Showing posts with label புலம்பெயர்ந்த தமிழர். Show all posts
Showing posts with label புலம்பெயர்ந்த தமிழர். Show all posts

Saturday, July 10, 2021

இலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்

 


இலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: "இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழுதியிருக்கவில்லை..." என்று சில ஈழத்தமிழ் "சீமானிஸ்டுகள்" என்னுடன் கிளப் ஹவுசில் வாதிட்டனர். 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் "பல்கலைக்கழக பட்டதாரிகளும்" தாம் படித்த பாடநூல் எதிலும் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன். 

 இந்தக் குழுவினர் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பதற்கான காரணங்கள்: 
  • 1) தமிழகத்து சீமானால் பரப்பப்பட்ட திராவிட எதிர்ப்பு அரசியலின் தாக்கம். சீமானை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்கள் கூட சீமானிச கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். 
  •  2) இவர்கள் தமது மனதில் உள்ள சாதிவெறியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். "ஈழத்தில் சாதிப்பிரச்சினை இல்லை" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பவர்கள். 
  •  3) சாதிவெறிக்கும், பெரியார் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஒரு சமூகநீதி இயக்கமாக பார்க்கிறார்கள். ஈழத்திலும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். தமது மேலாதிக்க கட்டுமானத்தை திராவிடக் கருத்தியல் தகர்த்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.

Saturday, February 02, 2019

ஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை


ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தமிழரின் மானம் சந்தி சிரித்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காட்டுப் பகுதியில், பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் ஒன்று, அரைவாசி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையின நாஜி தீவிரவாதிகளே அந்தக் கொலையை செய்ததாக, எல்லோராலும் நம்பப் பட்டது. மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் அவ்வாறே வாக்குமூலம் கொடுத்தனர்.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தேகத்தில் துப்புத் துலக்கிய ஜெர்மன் பொலிஸ், உண்மையான கொலையாளி அந்தப் பெண்ணின் தகப்பன் என்பதை கண்டுபிடித்தது. கொலைக்கான காரணம் என்னவென்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பருவ மங்கை, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலித்து வந்தார். அந்தக் காதலை பொறுக்க முடியாத தந்தையே, தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார். உடலை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று போட்டு விட்டு, அவசர அவசரமாக தகனம் செய்து விட்டு வந்திருக்கிறார். நவ-நாசிகளை கை காட்டி விட்டால், குடும்பத்திற்குள் நடந்த கௌரவக் கொலையை மறைக்கலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

துருக்கிய சமூகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது, ஏற்கனவே ஜெர்மானியர்களுக்கு தெரிந்த விடயம். கௌரவக் கொலைகளை செய்வதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தமிழர்களும் நிரூபித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கதைத்த பொழுது, அவர்கள் சம்பந்தப்பட்ட தந்தையை குற்றவாளியாக கருதவில்லை என்பது தெரிந்தது. "மகளை கண்டித்து அடிக்கும் பொழுது, தற்செயலாக படாத இடத்தில் பட்டு இறந்து விட்டதாக..." வக்காலத்து வாங்கினார்கள்.

ஜெர்மனியில், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது கூட குற்றம் என்பதையும் மறந்து, காதலித்த பிள்ளையிடம் தவறு காணும் அளவுக்கு தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம்.

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.

Friday, July 23, 2010

சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"


[ சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை - இரண்டாம் பகுதி]

பிற ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரினால், அவர் அகதியாக அங்கீகரிக்கப்படும் வரையில் வேலைக்கு போக முடியாது. ஆனால் சுவிட்சர்லாந்தில் ரெஸ்டாரன்ட் சமையலறை, துப்பரவு பணி, வெதுப்பகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அடிமட்ட தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்ய அகதிகளை பயன்படுத்தினார்கள். இதனால் சுவிஸ் அரசுக்கும் லாபம் இருந்தது. ஒரு அகதியை முகாமில் வைத்து பராமரிக்க தேவையான செலவை மிச்சம் பிடித்தது. மேலும் வேலை செய்யும் அகதி அரசுக்கு வரி கட்டுவதால், மேலதிக வருமானம் வேறு. காலப்போக்கில் அகதி உழைப்பாளர்களுக்கு பிரத்தியேகமான வரி அறவிட்டு அரசு மேலும் வருமானத்தை தேடிக் கொண்டது. ஒரே வேலைக்கு வழக்கமாக சுவிஸ் பிரஜைக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, அகதி உழைப்பாளிக்கு வழங்கும் சம்பளம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசால் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டது.

நான் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த காலங்களில், ரெஸ்டாரன்ட் வேலைகளுக்கு தமிழர்கள் வேண்டும் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்வார்கள். சுவிஸ் முதலாளிகள் தமிழ் தொழிலாளிகள் மீது அளவுகடந்த அன்பு காட்டுவதாக, இதைச் சிலர் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலான தமிழ் உழைப்பாளிகளுக்கு மொழித் தேர்ச்சி கிடையாது. அதனால் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வார்கள். அவர்களுக்கு சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் எந்த அறிவும் இல்லை. தொழிற்சங்கம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விபட்டிராதவர்கள். இப்படியான அருமையான தொழிலாளர்களை வேறெங்கு தேடினாலும் கிடைக்காது. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள், வந்தவுடனே உள்ளூர் மொழியை பேசக் கற்றுக் கொள்கிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் முதலாளி ஏய்க்க நினைத்தால், எதிர்த்துப் பேசி விட்டு கிளம்பி விடுகின்றனர்.

ரெஸ்டாரன்ட் இல்லாத சுவிஸ் கிராமத்தை காண்பது அரிது. பனிச் சிகரங்களால் சூளப்பட்ட மலைக் கிராமங்களில் வாழ்ந்த சுவிஸ் மக்கள், குளிர்காலத்தில் பட்டினியால் வாடிய காலம் மலையேறி விட்டது. உலகம் முழுவதிலும் இருந்து கறுப்புப் பணத்தை சேர்த்த சுவிஸ் வங்கிகள், தமது பிரஜைகளை நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் தள்ளி விட்டு பணத்தை சுழல விட்டது. அப்போது தோன்றிய உணவுவிடுதிக் கலாச்சாரம் சுவிஸ் பட்டி,தொட்டியெங்கும் பரவியது. அவற்றிற்கான வேலையாட்களை போர்த்துக்கல், ஸ்பெயின், (முன்னாள்) யூகோஸ்லேவியா போன்ற நாடுகளில் இருந்து தருவித்தார்கள். அவர்களுக்கான தொழில் அனுமதிப் பத்திரம் வருடத்திற்கு ஒன்பது மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வசித்திருந்தால், நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் ஒன்பது மாத விசா முறை மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்குவதை தடை செய்திருந்தது.

சுவிட்சர்லாந்தில் அகதிகளைப் பதிவு செய்யும் முறை, அவர்களது சமஷ்டி அரசியலுக்குட்பட்டது. ஜெர்மன் எல்லையோர நகரமான பாசல், பிரெஞ்சு எல்லையில் உள்ள ஜெனீவா போன்ற இடங்களிலேயே, அகதிகளைப் பதியும் மையங்கள் உள்ளன. அங்கிருந்து கன்டொன் (மாநிலம்) தலைநகரங்களுக்கு மாற்றி விடுவார்கள். சமஷ்டி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், அகதிகளை தமது தொழிற்துறை விருத்திக்கு தேவையான உழைப்புச் சக்தியாக கருதுகின்றன. அதற்கேற்றாற்போல் அகதிகளை தொலை தூர மலைக் கிராமங்களுக்கு மாற்றி விடுகின்றன. அங்கிருக்கும் உள்ளூராட்சி சபை எப்பாடு பட்டாவது அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலைக்கு அமர்த்தி விடுகிறது. பல அகதிகளுக்கு இந்த நடைமுறை பிடித்திருந்தது. உழைக்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியில் தமது தஞ்ச விண்ணப்பத்தையும் மறந்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக தங்கி தொழில் புரிந்தவர்களுக்கு, நிரந்தர தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப் பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அகதிகள், இலங்கைக்கு சென்று உறவினரை சந்தித்து விட்டு வந்தார்கள். தற்போது புதியதோர் பிரச்சினை கிளம்பியது. இலங்கை சென்று வந்த பலர், சுவிஸ் குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளானார்கள். "அகதித் தஞ்சம் கோரும் பொழுது, இலங்கை திரும்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறியவர்கள், தற்போது எப்படி தாமாகவே சென்று வந்தார்கள்?" போன்ற கேள்விகளால் குடைந்தெடுத்தார்கள். சிலர் தமது உற்றார், உறவினரைக் காண்பதற்கு ஆபத்தை துச்சமென மதித்து சென்றதாக கூறினார். வேறு சிலரோ தாம் பணம் சம்பாதிக்கவே சுவிட்சர்லாந்து வந்ததாக உண்மையை போட்டுடைத்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில், அளவுக்கதிகமான அகதிகளின் வரவும், அதற்கு எதிர்வினையாக தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியும், கூடவே பொருளாதார பிரச்சினையும், பல அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்க காரணமாகின. அதுவரை தஞ்சம் கோருவதில் அதிக அக்கறை காட்டாத அகதிகள், வக்கீல் செலவு, மேன்முறையீடு என்று அலைய வேண்டியேற்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்ட தமிழ் அகதி ஒருவர் சித்திரவதைக்கு உள்ளானார். சிறிது காலத்தின் பின்னர் அவர் ஜெர்மனி வந்து தஞ்சம் கோரி, அகதியாக அங்கீகரிக்கப் பட்டார். சுவிட்சர்லாந்தில் இருந்த காலத்தில், அவரது வழக்கில் சுவிஸ் அரசு மோசடி செய்த விபரம் ஊடகங்களுக்கு கசிந்தது. இந்த அவமானத்தால் நாணமுற்ற சுவிஸ் அரசு அனேகமாக எல்லா ஈழத் தமிழ் அகதிகளையும் அங்கீகரித்தது. சில காலம் போன பின்னர், பழைய குருடி கதவைத் திறடி கதை தான். புதிய அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கின்றது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளில் பலர் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்று விட்டனர். அதுவரையும் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யக் கிளம்பினார்கள். தனியாக வந்தவர்கள் துணையோடு இல்லற வாழ்வில் இறங்கிய பின்னர், அவர்களது தேவைகளும் அதிகரித்தது. சொந்தமாக கார் வேண்டும், வீடு வாங்க வேண்டும், என்று குடித்தனம் நடத்த வந்த இல்லத்தரசிகளும் நச்சரித்தார்கள். இணங்கா விட்டால், "கையாலாகாத" கணவனிடம் இருந்து விவாகரத்து கோரினார்கள். இன்றைய சுவிஸ் தமிழ் சமூகம் சொந்த வீடு, வாகனம் என்று ஒரு பக்கம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் குடும்ப சச்சரவுகள், விவாகரத்துகள், இதய நோய் போன்றனவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனைகளை மறைப்பதற்கு "புகலிட தமிழ்க் கலாச்சாரம்" என்ற மேல்பூச்சு பூசப்படுகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாட்டுடன் ஒட்டாமல் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் மண்ணில் காலூன்றுதல் என்பதன் அர்த்தம், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என தவறாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. பெற்றோரைப் போலவே தவாறான புரிதலைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரில் சிலர், ஐரோப்பிய பாணி நாகரீகத்தை எதிர்ப்புக் கலாச்சாராமாக்கிக் கொள்கின்றனர். இன்றைய ஐரோப்பிய சமூகம் பல வழிகளிலும் விழிப்புணர்வு பெற்று வருகின்றது, சுவிஸ் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள ஊடகங்கள் சினிமா தொழிற்துறை பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லி மக்களை மாயைக்குள் வைத்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்கின்றன. இதனால் இனிக்க இனிக்க பேசும் வியாபாரிகளிடம் மக்கள் ஏமாறுவது குறைவு. ஆனால் தமிழர்களின் வீடுகளைத் தேடிவரும் ஐரோப்பியத் தமிழ் ஊடகங்களின் பார்வைப்புலன் கோடம்பாக்கத்திற்கு அப்பால் விரிவடைவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆடம்பர வாழ்வுக்கான அவாவை, காப்புறுதி நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. சொத்துகளை சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டாமா? அதற்காக காப்புறுதி நிறுவனங்கள் வீட்டுப் படியேறி வருகின்றன. "சுவிஸ் போன எனது பிள்ளைகள் ஒரு வருடத்தில் வீடு வாங்கி விட்டார்கள்." என்று கூறி ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்மார் வாழும் நாட்டில் இருந்து வந்தவர்களல்லவா? சுவிஸ் வந்து தொழில் செய்து கையில் கொஞ்சம் காசும் சேர்ந்து விட்டால், வீட்டுக்கடன் எடுத்தாவது சொந்த வீடு வாங்குகிறார்கள். என்னைப் போல இருபது வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து வந்தவர்களில் என்பது வீதமானோர் காணி வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஒரு புறம், இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இடைத் தரகர்கள் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொள்கின்றனர். மறு புறம், கடன் வழங்கும் வங்கிகள் வாழ்க்கை பூராவும் வட்டி கட்ட வைக்கின்றன.

