- கியூபாவில் ஒவ்வோர் ஆண்டும் வரவுசெலவு திட்டத்தில் 27 வீதம் மருத்துவத்திற்கு அல்லது சமூக உதவிக்கு ஒதுக்கப் படுகிறது. அங்கு பிரஜைகளுக்கான மருத்துவ சேவை முற்றிலும் இலவசம்.
- மேற்கத்திய நாடுகளில் கூட புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு குடும்பம் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. கியூபாவில் மருத்துவம் முற்றிலும் இலவசம்.
- பொருளாதார ரீதியாக ஏழை நாடாக வகைப் படுத்த படும் கியூபாவின் மருத்துவ வசதிகள் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு தரமான சேவையை வழங்குகின்றன.
- வருமுன் காப்பது கியூபாவின் மருத்துவ திட்டமாக உள்ளது. பள்ளிக்கூடங்களும், வட்டார கமிட்டிகளும் நோய் தொற்றுதல் தொடர்பான காரணிகள், தடுப்பதற்கான வழிகள் குறித்து தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருக்கும்.
- ஒவ்வொரு வட்டாரத்திலும் Medico de la familia என்ற அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு மருத்துவர், ஒரு தாதியர் இருப்பார்கள்.
- வட்டார மருத்துவர்கள் தமது கிளினிக்கிற்கு வருபவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்வார்கள். ஒரு வீட்டில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் வருடத்திற்கு 2 தடவைகள் வருவார்கள்.
- மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் கிளினிக் அல்லது வைத்தியசாலக்கு அனுப்பப் படுவர். இந்த நடைமுறை காரணமாக பல நோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டு குணப் படுத்தப் படுகின்றது. இதனால் அரசுக்கு செலவும் மிச்சம்.
- கியூபாவில் மருத்துவக்கல்வி உட்பட கல்வி முற்றிலும் இலவசம். அதனால் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவராக வேலை செய்யும் அனைவருக்கும் மாதச் சம்பளம் கிடைக்கும். ஆனால் மேலதிக போனஸ் எதுவும் கொடுக்கப் பட மாட்டாது.
- ஏற்கனவே கியூப மருத்துவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணி புரிந்து வந்தாலும், கொரோனா தொற்று பரவலின் பின்னர் முதல் தடவையாக ஒரு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அனுப்பப் பட்டனர்.
- உலகம் முழுவதும் 60 நாடுகளில் 60.000 கியூப மருத்துவ பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் அங்கு வேலை செய்வது மட்டுமல்லாது, ஆலோசனை வழங்குதல், கற்பித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவர்களது சம்பளங்கள் அந்தந்த நாடுகளின் அரசுக்களால் வழங்கப் படும்.
- நில நடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு கியூப மருத்துவர்கள் உடனேயே அனுப்பப் படுகின்றனர். அதற்கான செலவுகளை கியூப அரசே பொறுப்பு எடுக்கிறது. கியூபர்களின் விரைவான உதவி குறித்து புகழாரம் சூட்டும் சர்வதேச ஊடகங்கள் செலவு பற்றிக் குறிப்பிட மறந்து விடுகின்றன. அதாவது வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
- கியூபாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி அளிப்பதற்கு ELAM (லத்தீன் அமெரிக்க மருத்துவக் கல்லூரி) செயற்படுகின்றது. கடந்த வருடம் மட்டும் 84 நாடுகளை சேர்ந்த 500 மாணவர்கள் மருத்துவராக பட்டம் பெற்று வெளியேறினார்கள். அவர்களுக்கான படிப்புச் செலவு முழுவதையும் கியூப அரசு பொறுப்பு எடுத்தது.
- 1999 ம் ஆண்டு இந்தக் கல்லூரி தொடங்கிய காலத்தில் இருந்து 115 நாடுகளை சேர்ந்த 30000 மருத்துவர்கள் அங்கே படித்துள்ளனர். அவர்களில் 170 பேர் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவில் மருத்துவக் கல்விக்கு பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டும் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அந்நாட்டில் கல்விக் கடன் வாங்கி கடனாளி ஆனவர்கள் பலருண்டு. அதனால் வசதியற்ற அமெரிக்க மாணவர்கள் அருகில் உள்ள கியூபாவுக்கு சென்று படிக்க விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
No comments:
Post a Comment