பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், இலங்கையர்கள் விடுதலை கோரிப் போராடவில்லை என்றதொரு மாயை பரப்பப் பட்டு வருகின்றது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், குறிப்பிட்டளவு காலனிய எதிர்ப்புப் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், காலனிய படையில் இருந்த இராணுவ வீரர்களின் கலகம் ஒன்று இடம்பெற்றது. அந்தச் சம்பவம் இன்று வரையும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
காலனிய கால இலங்கையில் சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த "தலைவர்கள்" பிரிட்டிஷ் எஜமானுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து கொண்டனர். அப்போதே ட்ராஸ்கிச பாதையில் சென்ற LSSP என்ற சோஷலிசக் கட்சி, மற்றும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் மட்டுமே இலங்கைக்கு சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னோடியான Ceylon Defence Force (CDF) என்ற படையில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கீழ் இலங்கை வீரர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதில் பல சோஷலிஸ்டுகள் இருந்தனர். பெரும்பாலும் LSSP ஆதரவாளர்கள். உலகப்போரை பயன்படுத்தி விடுதலைப் போரை நடத்துவதற்கு தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர்.
அன்று நடந்த போரில், மலேசியாவை ஜப்பானியரிடம் இழந்த பிரிட்டிஷார், என்ன விலை கொடுத்தேனும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவை பாதுகாக்க முடிவெடுத்தனர். பிரதானமாக ரப்பர் உற்பத்தியால் கிடைத்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் சுமார் 75 CDF வீரர்கள், கொகோஸ் தீவுகளில் இறக்கப் பட்டனர்.
இன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கொகோஸ் தீவுகள், இந்து சமுத்திரத்தில், மலேசியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் அமைந்துள்ளன. தீவுவாசிகள் மலே மொழி பேசும் இஸ்லாமியர் ஆவர். ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரை கைப்பற்றிய ஜப்பானிய படைகள், கொகோஸ் தீவுகளையும் பிடித்திருந்தால், இலகுவாக இலங்கை மீது படையெடுத்திருப்பார்கள். அதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் திட்டம்.
எதிர்பாராத விதமாக, கொகோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் கலகம் செய்து தீவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றனர். 8 மே 1942, அன்று இரவு கலகம் செய்த இலங்கை வீரர்கள், தொலைத் தொடர்பு நிலையத்தை கைப்பற்றி, பிரிட்டிஷ் அதிகாரிகளை கைது செய்ய முயன்றனர். ஆனால், இறுதி நேரத்தில் ஆயுதங்கள் செயற்பட மறுத்தன. அதனால் கலகம் முறியடிக்கப் பட்டது.
கலகத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு, கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். கலகத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், கொகோஸ் தீவுகளை கைப்பற்றி, பின்னர் அதை ஜப்பானிய படையினரிடம் ஒப்படைக்க திட்டம் திட்டம் தீட்டியதாக சொல்லப் பட்டது. சிலநேரம் அப்படி ஒரு நோக்கம் இருந்தாலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கலகத்திற்கு தலைமை தாங்கிய பெர்னான்டோ என்பவரும், வேறு இரண்டு பேரும் தூக்கிலிடப் பட்டனர். பெர்னான்டோ விசாரணையின் போது தன் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டை மறுத்து தான் ஒரு நாட்டுப்பற்றாளன் என்று வாதாடினார். அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னர் கடைசியாக சொன்ன வாசகம்: "வெள்ளையருக்கு விசுவாசமாக இருப்பதென்பது போலித்தனமானது"
இந்தச் சம்பவம் இலங்கையின் சரித்திர பாடநூல்களில் குறிப்பிடப் படவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. சிறிலங்கா அரசோ, ஊடகங்களோ நினைவுகூர்வதில்லை. (விதிவிலக்காக, LSSP கட்சியினர் இன்றைக்கும் நினைவுகூர மறப்பதிலை.) அதற்குக் காரணம் என்ன?
இராணுவக் கலகத்தின் பின்னர் விழிப்படைந்த பிரிட்டிஷார், இலங்கை மக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கி காலனிய விசுவாசிகளாக வைத்துக் கொண்டனர். குறிப்பாக, இந்தியர்களை விட இலங்கையர்கள் காலனிய ஆட்சியாளர்களினால் நன்றாக கவனிக்கப்பட்டனர். அதன் விளைவாக, இன்றும் பல சிங்களவர்களும், தமிழர்களும் பிரித்தானியாவுக்கு விசுவாசமாக இருப்பதை கண்கூடாகக் காணலாம்.
அத்துடன், சுதந்திரம் அடைந்த பின்னர், பிரிட்டிஷாருக்கு விசுவாசமான உள்நாட்டு பூர்ஷுவா வர்க்கம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ளது. சோஷலிஸ்டுகள் தான் இலங்கையில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்ற உண்மையை மக்களுக்கு தெரிய விடாமல் மூடி மறைத்து வந்தனர்.
No comments:
Post a Comment