Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

1 comment:

thisan said...

புரட்சி தானாய் வெடிக்காது. அதற்கென்று சரியான பின்புலங்கள் அமைய வேண்டும். உயிர்களின் படிநிலை வளர்ச்சி போல் அமைவதே பொருத்தம்.

சாதாரண மக்களை விட, பணம் படைத்த புள்ளிகள் எப்படி கொரோனாவை வைத்து இன்னும் அள்ளலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் கைக்குள் இருக்கிறார்கள். இன்றைய பொருளியல் வல்லுநர்கள் அதற்கு ஏற்றபடி கொள்கைகள் வகுக்கப் போகிறார்கள். பொருளியல் கொள்கைகள் மாறினால் அன்றி எதுவும் சாத்தியம் இல்லை.

மில்ட்டன் பிரெய்மன் மற்றும் பிரடெரிச் ஹயேக் கொள்கைகளை உலகம் என்று ஒதுக்குமோ அன்று தான் பொருளாதாரமும் சமுதாயமும் உருப்படும். இன்றைய நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வாக மீண்டும் பொருளியலாளர் கெயின்சின் கொள்கைகளுக்குத் திரும்புவதே புத்திசாலித்தனம். அவரும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற யோசித்தவர் தான். ஆனால் சோஷலிசம் என்பதே கெட்ட வார்த்தையாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் கொஞ்சமாவது மக்களைப் படிப்படியாக அந்த சோஷலிச உலகத்தை நோக்கி நகரச் செய்ய இது உதவலாம்.

அதற்கு முன்னே பணம் என்பதை சீர்திருத்தம் செய்ய வேண்டும். பணம் என்பது சேர்ப்பதற்கல்ல. அது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கருவி மட்டுமே என்கிற நிலைக்கு வரவேண்டும். பணத்துக்கு வட்டி இல்லை என்பதை சட்டம் மூலம் உறுதி செய்ய வேண்டும். பொருள்கள்/சேவைகள் எப்படி காலம் செல்லச் செல்ல மதிப்பை இழக்கின்றனவோ அது போல் பணமும் மதிப்பை இழக்கும் நிலை வருமானால் தான்
இன்று நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களுக்கு முடிவு கட்டலாம்.