"தமிழர்கள் கடின உழைப்பாளிகள்." என்று புகழுரை வழங்கிய படியே, சுவிஸ் ரெஸ்டாரன்ட் முதலாளிகள் தமிழரின் உழைப்பை சுரண்டி, இன்னொரு ரெஸ்டாரன்ட் போட்டார்கள். தற்போது சுவிஸ் வங்கிகளும் தமிழரின் உழைப்பில் பங்கு கேட்கின்றன. வாங்கிய வீட்டுக்கு கடன், வேறு தேவைகளுக்கென வாங்கிய மேலதிக கடன், என்று ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளும் கேட்கும் தொகையை அள்ளி வழங்குகின்றன. அவர்களுக்கென்ன? கடனைக் கொடுத்து விட்டு, அதேயளவு, அல்லது அதற்கும் மேலான பணத்தை வட்டி என்ற பெயரில் அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் காசு உற்பத்தி செய்கின்றன." என்ற பொருளாதார பாடம் இங்கே நிரூபணமாகின்றது.

சுவிட்சர்லாந்து வெளிப் பார்வைக்கு அழகாகத் தான் தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால் அது உள்ளே அழுகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை அதிர வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சுவிஸ் பொருளாதாரத்தின் முதுகெலும்பான வங்கிகளே, தேசத்தின் அழிவையும் தேடித் தரவிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் குறைந்த வரி வீதத்தை பயன்படுத்தி, ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புப் பணத்தை வைப்பிலிட்டு வந்தார்கள். தற்போது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக கறுப்புப் பணம் வைப்பிலிட்டோரின் விபரங்களை வெளியிட வேண்டியுள்ளது. G 20 நாடுகளின் மகாநாட்டு தீர்மானங்கள் சுவிட்சர்லாந்தின் தலை மீது இடியாக இறங்கியுள்ளது.

இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் நடந்ததைப் போல, தகுதியில்லாதவர்க்கெல்லாம் வங்கிக்கடன், வீட்டுக்கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கடன் எடுத்தவர்கள் எல்லோரும் ஒழுங்காக தவணை முறையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தக் கடன்களை எடுத்தவர்களில் பெரும்பான்மையானோர், அடிமட்ட தொழில்களை செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பொருளாதார பிரச்சினை வரும் பொழுது, வராக் கடன்கள் அதிகரிக்கும். அந்த நெருக்கடி மாயப் பொருளாதார கண்ணாடி மாளிகையை நொறுங்கச் செய்யும். அப்படியான ஒரு கலியுகம் தோன்றினால், சுவிட்சர்லாந்தில் வாழும் புகலிடத் தமிழரின் நிலை திரிசங்கு சொர்க்கமாகி விடும். சுவிஸ் அரசியல்வாதிகள் சிலர் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு வைத்திருக்கிறார்கள். தீவிர வலதுசாரிகள் பொதுத் தேர்தலுக்கு வைக்கப்பட்ட விளம்பரத் தட்டியில், வெள்ளாடுகள் சேர்ந்து ஒரு கருப்பு ஆட்டை உதைத்து விரட்டுவது போல வரைந்திருந்தார்கள். இன்று சுவிஸ் வெள்ளாடுகளின் செல்வந்த வாழ்வுக்கு கருப்பு ஆடுகளின் உழைப்பு தேவைப்படுகின்றது. அதனால் இப்போதைக்கு யாரும் உதைத்து விரட்ட மாட்டார்கள்.

