் தேசிய நீரோட்டத்தில் ஒன்றுகலந்து விட்டவர்கள். பார்சலோனா போன்ற தொழிற்துறை நகரங்களின் வளர்ச்சி அதற்கு முக்கிய காரணம்.

ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில், கத்தலூனியா, கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகள் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரமாக இருந்தது. அவர்கள் அப்போதே நினைத்திருந்தால் தனிநாடு பிரகடனம் செய்திருக்கலாம்.

கத்தலூனியாவின் இடதுசாரிப் பாரம்பரியம் இன்றைக்கும் தொடர்ந்து இருக்கிறது. அகதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு முற்போக்கான சமூகம். ஸ்பெயின் பிற பாகங்களை விட, அங்கு தான் வெளிநாட்டவருக்கு வரவேற்பு அதிகம்.

பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் பிரிவினைக் கோரிக்கைகள் எழும் பொழுது, தமிழர் உட்பட வெளிநாட்டுக் குடியேறிகள் எதிராக இருப்பார்கள். உதாரணத்திற்கு, கனடாவில் இருந்து கியூபெக் மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த நேரம், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் (தமிழர்கள் உட்பட) எதிர்த்து வாக்களித்தனர். ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பிலும் இது தென்பட்டது.

ஆனால், கத்தலூனியா விடயத்தில் நடந்ததோ வேறு. அங்கு வாழும் வெளிநாட்டவரும் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குக் காரணம், கத்தலூனியா தேசியவாதிகளின் இடதுசாரி சார்புத் தன்மை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியவாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது.

இதற்கு முன்னர் பிரிவினை கோராத கத்தலான் சமூகம், இப்போது மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய காரணம் என்ன? அநேகமாக, அண்மைக் காலத்தில் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முக்கியமான காரணம். மேற்கு ஐரோப்பாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஸ்பெயினில் அதிகம்.

ஸ்பெயின் பொருளாதாரத்தில், கத்தலூனியா பிரதேசத்தின் பங்களிப்பு அதிகம். பொருளாதார உற்பத்தி அடிப்படையில், "பணக்கார மாநிலம்" என்று சொல்லலாம். ஸ்பெயின் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பிரிவினை சிறந்த வழி என்று நம்புகிறார்கள். அது சாத்தியமா என்பது கேள்விக்குறி. கத்தலூனியா தனி நாடானால், அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டி இருக்கும். அதே நேரம், யூரோ நாணயமும் பாவிக்க முடியாது.

Sunday, October 22, 2017

தனி நாடே மாயம்! தேசியம், தாயகம், வாக்கெடுப்பு எல்லாம் மாயம்!!

ஈராக்கில், அரேபிய‌ருக்கும், குர்திய‌ருக்கும் இடையில் சமீபத்தில் புதிய‌ போர் மூண்டுள்ள‌து. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.

தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.

அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.

குர்திஸ் ப‌டையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் ந‌க‌ரையும், அதை அண்டிய‌ பிர‌தேச‌ங்களையும் ஈராக்கிய‌ ப‌டைக‌ள் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌.

ஈராக் அர‌சின் ஆத‌ர‌வு பெற்ற‌ ஷியா துணைப் ப‌டையின‌ர், ஒரே ஒரு நாள் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில், கிர்குக் ப‌குதியை கைப்ப‌ற்றியுள்ள‌மை ப‌ல‌ரை விய‌ப்பில் ஆழ்த்தியுள்ள‌து.

ஈராக் எண்ணையில் க‌ணிச‌மான‌ அள‌வு ப‌ங்கு கிர்குக் ப‌குதியில் இருந்து கிடைக்கிற‌து. அத‌னாலேயே அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌தேச‌மாக‌ உள்ள‌து. அத‌னால் எல்லோரும் அத‌ற்கு உரிமை கோருகிறார்க‌ள்.

கிர்குக் ஒரு கால‌த்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் ம‌க்க‌ள்) இன‌த்த‌வ‌ர் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ சிறிய‌ ந‌க‌ர‌ம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌க் கால‌த்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள்‌ இருந்த‌து. இந்த‌க் கார‌ண‌ங்க‌ளினால், துருக்கியும் கிர்குக் த‌ன‌க்கு சொந்த‌ம் என்று உரிமை கோருகின்ற‌து.

குர்திய‌ர்க‌ள் அத‌னை த‌ம‌து குர்திஸ்தான் தாய‌க‌ப் ப‌குதி என்று உரிமை கோருகின்ற‌ன‌ர். குர்திஸ் தேசிய‌வாத‌ இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து, வ‌ருங்கால‌ குர்திஸ்தானின் த‌லைந‌க‌ராக‌ கிர்குக் இருக்கும் என்று அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து.

இது இல‌ங்கையில் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திருகோண‌ம‌லையை வ‌ருங்கால‌ த‌மிழீழ‌த் த‌லைந‌க‌ர‌மாக‌ உரிமை கோரிய‌து போன்ற‌து. கிர்குக், திருகோண‌ம‌லை இர‌ண்டும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே த‌லைந‌க‌ர‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌.

எண்ணை உற்ப‌த்தி கார‌ண‌மாக‌ கிர்குக் ந‌க‌ர‌ம் பெரிதாக‌ வ‌ள‌ர்ந்த‌து. வ‌ட‌க்கில் இருந்து குர்திய‌ரும், தெற்கில் இருந்து அரேபிய‌ரும் வேலை தேடி வ‌ந்து குடியேறினார்க‌ள். 1957 க‌ண‌க்கெடுப்பின் ப‌டி, கிர்குக் ந‌க‌ர‌ ச‌ன‌த்தொகையில் 38% துருக்மேன், 33% குர்திய‌ர், எஞ்சியோர் அரேபிய‌ர்க‌ள். (இதில் க‌ணிச‌மான‌ அள‌வு கிறிஸ்த‌வ‌ அஸிரிய‌ர்க‌ள்.)

ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில் கிர்குக் அரேபிய‌ம‌யமாக்க‌ப் ப‌ட்ட‌து. பெரும‌ள‌வு குர்திய‌ர்க‌ள் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதே நேர‌ம் அரேபிய‌ர்க‌ள் பெரும‌ள‌வில் குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ணிச‌மான‌ அள‌வு குர்திய‌ர்க‌ள், அர‌பு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபிய‌ராகி விட்ட‌ன‌ர். ச‌தாம் ஆட்சி முடிவுக்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முன்பு வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ குர்திய‌ர்க‌ள் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

இன்றைய‌ கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை 2014 ம் ஆண்டு தொட‌ங்கிய‌து. அது வ‌ரையும் கிர்குக் ஈராக் அர‌சின் நேர‌டி ஆட்சியின் கீழ் இருந்த‌து. ஆனால், மேற்கில் இருந்து வ‌ந்த‌ ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை ச‌மாளிக்க‌ முடியாம‌ல், ஈராக்கிய‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி குர்திய‌ ப‌டைக‌ள் கிர்குக்கை கைப்ப‌ற்றின‌. அப்போது பிர‌தான‌மான‌ எதிரி ஐ.எஸ். என்ப‌தால், ஈராக்கிய‌ அர‌சும் விட்டுக் கொடுத்த‌து.

