இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அங்கு என்ன தவறு நடந்தது என்பது பற்றி ஆராய்கிறார்கள். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
- வடக்கு இத்தாலியில் உள்ள லொம்பார்டியா (Lombardia) மாகாணம் தான் வைரஸ் தொற்றினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரைவாசி மரணங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.
- குறிப்பாக மருத்துவ மனைகளில் பெருமளவு மரணங்கள் சம்பவித்துள்ளமை அதிர்ச்சியளிக்கிறது. ஜனவரி மாதம் நோயாளிகள் அனுமதிக்கப் பட்ட நேரம், அதனை சுவாசப்பை அழற்சி என்று நினைத்து மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
- பெப்ரவரி 21 அன்று தான் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. அப்போதும் இது சாதாரண சளிக்காய்ச்சல் போன்று பரவாது என்று WHO கூட அறிவித்திருந்தது. அதாவது மிகக் குறைவாக எடைபோட்டுள்ளனர்.
- தற்செயலாக இத்தாலி தான் கொரோனா வைரஸ் தொற்றுதலுக்குள்ளான முதலாவது ஐரோப்பிய நாடாக இருந்தது. அதனால் அது குறித்து எதுவும் தெரியாத படியால் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. இதே நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியில் இருந்து பாடம் படித்துக் கொண்டதுடன் தமது நாடுகளை பாதுகாத்துக் கொண்டன.
- இத்தாலி எந்தக் காலத்திலும் இது போன்ற பெருந்தொற்றுக்கு தயாராக இருக்கவில்லை. அங்கு மருத்துவமனைகளில் 100000 பேருக்கு 9 ICU கட்டில்கள் இருந்தன. அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் நிரம்பி வழிந்த படியால் பெருமளவு நோயாளிகள் வீடுகளில் வைத்து பராமரிக்கப் பட்டனர். அதுவே அவர்களது சாவுக்கும் காரணமாகி விட்டது.
- மிலானை தலைநகராகக் கொண்ட லொம்பார்டியா மாகாணம் இத்தாலியின் தொழிற்துறை மையப் பகுதி எனலாம். அங்கு தான் பெருமளவு தொழிற்சாலைகள் உள்ளன. தேசத்தின் மொத்த வருமானத்தில் இருபது சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்துறை நகரங்களை மூடி விடுவதற்கு அரசும், முதலாளிகளும் தயாராக இருக்கவில்லை. இந்தளவு பாரதூரமான வைரஸ் தொற்று ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
- இத்தாலி தொழிலதிபர்களின் சங்கமான Confindustria தொழிற்சாலைகளை மூடுவதற்கு முன்வரவில்லை. தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று, முதலாளிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உற்பத்தி நிறுத்தப் பட்டால் இலாப வருமானம் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் தொழிற்சாலைகளை தொடர்ந்தும் இயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
- தேசத்தின் பொருளாதாரமும் பாதிக்கப் படக் கூடாது, அதே நேரம் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படக் கூடாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருந்தது. 7 மார்ச் lockdown அறிவிக்கப் பட்ட பின்னரும் சில தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமை தொடர்ந்தால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்த பின்னர் தான் அவை மூடப்பட்டன.
- லொம்பார்டியா மாகாணத்தில் தான் அறுபது வயதைக் கடந்த வயோதிபர்கள் அதிகமாக இருந்தனர். அதனால் அவர்களே வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப் பட்டனர். மேலும் மருத்துவமனை சீர்கேடுகள் குறித்து நிறைய முறைப்பாடுகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு, முகக்கவசம் அணிவதற்கு பல மருத்துவமனைகளில் தடைவிதிக்கப் பட்டிருந்தது! ஏனென்றால் முகக்கவசம் தேவையற்ற பயத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. (அதாவது முகக் கவசம் அணிந்தவருக்கு தான் நோய் இருக்கிறதென்று நினைத்து மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டது.)
- தற்போது நடக்கும் விசாரணை லொம்பார்டியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நடந்த குற்றங்களை பற்றி மட்டுமே ஆராய்கிறது. மே மாதம் நாடு முழுவதும் lockdown எடுக்கப் பட்ட பின்னர் மேலதிக விசாரணைகள் நடக்கும். அப்போது இன்னும் பல உண்மைகள் தெரிய வரும்.
No comments:
Post a Comment