Showing posts with label ஈழத் தமிழ் அகதிகள். Show all posts
Showing posts with label ஈழத் தமிழ் அகதிகள். Show all posts

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Sunday, June 19, 2016

அச்சே கடலோரம் தமிழ் அகதிகளின் அவலம் கண்டீரோ?


இந்தோனேசியாவில் அச்சே மாநிலக் கரையோரம் ஒதுங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் அவலம் இன்னமும் தொடர்கின்றது. ஒரு படகில் வந்த நாற்பது அகதிகளில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், பல பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த படகு பழுதடைந்து கரை ஒதுங்கிய போது, அச்சே மாநில காவல்படை அவர்களை கரைக்கு வர அனுமதிக்கவில்லை. சில பெண் அகதிகள் தாமாகவே கரையில் இறங்கிய பொழுது, பொலிசார் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக, இந்தோனேசிய அரசு அகதிகளை கரைக்கு வர அனுமதிக்க ஒத்துக்கொண்டது. படகை திருத்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டது. ஆனால், அச்சே மாநில அரசு தொடர்ந்தும் மறுத்து வந்தது. அகதிகளை இலங்கைக்கே திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

இந்தியப் படகொன்றில் பயணம் செய்த அகதிகள், நேரடியாக இலங்கையில் இருந்து கிளம்பிச் சென்றனரா என்பது தெரியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்றும் கருதப் படுகின்றது. அவர்கள் அவுஸ்திரேலியா சென்றாலும், அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. திருப்பி அனுப்பினால் அவர்கள் இலங்கைக்கு செல்வார்களா, இந்தியாவுக்கு செல்வார்களா என்பதிலும் தெளிவில்லை.

தமிழகத்தை சேர்ந்த "தமிழ் உணர்வுத்" தலைவர்களில் வைகோ மட்டுமே அகதிகளின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, மலேசியா பினாங்கு மாநிலத்தின் பதில் முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, "அச்சே மாநில அரசுக்கு தான் எழுதிய கடிதத்தின் பின்னர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக" அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

அகதிகளின் அவலத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதாகவே, பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை அமைந்துள்ளது. ஆளும் கட்சியான DAP உறுப்பினர். மலேசிய அரசுக்கு மிகவும் வேண்டப் பட்டவர். அவர் தமிழ் தேசியவாதி வேஷம் போடும் கொடுமை சகிக்கவொண்ணாத ஒன்று. 

விடுதலைப் புலிகளை தடைசெய்த மலேசிய அரசின் பிரதிநிதி, தமிழ் தேசியம் பேசுவது ஒரு சிறந்த நகைச்சுவை. அவரது தமிழீழ ஆதரவு உண்மையானது என்று நம்பும், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த அறிக்கையில் அளவுக்கு அதிகமாக தமிழ் தேசிய வாடை அடிப்பதால், பல தமிழ் உணர்வாளர்களும் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேராசிரியர் இராமசாமியின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:

//பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்...

ஆச்சே மக்கள் மனிதாபிமான மிக்க மக்கள்; தங்களைப் போலவே, நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களை எப்பொழுதும் அரவணைப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்று, ஆச்சேயின் சுயாட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலையால் நசுக்கப்பட்டு, இப்பொழுது அரசியல் வடிவம் கண்டுள்ளது. ஆச்சே மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தமிழீழ மக்கள் ஆதரவாகவே இருந்துள்ளனர். இவ்வேளையில் அதனையும் ஆச்சே மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று பேராசிரியர் இராமசாமி கூறியிருந்தார்....//

ஈழத்தமிழ் அகதிகள் ஒரு வார காலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். உணவின்றி நீரின்றி கஷ்டப் பட்டார்கள். இந்த அவலத்தை கண்ணுற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பதறித் துடித்த அளவிற்கு அச்சே மாநில அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இந்தோனேசிய மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த போதிலும், அச்சே மாநில அரசு அகதிகளை கரையொதுங்க அனுமதிக்க மறுத்தது.

கடந்த வருடம், இதே மாதிரி கடலில் தத்தளித்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகளை, அச்சே மாநில அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி உதவி கோரின. ஆயினும், "ரோஹிங்கியா அகதிகள் நாடற்றவர்கள்... தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லலாம்..." என்று அச்சே மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது. அச்சே மாநில பொலிஸ் தான், படகில் இருந்து குதித்து கரைக்கு வர முயன்ற அகதிகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து பயமுறுத்தியது.

பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டது போன்று, "அச்சே மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் தேசியவாத மட்டத்தில் கொள்கை உடன்பாடு இருப்பதாக" அங்கு யாரும் கருதவில்லை. அச்சே தனி நாடாக வேண்டுமென்று ஒரு தேசியவாத விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது உண்மை தான். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த அதே காலகட்டத்தில் தான், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் பேச்சுவார்த்தை நடத்தின. அவர்களுக்கும் நோர்வே தான் அனுசரணையாளர்.

இறுதியில், நோர்வேயின் மத்தியஸ்தத்தின் பின்னர், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் சமாதானப் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அந்த நேரத்தில் தான் சுனாமி ஆழிப் பேரலைகளினால் அச்சே மாநிலம் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அப்போது நோர்வேயும் சர்வதேச சமூகமும், அச்சே உதாரணத்தை பின்பற்றி, புலிகளும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திருந்தன. அப்போது, "அச்சே வேறு, தமிழீழம் வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது" என்று புலிகளும், ஆதரவாளர்களும் வாதாடி வந்தனர்.

அச்சே தேசிய இயக்கத்திற்கும், தமிழீழ தேசிய இயக்கத்திற்கும் இடையில், எந்தக் காலத்திலும் ஒருமைப்பாடு இருக்கவில்லை. அதற்குக் காரணம் தேசியவாத கொள்கையில் உள்ள குறைபாடு. உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், "தமது மொழி பேசும், தம்மின மக்களை" பற்றித் தான் அதிகம் அக்கறைப் படுவார்கள். அவர்கள் பிற இன மக்களை கண்டுகொள்வதில்லை. மொழி கடந்த ஒருமைப்பாடு இருக்குமாக இருந்தால், அது மதம் சார்ந்ததாக இருக்கும்.

தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு அப்பால் உலகில் ஏதும் இல்லை. இருப்பினும், தமிழ் தேசியவாதிகளில் பெரும்பான்மையானோர் (புலி ஆதரவாளர்கள் உட்பட), இந்து மத ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அச்சே தேசியவாதிகளும் அப்படித் தான். எந்த வித்தியாசமும் கிடையாது. அச்சே மொழி பேசும் மக்களைப் பற்றி மட்டுமே அவர்களது கவலை இருக்கும். அதற்கும் அப்பால், உலக இஸ்லாமியர்களைப் பற்றிக் கவலைப் படுவார்கள்.

இந்தோனேசியாவில், அச்சே மொழிச் சிறுபான்மையினருக்கும், ஜாவா மொழிப் பெரும்பான்மையினருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அச்சே தனி நாட்டுக்கான போராட்டம் மதம் சார்ந்து எழுந்தது. ஜாவா மொழி பேசும் பெரும்பான்மையினரும், அச்சே மொழி பேசும் சிறுபான்மையினரும் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தான். 

இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக, அச்சே சிறுபான்மையினர் பெருமளவில் மத அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை கறாராக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஷரியா சட்டம் கொண்டு வர வேண்டுமென்பது, அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கான முக்கியமான கோரிக்கையாக இருந்தது.

அச்சே மாநில அரசு, ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொண்ட காரணம், அவர்கள் முஸ்லிம்கள் என்பது தான். தற்போது கரையொதுங்கியுள்ள தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு அப்படி எந்தக் காரணமும் இருக்கவில்லை. பேராசிரியர் இராமசாமி குறிப்பிடுவது போன்று, "பொதுவான தேசியவாத உணர்வு" எதுவும் உலகில் இல்லை. தேசியவாதிகளுக்கு இடையில் அப்படி ஓர் ஒருமைப்பாடு ஏற்படுவது சாத்தியமே இல்லை. அவரவருக்கு அவர்களது மொழியும், இனமும் தான் பெரிதாகத் தோன்றும். அல்லாவிட்டால் ஒரே மத ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் தேசியவாதம்.


அச்சே கடலோரம் கரையோதிங்கிய தமிழ் அகதிகள் பற்றி இந்தோனேசிய தொலைக்காட்சி செய்தி அறிக்கை: 

Saturday, May 17, 2014

தமிழரை கியூபாவுக்கு அனுப்பி விடத் துடிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்

"சோஷலிசம் சிறந்தது என்று பேசும் தமிழர் எல்லோரும், கியூபாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே அகதித் தஞ்சம் கோருமாறு.... " ஒரு அறிவுஜீவி நண்பர், ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவரது ஆலோசனைக்கு முதற்கண் நன்றிகள்.

ஈழத் தமிழர்கள் யாராவது தமிழீழத்திற்கு ஆதரவாக பேசினால், அவர்களை தமிழ்நாட்டுக்கு போகுமாறு சொல்வதைப் போன்றுள்ளது மேற்படி நபரின் கூற்று. சிங்கள இனவாதிகளும், அதைத் தானே காலங்காலமாக ஈழத் தமிழர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 ஈழத்தில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழர்கள் கம்யூனிசம், சோஷலிசம் பேசுகிறார்கள் என்பதற்காக, அவர்களை எல்லாம் பிடித்து கியூபாவுக்கு நாடு கடத்தி விட்டால், அப்புறம் அங்குள்ள வேலைகளை யார் செய்வார்களோ தெரியவில்லை. மேட்டுக்குடியினரிடம் பணம் இருப்பதால், பங்களாதேஷ்ஷில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வார்களோ தெரியாது. சரி, அது போகட்டும். அது அவர்களது பிரச்சினை.

தற்போது, என்னிடம் பல அறிவுஜீவிகளும், "கியூபாவுக்கு போ!" என்று சொல்லி இருப்பதால், கியூபாவில் அகதித் தஞ்சம் கேட்பது எப்படி என்று விசாரித்துப் பார்த்தேன். கியூபாவில் எப்படிப்பட்ட அகதிகளை அனுமதிப்பார்கள்? தஞ்சம் கோரும் அகதிகள் என்ன காரணத்தை சொன்னால் அங்கீகரிப்பார்கள்? இது பற்றி எல்லாம் விசாரித்துப் பார்த்தேன்.

கியூபா இன்னமும் ஒரு வறிய நாடு தான். இருப்பினும், பல தசாப்த காலமாக கியூபாவில் பல வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோஷலிசப் புரட்சிக்கான கெரில்லாப் போர் நடக்காத லத்தீன் அமெரிக்க நாடு எதுவும் இருக்கவில்லை. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் பலருக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டுள்ளது.

எல் சல்வடோர், பிரேசில் ஆகிய நாடுகளில் ஏழை மக்களின் விடுதலைக்காக, மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து போதித்து வந்த கத்தோலிக்க பாதிரியார்கள் இருந்தனர். "விடுதலை இறையியல்" என்ற சித்தாந்தத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், அந்த நாடுகளில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரிகளினால் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். அதனால், நிறைய மார்க்சிய- கத்தோலிக்க பாதிரியார்கள் கியூபாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

சிலியில் சி.ஐ.ஏ. ஆதரவுடன் திடீர் சதிப்புரட்சி நடந்தது. இராணுவ ஆட்சியாளர்கள், வீடு வீடாகச் சென்று, நாட்டில் இருந்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளை எல்லாம் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தார்கள். ஆயிரக் கணக்கானோரை சித்திரவதை செய்து, கொலை செய்தனர். அதனால், சிலியில் இருந்து தனியாகவும், குடும்பமாகவும் தப்பியோடிய, ஆயிரக் கணக்கான இடதுசாரிகளுக்கு, கியூபாவில் அகதித் தஞ்சம் வழங்கப் பட்டது. கியூப அரசு, அவர்களுக்கான புதிய வீடுகளை கட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

லத்தீன் அமெரிக்க நாட்டு அகதிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு அமெரிக்க அகதிகளும் கியூபாவில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி இருந்த, "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பலர், கியூபாவில் அரசியல் தஞ்சம் கோரி, இன்னமும் அங்கே வாழ்கின்றனர்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, கியூபாவில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவருக்கு அகதித் தஞ்சம் வழங்கப் படுகின்றது: அகதியாக புலம்பெயர்ந்தவரின் சொந்த நாட்டில், 
  1. வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்க வேண்டும். 
  2. ஒரு ஆயுதபாணி விடுதலை இயக்கம், அந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசை கவிழ்த்து அங்கே சோஷலிச அரசை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க வேண்டும். 
  3. ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர், கம்யூனிச அல்லது இடதுசாரி சிந்தனையாளர்களை வேட்டையாடி கொன்று, சித்திரவதை செய்திருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இருந்து, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்களாம். 

ஆகவே, அறிவுஜீவி நண்பர்கள் என்னை கியூபாவுக்கு போகுமாறு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், கியூபாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு தேவையான பின்வரும் ஆதாரங்களை திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்: 
  •  இலங்கையில் இன முரண்பாடு எதுவும் இல்லை, அங்கே நடந்தது ஒரு வர்க்கப்போர். 
  •  ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு கம்யூனிசப் புரட்சி இயக்கம். 
  •  அவர்கள் அமைக்க விரும்பிய தமிழீழம் சோஷலிசப் பொருளாதாரத்தை கொண்டிருக்கும். 
  • இலங்கையில் மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பேசுவது தடை செய்யப் பட்டுள்ளது. 
  • ஸ்ரீலங்கா இராணுவம், கம்யூனிச, சோஷலிச நம்பிக்கையாளர்களை வேட்டையாடிக் கொன்று குவித்து வருகின்றது.


ஓர் அகதி, உலகில் எந்த நாட்டில் தஞ்சம் கோரினாலும், என்ன பிரச்சினை காரணமாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தார் என்பதற்கான காரணத்தைக் கூற வேண்டுமென்பது, உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகவே, காலதாமதம் செய்யாமல், மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை கொண்டு வந்து வந்து சமர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, December 02, 2009

ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்


1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.

கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.

வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.

83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி "காணாமல்போனார்கள்." சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.

இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.

போராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.

ராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.

1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.

முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.

பல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா? அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா?" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.

கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.

பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.


(...to be continued)

"(உயிர்நிழல்" (January-July 2009) இதழில் பிரசுரமானது.)
____________________________________________________________________


தொடரின் முன்னைய பதிவுகள்:
4.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்
3. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்
2.தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்
1.கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்