(முற்றும்)


பகுதி : ஒன்று
சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

Thursday, July 22, 2010

சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

(பகுதி : ஒன்று)

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் தமிழ் அகதிகள் இலங்கையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் தப்பி வந்த அகதிகளையும் சந்தித்தேன். அவர்கள் தம்மை அணுகும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். யாருடனும் மனம் விட்டு பேச அஞ்சுகிறார்கள். தாயகத்தின் கசப்பான அனுபவங்களை நேசில் சுமந்த வண்ணம் பிழைப்பதற்கு வழி தேடி அலைகின்றனர். அகதிகளுக்கான வேலை வாய்ப்பு இப்போதெல்லாம் முன்னரைப் போலல்ல. அங்கீகரிக்கப்படாத வரை சட்டப்படி வேலை செய்ய முடியாது. அதனால் தமிழ் முதலாளிகளின் கடைகளில் ஆயிரம் பிராங்குகளுக்கு வேலை செய்கிறார்கள். இது அந்நாட்டின் அடிப்படை சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி.

இருபது வருடங்களுக்கு முன்னர் வந்த பல தமிழ் அகதிகள், இன்று பிரஜாவுரிமையும் பெற்று விட்டார்கள். தனி மரமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்று குடும்பத் தலைவனாக பொறுப்புகளை தலையில் சுமந்த படி திரிகின்றனர். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கின்றனர். காணி வாங்கி வீடு கட்டுகின்றனர். குடும்பத்திற்கு இரண்டு கார் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயரும் போதே செல்வந்த ஐரோப்பிய கனவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என கருதிக் கொண்டார்கள். "ஐரோப்பாவில் எல்லோரும் சொந்த வீட்டில் வாழ்கிறார்கள், எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள்." எல்லோரும் என்பது எந்தவொரு புள்ளிவிபரத்தினதும் அடிப்படையிலும் சொல்லப்படுவதல்ல.

தெற்காசிய நாடுகளில் பல தாழ்த்தப்பட்ட சாதியினரும் முதலாளித்துவ வளர்ச்சியினூடே வசதிகளைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். அதைக் காட்டியே மேலெழுந்தவாரியாக சாதியம் மறைந்து விட்டதாக கருதிக் கொள்வதைப் போன்றே, மேலை நாடுகளிலும் நிலைமை மாறியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் மிக மோசமான இனவாதம் மறைபொருளாக உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. பொதுப் போக்குவரத்துகளில் கருப்பனுக்குப் பக்கத்தில் உட்கார மறுக்கும் வெள்ளையர்களைக் கொண்ட நாடு இது. இளம் சமுதாயத்தினர் மத்தியில் நிறவெறி வெளிப்படையாக காணப்படாத போதிலும், பல பொது இடங்களில் நான் கண்கூடாக கண்ட அனுபவம் அது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தமக்கென சொந்த வாகனத்தில் பயணம் செய்வது இனத் தூய்மையை பாதுகாக்க உதவுகின்றது.

ஈழத் தமிழர்கள் செய்யும் தொழில்களைப் பொறுத்த வரை, இருபது வருடங்களுக்குள் பெரிய மாற்றமெதையும் நான் காணவில்லை. முதலாம் தலைமுறை தமிழ் குடியேறிகள், தற்போதும் ரெஸ்டாரன்ட் சமையலறை உதவியாளர்களாக, அல்லது வெதுப்பக (பேக்கரி) தொழிலாளிகளாக பணி புரிகின்றனர். சுவிஸ் முதலாளிகள் கறுப்புத் தமிழரை ரெஸ்டாரன்ட் உள்ளேயும், வெள்ளையின ஐரோப்பியரை வரவேற்பாளர்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். பல்லினத்தவரும் வருகை தரும் பெரும் நகரங்கள் விதிவிலக்காக இருக்கலாம். நான் சுவிசில் இருந்த காலங்களில் நன்றாக மொழிபேசும் சிலர், வெயிட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் முதலாளிகள் கூறியதாவது: "நான் தகுதியைப் பார்த்து உங்களை வேலைக்கு எடுக்கலாம். ஆனால் ஒரு கருப்பன் உணவு பரிமாறினால், சுவிஸ்காரர்கள் வரமாட்டார்கள்!"

