Showing posts with label கிழக்கு ஜெர்மனி. Show all posts
Showing posts with label கிழக்கு ஜெர்மனி. Show all posts

Saturday, June 22, 2019

Volkspolizei - கிழக்கு ஜெர்மனியின் மக்களுக்கான சோஷலிச போலிஸ்


ஜூலை 1, GDR எனும் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் "மக்கள் காவலர் தினம்" கொண்டாடப் பட்டது. உண்மையிலேயே, அன்றைய கிழக்கு ஜெர்மன் போலிஸ், "மக்களின் காவலர்" என அழைக்கத் தகுதியானதா? இது பற்றி ஒரு மேற்கத்திய சஞ்சிகையில் வந்த தகவலை இங்கே தருகிறேன். அதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

"கொலை, வன்முறை, பாலியல் தொழில் ஆகிய குற்றச் செயல்கள் எல்லாம், முதலாளித்துவத்தின் விளைவுகள். சோஷலிச சமுதாயத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாததால், பொறாமைக்கும், பேராசைக்கும் அங்கே இடமில்லை." முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயக குடியரசு) இவ்வாறு கூறி வந்தது. அந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அரிதாகவே நடந்தன. புள்ளிவிபரங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.

1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கு ஜெர்மனியில், ஒரு இலட்சம் பேருக்கு 6200 குற்றச் செயல்கள் நடந்துள்ளன. அதே நேரம் கிழக்கு ஜெர்மனியில், அதே காலப் பகுதியில், அதே அளவு சனத்தொகைக்கு, வெறும் 550 குற்றச்செயல்கள் மட்டுமே நடந்துள்ளன.

எல்லைகளில் கடுமையான கண்காணிப்பின் காரணமாகவும், அந்நிய நாணயப் பற்றாக்குறை காரணமாகவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

மக்களின் காவலர்கள் (Volkspolizei) என்ற பெயரைக் கொண்ட காவல் துறை, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குற்றங்களுக்கான காரணங்களையும் உடனுடக்குடன் கண்டுபிடித்து தீர்த்து வைத்தது.

மக்கள் மீதான அதீத கண்காணிப்பே அதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் மட்டுமே மக்கள் கண்காணிக்கப் படுவார்கள் என்று நம்புவது பேதைமை. இன்று எல்லா மேற்கத்திய நாடுகளிலும், வீடியோ கமெராக்கள், செய்மதி மூலம் மக்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1981 ம் ஆண்டு, Neustadt எனும் நகரத்தில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே நீண்ட காலமாக இழுபட்ட விசாரணை ஆகும்.

குறைந்தது ஆறு மாதங்களாவது, கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸ் தடுமாறியது. கொலை நடந்த இடத்தில் கண்டுபிடித்த பத்திரிகைத் தாள் ஒன்றில் இருந்த புதிர் விளையாட்டில் காணப்பட்ட கையெழுத்தை மட்டுமே வைத்து துப்புத் துலக்கினார்கள்.

பொலிஸ் ஆய்வாளரும், Stasi என்ற புலனாய்வுத்துறையும் சேர்ந்து, ஒருவரின் கையெழுத்தை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கினார்கள். இறுதியில் கையெழுத்தை வைத்து, சிறுவனை கொன்ற கொலைகாரனை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு நடந்து சில வருடங்களில் பெர்லின் மதில் விழுந்தது. ஜெர்மனி ஒன்றாகியது. கிழக்கு ஜெர்மனியை பொறுப்பெடுத்த மேற்கு ஜெர்மனி, அந்த கொலைகாரனை விடுதலை செய்தது.

1985 ம் ஆண்டு, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றச் செயல்கள் பற்றிய புள்ளி விபரம்: 
கொலை - 137, 
வன்முறை - 10132, 
பாலியல் வல்லுறவு - 571, 
தீவைப்பு -338, 
போதையில் வாகனம் ஓட்டுதல் - 2574.

Source: 
Der Kreuzworträtsel Mord und andere Kriminalfalle aus der DDR, Hans Girod 
http://mdr.de/doku/175228.html

Thursday, October 01, 2015

தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை


பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.

தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான். 

மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு. 

இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.

"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது  நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.

தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை களிப்பதற்கான ஆடம்பர ஹோட்டல் 

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.

உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.

பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.

இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.

FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.

கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.

கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.

தொழிலாளர்கள் பயணம் செய்த உல்லாசப் பயணக் கப்பலின் உள்புறம் 

FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?

Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.

உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:


Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)








மேலதிக தகவல்களுக்கு:
Fascinatie DDR, Friso de Zeeuw 
Völkerfreundschaft
Tourismus in der DDR


வீடியோ: விடுமுறையை உல்லாசமாகக் களிக்கும் கிழக்கு ஜெர்மன் பிரஜைகள்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி
பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்

Saturday, July 25, 2015

உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி


சோஷலிச நாடுகள் என்றால், "சர்வாதிகாரம், ஜனநாயக மறுப்பு, சுதந்திரமின்மை..." இப்படியான கருத்துக்கள் தான் பரப்பப் பட்டு வந்துள்ளன. தானும், தன் குடும்பமும் மட்டும் வாழ்க்கை வசதிகளை அனுபவித்தால் போதும் என்ற சுயநலம் மிக்க தமிழ் மேட்டுக்குடியினரும் அப்படித் தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு அப்பால், சோஷலிச நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது என்று ஆராய விட மாட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கற்றோரினால் மதிக்கப்படும் Le Monde தினசரிப் பத்திரிகையின் மாத இதழான Le Monde diplomatique, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் பெண்களின் நிலைமை பற்றி ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளது. அதில் வந்த தகவல்களை இங்கே தருகிறேன்:

பெர்லின் மதில் விழுந்த பின்னர், இரண்டு ஜெர்மனிகளிலும் வாழும் பெண்களின் வாழ்க்கைத்தரம் ஒரே மட்டத்திற்கு வரும் என்று சமூக விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்கள். ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு என்று அழைக்கப் பட்ட முன்னாள் மேற்கு ஜெர்மனியில், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வைத்திருந்த 16% தாய்மார் மட்டுமே முழுநேர ஊழியர்களாக இருந்தார்கள். ஆனால், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், 52% தாய்மார்கள் முழுநேர வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். முன்பு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பெண்கள் மிக இலகுவாக குடும்பத்தை பராமரித்துக் கொண்டே வேலைக்கும் சென்று வர முடிந்தது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களுக்கு அது மிகவும் சிரமமான விடயமாக இருந்தது. தற்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத கிழக்கு ஜெர்மன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது அவர்களது வாழ்க்கை முறைகள், எதிர்காலத் திட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது. அது மட்டுமல்லாது, அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்துள்ளது.

1950 ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் எங்கிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், முதலாளித்துவ மேற்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது! பெர்லின் மதில் விழும் வரையில், 92% கிழக்கு ஜெர்மன் பெண்கள் நிரந்தரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். 60% பெண்கள் மாத்திரமே வேலைக்கு சென்று கொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும் பொழுது, கிழக்கு ஜெர்மன் உழைக்கும் பெண்களின் விகிதாசாரம் உலகிலேயே மிக அதிகமானதும், தனித்துவமானதும் ஆகும்.

92% பெண்கள் வேலைக்கு சென்ற யதார்த்தத்தை கவனத்தில் எடுத்தால், கிழக்கு ஜெர்மன் பெண்கள், ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளை அனுபவித்தனர் என்பது தெளிவாகும். மேற்கு ஜெர்மன் பெண்கள், "குழந்தைகளை பராமரிப்பதற்காக வீட்டில் இருக்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து விடுபட முடியாமல் இருந்தனர். அதே நேரம், கிழக்கு ஜெர்மன் பெண்கள், கணவனின் சம்பாத்தியத்தை நம்பியிராமல் சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நின்றனர்.

