Sunday, April 12, 2020

கொரோனாவுக்கு பலியாகும் புலம்பெயர்ந்த உழைக்கும் வர்க்க தமிழர்கள்


இன்று நமக்குத் தேவை பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம், குறுந் தமிழ்த்தேசிய இனவாதம் அல்ல!

லண்டன், பாரிஸ் நகரங்களில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் பலர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். அன்றாடம் வரும் மரண அறிவித்தல்களை பார்த்தாலே தெரியும். பலர் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நகரங்களில் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத் தமிழர்கள், இன்றைய நெருக்கடி காலத்தில் அத்தியாவசிய சேவைகள் எனக் கருதப் படும் வேலைகளை செய்வதால் அவர்களால் வீட்டில் நிற்க முடியாது. கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலைமை. அந்த வேலைகளை வீட்டில் இருந்து கொண்டு செய்ய முடியாது. உதாரணத்திற்கு மருத்துவமனை சுத்திகரிப்பு வேலையை கம்பியூட்டரில் On line மூலம் செய்ய முடியாது.

பெரும்பாலான தமிழ் உழைக்கும் வர்க்கத்தினர் இலகுவில் கொரோனா தொற்றக் கூடிய மருத்துவ மனைகள், வயோதிபர் மடங்கள், (தமிழ்க்)கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், வெதுப்பகங்கள், உணவு பதனிடும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழிலாளர்களாக (பாட்டாளி வர்க்கமாக) வேலை செய்கின்றனர். இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தான் அத்தியாவசிய மக்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவர்கள் யாரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அது இங்கே பெரும்பாலும் வெள்ளையின ஐரோப்பியருக்கென ஒதுக்கப் பட்டுள்ள மத்தியதர வர்க்க தொழில்களில் தான் சாத்தியம். அப்படியான தொழில்களை செய்வோர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்க முடிகிறது.

இந்த வர்க்க முரண்பாடு சமூக வலைத்தலங்களில் பேசப் படுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றை பயன்படுத்துவோர் பெரும்பாலும் மத்தியதர வர்க்க தொழில் செய்வோர் என்பதால் தான். அவர்களுக்கு எங்களது உழைக்கும் வர்க்கத்தின் நெருக்கடி நிலைமை புரியாது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசதியான நடுத்தர வர்க்கத்தினர் தான் பிரதானமான சமூக வலைத்தள பயனாளிகள். அவர்கள் தமது வீடுகளில் படுத்துக் கிடந்து சோம்பல் முறித்த படியே அர்த்தமில்லாத கதைகளை பேசி அரட்டை அடிக்கின்றனர். இந்த நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்ப்பது மட்டுமல்லாது, மக்களுக்கான அரசியல் பேசுவோரைக் கண்டால் ஏளனம் செய்கின்றனர். கேலி, கிண்டல் செய்து திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக இந்த பெருக்கடியை பயன்படுத்தி இராணுவ ஆட்சி கொண்டு வர விரும்பும் பாசிச அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

இதற்கு முன்னர் தீவிரமாக தமிழ்த் தேசிய அரசியல் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த (அ)யோக்கிய சிகாமணிகள் இப்போது புற்றுக்குள் சுருண்டு படுத்து விட்டனர். அவர்களுக்கு இனவாதத்தை விட்டால் உலகில் வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதால் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காலம் மலையேறி விட்டது. அது மீண்டும் திரும்பி வராது.

தமிழ் உழைக்கும் வர்க்க மக்களே! குறுகிய தமிழ் இன நலன் பேணும் இனவாத அரசியல் ஒரு போதும் உங்களுக்கான விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. அதற்கு பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அவசியம். இன்று உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு உழைக்கும் வர்க்க மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு, நீங்களும் முன்னரங்க போர்க்களத்தில் நிற்கிறீர்கள். இன்று உலகம் உங்களை தான் நாயகர்கள் என்று போற்றுகிறது. அந்த அந்தஸ்தை இழந்து விடாதீர்கள்.

நாளைக்கு நிலமை சீரானதும் "தமிழின ஒற்றுமை... இனமானம்... இன நலன்...." என்றெல்லாம் பேசிக் கொண்டு சிலர் வருவார்கள். அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். ஏனென்றால் நாளை வரப் போகும் பொருளாதார நெருக்கடியில் உங்கள் வேலை பறிபோகலாம். அதற்கு காரணமான முதலாளிகள் மீது உங்களுக்கு தார்மீகக் கோபம் எழலாம். அதை மடைமாற்றுவதற்கு இனத்தின் பெயரால் ஒன்று சேர சொல்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

கொரோனா வைரஸ் சில மாதங்களில் ஒழிக்கப் படலாம். ஆனால் முதலாளித்துவ வைரஸ் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்திருக்கும். தமிழ் உழைக்கும் மக்களும் பங்கெடுக்கும் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மூலமே முதலாளித்துவ வைரசை ஒழித்துக் கட்ட முடியும்.


No comments: