Saturday, July 25, 2015

உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி


சோஷலிச நாடுகள் என்றால், "சர்வாதிகாரம், ஜனநாயக மறுப்பு, சுதந்திரமின்மை..." இப்படியான கருத்துக்கள் தான் பரப்பப் பட்டு வந்துள்ளன. தானும், தன் குடும்பமும் மட்டும் வாழ்க்கை வசதிகளை அனுபவித்தால் போதும் என்ற சுயநலம் மிக்க தமிழ் மேட்டுக்குடியினரும் அப்படித் தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு அப்பால், சோஷலிச நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது என்று ஆராய விட மாட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கற்றோரினால் மதிக்கப்படும் Le Monde தினசரிப் பத்திரிகையின் மாத இதழான Le Monde diplomatique, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் பெண்களின் நிலைமை பற்றி ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளது. அதில் வந்த தகவல்களை இங்கே தருகிறேன்:

பெர்லின் மதில் விழுந்த பின்னர், இரண்டு ஜெர்மனிகளிலும் வாழும் பெண்களின் வாழ்க்கைத்தரம் ஒரே மட்டத்திற்கு வரும் என்று சமூக விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்கள். ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு என்று அழைக்கப் பட்ட முன்னாள் மேற்கு ஜெர்மனியில், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வைத்திருந்த 16% தாய்மார் மட்டுமே முழுநேர ஊழியர்களாக இருந்தார்கள். ஆனால், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், 52% தாய்மார்கள் முழுநேர வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். முன்பு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பெண்கள் மிக இலகுவாக குடும்பத்தை பராமரித்துக் கொண்டே வேலைக்கும் சென்று வர முடிந்தது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களுக்கு அது மிகவும் சிரமமான விடயமாக இருந்தது. தற்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத கிழக்கு ஜெர்மன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது அவர்களது வாழ்க்கை முறைகள், எதிர்காலத் திட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது. அது மட்டுமல்லாது, அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்துள்ளது.

1950 ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் எங்கிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், முதலாளித்துவ மேற்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது! பெர்லின் மதில் விழும் வரையில், 92% கிழக்கு ஜெர்மன் பெண்கள் நிரந்தரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். 60% பெண்கள் மாத்திரமே வேலைக்கு சென்று கொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும் பொழுது, கிழக்கு ஜெர்மன் உழைக்கும் பெண்களின் விகிதாசாரம் உலகிலேயே மிக அதிகமானதும், தனித்துவமானதும் ஆகும்.

92% பெண்கள் வேலைக்கு சென்ற யதார்த்தத்தை கவனத்தில் எடுத்தால், கிழக்கு ஜெர்மன் பெண்கள், ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளை அனுபவித்தனர் என்பது தெளிவாகும். மேற்கு ஜெர்மன் பெண்கள், "குழந்தைகளை பராமரிப்பதற்காக வீட்டில் இருக்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து விடுபட முடியாமல் இருந்தனர். அதே நேரம், கிழக்கு ஜெர்மன் பெண்கள், கணவனின் சம்பாத்தியத்தை நம்பியிராமல் சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நின்றனர்.

எழுபதுகளில் கிழக்கு ஜெர்மனியில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தது. அதனால், திருமணமாகாத யுவதிகளும், விவாகரத்து செய்த பெண்களும், குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஊக்குவித்தது. "சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான மனித வலு" என்று சாமானிய மக்களால் நையாண்டி செய்யப்பட்டாலும், அரசு அவர்களுக்கு வேண்டிய விசேட சலுகைகளை செய்து கொடுத்ததன் மூலம், சமூக அந்தஸ்தை உயர்த்தியது. அதே நேரம், மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களில் பலர், விவாகரத்துக்குப் பின்னர் வறுமைக்குள் தள்ளப் பட்டனர். தாய்மை அடைவது, பெண்களின் பின்னடைவாக கருதப் பட்டது.

அதனால், ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதில் வியப்பில்லை. எந்தக் காலத்திலும் வேலையில்லாப் பிரச்சினையை அனுபவித்திராதவர்கள், தமக்கு பல சலுகைகளை வழங்கிய அரசமைப்பு நொறுங்கிப் போனதை உணர்ந்து கொண்டார்கள். தற்போது (ஒன்றிணைந்த ஜெர்மன்) அரசின் தொழில் முகவர் நிலையத்திற்கு செல்லும் ஓர் இளம் தாய், "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்று சொன்னால், அலுவலர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். (ஏனென்றால் அவருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.)

முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், அரசு எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஒரு வேலைக்குப் போகும் தாய், தனது குழந்தைகளை பராமரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களை பிடித்து விடத் தேவையில்லை. வேலைக்கு செல்லும் கணவனும் நேரத்தை ஒதுக்கத் தேவையில்லை. அரசே குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. இதனால், தாய்மார்கள் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கவில்லை. ஜெர்மன் ஒன்றிணைவு, முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்து விட்டது.

2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, முன்னாள் கிழக்கு - மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த பெண்கள், வேலை, குழந்தைகள் பற்றி, இரண்டு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொதுவாக எல்லாப் பெண்களும் பிள்ளைகள் தமக்கு முக்கியம் என்று சொன்னார்கள். இருப்பினும், மேற்கு ஜெர்மன் பெண்கள், தொழிலை விட, பிள்ளை வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தம் முன்னால் இருந்த அனைத்து வகையான கஷ்டங்களையும் பார்த்த பின்னரும், வேலையில்லாத காலத்தை, குழந்தை பராமரிப்பில் செலவிடுவது சிறந்தது என்று நம்பினார்கள்.