இருபது வருடங்களுக்கு பின்னர் நான் பார்த்த சுவிட்சர்லாந்து நிறவாதமற்ற நாகரீகமடைந்த நாடாக மாறிவிடவில்லை. சுவிஸ் கல்வி கற்ற இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர் சிலர் அரசியலில் ஈடுபட்டு மாநில அவைக்கு கூட தெரிவாகியுள்ளனர். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒரு ஆப்பிரிக்கரின் கதையைக் கேட்டால், இனவாதம் எங்கே எல்லை வகுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளின் சமூகசேவையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே, அவர் பாராளுமன்ற உறுப்பினரானார். அவர் இன்று "கள்ள வாக்கு" போட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வாக்குச்சீட்டு வீடு தேடி வரும். வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்த சலுகையை பயன்படுத்தி அரசியல் பிரக்ஞை அற்ற வெளிநாட்டவரின் வாக்குகளை தனக்கே போடுமாறு செய்தார், என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கனவான்களின் நாட்டில் வெள்ளையரின் ஊழல்களை கண்டுகொள்ளாத ஊடகங்கள், பூனையை யானையாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன.

சுவிட்சர்லாந்தில் பணம் சேர்த்த தமிழர்கள் சிலர், தாமே உணவுவிடுதிகளை சொந்தமாக நிர்வகிக்கின்றனர். தரநிர்ணயத்திற்கு பேர் போன சுவிட்சர்லாந்தில், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகளில் அகப்பட்ட உணவுவிடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. முதல் நாள் பொரித்த சமையல் எண்ணையை கொட்டாமல் வைத்திருந்தால் கூட இமாலயத் தவறாகலாம். அதே நேரம் நான் முன்பு வேலை செய்த உணவுவிடுதி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்பே இறுதிப் பாவனைத் தேதி முடிவடைந்த இறைச்சியை குளிரூட்டியில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். உணவுண்ண வருபவர்களுக்கு சமையலறையில் நாட்பட்ட பதார்த்தங்கள் சமைக்கப்படுவது தெரியாது. வெள்ளையின சுவிஸ்காரரான அந்த ரெஸ்டாரன்ட் முதலாளிக்கு தெரிந்தவர்கள் உள்ளூராட்சி சபையில் இருப்பதால், எந்தவொரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியும் எட்டியும் பார்ப்பதில்லை.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்துக்கு நேரே வந்த ஈழத் தமிழர்கள் மிகக் குறைவு. அனேகமாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அயல்நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியவர்களே பின்னர் சுவிட்சர்லாந்து நோக்கி படையெடுத்தார்கள். சுவிசில் கொடுக்கப்படும் ஊதியம் அதிகம் என்ற செய்தியே, அவர்களை கவர்ந்திழுத்த காந்தமாகும். அன்று முதல் இன்று வரை சுவிட்சர்லாந்தில் ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் அதே நேரம் ஐரோப்பாவிலேயே வாழ்க்கைச் செலவு கூடிய நாடும் அது தான். குப்பை கொட்டுவதென்றாலும் அதற்கென அதிக விலையில் விற்கப்படும் பைகளை வாங்கித் தான் வீச வேண்டும். வலது கையால் கொடுப்பதை, இடது கையால் வாங்கும் கண்கட்டி வித்தை தெரிந்தவர்கள் சுவிஸ் ஆட்சியாளர்கள்.

(தொடரும்)

Wednesday, December 02, 2009

ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்


1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.

கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.

வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.

83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி "காணாமல்போனார்கள்." சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.

இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.

போராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.

ராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.

1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.

முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.

பல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா? அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா?" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.

கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.

பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.


(...to be continued)

"(உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.)
____________________________________________________________________


தொடரின் முன்னைய பதிவுகள்:
4.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்
3. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்
2.தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்
1.கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்

Tuesday, December 01, 2009

ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்


மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொது நலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன. இலங்கையில் தமிழருக்கு கேட்ட உடனேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். மேற்குலக நாடுகளில் அகதிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதும், அதில் சிக்கனமாக செலவு செய்து மிகுதியை வீட்டுக்கு அனுப்புவதுமான விஷயம் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

பெரும்பாலும் கொழும்பு நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்ப்பாணத்தில் பணக்கார விவசாயிகளின் பிள்ளைகள் போன்றவர்களே ஆரம்பத்தில் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள். இதனால் இப்போதும் சில ஐரோப்பிய நாடுகளில், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஒன்றில் பிரதேசவாரியாக, அல்லது சாதிரீதியாக, அல்லது உறவுக்காரர்களாக, இவ்வாறு ஏதாவதொரு ஒற்றுமையைக் கொண்டிருக்க காணப்படுவர். குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு சென்றால், அவர் பின்னர் இன்னொரு குடும்ப உறுப்பினரை அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்போதும் சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் வெளிநாடு வந்துவிட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதை கேட்கலாம்.