ஐ.எஸ். தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை எழுந்த‌து. குர்திஸ்தான் அர‌சு கிர்குக் எண்ணையை திருடி விற்கிற‌து என்று ஈராக் அர‌சு குற்ற‌ம் சாட்டிய‌து. அதே நேரம், "எம‌து த‌லைந‌க‌ரான‌ கிர்குக்கை விட்டுக் கொடுக்க‌ மாட்டோம்..." என்ற‌ தேசிய‌வாத‌ கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான‌ பொது வாக்கெடுப்பும் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

"த‌னிநாடு காண்ப‌து என்பது ஒரு ந‌டைமுறைச் சாத்திய‌ம‌ற்ற‌ க‌ற்ப‌னாவாத‌ம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக‌ பொதுவாக்கெடுப்பின் பின்ன‌ர், பெரும்பான்மை குர்திய‌ர்க‌ள் இப்போது தான் ய‌தார்த்த‌ம் என்ன‌வென‌ உண‌ர்கிறார்க‌ள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, ட‌ச்சு செய்தி நிறுவ‌ன‌ம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)

கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் க‌ட்டுப்பாட்டின் கீழ் இருந்த‌ கிர்குக் மாகாண‌த்தின் எஞ்சிய ப‌குதிக‌ளையும் ஈராக்கிய‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி விட்ட‌து. குர்திஸ் ப‌டைக‌ள் பின்வாங்கி ஒரு அவ‌மான‌க‌ர‌மான‌ தோல்வியை ச‌ந்தித்த‌தின் பின்ன‌ணியில் ஈரான் இருக்க‌லாம் என‌ ச‌ந்தேகிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அதாவ‌து, ஈரானின் ம‌றைமுக‌ நெருக்குவார‌ம் கார‌ண‌மாக‌த் தான் குர்திஷ் ப‌டைய‌ணிக‌ள் பின்வாங்கியுள்ள‌ன‌. குர்திஸ்தானில் வ‌ட‌ ப‌குதி KDP இய‌க்க‌த்தின் க‌ட்டுப்பாட்டிலும், தென் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டிலும் உள்ள‌து. கிர்குக் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் அட‌ங்குகிற‌து.

PUK இத‌ற்கு முன்ன‌ரும் சுத‌ந்திர‌ குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு ம‌ன‌துட‌ன் ஆத‌ரிக்க‌வில்லை. ஏனெனில் அதன‌து போட்டி இய‌க்க‌மான‌ KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்த‌து. இது அங்கு இரு தேசிய‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல் விளையாட்டு.

பொது வாக்கெடுப்புக்கு வ‌ரையும், KDP இன் பிர‌ச்சார‌ம் முழுவ‌தும் "ஹ‌லாப்ஜா இன‌ப்ப‌டுகொலை" ப‌ற்றியே இருந்த‌து. இந்த‌ உண‌ர்ச்சிக‌ர‌ அர‌சிய‌லுக்கு பின்னால் இர‌ண்டு க‌ட்சிக‌ளினதும் போட்டி அரசிய‌ல் ம‌றைந்து விட்ட‌து, அல்ல‌து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து, ஹ‌லாப்ஜா என்ற‌ கிராம‌ம், ஈரான் எல்லைக்க‌ருகில், PUK க‌ட்டுப்பாட்டு பிர‌தேச‌த்தில் உள்ள‌து.

த‌ன‌து பிர‌தேச‌த்திற்குள் KDP பின்க‌த‌வால் நுழைய‌ப் பார்க்கிற‌து என‌ நினைத்து‌ PUK எச்ச‌ரிக்கையான‌து. ஆனால், சுத‌ந்திர‌ குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய‌ அர‌சிய‌லில் இருந்து ஓர‌ங்க‌ட்ட‌ப் ப‌ட‌லாம். இந்த‌ப் ப‌ய‌த்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆத‌ரித்த‌து.

இந்த இட‌த்தில் இன்னொரு உண்மையை ம‌ற‌ந்து விட‌க் கூடாது. PUK நீண்ட‌ கால‌மாக, ஆர‌ம்ப‌த்தில் இருந்தே ஈரானின் ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ந்த‌து. த‌ற்போது கிர்குக் பிர‌தேச‌த்தில் இருந்து பின்வாங்கிய‌தும் PUK ப‌டைய‌ணிக‌ள் தான். அத‌ற்கு ஈரானின் அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

"பார்த்தீர்க‌ளா, த‌மிழ‌ருக்குள் ஒற்றுமை இல்லாத‌து தான் எல்லாப் பிர‌ச்சினைக்கும் கார‌ணம்" என்று சொல்வ‌து மாதிரி கிள‌ம்பி வ‌ராதீர்க‌ள். புலிக‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் க‌ருணா குழுவை அக‌ற்றிய‌ மாதிரி, "PUK துரோகிக‌ள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வ‌ர‌ முடியாது. குர்திஸ்தானில், வ‌ட‌க்கு, தெற்கு பிராந்திய‌ மொழிக‌ளுக்கு இடையிலான‌ க‌லாச்சார‌ வித்தியாச‌ம் மிக‌வும் அதிக‌ம்.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இருந்து குர்திஸ் ம‌க்க‌ள் ஒரு ப‌டிப்பினையை பெற்றுள்ள‌ன‌ர். த‌னி நாடு கிடைக்கும் என்ப‌தெல்லாம் ப‌க‌ற் க‌ன‌வு. குர்திஸ் தேசிய‌வாதிக‌ள் சொல்வ‌து போல‌ எதுவும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

பூகோள‌ அர‌சிய‌ல் எம‌க்கு சாத‌க‌மாக‌ அமைய‌ப் போவ‌தில்லை. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது, எந்த‌வொரு அய‌ல்நாடும், குர்திஸ்தான் என்ற‌ த‌னிநாடு உருவாக‌ ச‌ம்ம‌திக்க‌ப் போவ‌தில்லை. மொத்த‌த்தில் எல்லாம் ஒரு மாயை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Sunday, September 24, 2017

25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?


25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.

ஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா? அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.

அமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான "நன்றிக் கடனாக", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.

குர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக "குர்திஷ் தேசிய இராணுவம்" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி? வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா? ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா? சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா?

குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது. 

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் "ஏக பிரதிநிதி" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

ஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.

ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட "சர்வதேச சமூகம்" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல. 

"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.

அமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.

ஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது "இனத்தவருக்கு" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

இருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.

Tuesday, April 18, 2017

தனி நாடு கண்டால் தேசியவாதம் காணாமல் போய்விடும்


க‌ன‌டாவில் கியூபெக் மாநில‌ம் பிரிவ‌த‌ற்காக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ வாக்கெடுப்பு ப‌ற்றி சிலாகித்துப் பேசும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ல‌ரைக் க‌ண்டிருப்போம். ஆனால், அவ‌ர்க‌ளில் யாராவ‌து க‌ன‌டிய‌ பூர்வ‌ குடி ம‌க்க‌ளுக்கான‌ த‌னிநாடு ப‌ற்றிப் பேசுகிறார்க‌ளா?

கியூபெக் பிரிவினைக் கோரிக்கை, கால‌னிய‌ கால‌த்திய‌ ஏகாதிப‌த்திய‌ முர‌ண்பாடுக‌ளின் விளைவு என்ற‌ உண்மையை ப‌ல‌ர் உண‌ர்வ‌தில்லை. க‌ன‌டாவை கால‌னிப் ப‌டுத்திய‌ ஆங்கிலேய‌, பிரெஞ்சு ஏகாதிப‌த்திய‌ங்க‌ள், த‌ம‌க்குள் ச‌ண்டையிட்டுக் கொண்ட‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. இது எஜ‌மான‌ர்க‌ளுக்கு இடையிலான‌ ஆதிக்க‌ப் போட்டி. அதை தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ப் போராட்ட‌மாக‌ நினைத்துக் குழ‌ப்பிக் கொள்வ‌து அறிவிலித் த‌ன‌ம்.

இதிலே இன்னொரு வேடிக்கையை‌யும் குறிப்பிட‌ வேண்டும். கியூபெக் மாநில‌த்தில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் வாக்குரிமையுட‌ன் வாழ்கிறார்க‌ள். அவ‌ர்களில் பெரும்பான்மையானோர் த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள். இருப்பினும் கியூபெக் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளித்த‌ன‌ர். "குடியேறிக‌ளின் எதிர்ப்பு வாக்குக‌ளால் தோற்ற‌தாக‌" கியூபெக் தேசிய‌வாதிக‌ளும் அறிவித்திருந்த‌ன‌ர்.

எத‌ற்காக க‌ன‌டா வாழ்‌ த‌மிழீழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் கியூபெக் பிரிவினைக்கு எதிராக‌ வாக்க‌ளிக்க‌ வேண்டும்? ஏனென்றால் தேசிய‌வாத‌ம் அடிப்ப‌டையில் ஒரு த‌ன்ன‌ல‌வாத‌ம். த‌ன‌து சொந்த‌ தேசிய‌ இன‌த்தின் ந‌ன்மைக‌ளுக்க‌ப்பால் வேறெதையும் சிந்திப்ப‌தில்லை. அத‌னால் தான், க‌ன‌டாவில், கியூபெக் தேசிய‌வாதிக‌ளுக்கும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ப‌ர‌ஸ்ப‌ர‌ புரிந்துண‌ர்வு இருக்க‌வில்லை. இருக்க‌வும் முடியாது.

கியூபெக் த‌னி நாடானால் த‌ன‌து நிலைமை என்னாகுமோ என்ற‌ அச்ச‌ம் அங்கிருக்கும் த‌மிழ‌ர் ம‌ன‌தில் எழுவ‌து இய‌ல்பு. ஏனைய‌ இன‌த்த‌வ‌ரின் ந‌ல‌ன்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ (கியூபெக்) தேசிய‌வாத‌த்தை த‌மிழ‌ர்க‌ள் ஏற்றுக் கொள்ளாத‌தில் த‌ப்பில்லை.

தேசிய‌வாத‌ம் பெரும்பாலும் அதிகார‌த்தில் இருக்கும் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு பெரிதும் உத‌வுகின்ற‌து. இந்த‌ உண்மையை ப‌ல‌ர் உணர்வ‌தில்லை. ஒரு ப‌க்க‌ம் கியூபெக் தேசிய‌வாதிக‌ளின் பிரிவினைக் கோரிக்கையை அங்கீக‌ரித்த‌ அதே க‌ன‌டிய‌ அர‌சு தான் ப‌ன்னாட்டுக் குடியேறிக‌ளை அங்கே குடிய‌ம‌ர்த்திய‌து.

தேசிய‌வாத‌ம் எப்போதும் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மை கொண்ட‌து. அத‌னால் ப‌ல்வேறு இன‌ங்க‌ளை ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க‌ முடியாது. ஒருநாளும் ந‌ட‌க்காது. அத‌னால் இறுதியில் ஆட்சியாள‌ருக்கே ஆதாய‌ம். இதைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் சொல்ல‌லாம்.

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.

தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌க்கும் நேர‌த்தில் அமோகமாக இருந்த ம‌க்க‌ள் ஆத‌ர‌வு, சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ரும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க‌ முடியாது. உதாரணத்திற்கு, இந்திய‌ சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் காட்டலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடிய காலத்தில் இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார்கள். அதே மாதிரி, தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய ANC க்கு முன்பிருந்த‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இப்போது இல்லை.அது அரசு அதிகாரத்திற்கு வந்த பின்ன‌ர், அதன் ஆத‌ர‌வாளர்க‌ள் ம‌த்தியில் இருந்தே வெறுப்பை ச‌ம்பாதித்த‌து.

இது இயற்கையான அரசியல் மாற்றம். ஈழத்தில் விடுதலைப் புலிக‌ளின் விட‌ய‌த்திலும் இதை நாங்க‌ள் எதிர்பார்க்க‌ வேண்டும். புலிக‌ள் வைத்திருந்த‌ "ந‌டைமுறை அர‌சு" உண்மையில் அவ‌ர்க‌ள‌து க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌ நிர்வாக‌ம் ஆகும். அப்போது அங்கே மும்முரமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் தொட‌ர்ந்த‌ ப‌டியால் அதைக் காட்டியே ந‌டைமுறை அர‌சின் குறைபாடுகளுக்கு நியாய‌ம் க‌ற்பித்தார்க‌ள். ஆக‌வே அத‌னை உண்மையான‌ த‌மிழீழ‌ம் என்று க‌ருத‌ முடியாது.

உல‌க‌ம் முழுவ‌தும் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ம் ஒரே நோக்க‌த்திற்காக‌ ந‌ட‌க்கின்ற‌ன‌. எத்தியோப்பியாவில் பேசப்படும் அதே மொழிகள் (அம்ஹாரி, திக்ரிஞ்ஞா) எரித்திரியாவிலும் பேசப் படுகின்றன. அவர்கள் ஒரே மொழி பேசினாலும் எத்தியோப்பியாவை பேரின‌வாத‌ அர‌சாக‌ க‌ருதினார்க‌ள். (விரும்பினால் அதை பிர‌தேச‌வாத‌ம் என்று அழைக்கலாம்.)காலனியாதிக்க காலத்தில் எரித்திரியா இத்தாலியின் காலனியாக இருந்தது. அதனால் அங்கு பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமே எரித்திரியர்களை ஒன்று சேர்த்தது.

ஈழ‌த்தில் புலிக‌ள் சிங்க‌ள‌ மொழி மேலாண்மையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தமிழரின் பெயரால் போராடினார்க‌ள். ஆனால் எத்தியோப்பியாவிலும், இல‌ங்கையிலும் ஒடுக்கும் அர‌சு ஒரே மாதிரி செய‌ற்ப‌ட்ட‌து. அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இர‌ண்டு நாடுக‌ளிலும் ஒரே மாதிரி இருந்த‌து. எரித்திரியா, ஈழ‌த்திற்கான‌ விடுத‌லைப் போராட்ட‌ங்களும் ஒரே மாதிரி ந‌ட‌ந்த‌து. சிலநேரம், யுத்த தந்திரங்களும், வியூகங்களும் ஒரே மாதிரி இருந்தன. உதாரணத்திற்கு, கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதல் மாதிரியான சம்பவம், ஏற்கனவே எரித்திரிய விடுதலைப் போரில் நடந்துள்ளது.

புலிகளால் ஒரு தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப் ப‌ட்டாலும் அத‌ன் இறுதி இல‌ட்சிய‌ம் ஒரு தேசிய‌ அர‌சு அமைப்ப‌து தான். அது எப்ப‌டி இருக்கும் என்ப‌து தான் கேள்வி. அடிப்படையில், தமிழ் அரசும் சிங்க‌ள‌ அர‌சு க‌ட்ட‌மைப்பை பின்ப‌ற்றிய‌தாக‌ இருக்கும். நிர்வாக அமைப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. அந்த‌ உண்மையை புலிக‌ளும் ம‌றுக்க‌வில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்பிருந்த ந‌டைமுறை அர‌சு அதை நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசு நியமித்த அரச அதிபர்கள், கிராம சேவகர்கள் அப்படியே இருந்தனர். அதே நேரம், சமாந்தரமாக புலிகளின் நிழல் அரசும் இயங்கியது. அதாவது, புலிகள் நியமித்த அரச அதிகார்கள், கிராம சேவகர்களும் இருந்தனர்.

ஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ள் என்று அழைக்க‌ப் ப‌டுவார்க‌ள். புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் அர‌ச‌ எதிர்ப்பாள‌ராக‌ க‌ருத‌ப் ப‌டுவார்க‌ள். ஏனென்றால், இறுதியில் புலிக‌ளின் நோக்க‌மும் த‌மிழீழ‌ "அர‌சு" அமைப்ப‌து தான் இல்லையா?

இப்போது க‌ண் முன்னால் காண‌க்கூடிய‌ ஆதார‌த்திற்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுத‌லை செய்வ‌த‌ற்காக‌ EPLF இய‌க்க‌ம் போராடிய‌து. EPLF என்ப‌து ந‌ம‌க்குப் புலிக‌ள் மாதிரி. அத‌ன் த‌லைவ‌ர் இசையாஸ் அபெவெர்கி ந‌ம‌க்கு பிர‌பாக‌ர‌ன் மாதிரி.

எரித்திரியா சுத‌ந்திர‌மான‌ த‌னி நாடான‌ பின்ன‌ர், முன்பு விடுத‌லை இய‌க்க‌மாக‌ இருந்த‌ EPLF ஆட்சி அமைத்த‌து. அத‌ன் த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த‌ பின்ன‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் எல்லைப் போர் ந‌ட‌ந்த‌து. எரித்திரிய‌ அர‌சு அதைக் கார‌ண‌மாக‌க் காட்டி, ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுத்து வ‌ருகின்ற‌து. தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்துவ‌தில்லை.

இப்போது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளுக்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், அதாவ‌து எரித்திரிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் பெருந்தொகை அக‌திக‌ள் ஐரோப்பா சென்று குடியேறி விட்ட‌ன‌ர்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் புலிக‌ளை ஆத‌ரிப்ப‌து மாதிரி, அன்று வ‌ந்த‌ எரித்திரிய‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். அதாவ‌து இன்றைய‌ நிலையில்‌ எரித்திரிய‌ அர‌ச‌ ஆத‌ர‌வாள‌ர்கள்.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் எரித்திரிய‌ அதிப‌ரின் வ‌ல‌துக‌ர‌மாக‌ ப‌த‌வியில் இருக்கும் ஒருவ‌ர் நெத‌ர்லாந்திற்கு வ‌ருகை த‌ந்திருந்தார். ந‌ம‌க்கு அன்ட‌ன் பால‌சிங்க‌ம் மாதிரி ஒருவ‌ர் என்று நினைத்துக் கொள்ளுங்க‌ள். அவ‌ர் அங்கு ஒரு ம‌காநாட்டில் பேசுவ‌த‌ற்கு ஏற்பாடாகி இருந்த‌து. ஆனால், க‌டைசி நேர‌த்தில் ம‌காநாடு ந‌ட‌த்த‌ அனும‌தி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ இட‌த்தில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து ஓய்ந்துள்ள‌து. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ம‌காநாட்டை ஒழுங்கு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள், நெத‌ர்லாந்தில் வாழும் இர‌ண்டாந்த‌லைமுறை எரித்திரிய‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள‌து பெற்றோர் இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ந்து குடியேறிய‌வ‌ர்க‌ள். த‌ம‌து பெற்றோர் மாதிரியே, இந்த‌ இளையோரும் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். ஐரோப்பாவில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையை சேர்ந்த‌ புலி ஆத‌ர‌வு த‌மிழ் இளையோருட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் இல‌குவாக‌ப் புரியும்.

அதே நேர‌ம், எரித்திரியா த‌னி நாடாக சுத‌ந்திர‌ம் அடைந்த பின்ன‌ர், பெரும‌ள‌வு அக‌திகள் ஐரோப்பா வ‌ந்துள்ள‌ன‌ர். அண்மைக் கால‌ அக‌திக‌ள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்க‌ள். இல்லாவிட்டால் அபெவெர்கி அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ம‌காநாடு ந‌ட‌க்க‌விருந்த‌ இட‌த்தில், அபெவெர்கி அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் (ந‌ம‌க்கு புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் மாதிரி) ஒன்று கூடி விட்ட‌ன‌ர். ம‌காநாட்டை ந‌ட‌த்த‌ விடுவ‌தில்லை என்று க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். நிலைமை எல்லை மீறிச் செல்வ‌தைக் க‌ண்ட‌ உள்ளூராட்சி ச‌பை ம‌காநாட்டை த‌டை செய்து விட்ட‌து.

அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எவ்வாறு புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எரித்திரிய‌ ம‌க்க‌ள் பிள‌வு ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ற‌ உண்மையை உண‌ர்த்திய‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ந்த‌ அக‌திக‌ள், த‌ம‌க்கு தாய‌க‌த்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்ற‌ன‌ர். அத‌ற்கு மாறாக‌ புல‌ம்பெய‌ர் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு அங்குள்ள‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது என்று வாதிடுகின்ற‌ன‌ர்.

Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.

Monday, April 02, 2012

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை

உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
************************************************


மேலதிக தகவல்களுக்கு:
அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்
Tuareg rebellion (2007–2009)
Tuareg people
Libya Spillover Leads to Mali Coup

Tuesday, April 21, 2009

தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு


-“தமிழீழத்தைவிட பரப்பளவில் சிறிய நாடுகள்கூட சுதந்திர தேசங்களாக,
ஐ. நா. சபை அங்கத்தவர்களாக உள்ளன”
-“அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 தேசங்கள் உள்ளன”
-“உலகில் பல்வேறு மொழிபேசும் மக்களும
தமக்கெனத் தேசங்களைக் கொண்டுள்ளனர்!”
“பல்வேறு நாடுகளில் வாழும் தமிழருக்கு மட்டும் ஒரு நாடு இல்லை!!”


பலருக்கும் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட வாசகங்கள் இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலை உருவாக்கிய ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் கோட்பாட்டு விளக்கங்கள். இந்த விளக்கங்களைக் கேட்ட பின்புதான் உலகில் பிற தேசிய இனங்களின்பால் தமிழர் பலரின் கவனம் திரும்புகிறது. இருப்பினும் அவர்களின் பார்வையானது கூட்டணி சட்டத்தரணிகள் வகுத்துக் கொடுத்த சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. ஆகவே மேற்குறிப்பிட்ட
கூற்றுகள் யாவும் உண்மையா என்பதை ஆராய வேண்டிய தேவையும் எழுகின்றது.

முதலில் தமிழீழத்தை விடச் சிறிய நாடுகளின் சுதந்திரம் எப்படிச் சாத்தியமாகியது என்பதை அறிந்து கொள்ள அவற்றின் வரலாற்றைப் படிப்பது அவசியம். உலகிலேயே மிகச் சிறிய சுதந்திரநாடு வத்திக்கான் நகரம். அதற்கு ஐ. நா. சபையில் பார்வையாளர் அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் விபரம் அறிந்த யாரும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டார்கள். போப் (அரசர்), கார்டினல்(மந்திரி)களுடன் சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்தில்(பாராளுமன்றத்தில்) இருந்துகொண்டு கத்தோலிக்க மதத்தை (அரசியல்) நிர்வகிப்பதை தேசம் என்பதா? வத்திக்கான் நகரத்தின் சுயநிர்ணய அந்தஸ்து ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி. ஒரு காலத்தில் இத்தாலியின் பெரும்பகுதி போப்பரசரால் ஆளப்பட்ட கத்தோலிக்க மதவாத தேசமாக இருந்தது. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் நீடித்த மதத்தின் ஆட்சி 19ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. 1921இல் அன்றைய சர்வாதிகாரி முசோலினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போது நாம் காணும் வத்திக்கான் என்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதி உருவானது.

19ம் நூற்றாண்டு கால ஐரோப்பா பல மாற்றங்களைக் கண்டது. பல்வேறு ஐரோப்பிய மன்னர்களைப் போரில் தோற்கடித்து நெப்போலியன் புதிய பாணி (பாசிசம்?) சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான். நெப்போலியன் வெறும் அதிகார ஆசையில் நாடு பிடிக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சி முன்மொழிந்த லிபரல் சித்தாந்தம் நெப்போலியன் கைப்பற்றிய நாடுகளில் பரப்பப்பட்டது. அந்தப் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.
வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்றாலும், அதன் நிமித்தம் சாம்ராஜ்யம் சிறு துண்டுகளாக உடைந்தபோதும், ஆங்காங்கே தோன்றிய புதிய ஆளும் வர்க்கம் (மத்தியதர வர்க்கம்) மீண்டும் மன்னர்களை சிம்மாசனத்தில் அமர்த்தச் சம்மதிக்கவில்லை.
வியன்னாவில் ஒன்றுகூடி ஐரோப்பிய கண்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தார்கள். வியன்னா மகாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய எல்லைகள் வரையப்பட்டன.
அப்படித் தோன்றியவைதான் இன்று நாம் காணும் தேசங்கள். புதிய தேசங்களின் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள், மன்னருக்கு விசுவாசமுள்ள முடியாட்சியையோ அல்லது கடவுளுக்கு அடி பணியும் மதவாட்சியையோ பின்பற்ற விரும்பவில்லை. அதற்குப் புதிய
சிந்தனையான பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் ‘தேசியம்’என்ற புதிய சொல் அகராதியில் இடம்பிடித்தது.

ஒரு நாட்டின் தலைவராக மன்னர் இல்லாவிட்டால் அது குடியரசாகிவிடும். அந்தக் குடியரசு ‘தேசிய அரசு’ என அழைக்கப்பட்டது. முடி தரித்த தனிமனிதனுக்கு குடிமை வேலை செய்த மக்கள் ‘தேசம்’ என்ற (பிறந்த) மண்ணிற்கு கடமைப்பட்ட பிரஜைகளா
னார்கள். அவர்களை ஒன்றிணைக்க ஒரு பொது மொழியின் அவசியம் உணரப்பட்டது. இவ்வாறு தோன்றியவைதான்: “ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கான தனித்தனி தேசிய அரசுகள்”. ஐரோப்பாவில் ஒரு காலத்தில் (கத்தோலிக்க) கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது போல பெரும்பான்மைஇனத்தின் மொழி சிறுபான்மை இனங்களின்மீது திணிக்கப்பட்டது. ஐரோப்பாவின் புதிய தேசிய அரசுகள்எல்லாமே மொழி வேறுபாட்டினால் பிரியவில்லை. வியன்னா ஒப்பந்தத்தின்படிநெதர்லாந்துடன் சேர்ந்திருந்த பெல்ஜியத்திற்கு கத்தோலிக்க மதம் பெரிதாகப்பட்டது. புரட்டஸ்தாந்துக்காரருடன் சேர்ந்திருக்க விரும்பாமல் தனிநாடாக சண்டையிட்டுப் பிரிந்தது. இதற்கிடையே லக்ஸம்பேர்க்கை ஆண்ட குறுநில மன்னனுக்கு மக்களின் ஒத்துழைப்புடன், ஆனால் காலத்திற்கேற்ற மாறுதல்களுடன் முடியாட்சியை நீடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. தற்போது உலகளாவிய அதிகாரம் பெற்றுவிட்ட தேசிய அரசுகளுக்கு எங்கோ ஒரு மூலையில் குறுநில மன்னர்களின் ஆட்சி தொடர்வது கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கவில்லை.