எழுபதுகளில் கிழக்கு ஜெர்மனியில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தது. அதனால், திருமணமாகாத யுவதிகளும், விவாகரத்து செய்த பெண்களும், குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஊக்குவித்தது. "சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான மனித வலு" என்று சாமானிய மக்களால் நையாண்டி செய்யப்பட்டாலும், அரசு அவர்களுக்கு வேண்டிய விசேட சலுகைகளை செய்து கொடுத்ததன் மூலம், சமூக அந்தஸ்தை உயர்த்தியது. அதே நேரம், மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களில் பலர், விவாகரத்துக்குப் பின்னர் வறுமைக்குள் தள்ளப் பட்டனர். தாய்மை அடைவது, பெண்களின் பின்னடைவாக கருதப் பட்டது.

அதனால், ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதில் வியப்பில்லை. எந்தக் காலத்திலும் வேலையில்லாப் பிரச்சினையை அனுபவித்திராதவர்கள், தமக்கு பல சலுகைகளை வழங்கிய அரசமைப்பு நொறுங்கிப் போனதை உணர்ந்து கொண்டார்கள். தற்போது (ஒன்றிணைந்த ஜெர்மன்) அரசின் தொழில் முகவர் நிலையத்திற்கு செல்லும் ஓர் இளம் தாய், "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்று சொன்னால், அலுவலர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். (ஏனென்றால் அவருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.)

முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், அரசு எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஒரு வேலைக்குப் போகும் தாய், தனது குழந்தைகளை பராமரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களை பிடித்து விடத் தேவையில்லை. வேலைக்கு செல்லும் கணவனும் நேரத்தை ஒதுக்கத் தேவையில்லை. அரசே குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. இதனால், தாய்மார்கள் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கவில்லை. ஜெர்மன் ஒன்றிணைவு, முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்து விட்டது.

2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, முன்னாள் கிழக்கு - மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த பெண்கள், வேலை, குழந்தைகள் பற்றி, இரண்டு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொதுவாக எல்லாப் பெண்களும் பிள்ளைகள் தமக்கு முக்கியம் என்று சொன்னார்கள். இருப்பினும், மேற்கு ஜெர்மன் பெண்கள், தொழிலை விட, பிள்ளை வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தம் முன்னால் இருந்த அனைத்து வகையான கஷ்டங்களையும் பார்த்த பின்னரும், வேலையில்லாத காலத்தை, குழந்தை பராமரிப்பில் செலவிடுவது சிறந்தது என்று நம்பினார்கள்.

அதற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் பெண்கள், தொழிலையும், குழந்தை வளர்ப்பையும் சமமான கடமைகளாக கருதினார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் வேலை செய்யும் தாய் முன்னுதாரணமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். வேலைக்கு செல்வதால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதனால் தாயின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்த இடையூறும் வராது என்றும் சொல்கின்றனர். தங்களது பொருளாதார சுதந்திரம், முழுக் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என்று வாதிடுகின்றனர்.

மேற்கு ஜெர்மன் பெண்கள், (வேலைக்கு போகாமல்) வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, தாயின் கடமை என்று கூறுகின்றனர். குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அங்கீகரித்தாலும், அதன் திறக்கும் நேரங்களுடன் ஒத்துப் போகின்றனர். (குழந்தை பராமரிப்பு நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே திறந்திருக்கும்.) கிழக்கு ஜெர்மன் பெண்கள், முன்பு இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருக்கவில்லை. (அதாவது, அதிகாலையோ, இரவோ, வேலைக்கு செல்லும் நேரம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் எந்த நேரமும் திறந்திருக்கும்.) அதனால், குழந்தை பராமரிப்பு நிலையங்களின் சேவை, எல்லா நேரத்திலும் இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று, கிழக்கு ஜெர்மன் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான், வேலை வாய்ப்பும் இலகுவாக கிடைக்கும்.

ஒரு வேலையற்ற இளம் தாய், தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் காரணத்தை காட்டி, பல இடங்களில் வேலை மறுக்கப் பட்டதாகக் கூறுகின்றார். தன்னால் குழந்தையை பராமரிப்பதற்கு ஒழுங்கு படுத்த முடியும் என்று சொன்ன போதிலும் யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. அடுத்த குழந்தைக்கு எதிர்பார்ப்பதாக எந்த இடத்திலும் உண்மையை கூற முடியாது. இதனால், வேலைக்கான நேர்முகத் தேர்வில், இன்னொரு குழந்தைக்கு ஆசையில்லை என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகின்றது. கம்யூனிச ஆட்சிக் காலத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுகளில், அப்படி ஒன்றை கூறும் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் எல்லோரும், தமது அவமானத்தை பொறுத்துக் கொண்டு, புதுமையான விதிகளுடன் கூடிய விளையாட்டுக்களை விளையாட வேண்டியுள்ளது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மன் தாய்மாரைப் பொறுத்தவரையில் இது வாழ்க்கையின் யதார்த்தம்.

(விவாகரத்து பெற்று தனியாக வாழும்) இளம் தாய் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார்:
"ஒரு தடவை எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளர் வேலை கிடைத்தது. எனது நிர்வாகி, அவரும் ஒரு பெண், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு பேசினார். வாரத்திற்கு நாற்பது மணித்தியாலத்திற்கும் அதிகமாக, அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் உன்னைக் கேட்போம் என்றார். அதற்கு நான் முடியாதென்று மறுத்து விட்டேன். அது எனது தவறு. அவருக்கு என் மேல் கோபம் வந்து விட்டது. ஊரில் எத்தனை ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த வேலை கிடைத்ததற்காக சந்தோஷப் பட வேண்டும் என்று சத்தம் போட்டார்." 

தனது அனுபவக் கதையை கூறி விட்டு அந்தத் தாய் கேட்டார்:"எனக்கு வேலை முக்கியம் தான். ஆனால், வேலை காரணமாக காலை முதல் இரவு வரையில் எனது குழந்தையை பார்க்க முடியாதென்றால் அது என்ன வாழ்க்கை? என்ன மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்?"

சமூக விஞ்ஞானிகளான Jutta Gysi, Dagmar Meyer ஆகியோரின் கூற்றின் படி: "முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் குடும்ப நலக் கொள்கையானது பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இன்றைக்கு நடக்க முடியாத ஒன்று. பெரும்பாலான பெண்கள் செய்து வந்த தொழில்கள், ஆண்களுடையதை விட தரம் குறைந்ததாக இருந்தது உண்மை. அதனால் 30% குறைந்த சம்பளம் கிடைத்தது. இருப்பினும், (வாடகை கட்ட முடியாமல்) வீட்டை இழக்க வேண்டுமென்ற பயம் இருக்கவில்லை. குழந்தை பரமாரிப்பு நிலையத்தில் இடம் கிடைக்குமா என்ற கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் அரசின் நம்பகமான சமூகநலத் திட்டங்களில் தங்கி இருந்தார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென்றால், அது கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய, மிக முக்கியமான விடயம்."

பெர்லின் மதில் விழுந்தவுடன், கிழக்கு ஜெர்மனியின் பாலின சமத்துவமும் விழுந்து விட்டது. ஆயினும், கால் நூற்றாண்டுக்குப் பின்னரும், அது சமூகத்தில் தாய்மாரின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கிறது.

(நன்றி: Le Monde diplomatique, June 2015)

(பிற்குறிப்பு: ஐரோப்பாவில் வசிக்காத தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக, நான் கட்டுரையில் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன்.)

Saturday, November 22, 2014

சோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப் படுத்துவோம்

சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம் 

கியூபாவில் வாழும் சேகுவேராவின் புதல்வியுடனான பேட்டி

கேள்வி : மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மேற்குலகில் இருப்பவர்களுக்கு சர்வாதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்க மாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு அதிகமாகப் படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.

எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப் படுத்த மாட்டான்.... எப்படிப் பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும் இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்? எப்படிப் பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்? கியூபாவில் அது தான் நடக்கிறது. 

ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு, இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப் படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:
‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT 


*********

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும் 

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.

செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசத்தில்
15 000 குழந்தைகள் பட்டினியால் மரணம் 

அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

*********

சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பது "கம்யூனிச மூளைச் சலவை"! 

இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகள்
முன்பு சோஷலிச நாடுகளில், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் "வழிகாட்டிகள்" (Pioneer ) எனும் சாரணர் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதில் சேருவது கட்டாயமில்லை, ஆனால் விரும்பத்தக்கது. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய அதே சாரணர் அமைப்புத் தான். ஆயினும், சோஷலிச அரசமைப்புக்கு ஏற்றவாறு சில வேறுபாடுகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளில், அதைத் திரிபுபடுத்தி "சிறுவர்களை கம்யூனிச கொள்கைக்கு ஏற்றவாறு மூளைச் சலவை செய்கிறார்கள்..." என்று (பொய்ப்) பிரச்சாரம் செய்தார்கள்.

இங்கே, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் (DDR) இருந்த, சாரணர் அமைப்பின் ஆவணத்தை தருகிறேன். பின்வரும் இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகளை (Die Gebote der Jungpioniere), ஒவ்வொரு மாணவனும் ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.


  • இளம் வழிகாட்டிகளான நாங்கள், எமது ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மீது அன்பு செலுத்துகின்றோம். 
  • நாங்கள் எமது பெற்றோர் மேல் அன்பு செலுத்துகிறோம். 
  • நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம். 
  • நாங்கள் சோவியத் யூனியன், மற்றும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பிள்ளைகளுடன் நட்பைப் பேணுவோம். 
  • நாங்கள் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுவோம். நாங்கள் சீரான, ஒழுக்கமானவர்கள். 
  • நாங்கள் விளையாட்டில் ஈடுபடுவோம். எமது உடலை தூய்மையாக வைத்திருப்போம். 
  • நாங்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம். சிறப்பாக பணியாற்ற உதவுவோம். 
  • நாங்கள் பாட்டுப் பாடவும், நடனம் ஆடவும் விளையாடவும் விரும்புகின்றோம். 
  • நாங்கள் நல்ல நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். - நாங்கள் எமது நீல நிற கழுத்துப் பட்டியை பெருமையுடன் அணிந்து கொள்வோம்.

பெரியோர்களே! தாய்மார்களே! மேற்குறிப்பிட்ட ஒழுக்க விதிகள் எல்லாம் "கம்யூனிச மூளைச்சலவை" என்றால், பிள்ளைகளை தறுதலைகளாக திரிய விடுவது தான் முதலாளித்துவ சுதந்திரமா?

******** 

கிழக்கு ஜெர்மன் மாநில அரசில், மீண்டும் ஒரு மார்க்சிஸ்ட் முதல்வர்!

பெர்லின் மதில் வீழ்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு, கிழக்கு ஜெர்மன் மாநிலமான துய்ரிங்கன் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில், Die Linke பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சியான SDP இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது.

மாநில அவையில் கூட்டணி அமைப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. பசுமைக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப் பட்டுள்ள கூட்டரசாங்கம் "R2G" (Red, Red, Green) என்று அழைக்கப் படுகின்றது. R2G கூட்டரசாங்கத்தின் முதல்வராக டீ லிங்கே கட்சியை சேர்ந்த Bodo Ramelow தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

Bodo Ramelow, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கார்ல் மார்க்ஸ் பொம்மையை பக்கத்தில் வைத்துக் கொண்டு உரையாற்றுவார். தீவிர இடதுசாரிக் கட்சியான PDS, டீ லிங்கே கட்சியில் பெரும்பான்மை பலத்துடன் அங்கம் வகிக்கிறது. அது முன்னர் கிழக்கு ஜெர்மனி சோஷலிச நாடாக இருந்த காலத்தில் ஆட்சி செய்த SED கட்சியின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர், கிழக்கு- மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த தீவிர இடதுசாரிகள் ஒன்றிணைந்து, Die Linke எனும் புதிய கட்சி உருவானது. துய்ரிங்கன் மாநில முதல்வராக தெரிவாகி உள்ள Bodo Ramelow மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கு ஜெர்மனி, துய்ரிங்கன் மாநில அரசாங்கத்தில் மார்க்சிய Die Linke கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அகதிகளுக்கு ஆதரவான கொள்கையை அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம், துய்ரிங்கன் மாநிலத்தில் வாழும் அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் படுவார்கள். நாடு கடத்தப் படுவது இடைநிறுத்தி வைக்கப் படும். (Neues Deutschland, 20.11.2014)

விசா, வதிவிட அனுமதி எதுவுமில்லாத அகதிகளுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அநாமதேய மருத்துவ காப்புறுதி வழங்கப் படும். ஜெர்மனி முழுவதும் வாழும் அகதிகளால் வெறுக்கப் படும், உணவு முத்திரைகள் இல்லாதொழிக்கப் படும். அதற்குப் பதிலாக, அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பணம் வழங்கப் படும். (ஜெர்மனியில் உள்ள தற்போதைய விதிமுறையில் அகதிகளின் கைகளில் பணம் கொடுப்பதில்லை. அரசு தரும் உணவு முத்திரைகளை, கடையில் கொடுத்து மாற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பாவிக்க வேண்டும்.)

துய்ரிங்கன் மாநிலத்தின் அகதிக் கொள்கை, முழு ஜெர்மனிக்கும் முன்மாதிரி திட்டமாக முன்மொழிவதற்கான முயற்சிகள் எடுக்கப் படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. 


Sunday, October 19, 2014

அனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா "கம்யூனிச சர்வாதிகாரம்"!


ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi)  சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.

 "சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, மேற்கு ஜெர்மனியில் இருந்து வர்த்தக நோக்குடன் வந்து செல்லும் ஒருவனைக் காதலிக்கிறாள். காட்டிலும், ஹோட்டலிலும் இரகசியமாக சந்தித்து, விலை உயர்ந்த மேற்கத்திய பாவனைப் பொருட்களை பரிசாகப் பெற்றுக் கொள்கிறாள். எப்படியாவது அவனுடன் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறாள். இரகசியமாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பயணம் செய்யத் தயாராகும் நேரத்தில், ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.

பார்பரா வேலை செய்யும் மருத்துவமனையில், சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட பெண் கைதி ஒருவரை அனுமதிக்கிறார்கள். பார்பரா அந்தக் கைதியின் நன்மதிப்பை பெற்ற வைத்தியர் ஆகிறார். வருத்தம் குணமானவுடன் மீண்டும் சிறை முகாமுக்கு கொண்டு செல்லப்படும் அந்தப் பெண் கைதி, எதிர்பாராத விதமாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடுகிறாள். பார்பராவின் வீட்டிற்கு வரும் அவளை, இரகசியமாக கொண்டு சென்று தன்னை கூட்டிச் செல்ல வரும் பயண முகவரிடம் ஒப்படைக்கிறாள். பார்பரா இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுவது தான் கதை.

மருத்துவமனையில் தலைமை மருத்துவரான அன்ட்ரே ரைசர், பார்பராவின் கடமை உணர்ச்சி மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார். காலப்போக்கில் அவரை விரும்புகிறார். ஆனால், பார்பரா நாகரிகமாக ஒதுங்கிக் கொள்கிறார். இதற்கிடையே, அன்ட்ரே ரைசர் புலனாய்வுத்துறைக்கு தகவல் அனுப்பும் உளவாளி என்ற உண்மை தெரிய வருகின்றது. அதற்காக அன்ட்ரே கூறும் காரணத்தை நம்ப மறுக்கிறாள். 

சோஷலிச அமைப்பிற்கு விசுவாசமான அன்ட்ரே, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவரின் கடமை உணர்ச்சி பற்றி, அடிக்கடி பார்பராவுக்கு அறிவுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் மட்டுமல்லாது, நோயாளிகளுக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும், பார்பராவின் மனதை மெல்ல மெல்ல மாற்றுகின்றது. அதனால், இறுதியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடாமல், அன்ட்ரேயுடன் கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார்.

பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு தெரிவித்த காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்று பதிலளிக்கிறார்.