புலம் பெயர்வது பல வழிகளில் சாத்தியமாகிற்று. ஒரு மேற்குலக நாட்டிற்கு நேரடியாக விசா எடுத்து சென்று பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது இலகுவான வழி. இருப்பினும் ஒரு சிறு பிரிவினர், இந்தியா சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி என்று நாடு விட்டு நாடு போய், கடைசியாக மேற்கு ஐரோப்பா போய்ச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்தக் காலங்களில் தேசங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைவு என்பதால், எல்லையில் வைத்தும் நுழைவு விசா கிடைத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விசா கிடைப்பது கடினம். அதனால் திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது.

வெளிநாடு செல்வதென்றால், ஆங்கிலம் சரளமாகத் தெரிய வேண்டும் என்று அப்போதும் பலர் நினைத்தார்கள். ஆனால் இந்தியா முதல் போர்ச்சுக்கல் வரை அரைவாசி உலகை சுற்றி வந்த பலருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரிந்திருந்தது. அதிகம் படித்திருக்கவுமில்லை. ஆனால் வரைபடம் பார்த்து செல்லுமளவு பொது அறிவு இருந்தது. வாய் இருந்தால் வங்காளம் போகலாம் என்ற பழமொழிக்கேற்ப நடந்து கொண்டார்கள். அவ்வாறு அன்று துணிச்சலாக பயணம் செய்த சிலர் பின்னர் பிறரை தம்முடன் கூட்டிச் சென்றனர். அந்த வாய்க்காரர்கள், பிற அப்பாவித் தமிழர்களை பணத்திற்காகவேயன்றி, தர்மத்திற்காக அழைத்துச் செல்லவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சிறந்த ரயில் போக்குவரத்து உள்ளது. தேசங்களுக்கிடையே ஓடும் 'இன்டர் சிட்டி' ரயில்களில் உறங்களிருக்கைப் பெட்டிகள் இருக்கும். இரவில் படுக்கையாக மாற்றப்படும் இருக்கைகளுக்கு கீழே ஒளிந்து கொள்வார்கள். அந்தப் பெட்டியில் இருக்கும் பயணிகள் பார்க்காத வரை, அல்லது காட்டிக்கொடுக்கா விட்டால் எல்லைகளில் தப்பி விடலாம். இன்னொரு வழி ரயில் பெட்டிகளில் இருக்கும் மல சல கூடம். கூரையில் இருக்கும் சிறிய கதவை கழற்றி விட்டு ஒரு ஆள் ஒளிந்து கொள்ளலாம். எல்லைகளில் சோதனைக்காக ரயில் நிற்கும் போது, மலசல கூடத்தில் யாரையும் இருக்க விடுவதில்லை. எங்காவது பிடி பட்டால் அந்த நாட்டிலேயே அகதித் தஞ்சம் கேட்டு விட வேண்டும்.

மேற்கு-கிழக்கு ஜெர்மனிகளின் பிரிவினையும் அகதிகளுக்கு உதவி செய்தது. முதலாளித்துவ ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும், சோஷலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசும் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு ஜெர்மன் தூதுவராலயம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கிக் கொண்டிருந்தது. கிழக்கு பெர்லின் விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே, சில டாக்சிக் காரர்கள் தயாராக நிற்பார்கள். குறிப்பிட்ட தொகையை பேரம் பேசினால், மேற்கு பெர்லினுக்குள் கொண்டு போய் விடுவார்கள். இரண்டு பெர்லினுக்கும் இடையில் நிலக்கீழ் சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சுரங்க ரயில் பாதையும் மேற்கு பெர்லினுக்குள் நுழையும் வழியாக இருந்தது.