இவ்வாறே,வேறு சில குறுநிலமன்னர்களும் தனிக்காட்டு ராஜாக்களாக அதிகாரம் செலுத்த
அனுமதி வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கும் ஒஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள லீக்டன்ஸ்ரைன், தெற்கு பிரான்சில் உள்ள மொனோக்கோ, ஸ்பெயினுக்கும் பிரான்சிற்கும் இடையில் இருக்கும் அண்டோரா என்பவை இவ்வாறுதான் தனிநாடுகளாயின. இத்தாலியில் இருக்கும் சென் மரினோ ஏற்கனவே குடியரசாக இருந்ததைக் கண்டு மெச்சிய நெப்போலியன் கொடுத்த உறுதிமொழியினால் அது இன்னமும் தனது சுதந்திரத்தைப் பேணி வருகின்றது. ஐம்பது சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கூட கொண்டிராத இந்தக் குட்டி நாடுகள் யாவும் தமது பொருளாதார, பாதுகாப்பு தேவைகளுக்காக அயல் நாடுகளில் தங்கியுள்ளன. இன்றைய நவீன
உலகில் அயல்நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்காவிட்டால் ஒரு சில நாட்கள் கூட நிலைத்து நிற்க முடியாது என்பதே யதார்த்தம். இதனால் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவற்றை அயலிலுள்ள பெரிய நாடுகளே கவனித்து வருகின்றன. ஒப்பீட்டளவில் அதிக பரப்பளவையும் மக்களையும் கொண்ட லக்ஸம்பேர்க் மட்டும் இதில் விதிவிலக்காக பூரண சுதந்திரத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான நுகர்வுப் பொருட்கள் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், வர்த்தக ஒப்பந்தங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. உலகின் அனைத்துக் குட்டி நாடுகளினதும் நிலைமை இதுதான்.

பசுபிக் சமுத்திரத்திலும் கரீபியன் கடலிலும் உள்ள சிறு தீவுகள் பல சுதந்திர நாடுகளின்
பட்டியலில் இணைகின்றன. முன்பு ஒரு காலத்தில் ஐரோப்பிய காலனிகளாக அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தீவுகள் சுதந்திரம் வழங்கப்பட்டாலும் முன்னாள் காலனிய
எஜமானர்களுக்குப் பணிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணமாக பசுபிக் சமுத்திரத் தீவு நாடுகளான மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், பலவு போன்றன இரண்டாம் உலகயுத்த காலத்தில், யப்பானாலும் அமெரிக்காவாலும் கைப்பற்றப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முற்றுமுழுதாக அமெரிக்க நிதியுதவியில் தங்கியிருக்கும் இந்த நாடுகள் சில நேரம் கொடுக்கும் விலை பெரியது. குறைந்தது 50 அணுவாயுத பரிசோதனைகளை அமெரிக்கா மார்ஷல் தீவுகளில் நிகழ்த்தியுள்ளது. அதேபோல் பிரான்சின் கடல்கடந்த பிரதேசமாகக் கருதப்படும் பொலினேசிய தீவில்தான் பிரான்ஸ் தனது அணுவாயுதப் பரிசோதனை நடத்தியது.

நவ்று தீவு அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ஆட்சி நடத்தும் இன்னொரு குட்டி தேசம். தற்போது அந்த நன்றிக்கடனாக அவுஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளுக்கான சிறைச்சாலையைப் பராமரிக்கும் புதிய வேலை கிடைத்துள்ளது. சில நேரங்களில் குட்டித்
தீவுகளின் ‘சுதந்திரம்’ அந்நிய தலையீட்டினால் ‘காப்பாற்ற’ப்படுகின்றது. பிஜி தீவில் சுதேசி இன இராணுவ வீரர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவுஸ்திரேலியா படைகளை அனுப்பி ‘ஜனநாயகத்தை மீட்டது’ பலருக்கு ஞாபகமிருக்கலாம். கரீபியன் தீவு நாடுகளும், தமது காலனியத் தொடர்புகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முடியாத நிலையிலுள்ளனர். கிரிக்கட் பிரியர்களுக்குப் பரிச்சயமான மேற்கிந்திய தீவுகள் - இந்த சுதந்திர நாடுகளுக்கு
வழங்கப்பட்ட பொதுப் பெயர். டொமினிக்கா, சென் கிட்ஸ்-நெவிஸ், சென் லூசியா, அன்டிகுவா-பார்புடா, கிரெனாடா போன்ற தீவு நாடுகள் தமக்குள் கரிபியன்
பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கி, கரிபியன் டொலர் என்ற பொது நாணயத்தைப் பயன்படுத்துகின்றன. முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளான இவை எலிசபெத் மகாராணியை தமது தலைவியாக ஏற்றுக்கொண்டே சுதந்திரம் பெற்றன. இவையும் தமது
பொருளாதார, பாதுகாப்புத் தேவைகளுக்காக முன்னாள் காலனியவாதிகளில் தங்கியிருக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.

இதுகாலவரையில் கிரெனாடா மட்டுமே சுயாதீனமான அரசியல் செய்யத் துணிந்த நாடு. இறுதியில் அதற்குக் கொடுத்த விலை,அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்பு. 1974இல்
நவகாலனிய பொம்மை அரசுக்கு எதிராக, மொரிஸ் பிஷப் தலைமையில் ஆயுதமேந்திய புரட்சி வெற்றி பெற்றது. ஒரு மார்க்ஸிஸ்டான மொரிஸ் பிஷப் நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு செல்வதற்காக கியூபாவின் உதவியை நாடினார். கியூபாவும் தனது ஆசிரியர்கள், வைத்தியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் போன்றவர்களை அனுப்பி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில் குறிப்பிடத்தக்கதாக புதிய விமான நிலையக் கட்டுமானப் பணி அமைந்திருந்தது. அந்த விமான நிலையத்தில் சோவியத் போர் விமானங்கள் வந்திறங்கவிருப்பதாக சி. ஐ.ஏ. கொடுத்த தவறான தகவலை நம்பி அன்றைய ஜனாதிபதி றீகன் அமெரிக்கப் படைகளை அனுப்பினார். பிறகென்ன கிரெனாடா தீவை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிக்க கம்யூனிசம் முடிவுற்றது, சுபம்.

முன்னாள் காலனிய எஜமானர்கள், தாம் சுதந்திரம் கொடுத்த நாடுகள், ‘பொதுநலவாய அமைப்பு’ என்ற பெயரிலாவது தம்முடன் நல்லுறவு பேணவேண்டும் என்று விரும்புகின்றன. அதற்காகப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா
போன்ற 19ம் நூற்றாண்டு காலனிய சக்திகளே இன்று வரை தமது பிடியை விடாமல் வைத்திருக்கின்றன. இதற்கு மாறாக முன்னாள் போர்த்துக்கீசிய, ஸ்பானிய காலனிகள் நவீன உலகின் ஆதிக்க சக்திகளுக்குப் பணிந்துபோக வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கு
கிழக்குத் திமோர் ஒரு சிறந்த உதாரணம். இந்தோனேசியாவின் அருகில் இருக்கும் முன்னாள் போர்த்துக்கீசிய காலனியான கிழக்குத் திமோர் தனது சுதந்திரத்தை ஒரு வருடம்கூடக் காப்பாற்ற முடியாமல் இந்தோனேசியாவிடம் தன்னை இழந்தது. பல தசாப்தங்களிற்குப் பின்னர், அங்கேயுள்ள எண்ணை வளங்களைக் குறி வைத்து அவுஸ்திரேலியா தலைமை
யிலான பன்னாட்டுப் படைகள் விடுதலை பெற்றுக் கொடுத்தன. புதிய சுதந்திரநாடாக ஐ. நா. சபை அங்கத்துவம்பெற்ற கிழக்குத் திமோர் அதனது காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே சர்வதேச அங்கீகாரம் பெற்றது. ஏனெனில் கிழக்குத் திமோரில் வாழும் பல்வேறு மொழி பேசும் அதே இனங்கள் மேற்குத் திமோரிலும் இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஒரு
பகுதியான மேற்குத் திமோர் குறித்து யாரும் இதுவரை கவலைப்படவில்லை.

இதுபோன்றே காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகக் கருதப்படும் இன்னொரு நாடு ஏற்கனவே பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டபோதும் நீண்ட ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னும் ஐ.நா. சபை சுதந்திரம் பெற்றுத் தருவதாக வாக்களித்த போதும்.... இன்ன பிறவெல்லாம் இருந்தும் இன்றுவரை மொரோக்காவால் ஆளப்படும் மேற்கு சஹாரா மாநிலம்
யாருடைய கவனத்தையும் பெறவில்லை. மொரோக்கோ பிரெஞ்சுக் காலனியாக இருந்தபோதிலும் அதன் தென் பகுதி மாநிலமான மேற்கு சஹாரா ஸ்பானியக் காலனி
யாக இருந்தது. சுதந்திரமடைந்த மொரோக்கோ, மேற்கு சஹாரா காலனிய காலத்திற்கு முன்னர் தனது ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரலாற்றைக் காரணம் காட்டிச் சொந்தம் கொண்டாடியது. அது போன்றே மொரிட்டானியாவும் தன் பங்கைக் கோரியது.
1975ம் ஆண்டு ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் பின்னர் ஸ்பெயின் மேற்கு சஹாராவை விட்டு வெளியேறிய கையோடு, மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மொரோக்கோ ஆக்கிரமித்து அதனைத் தனது மாகாணமாக்கியது. மிகுதிப் பகுதி மொரிட்டானியாவால் ஆக்கிரமிக்கப் பட்டது. இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகி விட்டதால் தீர்த்து வைப்பதற்காக ஐ.நா. சபை தலையிட்டபோதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே ‘பொலிசாரியோ’ என்ற இயக்கம் மேற்கு சஹாரா விடுதலைக்கான ஆயுதப்
போராட்டத்தை ஆரம்பித்தது. அல்ஜீரியா தனது நாட்டில் முகாம்களை அமைத்துக் கொள்ள இடம் கொடுத்தது. மொரோக்கோ பதிலடியாக இராணுவ காட்டாட்சியை ஏவிவிட்டது. மேற்கு சஹாரா மக்கள் இராணுவ காவலரண்களைக் கொண்ட வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன்மூலம் அல்ஜீரிய எல்லையில் இருந்து ஊடுருவித் தாக்கும் ‘பொலிசாரியோ’ கெரில்லாக்களின் இராணுவ நடவடிக்கைகள் கணிசமானளவு குறைக்கப்பட்டன. இன, மொழி, கலாச்சார ரீதியாக மேற்கு சஹாரா மக்களுக்கும் அயலவரான மொரோக்கோ, மொரிட்டானிய மக்களுக்கும் இடையில் அதிக
வேறுபாடு கிடையாது. ஒரேயொரு முக்கிய வேறுபாடு‘காலனிய மனோபாவம்’. ஸ்பானிய காலனிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் மேற்கு சஹாரா மக்கள் அதன் மூலம்
தம்மை அயலவரிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர்.

எரித்திரியர்களும் அதுபோன்று காலனியத் தொடர்ச்சியாக தனிநாடு கோரியவர்கள்தான். ஆபி
ரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியரால் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. ஆனால் அதன் கடற்கரையோரப் பகுதியான எரித்திரியா நீண்டகாலம் இத்தாலியின் காலனியாக இருந்தது. இத்தாலி விட்டுச் சென்ற பின்னர்
எத்தியோப்பியாவினால் இணைக்கப்பட்டது. அங்கு வாழும் திக்ரிஞா, திக்ரே, அஃபார் மொழிகள் பேசும் மக்கள் எத்தியோப்பாவிலும் வாழ்கின்றனர். எத்தியோப்பிய சக்கரவர்த்தி ஹைலெ செலாசிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் 30 ஆண்டு
கள் நீடித்தது. பிற்காலத்தில் மெங்கிஸ்டு தலைமையில் ஏற்பட்ட கம்யூனிச அரசாங்கம், பிரிவினைவாதிகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் போரிட்டும் வெல்ல முடியவில்லை. எரித்திரிய விடுதலை இயக்கமான ஈ. பி. எல். எவ். எண்பதுகளின் இறுதிப்பகுதியில்
எதிரிப்படைகளை அழித்து எரித்திரியாவை விடுதலை செய்தது. அஸ்மாரா விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 போர் விமானங்களை அழித்தமை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எத்தியோப்பியாவில் இருந்த
பிற விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து போராடியமை, மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் என்பன கைகூடி வரப்பெற்றதால் 1991இல் எரித்திரியாவின் பூரண விடுதலை சாத்தியமாகியது.

புதிய எத்தியோப்பிய அரசாங்கம் ஐ. நா. தலைமையிலான வாக்கெடுப்புக்குச் சம்மதிக்க எரித்திரிய சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஒரு தேசத்தில் பல்வேறு சக்திகள் போராடிக்கொண்டிருக்கும் குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி, தனது பிரதேசத்தை மட்டும் பிரித்து சுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட உதாரணங்கள் வரலாற்றில் பலவுண்டு. நீண்ட காலம் அரசாங்கம் அமைக்க முடியாமல் அராஜகம் கோலோச்சிய சோமா
லியாவில் இருந்து உதயமாகியது ‘சோமாலிலாண்ட்’என்கிற புதிய நாடு. அதுகூட பழைய காலனிய எல்லைகளைக் கொண்டு அமைக்கப்பட்டமை தற்செயலானதாக இருக்கலாம். முன்பு சோமாலியா மூன்று ஐரோப்பிய காலனியவாதிகளால் பங்கிடப்பட்டிருந்தது. இன்று
சுதந்திர தனித்தேசமான ஜிபூத்தி பிரான்சினாலும்,இந்துசமுத்திரப் பிரதேசமான சோமாலியா இத்தாலியினாலும், செங்கடல் பகுதி சோமாலிலாண்ட் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டன.