அதற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் பெண்கள், தொழிலையும், குழந்தை வளர்ப்பையும் சமமான கடமைகளாக கருதினார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் வேலை செய்யும் தாய் முன்னுதாரணமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். வேலைக்கு செல்வதால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதனால் தாயின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்த இடையூறும் வராது என்றும் சொல்கின்றனர். தங்களது பொருளாதார சுதந்திரம், முழுக் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என்று வாதிடுகின்றனர்.

மேற்கு ஜெர்மன் பெண்கள், (வேலைக்கு போகாமல்) வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, தாயின் கடமை என்று கூறுகின்றனர். குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அங்கீகரித்தாலும், அதன் திறக்கும் நேரங்களுடன் ஒத்துப் போகின்றனர். (குழந்தை பராமரிப்பு நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே திறந்திருக்கும்.) கிழக்கு ஜெர்மன் பெண்கள், முன்பு இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருக்கவில்லை. (அதாவது, அதிகாலையோ, இரவோ, வேலைக்கு செல்லும் நேரம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் எந்த நேரமும் திறந்திருக்கும்.) அதனால், குழந்தை பராமரிப்பு நிலையங்களின் சேவை, எல்லா நேரத்திலும் இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று, கிழக்கு ஜெர்மன் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான், வேலை வாய்ப்பும் இலகுவாக கிடைக்கும்.

ஒரு வேலையற்ற இளம் தாய், தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் காரணத்தை காட்டி, பல இடங்களில் வேலை மறுக்கப் பட்டதாகக் கூறுகின்றார். தன்னால் குழந்தையை பராமரிப்பதற்கு ஒழுங்கு படுத்த முடியும் என்று சொன்ன போதிலும் யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. அடுத்த குழந்தைக்கு எதிர்பார்ப்பதாக எந்த இடத்திலும் உண்மையை கூற முடியாது. இதனால், வேலைக்கான நேர்முகத் தேர்வில், இன்னொரு குழந்தைக்கு ஆசையில்லை என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகின்றது. கம்யூனிச ஆட்சிக் காலத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுகளில், அப்படி ஒன்றை கூறும் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் எல்லோரும், தமது அவமானத்தை பொறுத்துக் கொண்டு, புதுமையான விதிகளுடன் கூடிய விளையாட்டுக்களை விளையாட வேண்டியுள்ளது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மன் தாய்மாரைப் பொறுத்தவரையில் இது வாழ்க்கையின் யதார்த்தம்.

(விவாகரத்து பெற்று தனியாக வாழும்) இளம் தாய் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார்:
"ஒரு தடவை எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளர் வேலை கிடைத்தது. எனது நிர்வாகி, அவரும் ஒரு பெண், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு பேசினார். வாரத்திற்கு நாற்பது மணித்தியாலத்திற்கும் அதிகமாக, அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் உன்னைக் கேட்போம் என்றார். அதற்கு நான் முடியாதென்று மறுத்து விட்டேன். அது எனது தவறு. அவருக்கு என் மேல் கோபம் வந்து விட்டது. ஊரில் எத்தனை ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த வேலை கிடைத்ததற்காக சந்தோஷப் பட வேண்டும் என்று சத்தம் போட்டார்." 

தனது அனுபவக் கதையை கூறி விட்டு அந்தத் தாய் கேட்டார்:"எனக்கு வேலை முக்கியம் தான். ஆனால், வேலை காரணமாக காலை முதல் இரவு வரையில் எனது குழந்தையை பார்க்க முடியாதென்றால் அது என்ன வாழ்க்கை? என்ன மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்?"

சமூக விஞ்ஞானிகளான Jutta Gysi, Dagmar Meyer ஆகியோரின் கூற்றின் படி: "முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் குடும்ப நலக் கொள்கையானது பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இன்றைக்கு நடக்க முடியாத ஒன்று. பெரும்பாலான பெண்கள் செய்து வந்த தொழில்கள், ஆண்களுடையதை விட தரம் குறைந்ததாக இருந்தது உண்மை. அதனால் 30% குறைந்த சம்பளம் கிடைத்தது. இருப்பினும், (வாடகை கட்ட முடியாமல்) வீட்டை இழக்க வேண்டுமென்ற பயம் இருக்கவில்லை. குழந்தை பரமாரிப்பு நிலையத்தில் இடம் கிடைக்குமா என்ற கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் அரசின் நம்பகமான சமூகநலத் திட்டங்களில் தங்கி இருந்தார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென்றால், அது கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய, மிக முக்கியமான விடயம்."

பெர்லின் மதில் விழுந்தவுடன், கிழக்கு ஜெர்மனியின் பாலின சமத்துவமும் விழுந்து விட்டது. ஆயினும், கால் நூற்றாண்டுக்குப் பின்னரும், அது சமூகத்தில் தாய்மாரின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கிறது.

(நன்றி: Le Monde diplomatique, June 2015)

(பிற்குறிப்பு: ஐரோப்பாவில் வசிக்காத தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக, நான் கட்டுரையில் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன்.)

No comments: