கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி.
சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமக்கு சொந்தம் என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்னார்கள். தமிழர்களோ அதற்கு பதில் சொல்வது போல, தாம் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்றும், சிங்களவர்கள் தமக்குப் பிறகு வந்தவர்கள் என்றும் சொன்னார்கள். சிங்களவர்கள் தமிழர்களை வென்ற துட்ட கெமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்கள் தம்மை நவீன துட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல்லாள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக்கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம், நவீன தமிழீழத்தின் அடிப்படையாகியது.
யாழ்ப்பாணத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருந்த எனது பெற்றோரை போன்றவர்கள், உத்தியோகம் கிடைத்து கொழும்பில் குடியேறிய காலத்தில் இருந்து தமிழ் அடையாளத்தை தேடிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மை சிங்கள இனம் வாழும் கொழும்பு மாநகரில், இந்துக் கோயில்களில் நடக்கும் வெள்ளிக்கிழமை பூசைகளும், திருவிழாக்களும் தமிழ் அடையாளத்தின் பெருமிதங்கள் ஆகின. தமது சொந்த ஊரில் உள்ளதை விட, கொழும்பில் கோயிலுக்கு செல்லும் அதிகமான பக்தர்கள் தமிழ் கலாச்சார உடை அணிவதாக பெருமைப்பட்டனர்.
ஆரம்ப காலங்களில் தமிழ் தேசியவாதக் கருத்துகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கு மாகாணங்களை விட, கொழும்பில் தான் இலகுவில் எடுபட்டது. அதற்குக் காரணம்:
1. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு வெடிக்கும் இனக்கலவரங்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனேகமாக கொழும்பு மாநகரத்தில் மட்டுமே இடம்பெறும். அவர்களது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கும் சிங்களப் போலிசும், குண்டர்களும், தொடர்த்து பிற தமிழர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டுவார்கள். அப்போதெல்லாம் கொழும்புத் தமிழர்கள் பேரினவாத அடக்குமுறைக்கு முகம் கொடுத்த அளவிற்கு, குறிப்பாக வட மாகாணத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.
2. கிழக்கு மாகாணத் தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களினால் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைமையில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் இருந்ததால், சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் முதன்மைப் பிரச்சினையாகவில்லை. மேலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலங்கை ஏழைத் தமிழர்கள்.
3. தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள், அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கொழும்பிலும், சிங்களப் பகுதிகளிலும் நிறைய சொத்துகள் இருந்தன. ஐம்பதுகளில் பண்டாரநாயக்க பிரதமரான பின்னர் நிலா உச்சவரம்புச் சட்டம் மூலம் பெருமளவு காணிபூமிகள் பறிக்கப்பட்டன.
4. கொழும்பில் நகரமயப்பட்ட சமுதாயத்தில், சாதிவேற்றுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அனைவருடனும் கலந்து பழக வேண்டிய நிலைமை. அப்படியான சூழலில் தேசிய இன அடையாளம் உருவாவது இயற்கையானது. யாழ் குடாநாட்டில் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவம் இன்னும் எஞ்சியிருந்தது. அங்கே தமிழன் என்ற இன அடையாளம் ஏற்பட சாதிய அடக்குமுறை தடையாக இருந்தது. இதே நிலைமை புலம்பெயர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்ததை பின்னர் பார்க்கலாம்.
அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு பாடசாலை தொடங்கிய போது, எம்மைப் போல கலவரத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். "அகதிகள் தங்கியிருந்த வகுப்பறைகள்" என்ற யதார்த்தம் பல மாணவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தது. இருப்பினும் கலவரம் பற்றிய தமது அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழங்கிக் கொண்டிருந்த தேசியவாதக் கருத்துகள் எமது பாடசாலைக்குள்ளும் புகுந்து கொண்டது. அவர்களது பெற்றோரிடமிருந்தே அரசியலும் வந்தது. வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைக்கும் கோரிக்கை மாணவர்களையும் வசீகரித்திருந்தது. தமிழ் ஈழம் எப்படி இருக்கும் என்று ஆளுக்கொரு கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத மாணவர்களும் இருந்தனர். அவர்கள் அனேகமாக மலே, அல்லது இந்திய வம்சாவழியினர்.