1991இல் சோமாலிய சர்வாதிகாரி சியாட் பரேயின் வீழ்ச்சிக் காலகட்டத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்த சோமாலிலாண்ட், பிரிவினைக்கான போரில் பத்தாயிரம் மக்களையாவது பலி கொடுத்தது. இன்றுவரை சோமாலிலாண்டில் நிலையான ஆட்சி அமைந்ததற்கு அப்பிரதேச மக்களது ஒற்றுமை முக்கிய காரணம், சோமாலியாவின் பிற பகுதிகளில் பல்வேறு சாதீய இயக்கங்களின் ஆயுதபாணிகள் அதிகாரப் போட்டியில் சண்டை
யிட்டதுபோல சோமாலிலாண்டில் நடக்கவில்லை. 16 வருடங்களைக் கடந்தபோதும் சோமாலிலாண்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் பிற பிரிவுவாத அமைப்புக்களை ஊக்கப்படுத்தலாம் என ஆபிரிக்க ஒன்றியம்
கருதுவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பின் நிற்கின்றன. அண்மையில் புஷ் நிர்வாகம் குறைந்தளவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சோமாலிலாண்டை அங்கீகரிக்கும் சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. அதற்குக் காரணம் வேறு. அல்கைதா சோமா
லிலாண்டைத் தனது புகலிடமாக மாற்றிவிடலாம் என்ற அச்சமும் அதனை முன்கூட்டியே தடுக்க நினைக்கும் சமயோசிதமும்தான் முக்கிய காரணம்.

சர்வதேச நாடுகளின், நிறுவனங்களின் அங்கீகாரம் இருந்தாலும் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்வது 50 வருடங்களுக்கு மேலாகியும் பாலஸ்தீனர்களால் முடியாத காரியமாக உள்ளது. பாலஸ்தீனம் என்ற தேசத்தை இதுவரை 108 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதேநேரம் இஸ்ரேலை 34 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 1948இலேயே அந்தப் பிரதேசத்தில்
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை முன் மொழிந்ததன்மூலம் ஐ. நா. சபைகூட பாலஸ்தீனியர்களுக்கு உதவக் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும் யதார்த்த நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை இங்கே கூறத் தேவையில்லை. மத்திய கிழக்கில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஓட்டோமான் துருக்கியர்கள் பலவீனப்பட்ட காலத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொண்டன. இந்த ஐரோப்பிய
பரோபகாரிகள் முதலில் அரேபியருக்கு உதவி செய்ய வந்ததாகக் கூறினர். துருக்கியருக்கெதிராகப் போராட ஆயுதங்கள் வழங்கினர்.போரில் துருக்கி தோற்கடிக்
கப்பட்ட பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த அரேபியரை ஓரம் கட்டிவிட்டு பிரித்தானியாவும் பிரான்சும் மத்திய கிழக்கு முழுவதையும் தமது காலனியாக்கிக் கொண்டன. தாம் விரும்பியபடி தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரித்துக் கொண்டன.
காலனியாதிக்கம் முடிந்த காலத்தில் இந்த அலகுகள் தனித்தனி நாடுகளாக சுதந்திரம் பெற்றன.

இவ்வாறு தான் அரபுமொழி பேசும் மக்களுக்கு 18 நாடுகள் கிடைத்தன. இவை அந்த மக்கள் விரும்பிக் கேட்டதல்ல. காலனிய எஜமானர்கள் அந்நாடுகளைத் தமது சொந்தக் காணிநிலம் போன்று நடத்தினர். அல்ஜீரியாவைத் தனது மாகாணம் என்று உரிமை கோரிய
பிரான்ஸ், சிரியாவில் இருந்து லெபனானைப் பிரித்தது. தன்னுடன் ஒத்துழைத்த அரபுத் தலைவர்களை மன்னர்களாக்குவதற்காக ஜோர்தான், ஈராக் என்ற புதிய தேசங்களை உருவாக்கியது பிரித்தானியா. அதிலும் எண்ணை வளம் மிக்க குவைத் ஈராக்கில்
இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதேபோன்றே வளைகுடா எண்ணையை மட்டும் கருத்தில் கொண்டு பாஹ்ரைன், கட்டார், எமிரேட்கள் போன்ற அளவிற்சிறிய நாடுகள் உருவாக்கப்பட்டன.

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனி என்று அழைக்கப்படும் சைப்பிரஸ் இன்று இனப்பிரச்சினையால் இரண்டு துண்டுகளாகியுள்ளது. 1983இல் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு , துருக்கியைத் தவிர
வேறெந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய தரைக் கடலில் இருக்கும் சைப்பிரஸ் தீவில் 78வீதம் கிரேக்கர்களும் 18வீதம் துருக்கியரும் வாழ்ந்து வந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற கிறீசுடன் சைப்பிரஸ் கிரேக்கர்கள் இணைய
விரும்பினர். அதற்கு ஆங்கிலேயர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கிரேக்கத் தேசியவாதிகள் பிரிட்டிஷ் காலனியாட்சிக்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரித்தாளும் சூட்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள் துருக்கியரை பொலிஸ் படையில் சேர்த்தனர். இதனால் கிரேக்க கிளர்ச்சியாளர்களால் துருக்கிய பொலிஸார் கொல்லப்படும்
போதெல்லாம் இனக்கலவரம் மூண்டது. சைப்பிரஸ் சுதந்திரம் பெற்ற பின்பும் ஏதோ ஒரு காரணத்தைச் சாக்காக வைத்து கலவரம் வெடிப்பது. அடிக்கடி நடந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னரான கிரேக்கப் பெரும்பான்மை அரசாங்கம் துருக்கிய சிறுபான்மைக்கு
வாக்களித்தபடி அதிகாரப் பரவலாக்கல் செய்யாததைக் காரணம் காட்டி மிதவாதத் தலைவர்கள் பதவி விலக, ஆயுதபாணி தீவிரவாதிகள் துருக்கியிடம் போர்ப் பயிற்சியையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டதானது நிலைமை மோசமடைவதைக் காட்டியது. இராணுவ மோதல்கள் தீவிரமடையவும் புதிதாகப் பொறுப்பேற்ற அரசாங்கம் கிறீசுடன் சேரும்
நோக்கத்தை மீண்டும் பகிரங்கப்படுத்தவும் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு துருக்கி இராணுவம் படையெடுத்தது. இன்றுவரை வடக்கு சைப்பிரஸில் துருக்கி இராணுவம் நிலைகொண்டுள்ளது. தற்போது சைப்பிரஸ் ஐரோப்பிய யூனியனில் இணைந்து
கொண்டதால் இரு இனங்களும் ஒன்றுபடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

(தொடரும்)

இரண்டாவது பகுதி: "அநாதை தேசங்கள்"

இந்தக் கட்டுரை "உயிர் நிழல்"(Oct.-Dec. 2007) இதழில் பிரசுரமாகியது.