சீனாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் சிலர் தமது மனம்போன போக்கில் புனைந்த கட்டுக்கதைகளும், வதந்திகளும் சமூகவலைத்தளைங்களில் பரவுகின்றன. இந்த வீடியோவில், இத்தாலியில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் நடந்தது என்ன? எந்த இடத்தில் தவறு செய்தார்கள்? என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன். நாம் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.
இனவாத முட்டாள்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்று நோய் "சீனர்களால் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றது" என்று பலரும் வெகுளித்தனமாக நினைப்பது போன்று தான், இத்தாலியரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்த முட்டாள்தனம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி முழுவதும் இலட்சக் கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. இன்று வரை பத்தாயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் இது குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என நினைத்து அலட்சியப் படுத்தினார்கள். அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தால் விழிப்படைந்து இழப்புகளை குறைத்திருக்கலாம்.
ஜனவரி மாத தொடக்கத்தில் சீனர்களை மட்டும் தனிமைப் படுத்தினால் போதும் நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்று தான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். அரச மட்டத்திலும் இந்த மூட நம்பிக்கை காணப்பட்டது. ஐரோப்பாவில் முதல் தடவையாக இத்தாலி தான் சீனாவுடனான விமான சேவைகளை முற்றாகத் துண்டித்தது. வழமையாக வந்து கொண்டிருந்த சீன சுற்றுலாப் பயணிகளையும் விரட்டியடித்து விட்டனர். சீனர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப் படுத்தினார்கள். பொது மக்கள் சீன ரெஸ்டாரன்ட் செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.
பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் தான் தொற்று நோய்க் காவிகள் என்ற இனவாத மனப்பான்மை உள்ளது. அது இந்த கொரோனா நெருக்கடியில் சீனர்களுக்கு எதிரான இனவாதமாக மாறியது.
இந்த குறுகிய இனவாத மனப்பான்மை தான் இத்தாலியர்கள் விட்ட மாபெரும் தவறு. வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பிரதேசத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் சென்றிருக்க மாட்டார். முதன்முதலாக தொற்றுதலுக்குள்ளான ஒரு சாதாரண தொழிலாளியான 38 வயது இளைஞன், வாழ்க்கையில் ஒரு நாளும் சீனாவுக்கு சென்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்தி இருந்தார். அதனால் அந்த இளைஞனும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். அத்துடன் உதைபந்தாட்டப் போட்டி ஒன்றையும் பார்வையிட சென்றிருக்கிறான். அப்போதே கொரோனா வைரஸ் பலருக்கு தொற்றி விட்டது.
பெப்ரவரி கடைசியில் விழித்தெழுந்த அரசு இயந்திரம் பலரை பரிசோதித்துப் பார்த்ததில் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. உடனே தொற்று காணப்பட்ட பிரதேசத்தை வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தினார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. ஏற்கனவே பிற பிரதேசங்களுக்கும் வைரஸ் தொற்றி விட்டிருந்தது. இந்த அச்சம் காரணமாக மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இறுதியில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வராத நிலையில், சீனா தனது மருத்துவக் குழுவொன்றை பெருமளவு உபகரணங்களுடன் அனுப்பி வைத்தது. இந்த உதவிகள் யாவும் இத்தாலி தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. அதே நேரம் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்ட ஐரோப்பிய நாடுகள் இத்தாலியரின் கண்டனத்திற்கு ஆளாகின. ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றி விட்டு சீனக் கொடியை பறக்க விடுமளவிற்கு வெறுப்புக் காணப்படுகின்றது. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் அறியலாம் என்பது ஓர் உலகப் பழமொழி.
2 comments:
இது ஒரு நல்ல பாடம்
கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாப்போம்.
புலம்பெயர் அகதிகளை ஒருவேலை இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்கிறார்களோ
Post a Comment