இந்தத் திரைப்படம் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு சார்பானது அல்ல. (2012 ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு வெளியானது.) மேலைத்தேய பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில், "கம்யூனிச சர்வாதிகாரத்தைக்" காட்டும், பல எதிர்மறையான காட்சிகள் உள்ளன. இருப்பினும், ஒரு நகரத்தில் பணியாற்றிய மருத்துவரை, நாட்டுப்புற மருத்துவ மனைக்கு இடம் மாற்றிய காரணம், படத்தில் அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக, இலங்கையில் பல மருத்துவர்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்து முடித்தவுடன், நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்கின்றனர். இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எத்தனை மருத்துவர்கள், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்கின்றனர்?

ஒரு சோஷலிச நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு கடமைப் பட்டுள்ளதை உணர்த்துகின்றனர். அவர்களை வசதியான நகரங்களில் தங்க விடாது, வசதி குறைந்த கிராமங்கள், நாட்டுப்புற மருத்துவ மனைகளுக்கு அனுப்புகின்றனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளின் "சர்வாதிகாரம்" பற்றி, மேட்டுக்குடியினர் அழுது புலம்புவது இதனால் தான். இந்தியா, இலங்கை போன்ற வறிய நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு சேவை செய்யாமல், அமெரிக்கா சென்று டாலர்களுக்காக வேலை செய்கின்றனர். அப்படிப் பட்ட அயோக்கியர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?


திரைப்படத்திற்கான இணைப்புகள்:

Tuesday, May 07, 2013

பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்


பெர்லின் சுவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்றுண்டு. "கிழக்கு ஜெர்மனியில், கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து, சுதந்திர மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடிக் கொண்டிருந்த அகதிகளை தடுப்பதற்காக, பெர்லின் மதில் கட்டப் பட்டது. அதனால் அவமானத்தின் மதில் சுவர் என்று அழைக்கப் பட்டது...."

நாம் அன்றாடம் தகவல்களைப் பெற நம்பி இருக்கும் ஊடகங்கள் மட்டுமல்ல, பாட நூல்கள், வரலாற்று நூல்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நம்பிக்கையாளர்களால் எழுதப் படுகின்றன. அதனால், எமக்கு எப்போதும் ஒரு பக்க தகவல்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் பாதி உண்மைகள் மட்டுமே. மீதி உண்மைகள் எங்கேயோ உறங்கிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான், கம்யூனிச நாடுகளில் தஞ்சம் கோரிய மேலைநாட்டு அகதிகள். அப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு, அரசியல் பிரச்சார சாதனங்களால் நாங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளோம்.

Wo ist Lieutenant Adkins? (லெப்டினன்ட் அட்கின்ஸ்  எங்கே?) என்ற நூல் ஜெர்மனியில் வெளியாகி உள்ளது. The Atlantic Times என்ற ஜெர்மன் பத்திரிகை ஆசிரியர் Peter H. Koef  அந்த நூலை எழுதி இருக்கிறார். (நூல் ஜெர்மன் மொழியில் மட்டுமே கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக தெரியவில்லை. இந்த தளத்தில் ஆங்கில மொழியில் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது:Deserting the wrong way: Why soldiers went East)  இரண்டு வருடங்களாக, முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் உள்துறை அமைச்சின் ஆவணங்களை ஆராய்ந்து, அந்த நூலை எழுதியுள்ளார். சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத் துறையான Stasi, தனது நாட்டில் வசித்த மேலைத்தேய நாட்டவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருந்தது. அது பற்றிய மேலதிக விபரங்களை தேடிய பொழுது, சுமார் 200 அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைவீரர்களும், தஞ்சம் கோரியிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

1961 ம் ஆண்டு தான், பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதற்கு முன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விசா எடுத்து, கிழக்கு - மேற்கு பெர்லின் பகுதிகளுக்கு இடையில் சுலபமாக சென்று வர முடிந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்து, பெருமளவு மக்கள் மேற்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது உண்மை தான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், மேற்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனிக்குள் சென்று வசிக்க விரும்பினார்கள். அது குறித்து யாரும் பேசுவதில்லை. அந்த தகவல், சரித்திர நூல்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

அது மட்டுமல்ல, நேட்டோ படைகள் பல உளவாளிகளை, கிழக்கு ஜெர்மனிக்குள் அனுப்பி வைத்தன. அது குறித்தும் எல்லோரும் மௌனம் சாதிக்கின்றனர். அந்தக் காரணத்தை சொல்லித் தான், அதாவது "மேற்கத்திய ஊடுருவலாளர்களை, உளவாளிகளை வர விடாமல் தடுப்பதற்காக" பெர்லின் மதில் கட்டப் போவதாக, கிழக்கு ஜெர்மனி அன்று  அறிவித்தது. அவர்களின் பக்கத்தில், அதற்கு "பாசிச தடுப்புச் சுவர்" என்று பெயரிடப் பட்டது. மேற்கத்திய நேட்டோ படைகளில் இருந்து, கிழக்கு ஜெர்மனிக்குள் சென்றவர்கள் அனைவரும் உளவாளிகள் அல்லர். பல உண்மையான அரசியல் அகதிகளும் சென்றிருந்தனர். பெர்லின் மதில் கட்டப் படுவதற்கு முன்னர், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய, 200 மேற்கத்திய அரசியல் அகதிகள் பற்றித் தான், இந்த நூல் பேசுகின்றது.

12-1-1954 அன்று, William D. Adkins என்ற 23 வயதான அமெரிக்க இராணுவ வீரர், ஆஸ்திரியாவில் Amstetten நகரில் இருந்த சோவியத் படைமுகாமில் அகதித் தஞ்சம் கோரினார். தான் கம்யூனிசக் கொள்கைகளை நம்புவதாகவும், தனது ஜெர்மன் காதலியின் ஆலோசனையின் படி, சோவியத் யூனியன் சென்று வாழ விரும்புவதாக சொல்லி இருக்கிறார். சில நாட்கள் சோவியத் இராணுவ முகாமில் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருந்தார். அப்போது அவர் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "நான் ஒரு தேசத் துரோகி அல்ல. எனது தாய்நாடான அமெரிக்கா, தவறான தலைவர்களால் ஆளப் படுகின்றது. சோவியத் பகுதிகளில் வாழும் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். நான் சோவியத் படைகளில் சேரும் காலம் ஒன்று உருவாகும். அன்று அமெரிக்காவை விடுதலை செய்யும் போரில் பங்குபற்றுவேன்."

அட்கின்ஸ் தன்னை சோவியத் யூனியனுக்கு அனுப்புமாறு விரும்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது விருப்பத்திற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை Dresden நகருக்கு கூட்டிச் சென்று, அங்கே Jack Forster என்ற பெயரில் போலி அடையாள அட்டை ஒன்றை செய்து கொடுத்தார்கள். Stasi க்காக வேலை செய்ய ஒத்துக் கொண்டதால் மாதாமாதம் 500 மார்க் சம்பளம் கொடுக்கப் பட்டது. அது அன்றைய கிழக்கு ஜெர்மனியில் சராசரி சம்பளத்தை விட சற்று அதிகமாகும். Jack Forster, மேற்கு ஜெர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைவீரர்களை, இராணுவத்தை விட்டு தப்பியோடுமாறு ரேடியோ பிரச்சாரம் செய்வதற்கு உதவினார். Stasi யின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டதால், சம்பளம் உயர்த்தப் பட்டது. கார்ல்மார்க்ஸ் ஸ்டாட் (தற்போது: Chemnitz) நகர பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பெயர், John  Reed  என்று மாறி இருந்தது.

