Friday, July 23, 2010

சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"


[ சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை - இரண்டாம் பகுதி]

பிற ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரினால், அவர் அகதியாக அங்கீகரிக்கப்படும் வரையில் வேலைக்கு போக முடியாது. ஆனால் சுவிட்சர்லாந்தில் ரெஸ்டாரன்ட் சமையலறை, துப்பரவு பணி, வெதுப்பகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அடிமட்ட தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்ய அகதிகளை பயன்படுத்தினார்கள். இதனால் சுவிஸ் அரசுக்கும் லாபம் இருந்தது. ஒரு அகதியை முகாமில் வைத்து பராமரிக்க தேவையான செலவை மிச்சம் பிடித்தது. மேலும் வேலை செய்யும் அகதி அரசுக்கு வரி கட்டுவதால், மேலதிக வருமானம் வேறு. காலப்போக்கில் அகதி உழைப்பாளர்களுக்கு பிரத்தியேகமான வரி அறவிட்டு அரசு மேலும் வருமானத்தை தேடிக் கொண்டது. ஒரே வேலைக்கு வழக்கமாக சுவிஸ் பிரஜைக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, அகதி உழைப்பாளிக்கு வழங்கும் சம்பளம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசால் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டது.

நான் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த காலங்களில், ரெஸ்டாரன்ட் வேலைகளுக்கு தமிழர்கள் வேண்டும் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்வார்கள். சுவிஸ் முதலாளிகள் தமிழ் தொழிலாளிகள் மீது அளவுகடந்த அன்பு காட்டுவதாக, இதைச் சிலர் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலான தமிழ் உழைப்பாளிகளுக்கு மொழித் தேர்ச்சி கிடையாது. அதனால் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வார்கள். அவர்களுக்கு சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் எந்த அறிவும் இல்லை. தொழிற்சங்கம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விபட்டிராதவர்கள். இப்படியான அருமையான தொழிலாளர்களை வேறெங்கு தேடினாலும் கிடைக்காது. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள், வந்தவுடனே உள்ளூர் மொழியை பேசக் கற்றுக் கொள்கிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் முதலாளி ஏய்க்க நினைத்தால், எதிர்த்துப் பேசி விட்டு கிளம்பி விடுகின்றனர்.

ரெஸ்டாரன்ட் இல்லாத சுவிஸ் கிராமத்தை காண்பது அரிது. பனிச் சிகரங்களால் சூளப்பட்ட மலைக் கிராமங்களில் வாழ்ந்த சுவிஸ் மக்கள், குளிர்காலத்தில் பட்டினியால் வாடிய காலம் மலையேறி விட்டது. உலகம் முழுவதிலும் இருந்து கறுப்புப் பணத்தை சேர்த்த சுவிஸ் வங்கிகள், தமது பிரஜைகளை நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் தள்ளி விட்டு பணத்தை சுழல விட்டது. அப்போது தோன்றிய உணவுவிடுதிக் கலாச்சாரம் சுவிஸ் பட்டி,தொட்டியெங்கும் பரவியது. அவற்றிற்கான வேலையாட்களை போர்த்துக்கல், ஸ்பெயின், (முன்னாள்) யூகோஸ்லேவியா போன்ற நாடுகளில் இருந்து தருவித்தார்கள். அவர்களுக்கான தொழில் அனுமதிப் பத்திரம் வருடத்திற்கு ஒன்பது மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வசித்திருந்தால், நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் ஒன்பது மாத விசா முறை மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்குவதை தடை செய்திருந்தது.

சுவிட்சர்லாந்தில் அகதிகளைப் பதிவு செய்யும் முறை, அவர்களது சமஷ்டி அரசியலுக்குட்பட்டது. ஜெர்மன் எல்லையோர நகரமான பாசல், பிரெஞ்சு எல்லையில் உள்ள ஜெனீவா போன்ற இடங்களிலேயே, அகதிகளைப் பதியும் மையங்கள் உள்ளன. அங்கிருந்து கன்டொன் (மாநிலம்) தலைநகரங்களுக்கு மாற்றி விடுவார்கள். சமஷ்டி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், அகதிகளை தமது தொழிற்துறை விருத்திக்கு தேவையான உழைப்புச் சக்தியாக கருதுகின்றன. அதற்கேற்றாற்போல் அகதிகளை தொலை தூர மலைக் கிராமங்களுக்கு மாற்றி விடுகின்றன. அங்கிருக்கும் உள்ளூராட்சி சபை எப்பாடு பட்டாவது அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலைக்கு அமர்த்தி விடுகிறது. பல அகதிகளுக்கு இந்த நடைமுறை பிடித்திருந்தது. உழைக்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியில் தமது தஞ்ச விண்ணப்பத்தையும் மறந்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக தங்கி தொழில் புரிந்தவர்களுக்கு, நிரந்தர தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப் பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அகதிகள், இலங்கைக்கு சென்று உறவினரை சந்தித்து விட்டு வந்தார்கள். தற்போது புதியதோர் பிரச்சினை கிளம்பியது. இலங்கை சென்று வந்த பலர், சுவிஸ் குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளானார்கள். "அகதித் தஞ்சம் கோரும் பொழுது, இலங்கை திரும்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறியவர்கள், தற்போது எப்படி தாமாகவே சென்று வந்தார்கள்?" போன்ற கேள்விகளால் குடைந்தெடுத்தார்கள். சிலர் தமது உற்றார், உறவினரைக் காண்பதற்கு ஆபத்தை துச்சமென மதித்து சென்றதாக கூறினார். வேறு சிலரோ தாம் பணம் சம்பாதிக்கவே சுவிட்சர்லாந்து வந்ததாக உண்மையை போட்டுடைத்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில், அளவுக்கதிகமான அகதிகளின் வரவும், அதற்கு எதிர்வினையாக தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியும், கூடவே பொருளாதார பிரச்சினையும், பல அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்க காரணமாகின. அதுவரை தஞ்சம் கோருவதில் அதிக அக்கறை காட்டாத அகதிகள், வக்கீல் செலவு, மேன்முறையீடு என்று அலைய வேண்டியேற்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்ட தமிழ் அகதி ஒருவர் சித்திரவதைக்கு உள்ளானார். சிறிது காலத்தின் பின்னர் அவர் ஜெர்மனி வந்து தஞ்சம் கோரி, அகதியாக அங்கீகரிக்கப் பட்டார். சுவிட்சர்லாந்தில் இருந்த காலத்தில், அவரது வழக்கில் சுவிஸ் அரசு மோசடி செய்த விபரம் ஊடகங்களுக்கு கசிந்தது. இந்த அவமானத்தால் நாணமுற்ற சுவிஸ் அரசு அனேகமாக எல்லா ஈழத் தமிழ் அகதிகளையும் அங்கீகரித்தது. சில காலம் போன பின்னர், பழைய குருடி கதவைத் திறடி கதை தான். புதிய அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கின்றது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளில் பலர் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்று விட்டனர். அதுவரையும் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யக் கிளம்பினார்கள். தனியாக வந்தவர்கள் துணையோடு இல்லற வாழ்வில் இறங்கிய பின்னர், அவர்களது தேவைகளும் அதிகரித்தது. சொந்தமாக கார் வேண்டும், வீடு வாங்க வேண்டும், என்று குடித்தனம் நடத்த வந்த இல்லத்தரசிகளும் நச்சரித்தார்கள். இணங்கா விட்டால், "கையாலாகாத" கணவனிடம் இருந்து விவாகரத்து கோரினார்கள். இன்றைய சுவிஸ் தமிழ் சமூகம் சொந்த வீடு, வாகனம் என்று ஒரு பக்கம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் குடும்ப சச்சரவுகள், விவாகரத்துகள், இதய நோய் போன்றனவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனைகளை மறைப்பதற்கு "புகலிட தமிழ்க் கலாச்சாரம்" என்ற மேல்பூச்சு பூசப்படுகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாட்டுடன் ஒட்டாமல் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் மண்ணில் காலூன்றுதல் என்பதன் அர்த்தம், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என தவறாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. பெற்றோரைப் போலவே தவாறான புரிதலைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரில் சிலர், ஐரோப்பிய பாணி நாகரீகத்தை எதிர்ப்புக் கலாச்சாராமாக்கிக் கொள்கின்றனர். இன்றைய ஐரோப்பிய சமூகம் பல வழிகளிலும் விழிப்புணர்வு பெற்று வருகின்றது, சுவிஸ் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள ஊடகங்கள் சினிமா தொழிற்துறை பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லி மக்களை மாயைக்குள் வைத்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்கின்றன. இதனால் இனிக்க இனிக்க பேசும் வியாபாரிகளிடம் மக்கள் ஏமாறுவது குறைவு. ஆனால் தமிழர்களின் வீடுகளைத் தேடிவரும் ஐரோப்பியத் தமிழ் ஊடகங்களின் பார்வைப்புலன் கோடம்பாக்கத்திற்கு அப்பால் விரிவடைவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆடம்பர வாழ்வுக்கான அவாவை, காப்புறுதி நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. சொத்துகளை சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டாமா? அதற்காக காப்புறுதி நிறுவனங்கள் வீட்டுப் படியேறி வருகின்றன. "சுவிஸ் போன எனது பிள்ளைகள் ஒரு வருடத்தில் வீடு வாங்கி விட்டார்கள்." என்று கூறி ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்மார் வாழும் நாட்டில் இருந்து வந்தவர்களல்லவா? சுவிஸ் வந்து தொழில் செய்து கையில் கொஞ்சம் காசும் சேர்ந்து விட்டால், வீட்டுக்கடன் எடுத்தாவது சொந்த வீடு வாங்குகிறார்கள். என்னைப் போல இருபது வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து வந்தவர்களில் என்பது வீதமானோர் காணி வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஒரு புறம், இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இடைத் தரகர்கள் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொள்கின்றனர். மறு புறம், கடன் வழங்கும் வங்கிகள் வாழ்க்கை பூராவும் வட்டி கட்ட வைக்கின்றன.

"தமிழர்கள் கடின உழைப்பாளிகள்." என்று புகழுரை வழங்கிய படியே, சுவிஸ் ரெஸ்டாரன்ட் முதலாளிகள் தமிழரின் உழைப்பை சுரண்டி, இன்னொரு ரெஸ்டாரன்ட் போட்டார்கள். தற்போது சுவிஸ் வங்கிகளும் தமிழரின் உழைப்பில் பங்கு கேட்கின்றன. வாங்கிய வீட்டுக்கு கடன், வேறு தேவைகளுக்கென வாங்கிய மேலதிக கடன், என்று ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளும் கேட்கும் தொகையை அள்ளி வழங்குகின்றன. அவர்களுக்கென்ன? கடனைக் கொடுத்து விட்டு, அதேயளவு, அல்லது அதற்கும் மேலான பணத்தை வட்டி என்ற பெயரில் அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் காசு உற்பத்தி செய்கின்றன." என்ற பொருளாதார பாடம் இங்கே நிரூபணமாகின்றது.

சுவிட்சர்லாந்து வெளிப் பார்வைக்கு அழகாகத் தான் தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால் அது உள்ளே அழுகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை அதிர வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சுவிஸ் பொருளாதாரத்தின் முதுகெலும்பான வங்கிகளே, தேசத்தின் அழிவையும் தேடித் தரவிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் குறைந்த வரி வீதத்தை பயன்படுத்தி, ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புப் பணத்தை வைப்பிலிட்டு வந்தார்கள். தற்போது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக கறுப்புப் பணம் வைப்பிலிட்டோரின் விபரங்களை வெளியிட வேண்டியுள்ளது. G 20 நாடுகளின் மகாநாட்டு தீர்மானங்கள் சுவிட்சர்லாந்தின் தலை மீது இடியாக இறங்கியுள்ளது.

இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் நடந்ததைப் போல, தகுதியில்லாதவர்க்கெல்லாம் வங்கிக்கடன், வீட்டுக்கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கடன் எடுத்தவர்கள் எல்லோரும் ஒழுங்காக தவணை முறையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தக் கடன்களை எடுத்தவர்களில் பெரும்பான்மையானோர், அடிமட்ட தொழில்களை செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பொருளாதார பிரச்சினை வரும் பொழுது, வராக் கடன்கள் அதிகரிக்கும். அந்த நெருக்கடி மாயப் பொருளாதார கண்ணாடி மாளிகையை நொறுங்கச் செய்யும். அப்படியான ஒரு கலியுகம் தோன்றினால், சுவிட்சர்லாந்தில் வாழும் புகலிடத் தமிழரின் நிலை திரிசங்கு சொர்க்கமாகி விடும். சுவிஸ் அரசியல்வாதிகள் சிலர் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு வைத்திருக்கிறார்கள். தீவிர வலதுசாரிகள் பொதுத் தேர்தலுக்கு வைக்கப்பட்ட விளம்பரத் தட்டியில், வெள்ளாடுகள் சேர்ந்து ஒரு கருப்பு ஆட்டை உதைத்து விரட்டுவது போல வரைந்திருந்தார்கள். இன்று சுவிஸ் வெள்ளாடுகளின் செல்வந்த வாழ்வுக்கு கருப்பு ஆடுகளின் உழைப்பு தேவைப்படுகின்றது. அதனால் இப்போதைக்கு யாரும் உதைத்து விரட்ட மாட்டார்கள்.

(முற்றும்)


பகுதி : ஒன்று
சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice post

Mohamed Faaique said...

நன்றி... சொந்த நாட்டை விட மற்ற எல்லா நாடுகளின் நிலையும் இதுதான்....

வடுவூர் குமார் said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் வலிக்கிறது.

Hai said...

நல்ல பதிவு நண்பரே.

Anonymous said...

பொருளாதார நெருக்கடி வெள்ளையர்களின் வீட்டு கதவை தட்டும் போதுதான் அவர்களின் உண்மை மனிதபிமானம் வெளியே தெரியவரும்.... அப்போது எல்லோருக்கும் நீங்கள் சொல்வது போல அந்த கறுத்த ஆடு நிலமைதான்....