Wednesday, April 22, 2020

நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில், "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல்:



1)நெதெர்லாந்து நாட்டில் சமயப் பின்னணி அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?

சமயம் என்பதை விட சமய நிறுவனம் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நெதர்லாந்தும் ஒரு காலத்தில் "மத அடிப்படைவாத" நாடாக இருந்தது தான். அதன் அர்த்தம் மக்கள் ஏதாவதொரு மத நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஒரு புறம் கத்தோலிக்க- கிறிஸ்தவ நிறுவனமும், மறுபுறம் புரட்டஸ்தாந்து- கிறிஸ்தவ நிறுவனமும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் சமூக நீக்கம் செய்யப் பட்டனர். அவ்வாறு சமூக நீக்கம் செய்யப் பட்டவருடன் சொந்தக்காரர்களும் தொடர்பு வைக்க முடியாது. மேலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து சமூகங்களுக்கு இடையிலான தொடர்பாடலும் மிகக் குறைவாக இருந்தது. அதாவது ஒரு கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்துகாரரும் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது.

உண்மையில் இதுபோன்ற அதீத கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் இன்றைய மதச்சார்பற்ற அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களில் சனத்தொகை பெருகியதும் மதக் கட்டுப்பாடுகளில் இருந்து விட்டு விலகக் காரணமாக அமைந்திருந்தது. அதே நேரம் முன்பு மத நிறுவனங்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் அரசு பொறுப்பெடுத்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் ஏழைகள், வேலையற்றவர்கள், தேவாலயத்தின் கதவைத் தட்டி உதவி கேட்டு வந்தனர். தற்போது நலன்புரி அரசுத் திட்டங்கள் அனைத்து நலிவடைந்த பிரிவனருக்கும் உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து கொண்டு சென்றது. தற்காலத்தில் ஆன்மிகம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது தேடல் சம்பந்தப் பட்ட விடயமாகி விட்டது.

2) தாங்கள் ஒரு இடதுசாரி முனைப்புடையவரா அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்ன?

இதற்கும் நெதர்லாந்து வரலாற்றில் இருந்து உதாரணம் காட்டலாம் என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த Domela Nieuwenhuis நெதர்லாந்து சோஷலிச இயக்கத்தின் தந்தையாக போற்றப் படுகிறார். அவர் ஒரு காலத்தில் பாதிரியாராக கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து வந்தார்! ஜெர்மன் - பிரான்ஸ் போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட பின்னர் சமாதானத்தை விரும்புவோராகவும், சமத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார். மன்னர், மத நிறுவனம், முதலாளித்துவம், மதுபானக் கடை போன்றவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இது போன்ற எழுச்சிக் கருத்துக்கள் எல்லாம் "இடதுசாரித்தனம்" என்றால் நானும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன? எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறவர் இடதுசாரியாகத் தான் இருக்க முடியும். தென் அமெரிக்காவில் ஒரு காலத்தில் மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து "விடுதலை இறையியல்" போதித்த கத்தோலிக்க பாதிரியார்கள் அங்குள்ள ஏழை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கூட நிறைய இடதுசாரிக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஏழைகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வாக பரலோக ராஜ்ஜியத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார். நான் பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது தற்போதுள்ள அரசு, பொருளாதார அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

3) தாங்கள் ஒரு சிறந்த பன்மொழி அறிவு திறன் கொண்டவர் என்பதை நான் நினைக்கின்றேன் இவ்வாறு தங்களை வளம்படுத்த காரணம் ஏதும் உண்டா?

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை பன்முகக் கலாச்சார சமுதாயத்தில் கழித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் இருந்தே உலகின் பிற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிய வேண்டும் என்ற பேரவா இருந்தது. "ஒரே இடத்தில் இருந்து குப்பை கொட்டுவது" ஒத்துவரவில்லை. "நாடோடியாக அலைவது" பிடித்த விடயமாக இருந்தது. அதற்கு பல மொழிகளையும் கற்பது அவசியம் எனக் கண்டுகொண்டேன். "ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்பது ஒரு முன்முடிவு. அது உண்மையல்ல. நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அந்நிய மொழியும் ஒரு புதிய உலகத்திற்கான திறவுகோல். குறைந்தது பத்து சொற்களை அறிந்து கொண்டாலே பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். எமது அறிவும் விசாலமடையும். ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்வது சிறந்தது என்றொரு சீனப் பழமொழி உள்ளது.

4) தங்கள் பார்வையில் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் பற்று எவ்வாறு உள்ளது?

தமிழர் மட்டுமல்லாது, ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் குறிப்பிட்ட சில காலம் தாயக பிரிவுத் துயரில் சிக்கியிருக்கும். அண்மையில் நெதர்லாந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை வாசித்தேன். நியூசிலாந்தில் குடியேறிய டச்சுக் காரர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து சமூகத்துடன் கலப்பதில்லை. ஒரு தனியான பிரதேசத்தில் மூடப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள். பலர் டச்சு மொழி மட்டுமே பேசுகிறார்கள். டச்சு மரபு வழி உணவை உண்கிறார்கள். அவர்களுக்கென தனியாக ஒரு டச்சு மொழி பத்திரிகையும் வெளிவருகிறது. ஆகவே இது உலகம் முழுவதும் உள்ள தோற்றப்பாடு தான்.

புலம்பெயர் தமிழர்களின் தமிழ்ப்பற்று இன்று ஓர் அடையாள அரசியலாக மாறிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது, சுற்றி வர வேறொரு மொழி பேசும், வேற்றின கலாச்சாரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தங்களது தனித்துவத்தை தக்க வைப்பதற்கான போராட்டம். இரண்டாவது தலைமுறையினர் இதில் ஆர்வமில்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும், அன்றாடம் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் அவர்களையும் அடையாளம் தேட வைக்கிறது. இதற்குள் ஐரோப்பிய அரசுக்களின் பிரித்தாளும் அரசியல் இருப்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

5) அண்மைக்காலமாக எமது தாயகத்தில் திடீர் என்று சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது இதற்கான கரணம் என்ன என்பதை எம்மோடு பகிர முடியுமா?

இருபத்தியோராம் நூற்றாண்டில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. உண்மையில் இது மதங்களுக்கு இடையிலான முரண்பாடு அல்ல. ஒரு சிலர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அதற்குப் பல அப்பாவிகள் பலியாகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சரியாகச் சொன்னால், அரசு ஆதரவு இருக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அரசு மறைமுகமாக மதத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் எல்லா மதங்களிலும் இது நடக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். மக்கள் மதரீதியாக பிளவுபட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம். உண்மையில் அரசு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பிரஜைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இவையெல்லாம் அரசின் கடமைகள் என அரசமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. அதைவிட அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது தனிக் கதை. அது பற்றி மக்கள் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களது கவனத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி விட வேண்டும். அதற்கு சமய முரண்பாடுகள் உதவுகின்றன. சமய முரண்பாடுகள் மட்டுமல்ல, இனக்கலவரம், யுத்தம் போன்றன கூட ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாக்க உதவுகின்றன.

3 comments:

Admin said...

Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

தமிழ் மொழி said...

super
https://tamilmoozi.blogspot.com/?m=1

Colvin said...

யதார்த்ததை எழுதி உள்ளீர்கள். உங்கள் பன்மொழி திறமைக்கு என் வாழ்த்துக்கள்.