1963 ம் ஆண்டு, அட்கின்ஸ் மாயமாக மறைந்து போனார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல் எதுவும், Stasi ஆவணங்களில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார். கடைசியாக, மேற்கு பெர்லின் நகர் பகுதியில், Jörg Brandi என்ற நண்பருடன் சேர்ந்திருக்க காணப் பட்டார். அதற்குப் பிறகு எந்த சுவடும் இல்லாமல் மறைந்து விட்டார்.  Jörg Brandi என்பவர், மேற்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்தவர். (அவர் மேற்குலக உளவாளியாக இருக்கலாம்.) கிழக்கு பெர்லின் சென்றிருந்த சமயம் அட்கின்சை சந்தித்து இருக்கிறார். இருவருமாக திட்டம் தீட்டி, மேற்கு ஜெர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒருவருடன் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஒரு நாள், அட்கின்ஸ் மேற்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு, அவரது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு மேற்கு பெர்லினுக்கு பயணம் செய்திருக்கிறார். யாரும் அவரை சந்தேகப் படவில்லை.

ஒரு முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியரான Peter H. Koef , தனது நூலுக்கு  "லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்று தலைப்பிட்டதும் ஒரு காரணத்தோடு தான். ஏனெனில், கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த அமெரிக்க அகதிகளுக்குள், அட்கின்ஸ் போன்ற கருங்காலிகளும் இருந்துள்ளனர். அந்த நூலில், பல அகதிகளின் கதைகள் சொல்லப் பட்டிருந்தாலும், அட்கின்ஸ் பற்றிய கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால், அவர் ஒரு அமெரிக்க உளவாளியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனை நூலாசிரியரே உறுதிப் படுத்துகின்றார். அட்கின்ஸ் யாருடைய காதலுக்காக சோவியத் யூனியன் செல்ல விரும்பினாரோ, அந்த ஜெர்மன் பெண்ணை பின்னர் கைவிட்டுள்ளார். அவருக்கு பிறந்த மகளையும் விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்கு ஓடியுள்ளார். இன்று ஜெர்மனி ஒன்றிணைந்த பின்னரும், பிரிந்த  தந்தையை  தேடும் மகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. "அட்கின்ஸ் ஒரு CIC  உளவாளி," என்று அவரை விவாகரத்து செய்த முன்னாள் மனைவி கூறுகின்றார்.

Counter Intelligence Corps (CIC) என்பது, ஐரோப்பாவில் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதற்காக, அமெரிக்க படைகளினால் பயன்படுத்தப் பட்ட இரகசிய அமைப்பாகும். அவர்களில் பலர், கிழக்கு ஜெர்மனிக்குள்ளேயும் செயற்பட்டு வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரியிருந்த அமெரிக்கர்களை, தேடிக் கண்டுபிடித்து கண்காணிப்பது, முடிந்தால் கடத்திச் செல்வது, அல்லாவிட்டால் கொன்று விடுவது கூட, அவர்களுக்கு இடப்பட்ட பணியாகும். "தேசத் துரோகிகளை" கடத்துவதோ, கொலை செய்வதோ, மிக மிக அரிதாகவே நடந்தது. அதற்கு காரணம், இன்னொரு பக்கத்தால், Stasi உளவாளிகளும் மேற்கத்திய அகதிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  அட்கின்ஸ் ஒரு அமெரிக்க CIC  உளவாளி என்பதற்கான வேறு ஆதாரங்கள் உள்ளனவா? 

அட்கின்ஸ் சோவியத் இராணுவ முகாமில் தங்கியிருந்த காலத்தில், உறவினருக்கு எழுதிய கடிதம் போலியாக இருக்கலாம். தன்னை விசாரித்த அதிகாரிகள், அந்தக் கடிதத்தை உடைத்து வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே, "கம்யூனிசத்தை புகழ்ந்தும், சோவியத் படையில் சேர விரும்புவதாகவும்..." எழுதி இருக்கலாம். அனேகமாக, அந்த உத்தி பெரிதும் பயன்பட்டிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, மேற்கு பெர்லினுக்கு தப்பிச் சென்ற பின்னர், அமெரிக்க அரசு வேறு ஒரு பெயரில் அடையாள அட்டை, கடவுச் சீட்டு செய்து கொடுத்திருக்கலாம். அதனால் தான், இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு "மாயமாக மறைந்து போனார்". மேலும், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடிய அகதிகள் மீது, "தேசத் துரோக வழக்கு" போடப் பட்டுள்ளது. அவர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தால், நிச்சயமாக சிறையில் அடைக்கப் படுவார்கள். அட்கின்ஸ் மீது அப்படி எந்த தேசத் துரோக வழக்கும் வழக்கும் போடப்படவில்லை. அது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடியதாகவோ, எதிரி நாட்டில் தஞ்சம் கோரியதாகவோ, எந்தத் தகவலும் அமெரிக்க ஆவணங்களில் காணக் கிடைக்கவில்லை.

மேற்கு ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய,  நூற்றுக் கணக்கான கறுப்பின படைவீரர்கள், கிழக்கு ஜெர்மனிக்கு தப்பியோடி அரசியல் தஞ்சம் கோரி இருக்கிறார்கள். அந்தப் பிரிவினர், என்றென்றும் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அப்போது நடந்த கொரிய யுத்தத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில், யுத்தத்தை வெறுக்கும் படையினரும், அமெரிக்க  இராணுவத்தை விட்டு ஓடினார்கள். அறுபதுகளுக்குப் பிறகு, பல வருடங்கள் வீட்டைப் பிரிந்திருந்ததால், அல்லது "தேசத் துரோக வழக்கு" வாபஸ் பெறப் பட்டதால், பல அமெரிக்க அகதிகள் தாயகம் திரும்பிச் சென்றிருக்கின்றனர். ஆனால், இன்று வரையில், ஒரு கறுப்பின அமெரிக்கர் கூட அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று வாழ விரும்பவில்லை. அவர்கள் நிரந்தரமாகவே கிழக்கு ஜெர்மனியில் தங்கி விட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஐம்பதுகளில், அறுபதுகளில் இருந்த அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை, இனப் பாகுபாடு மிகவும் மோசமாக இருந்தது. கறுப்பின மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் பிரஜைகளாக இருந்தாலும், அமெரிக்கப் படையில் சேவை செய்தாலும், எந்த உரிமையுமற்று வாழ்ந்தனர். இந்த ஒடுக்குமுறை காரணமாக, கறுப்பின மக்களுக்கு இயல்பாகவே கம்யூனிசத்தின் பால் ஈர்ப்பு இருந்தது. சோவியத் யூனியன் பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் கம்யூனிசத்தை பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் இனப்பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது. அவர்களது நிலையில் இருந்து பார்த்தால், அதுவே போதுமானது.

பல கறுப்பின அகதிகள் மத்தியில், (கம்யூனிச) கொள்கை குறித்து அதிக அக்கறையில்லா விட்டாலும், வெள்ளையின மங்கையர் பால் கொண்ட ஈர்ப்பும் அவர்களை கிழக்கு ஜெர்மனிக்கு செல்லத் தூண்டியது. அதாவது, அன்றைய அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபன், வெள்ளையின காதலி வைத்திருப்பதே ஒரு பெரும் போராட்டம். இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு போன்று, அந்த விடயம் அமெரிக்க சமூகத்தில் கொந்தளிப்பை உருவாக்கும். ஆனால், கிழக்கு ஜெர்மனியில் நிலைமை வேறு. அங்கே, ஜெர்மன் மகளிர், கறுப்பின அமெரிக்கர்களை பெரிதும் விரும்பினார்கள். சமூகத்திலும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள். அப்படியான ஒரு வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பனிப்போர் காலத்தில், முதலாளித்துவ நாடுகளும், சோஷலிச நாடுகளும் தமக்கு விருப்பமான அகதிகளை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான அகதிகள் ஒரு வகை. ஜெர்மனியில் நடந்தது போல, வேறு பல நாடுகளிலும் அகதிகள் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரிய கிழக்கு ஐரோப்பிய அகதிகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரிய மேற்கத்திய நாட்டு அகதிகள் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. கிரேக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் முறியடிக்கப் பட்டதும், பல்லாயிரம் கம்யூனிஸ்ட் போராளிகள், தமது குடும்பங்களுடன், அருகில் இருந்த சோஷலிச நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அது ஒரு பெரிய யுத்தம் என்ற படியால், சரித்திர நூல்களில் பதியப் பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில், இது போன்று நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.

"லெப்டினன்ட் அட்கின்ஸ் எங்கே?" என்ற  என்ற நூல், விசேடமாக முன்னாள் அமெரிக்கப் படையினரை பற்றி மட்டுமே ஆராய்கின்றது. நேட்டோ படைகளை விட்டோடி, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரிய அகதிகள், சிலநேரம் சந்தேகத்துடன் பார்க்கப் பட்டாலும், பொதுவாக அவர்களின் சேவை கிழக்கு ஜெர்மனிக்கு பெரிதும் தேவைப் பட்டது. அரசு ஒழுங்கு படுத்தும் பொதுக் கூட்டங்களில், ஊர்வலங்களில், மேற்குலக அகதிகள் முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களை, மேற்கு நோக்கிய பிரச்சார ஊடகங்களில், முழுநேரச் செய்தியாளர்களாக ஈடுபடுத்த முடிந்தது. சராசரி ஜெர்மன் குடிமகனுக்கு கொடுப்பதை விட, அதிக ஊதியம் கொடுத்து சிறப்பாக கவனிக்கப் பட்டார்கள். அதனால், பல மேற்குலக அகதிகளுக்கு சோஷலிச ஜெர்மனி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. தாயகத்தை, உறவினர்களை பிரிந்திருக்கும் சோகம் மட்டுமே அவர்களை வாட்டியது.


மேலதிக தகவல்களுக்கு:

1. நூல் அறிமுகம் (ஆங்கில மொழிக் கட்டுரை) Deserting the wrong way: Why soldiers went East

2. ஜெர்மன் மொழி நூலை வாங்குவதற்குWo ist Lieutenant Adkins? Das Schicksal desertierter Nato-Soldaten in der DDR; http://www.amazon.de/Lieutenant-Adkins-Schicksal-desertierter-Nato-Soldaten/dp/3861537095

3. ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளில் இருந்து தப்பியோடி, கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய Victor Grossman, 1994 ம் ஆண்டு, அவர் மேலான வழக்கு வாபஸ் பெறப் பட்ட பின்னர் அமெரிக்காவுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். 
Crossing the River: A Memoir of the American Left, the Cold War, and Life in East Germany; அந்த நூலை வாங்குவதற்கு: 
http://www.amazon.com/Crossing-River-Memoir-American-Germany/dp/1558493719/ref=la_B001K8SVQG_1_1?ie=UTF8&qid=1367875620&sr=1-1


***********************


சோஷலிச நாடுகளில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள் பற்றிய வேறு பதிவுகள்:

1. சோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி!
2. வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

Tuesday, November 10, 2009

பெர்லின் சுவர், சொல்லாத சேதிகள்


பெர்லின் சுவர் பற்றி நீங்கள் இதுவரை அறியாத தகவல்கள் பல உண்டு. வரலாற்று நூல்களும், ஊடகங்களும் ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தெரிவித்து வந்துள்ளன. கிழக்கு ஜெர்மனியில் "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து தப்புவதற்காக, "சுதந்திர மேற்கு பெர்லினுக்கு" உயிரைப் பணயம் வைத்து ஓடி வந்தவர்களைப் பற்றி கதை கதையாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே நேரம், மேற்கு பெர்லினில் இருந்து, கிழக்கு பெர்லினுக்கு தப்பிச் சென்றவர்களைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இவ்வாறு "மறு பக்கம்" தப்பி ஓடியவர்கள் பலதரப்பட்டவர்கள். சிலர் கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப்பட்டு சென்றார்கள், சிலர் குடும்ப உறவுகளோடு ஒன்று சேருவதற்காக சென்றார்கள், சிலர் நண்பர்களோடு பந்தயம் கட்டி விட்டு சென்றார்கள். இவ்வாறு நூற்றுக்கணக்கான, அல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான அகதிகள் மேற்கு பெர்லினில் இருந்து மதிலேறிக் குதித்து கிழக்கு பெர்லின் சென்றடைந்தார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேற்குலகில் பரவலாக செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு மாறாக, மதிலேறிக் குதித்த இரண்டு நபர்கள் மட்டுமே (கிழக்கு ஜெர்மனி) எல்லைக்காவல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேற்கு பெர்லினை சேர்ந்த கம்யூனிஸ்ட் ஒருவர், கிழக்கு ஜெர்மன் காவல்படை தப்பியோடும் அகதிகளை சுடுவதில்லை என நண்பர்களுடன் வாதிட்டு வந்தார். வெர்னர் ஸிபில்ஸ்கி என்ற அந்த நபர், அதனை தானே நிரூபித்துக் காட்டுவதாக பந்தயம் கட்டினார். ஒரு நாள் சொன்னபடியே மதிலேறிக் குதித்து கிழக்கு பெர்லின் சென்று விட்டார். அன்று மதிலருகில் துப்பாக்கி வேட்டுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இருப்பினும் ஸிபிலிஸ்கியை கிழக்கு ஜெர்மன் காவலர்கள் சுட்டு (கொன்று) விட்டதாக மேற்கு பெர்லினில் வதந்தி பரவியது. அந்த வதந்தியை பரப்பியது வேறு யாருமல்ல, "சுதந்திரமாக கருத்து வெளியிடும்" மேற்கு ஜெர்மன் ஊடகங்கள். தன்னைப் பற்றிய தவறான செய்திகளால் எரிச்சலுற்ற ஸிபிலிஸ்கி மீண்டும் மேற்கு பெர்லின் வந்தார். அவரது பெர்லின் நண்பர்கள் "உயிர்த்தெழுந்த இயேசு பிரானைக்" கண்டு அதிர்ச்சியுற்றனர். சில நாட்களின் பின்னர், மீண்டும் மதிலேறிக் குதிக்கும் சாதனை செய்து காட்ட முன்வந்தார். இம்முறை அதிர்ஷ்ட தேவதை அவரை ஏமாற்றி விட்டது. கிழக்கு ஜெர்மன் பொலிஸ் ஸிபிலிஸ்கியை கைது செய்து, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

1980 ம் ஆண்டு, ஜோன் ரன்னிங்க்ஸ் என்ற அமெரிக்கர் பதினெட்டு தடவை பெர்லின் மதிலேறிக் குதித்து ஒரு "உலக சாதனை" நிலைநாட்டினார். தன்னை ஒரு சமாதான ஆர்வலர் என்று இந்த நபர் கூறிக் கொண்டார். ஒரு தடவை, எல்லைக்காவல் படைக்கு முன்பு மதில் மீதேறி நின்று சிறுநீர் கழித்து எதிர்ப்பைக் காட்டினார். கிழக்கு ஜெர்மன் காவல் படையை சேர்ந்தவர்கள், அந்த அமெரிக்கரை ஒரு கிறுக்கனாக பார்த்தார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி மேற்கு பெர்லினில் இருந்த அமெரிக்க படையினருக்கு தகவல் அனுப்பினார்கள். ஆனால் அவர்களோ தமது பிரஜை மீது சட்ட நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர். அதற்கு காரணம் பெர்லின் சுவர் ஒரு சர்வதேச எல்லையில்லையாம்.

1988 ம் ஆண்டு, ஒரு முறை 180 கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரி இளைஞர்கள் சுவர் அருகில் கூடாரங்களை அமைத்து கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். மேற்கு ஜெர்மன் கலவரத் தடுப்பு பொலிஸ் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கோடு வந்தது. இளைஞர்கள் அனைவரும் பொலிசிடம் இருந்து தப்பிக்க ஏணி வைத்து மதிலேறிக் குதித்தார்கள். மதிலுக்கு அந்தப்பக்கம் அவர்களை வரவேற்ற கிழக்கு ஜெர்மன் பொலிஸ், சூடான காலை உணவு பரிமாறி விட்டு, வீட்டிற்கு திருப்பி அனுப்பினார்கள்.

கிழக்கு ஜெர்மனி, "பாசிசத் தடுப்பு சுவர்" என்று பெர்லின் சுவருக்கு பெயரிட்டிருந்தது. ஜெர்மன் ஜனநாயக குடியரசு என்ற கம்யூனிச கிழக்கு ஜெர்மனி முழு பெர்லினுக்கும் உரிமை கோரியது. ஆனால் மேற்கு பெர்லின் பகுதியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புகள் கொடுக்க மாட்டேன் என அடம்பிடித்தன. அதையொட்டி எழுந்த சர்ச்சை தீர்க்க முடியாத கட்டம் வந்த போது தான், மேற்கு பெர்லினை சுற்றி மதில் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை மறைத்து, கிழக்கு ஜெர்மன் சர்வாதிகாரத்திற்கு பயந்து ஓடும் மக்களை தடுக்கவே பெர்லின் மதில் கட்டப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்கு பெர்லினை முற்றுகையிடும் நோக்கோடு பெர்லின் சுவர் கட்டப்பட்டாலும், பொது மக்கள் போக்குவரத்துக்கென ஒரு வாயில் எப்போதும் திறந்திருந்தது. 1971 ம் ஆண்டிலிருந்து பல மேற்கு பெர்லின்வாசிகள் இந்த வாசல் ஊடாக சட்டப்படி பிரயாணம் செய்தனர். மேற்கு ஜெர்மன், அல்லது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெருந்தொகையான கம்யூனிச கொள்கைப் பற்றாளர்கள் மதிலை தாண்டி சென்றனர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற தேசம் கலைக்கப்படும் வரை அவர்கள் அங்கே வசதி, வாய்ப்புகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.வெளியுலகில் அதிகம் அறியப்படாத இத்தகைய குறிப்புகளை Martin Schaad என்ற சரித்திரவியலாளர் பதிவு செய்துள்ளார். அவர் எழுதிய "Dann geh doch rüber“ - über die Mauer in den Osten" என்ற நூலில் இது போன்ற அரிய தகவல்கள் பல ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.


பெர்லின் சுவர் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Sunday, November 08, 2009

கம்யூனிச ஜெர்மனியில் நிறவெறி இருக்கவில்லை

கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு கிடைத்த ஆயிரக்கணக்கான பன்னாட்டு தொழிலாளர்கள் பற்றி இன்று பலருக்கு தெரியாது. அன்றைய கம்யூனிச அரசு, வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமான சம்பளம், சலுகைகள் வழங்கி கௌரவித்தது. நட்புறவு கொண்ட பிற கம்யூனிச நாடுகளில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் (Vetragsarbeiter) இந்த தொழிலாளர்கள் வருவிக்கப்பட்டனர். பொருளாதார வளர்ச்சி குன்றிய சோஷலிச நாடுகளான வியட்நாம், மொசாம்பிக், போன்ற நாடுகளில் இருந்து மேற்படி தொழிலாளர்கள் வருகை தந்தனர். தொழிற்துறை வளர்ச்சியடைந்த கிழக்கு ஜெர்மனியில், தகமை சார் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கம். அதேநேரம்,அன்று நிலவிய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, வெளிநாட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில், தனி நபர் வருமானம்அதிகமாகவிருந்த கிழக்கு ஜெர்மனியில் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள், தமது தாயகத்திற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். 1989 ல், பெர்லின் மதில் வீழ்ந்து, ஒரே நாளில் கம்யூனிச ஜெர்மனியை, முதலாளித்துவ ஜெர்மனி விழுங்கிய பின்னர், நிலைமை தலைகீழாக மாறியது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு பெருமளவு தொழிலாளர்கள் தாயகம் திரும்பிவிட்டார்கள். ஆனாலும் சுமார் இருபதாயிரம் பேர் அங்கே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.

இன்று ஒன்றிணைந்த ஜெர்மனி, பெர்லின் மதில் வீழ்ந்த இருபதாண்டுநிறைவை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கொண்டாட்டங்களுக்கு இடையே மறக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சிலரை "அல் ஜசீரா" தொலைக்காட்சி செவ்வி கண்டது. இன்றும் கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மொசாம்பிக்கை சேர்ந்த ஜோவோ, வியட்நாமை சேர்ந்த நிகுயென் ஆகியோர் நேர்காணலில் இடம்பெறுகின்றனர்.

அநேகமான வெளிநாட்டு தொழிலாளர்கள், கிழக்கு ஜெர்மனியின் இழப்பை ஆதங்கத்துடன் குறிப்பிடத் தவறவில்லை. கம்யூனிச அரசு தம்மை சிறப்பாக கவனித்ததாகவும், உள்ளூர் மக்கள் நட்புணர்வுடன் பழகியதாகவும் தெரிவித்தனர். கம்யூனிச ஜெர்மனியில் ஒரு போதும் நிறவெறி இருக்கவில்லை. முதலாளித்துவம் வெற்றிவாகை சூடிய பின்னர், நிறவெறிக் கருத்துகளும் கூடவே பரவின. வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த உள்ளூர் ஜெர்மன் மக்கள், இன்று நிறவெறி காட்டுகின்றனர். ஆப்பிரிக்க, ஆசிய நாட்டவர்கள் இரவில் வெளியே நடமாட அஞ்சுகின்றனர். கம்யூனிசம் விரட்டியடித்த நிறவெறியை முதலாளித்துவம் மீட்டுக் கொண்டு வந்து விட்டது. பெர்லின் மதில் வீழ்ச்சியை கொண்டாட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


FOCUS: THE BERLIN WALL
'Taken over by the enemy'

Tuesday, February 10, 2009

பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்










ஜெர்மன் ஜனநாயக குடியரசில்(Deutsche Demokratische Republik, சுருக்கமாக: DDR), மேற்கு பெர்லினை சுற்றிக்கட்டப்பட்ட மதில்களுக்கு அப்பால், நாற்பதாண்டுகள் சோஷலிசத்தை கட்டியமைக்கும் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.

முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியின் பிரசைகள் சிலர், கடந்த காலம் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதனை அறிந்து கொள்ள நெதர்லாந்து நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் குழுவொன்று(VPRO), நேரடி சாட்சியங்களை கேட்டு ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.

பெர்லின் மதில் பற்றிய கேள்விகளுடன் ஆரம்பிக்கும், இந்த விவரண சித்திரத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் (கம்யூனிச சர்வாதிகார கொடுங்கோன்மை) கிடைக்காதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை தருகின்றது. இந்தப் படத்தில் மூன்று முக்கிய பிரமுகர்கள் நேர் காணப்பட்டுள்ளனர்.

1. முன்னாள் உளவுத்துறை நிறுவனமான "ஸ்டாசி", Ministerium für Staatssicherheit("தேசப்பாதுகாப்பிற்கான அமைச்சு" சுருக்கமாக: Stasi), அதிகாரி Hagen Koch, பெர்லின் மதில் கட்டுவதற்கு திட்டமிடும் பணியை மேற்கொண்டவர். ஜெர்மனி ஒன்றான போது, சோஷலிசத்தை நிராகரித்தவர்.

2. "புதிய சோஷலிச மனிதனை" உருவாக்கும் சலனப்படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருந்த திரைப்பட இயக்குனர் Winfried Junge . உலகிலேயே மிகவும் நீளமான ஆவணப்படமான "The Children of Golzow" தயாரித்தவர். இன்றும் சோஷலிச நம்பிக்கை கொண்டவர்.

3. Gudrun Klitzke , அந்த ஆவணப்படம் தயாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட Golzow நகர பாடசாலையின் முதன்மை மாணவி.

நெதர்லாந்து படப்பிடிப்புக் குழுவின் நோக்கம், மனிதாபிமானமற்ற பெர்லின் மதிலின் (மேற்குலகில் "வெட்கத்தின் சின்னம்" என அழைக்கப்பட்டது.) இருண்டபக்கத்தை வெளிக்கொணர்வது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாகி, சுமார் பத்தாண்டுகளுக்கு பின்னர் 1961 ல் தான் பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதுவரை மேற்கு,கிழக்கு பெர்லின்களுக்கு இடையில் சுதந்திரமான போக்குவரத்து இருந்தது.

அதனை, இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடும் இயக்குனர் Junge, தானே மேற்கு பெர்லின் சென்று வந்ததாகவும், ஆனால் கொள்கைரீதியாக கிழக்கு ஜெர்மனியுடன் ஒத்துப் போனதால் அங்கேயே தங்கி விட்டதாக தெரிவிக்கிறார். மேலும் அமெரிக்க-ஆங்கிலேய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லினை, கிழக்கு ஜெர்மனி உரிமை கோரியதாலும், அது நிறைவேறாததால் மதில் சுவர் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை பலர் வசதியாக மறந்து விடுகின்றனர்.

"கிழக்கு பெர்லினில் பொருட்களின் விலை மலிவாக இருந்ததால், மேற்கு பெர்லின் மக்கள் பெருமளவு வந்து வாங்கிச் சென்றதாகவும், கிழக்கு பெர்லின் பொருளாதாரத்தை காப்பாற்றவே மதில் கட்டப்பட்டதாக", அங்கிருந்த மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை பிரதிபலிக்கிறார், இந்த ஆவணப்படத்தில் சாட்சியமளிக்கும் Gudrun. மேற்கு பெர்லின் வழியாக உளவாளிகள் ஊடுருவதை தடுப்பதற்கே மதில் கட்டியதாக, கிழக்கு ஜெர்மன் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஆனால் இது போன்ற மாற்றுக் கருத்துக்களுக்கு, "சுதந்திர மேற்கு ஐரோப்பாவில்" ஒரு போதும் இடம் இருந்ததில்லை. இப்போதும் சரித்திர பாட நூல்களில் இடம்பெற்ற வாசகங்கள்: "கிழக்கு ஜெர்மனியில் மக்களை கொடுமைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. திறந்தவெளிச் சிறைக்குள் அகப்பட்ட மக்கள், சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்காக மேற்கு ஜெர்மனி நோக்கி பெருமளவில் வெளியேறினர். அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெர்லின் மதில் கட்டப்பட்டது. மீறிச் சென்ற அகதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்."

மதிலை கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட Hagen Koch சாட்சியத்தின் படி, கிழக்கு பெர்லின் நகர மக்கள் வெளியேற மேற்கு-பெர்லின் தீயணைப்புப் படை உதவியுள்ளது. மதில் கட்டப்பட்ட போது, மேற்கு பெர்லின் பகுதிகளில் இடையூறு இருந்தது. காவல் கடமையில் இருந்த கிழக்கு-பெர்லின் வீரர்களை, தப்பியோடும் அகதிகளும், மேற்கு-பெர்லின் காவலர்களும் சுட்டதில், 25 பேரளவில் கொல்லப்பட்டனர்.

பெர்லின் மதில் நான்கு கட்டங்களாக, பல அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டிருந்தாலும், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்படவில்லை. அதற்கு காரணம் நெருக்கமான நகரப்பகுதி என்பதால். ஆனால் மேற்கு பெர்லின் நிர்வாகம் தனது பக்கத்தில் கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருந்தது.

இவற்றை சொன்ன அந்த ஸ்டாசி அதிகாரி, தற்போது கம்யூனிசத்தை தவறென்று வாதிடுபவர். அதற்கு அவர் கூறும் காரணம்: "மனிதர்க்கிடையே ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற, யுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவதென்ற கொள்கை வெறும் கனவு மட்டுமே. நடைமுறையில் சாத்தியமற்றது. பல்வேறு வேறுபாடுகளை இயற்கையாக கொண்ட மனித குலத்தை எப்படி ஒன்றுபடுத்தலாம்?" 

அதேநேரம், நெதர்லாந்து படப்பிடிப்பாளர்கள் அறிய முயன்ற, "கொடுமைக்கார ஸ்டாசி" பற்றி அந்த முன்னாள் அதிகாரி கருத்து எதுவும் கூற மறுக்கிறார். "அப்போது சர்வாதிகாரம் இருந்தது தான். ஆனால் ஹிட்லரினதைப் போல மோசமாக இருக்கவில்லை. வெளியே தெரியாத அளவிற்கு மிக நுணுக்கமானது. (மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான், ஐயா) ஸ்டாசியில் வேலை பார்த்தவர்கள், அவரவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மட்டுமே செய்தனர். மற்றவர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதனால் தான் அந்த அமைப்பு கட்டுக் குலையாமல் இருந்தது."
கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில், போலந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ளது Golzow என்ற சிறிய நகரம். ஒரு காலத்தில், அயலில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை எல்லாம் இணைத்து, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவுப்பண்ணை உருவாகியது. செழிப்பான தரை, சிறந்த விவசாய செயல்முறை, இவற்றின் காரணமாக அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொடுத்த கூட்டுறவுப்பண்ணை, Golzow மக்களை வாழ்க்கை வசதிகை மேம்படுத்தியது.

இன்று? அது ஒரு கைவிடப்பட்ட நகரம், பெரும்பாலும் முதியோர்கள் மட்டும் அங்கே தங்கிவிட, இளைஞர்கள் வேலை தேடி வெளியேறுகின்றனர். Golzow மக்கள் ஒரு காலத்தில் தம்மை சீரும் சிறப்புமாக வாழவைத்த சோஷலிச பொருளாதாரம், மீண்டும் வரவேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இங்கேயாவது, எவராவது கம்யூனிச சர்வாதிகாரம் பேச மாட்டார்களா? என எதிர்பார்த்த நெதர்லாந்தின் ஆவணப்பட தயாரிப்பாளருக்கு ஏமாற்றம். என்ன காரணம்? என்ற கேள்விக்கு எதோ ஒரு திருப்தியான பதிலை பெற்றுக் கொள்கிறார். "பலரை அங்கவீனர்களாக்கிய,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்க்கையை தெரிவு செய்தனர்." 

ஆனால், பேட்டி கொடுக்கும் அந்த சாதாரண விவசாயியே விளக்கமளிக்கிறார்: "எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிருப்தியாளர்கள் எங்கேயும் இருப்பார்கள்." திரைப்பட தயாரிப்பாளர் Winfried Junge அதனை பிரதிபலிக்கிறார்: "கிழக்கு ஜெர்மனியில் நடந்தது ஒரு சோஷலிச பரிசோதனை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோமே. ஆரம்ப முதலே மேற்கு ஜெர்மனி, சோஷலிச கட்டுமானத்தை உடைப்பதிலேயே குறியாக இருந்தது."


Golzow நகர ஆரம்ப பாடசாலையில் ஆறு வயதில் சேரும் குழந்தைகள், அவர்களது மாணவப்பருவம், வகுப்பில் வெளிப்படும் திறமைகள், பிற்காலத்தில் அந்த மாணவர்கள் எந்தெந்த தொழில்களை செய்கின்றனர், இன்னபிறவற்றை பொறுமையாக சுமார் முப்பது ஆண்டு காலம் கடுமையாக உழைத்து, "The Children of Golzow" என்ற சலனப் படமாக தயாரித்திருக்கிறார் Winfred Junge.

இந்த ஆவணப்படத்தில் வரும் திறமையான மாணவியான Gudrun இறுதியில் நகரசபை மேயராக தெரிவாகிறார். ஆவணப்படத்தில் முதன்மை பாததிரமான Gudrun னின் கால் நூற்றாண்டு வரலாறு, சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான வரலாற்றை ஆவணப்படுத்திய ஜெர்மன் மொழி பேசும் குறுந்தகடுகளை(DVD) , நீங்கள் இங்கே: Die Kinder von Golzow பெற்றுக் கொள்ளலாம். அன்றைய கிழக்கு ஜெர்மனியின் சாதாரண பிரசைகளின் வாழ்க்கை முறையையும், அவர்களை சுற்றியிருந்த அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவும்.
"1961-DDR" என்ற பெர்லின் மதில் பற்றிய, (டச்சு மொழி) ஆவணப்படத்தை இங்கேயுள்ள தொடுப்பில் பார்வையிடலாம்.