Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

No comments: