Friday, April 17, 2020

எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்ப்பது நல்லது!


எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது!


ஊரடங்கு, தனிமைப் படுத்தலுக்கு பின்னால் உள்ள வர்க்க முரண்பாடு:
  • அலுவலக ஊழியர்களான மத்தியதர வர்க்கம் வீடுகளில் முடங்கிக் கிடந்து ஆடிப் பாடிக் களிக்கிறது. 
  • அத்தியாவசிய வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளால், எதிர்காலத்தில் ஒரு வர்க்கப் போர் வெடித்தாலும் ஆச்சரியம் எதுவுமில்லை. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் ஒரு காலத்தில் வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்து கிளர்ந்தெழுவார்கள்.

பிரான்சில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதால் மே மாத நடுப்பகுதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. பாரிஸ் நகரில் வெளிநாட்டு குடியேறிகளின் சனத்தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. அங்கு தான் தமிழர்களும் பெருமளவில் வசிக்கிறார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்களும் அதே மாதிரித் தான் உள்ளன. மாட்ரிட், பார்சலோனா போன்ற பெரிய நகரங்களில் வெளிநாட்டு குடியேறிகள் நெருக்கமாக வசிக்கும் பிரதேசங்களில் தான் கொரோனா தொற்று மரணங்கள் அதிகமாக சம்பவித்துள்ளன.

பிரித்தானியாவில் லண்டன், நெதர்லாந்தில் ரொட்டர்டாம், அமெரிக்காவில் நியூயோர்க் என்று சிறுபான்மை இனத்தவர் நெருக்கமாக வாழும் நகரங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் மேற்கத்திய நாடுகளில் சிறுபான்மையின மக்கள் தான் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் இனமும், வர்க்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்கே பூர்வீக ஐரோப்பிய வெள்ளையர் செய்ய விரும்பாத "ஊத்தை" வேலைகளை தான் தமிழர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டு குடியேறிகள் செய்கின்றனர். அதாவது துப்பரவுப் பணிகள், வயோதிபர் மடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். இந்த இடங்களில் தான் கொரோனா தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்நாடுகளில் செய்யும் தொழிலில் மட்டுமல்லாது குடியிருக்கும் வீடுகளிலும் வர்க்க முரண்பாடு தெளிவாகத் தெரியும். ஐரோப்பிய வெள்ளையர்கள் பெரும்பாலும் நகருக்கு வெளியே வீட்டுத் தோட்டத்துடன் கூடிய பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள். அதற்கு மாறாக நகரங்களில் வெளிநாட்டவர்கள் வசதி குறைந்த நெருக்கமான வீடுகளில் வசிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, புதிதாக வந்த வெளிநாட்டவர்கள் வாடகை செலவை ஈடுகட்டுவதற்காக பல நண்பர்களாக ஒன்று சேர்ந்து ஒரு வீட்டில் வசிப்பார்கள். பாரிஸ் நகரில் இது சர்வ சாதாரணம். சிலநேரம் குடும்பங்கள் கூட பிள்ளைகளுடன் ஒரு சிறிய வீட்டில் குடித்தனம் நடத்துவார்கள். இப்படியான இடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்கள் எவ்வாறு தனிமைப் படுத்திக் கொள்ளலாம்? அது நடைமுறைச் சாத்தியமா?

இதுவரை நிறைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த காரணமும் இது தான். அதாவது அவர்களும் இங்கே அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் இங்கு நிலவும் வர்க்க ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் தான். தயவுசெய்து அது ஒடுக்குமுறையா என்று கேட்காதீர்கள். மேலே பல உதாரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

இங்குள்ள நிலைமை இப்படி இருக்கையில், சில இனவாதப் பைத்தியங்கள் இதையும் இனவாதக் கண்ணாடி அணிந்து பார்க்க முனைகின்றனர். இலங்கையில் இருக்கும் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), கொரோனாவுக்கு பலியான ஈழத்தமிழர்களின் படங்களைப் போட்டு, "ஐயகோ, ஒரு தேசம் அழிகிறதே!" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கண்களுக்கு "தமிழர் எல்லாம் ஒரே இனம், ஒரே தேசம்!"

இது ஒரு வர்க்கப் பிரச்சினை. இங்கே ஈழத் தமிழர்களும் உழைக்கும் வர்க்கத்தினர் தான். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் என்பதால் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். தயவுசெய்து இனவாதப் பைத்தியங்கள் சற்று ஒதுங்கி ஓய்வெடுங்கள். உங்களை நீங்களே அரசியலில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டாலே போதும். தமிழ் உழைக்கும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


1 comment:

மயில் said...

இனவாதம் கொரானாவைவிட மோசமானது. எனவேஅவர்களுக்கு இந்தப் பதிவு உறைக்காது. இருப்பினும் பலநாடுகளிலுள்ள நிலைமைகளைச் சுட்டுவதால் அப்பாவி இனவாதிகள் யோசிக்க வாய்ப்புண்டு.