அந்தக் காலத்தில், தமது நாட்டிற்குள் அகதிகள் வந்து குவிவதை கிழக்கு ஜெர்மன் அரசு நன்றாகவே அறிந்திருந்தது. ஆனால் வருபவர்கள் யாரும் தனது நாட்டினுள் தங்க மாட்டார்கள் என்பதையும், அனைவரும் மேற்கு ஜெர்மனிக்குள் நுழையவே விரும்புவர் என்பது தெரிந்த விடயம் தான். ஆகவே தனது எதிரியான மேற்கு ஜெர்மனிக்கு தலையிடி கொடுப்பதற்காக அகதிகளை அனுமதித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஜெர்மன் அரசோ, கம்யூனிசத்தில் வெறுப்புற்ற கிழக்கு ஜெர்மன் அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து எல்லைக்காவலை தளர்த்தி இருந்தது. இந்த சலுகையை மூன்றாம் உலக அகதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்திருக்கவில்லை. இன்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களில் பலர், அன்று பெர்லின் வழியாக வந்து சேர்ந்தவர்கள் தான். அதனால் ஜெர்மனிக்கு "பழசு" என்ற அடைமொழியும் உண்டு.

மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த அகதிகள் அனேகமாக தத்தமது மாஜி காலனியாதிக்க எஜமானர்களை நோக்கியே செல்வது வழக்கம். உதாரணமாக பிரான்ஸில் அல்ஜீரிய அகதிகள், போர்ச்சுகல்லில் அங்கோலா அகதிகள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக காலனியாதிக்க நாடுகளே தமது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, அங்கிருந்து எவராவது தனது நாட்டில் வந்து குடியேறினால் பிரஜாவுரிமை கொடுப்பார்கள். இந்தக் கவர்ச்சிக்கு மயங்கி பெருமளவு மக்கள் சென்று குடியேறும் வேளை, அந்த சட்டத்தை இரத்து செய்வார்கள். அதற்குப் பிறகு அகதியாக செல்வது தான், புதிய குடியேறிகளுக்கு முன்னால் இருக்கும் தெரிவு. இரண்டாவது காரணம் காலனிய மொழி. மூன்றாவதாக பல உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு காலனியாதிக்க நாடுகளின் தலையீடு காரணமாக உள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள், முன்னாள் காலனிய எஜமானான பிரிட்டனுக்கு சென்ற போது, அகதி தஞ்சம் கொடுக்கா விட்டாலும், நாட்டினுள் இருந்து வேலை செய்ய அனுமதி கிடைத்தது. இது காலப்போக்கில் உழைப்பை சுரண்ட வழிவகுக்கும் வதிவிடப்பத்திரம் கொடுக்கும் சட்டம் கொண்டுவர உதவியது. இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் மூன்றே மூன்று ஈழத் தமிழருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கியது. அதில் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன். எழுபதுகளில் யாழ் நகரில் இடம்பெற்ற, மேயர் துரையப்பாவின் கொலை தான் தமிழீழ போராட்ட வரலாற்றின் முதலாவது அரசியல் கொலை. கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் நபர்கள் சிலரின் படங்களை போஸ்டராக அடித்து காவல்துறை நாடு முழுவதும் ஒட்டியிருந்தது. அதில் காண்டீபனின் பெயரும் இருந்தது. அந்த போஸ்டரை வைத்து தான், காண்டீபனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்தது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள், இலங்கையில் அப்பாவி இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவதையும், சித்திரவதை செய்யப்படுவதையும் எடுத்துக் காட்டியே தஞ்சம் கோருவது வழக்கம். சிலர் அரசியல் படுகொலையான துரையப்பா கொலையில் தேடப்படுவதாக சொன்னார்கள். பலருக்கு என்ன சொல்வதென்றே தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஒன்றில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருப்பர், அல்லது அரச அடக்குமுறைக்கு முகம் கொடுக்காதவர்களாக இருந்திருப்பர். இனப்பிரச்சினை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத அவர்களின் ஒரே எண்ணம், மேற்குலக நாடொன்றில் அகதி என்று சொன்னால் மட்டும் போதும் என்பதாக இருந்தது.

அப்போதெல்லாம் இலங்கையில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் இங்கிலாந்து தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் குழப்பகரமான தஞ்சக் கோரிக்கைகள் காரணமாக, பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவ்வாறு திரும்பி வந்தவர்களை கொழும்பு விமானநிலைய காவல்துறை கைது செய்து, சித்திரவதை செய்ததாக செய்திகள் வெளியாகின. இருந்தாலும் அப்போது கூட மேற்குல நாடுகள் இலங்கை அகதிகள் தொடர்பாக கரிசனை கொள்ளவில்லை. 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

(தொடரும்)

தொடரின் முன்னைய பதிவுகள்:
3. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்
2.தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்
1.கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்