ஒரு சில வருடங்களுக்குப் பின்னர், "பாதுகாப்புக் காரணங்களுக்காக" எமது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தது. அதாவது ஒரு சிங்கள இடத்தில் வாழ்வதை விட, தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு சில வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறப்போகின்றமை பற்றி அப்போது யாருக்கும் தெரியாது. 1977 ம் ஆண்டிற்கு முன்னரே, வட இலங்கையில் புலிகள் என்ற தலைமறைவு இயக்கம் இயங்கி வருவதை பற்றி ஊடகங்கள் மூலமாக பலர் அறிந்திருந்தனர். ஆனால் 1983 ம் ஆண்டு வரை அரசாங்கமும், மக்களும் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. சில தீவிரவாத இளைஞர்களை பொலிஸ் படை சமாளித்து விடும் என்று நம்பினார்கள். இலங்கை இராணுவமும், விமானப்படையும், கடற்படையும் யாழ் குடாநாட்டில் சிறிய அளவில் நிலை கொண்டிருந்தன. இந்த முப்படைகள் சிறி லங்காவின் சரித்திரத்தில் எந்தவொரு போரிலும் ஈடுபட்டிருக்கவில்லை. வருங்காலத்தில் மிகப்பெரிய போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.
இங்கிலாந்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே செல்லக்கூடிய Oxford பலகலைக்கழகத்தில் பயின்ற ஜூலியஸ் ரிச்சார்ட் என்ற ஜெயவர்த்தன(ஜே.ஆர்.), இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவான காலம் அது. அதற்கு முன்னர் சிறிமாவோ தலைமையில் ஆட்சி செய்த (1970-1977) சோஷலிச அரசு நகர்ப்புறங்களில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டிருந்தது. கடைகளுக்கு முன்னாள் நீண்ட வரிசை நிற்பது அப்போது சர்வசாதாரணம். உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்தன. வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் காட்டில் மழை பெய்தது. யாழ்ப்பாண படித்த வாலிபர்களை கூட வன்னியில் சென்று விவசாயம் செய்யும்படி அரசு ஊக்குவித்தது. இதனால் அரைப் பாலைவனமான யாழ் குடாநாட்டில் விவசாயம் செய்வதை விட வன்னியில் அதிக பயன் பெறலாம் என் கண்டு கொண்டனர். இருப்பினும் 1977 தேர்தலில் மேற்குலக சார்பு ஜெயவர்த்தன ஈட்டிய மாபெரும் வெற்றி, விவசாயிகளின் பொற்காலத்திற்கு முடிவு கட்டியது.
ஜெயவர்த்தனையின் யு.என்.பி. கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய நவ-லிபரல்வாத அரசு, ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவுமணி அடித்தது. தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் தான், திறந்த சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜே. ஆர். மறைவிற்கு அமெரிக்காவின் டைம் சஞ்சிகை அஞ்சலி செலுத்துமளவிற்கு மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. 1983 ம் ஆண்டு தமிழர்க்கெதிரான இனக்கலவரத்தை யு.என்.பி. கட்சி தலைமையேற்று நடத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ஜே.ஆர். கம்யூனிச, அல்லது சோஷலிச கட்சிகளை கலவரத்திற்கு காரணமாக காட்டி தடை செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே அடியில் தமிழர்களையும், சிங்கள இடதுசாரிகளையும் வீழ்த்தினார்.
சர்வாதிகாரம் என கருதப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வந்தது. நவ-லிபரல் அரசு, ஒரு பக்கம் முழு இலங்கை மக்கள் மீதும் தாராள பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமுல் படுத்திக் கொண்டே, மறு பக்கத்தில் தமிழர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் மீது இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழரின் கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்ததை கூட பொறுக்க முடியாமல், விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. சனத்தொகையில் 12 வீதமான ஈழத்தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் அளவுக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவப் படுத்தியமை, அரசின் கண்ணில் முள்ளாக துருத்தியது. அதனால் தரப்படுத்தல் கொள்கை மூலம் யாழ்ப்பாண மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை மட்டுப்படுத்தியது.
________________________________________________________________________________
கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி. "உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.
4 comments:
உண்மையில் ஜேஆர் ஒரு நரி. ஆனால் இந்தியா ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்திக்கொண்டது.புலிகளும் ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்தினார்கள்.ஜேஆர் இந்தியாவுக்கெதிராக புலிகளைப்பயன்படுத்தினார்.
இந்த இடியப்பச்சிக்கலில் நசுங்கி நாயாப்போனது நாங்கள் தான்.
/"ஈழ நானூறும் புலம்பெயர் படலமும்"/
இந்நூல் விரைவில் வெளிவர என் வாழ்த்துக்கள்.
கருத்துக்கு நன்றி, சேரன் கிரிஷ்.
DJ நூல் வெளிவருவருவதற்கு தயாராகத் தான் இருக்கிறது.
Post a Comment