Friday, February 07, 2014

சிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்


  • "அரசு அநாதி காலத்திலிருந்து இருக்கவில்லை. அரசு இல்லாமலே சமுதாயங்கள் இருந்து வந்துள்ளன. அவற்றிற்கு அரசைப் பற்றியோ, அரசு அதிகாரத்தைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகங்கள் வர்க்கங்களாகப் பிளவுறுதலுடன் இது அவசியமாகப் பிணைக்கப் பட்டிருந்தது. இப் பிளவின் காரணமாக அரசு அவசியமாயிற்று."    

  • - எங்கெல்ஸ் (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப. 282)
​​​​​​​​​​​​​​​​​​​​​ ______________________________________
                 

இந்திய உப கண்டத்தில் தோன்றிய முதலாவது நாகரிகமான, சிந்துவெளி நாகரிகம், இன்றைக்கும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் படாத மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1902 ம் ஆண்டு), இன்றைய பாகிஸ்தானில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

பிரிட்டிஷ் காலனிய அரசு, அது வரையும், இந்தியர்களின் புராதன நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு தொடங்குவதற்குள், பெரும் பகுதி பிரிட்டிஷ் இராணுவத்தின் ரயில் பாதை செப்பனிடும் வேலைக்காக அழிக்கப் பட்டது. மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக தாக்குப் பிடித்த, புராதன நகர இடிபாடுகளில் இருந்த செங்கல்களை பெயர்த்தெடுத்து கொண்டு சென்று விட்டார்கள்.

இன்றும் கூட, சிந்துவெளி நாகரிகம் பற்றி, பத்து சதவீதம் மட்டுமே அறிந்து வைத்திருப்பதாக, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு தடவையும், புதிது புதிதாக அறிந்து கொள்ளும் பொழுது, பழைய கருதுகோள்கள் பொய்யாகிப் போகின்றன. ஐரோப்பியர்கள், தமது நாகரிகத்தின் தோற்றுவாயாக கிரேக்கத்தை கருதுகின்றனர். அதே போன்று, இந்தியர்கள் சிந்து சமவெளியை தமது நாகரிகம் தோன்றிய இடமாகக் கருதுவதில் தவறில்லை. ஆனால், ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப் பட்ட சில இலச்சினைகளை மட்டும் வைத்துக் கொண்டு, பல தவறான முடிவுகளுக்கு வருகின்றனர்.

உண்மை என்னவென்றால், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பின்பற்றிய மதம், பேசிய மொழி குறித்து, இன்று வரையில் யாருக்கும் எதுவும் தெரியாது. சுமேரியர்கள், பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் என்று பண்டைய நாகரிங்களை சேர்ந்த மக்கள் எழுதிய மொழிகளை எல்லாம் படித்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், சிந்துவெளி எழுத்துக்களின் வரி வடிவங்களை மட்டும் இன்னமும் யாராலும் படிக்க முடியவில்லை. சிந்துவெளி மக்களின் மொழி, அரபி மொழி போன்று, வலமிருந்து இடமாக எழுதப் பட்டது என்று மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம் செய்யும் நிலையில் உள்ள மனிதனின் உருவம் ஒன்றும், காளை ஒன்றின் உருவமும் பொறித்த  இலச்சினைகள், பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அதை மட்டுமே வைத்துக் கொண்டு, அது பசுபதி (ஆநிரைகளின் தலைவன்)  தெய்வம் என்றும், அது சிவனின் மறுபெயர் என்பதால், சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் என்று சிலர் நினைக்கின்றனர். தமிழர்கள் மட்டுமே சைவர்கள் என்று நம்பும் சிலர், சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்றும் நிறுவ முனைகின்றனர். யானை பார்த்த குருடர்களின் கதை போன்று, அவையெல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே. 

பசுபதி என்ற தெய்வம், சிவனைக் குறிக்குமா என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விடயம் தான். எருது மாட்டை, அல்லது பசுபதி போன்ற ஆநிரைகளின் தலைவனை தெய்வமாக வழிபடும் மதம், வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் இருந்துள்ளது. பாஹ்ரைன், ஈராக்கில் எருதுக்கு கோயில்கள் இருந்தன. (பார்க்க: சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?)

சுமேரியர்கள் அல்லது பாபிலோனியர்களின் நிம்ரூத் என்ற தெய்வம், சிவன் பற்றிய வர்ணனைகளுடன் ஒத்துப் போகின்றது. ஆகவே, பல நாடுகளில், பல பெயர்களில் அழைக்கப் பட்ட ஒரே மாதிரியான தெய்வத்தின் வழிபாடு, சிந்துவெளியிலும் இருந்திருந்தால், அதில் வியப்பில்லை. ஆனால், அது சிவன் தான், என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டெடுத்த, காளை மாடு, தியானம் செய்யும் பசுபதி இலச்சினைகள் மட்டும் தான் நமக்குத் தெரியும். (பல தமிழ் நூல்களில், திரும்பத் திரும்ப அதை மட்டும் தான் எழுதுகிறார்கள்.) அவற்றை விட வேறு பல இலச்சினைகளில், வேறு மிருகங்களின் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. யானை, புலி என்று ஈர நிலக் காடுகளில் வாழும் மிருகங்களின் படங்களும் உள்ளன. சிங்கம் போன்ற வெப்ப வலையக் காடுகளில் உறையும் மிருகங்களை, சிந்துவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை.

வர்த்தகம் தொடர்பான பத்திரங்களில்  "சீல்"  வைக்க 
பயன்படுத்தப் பட்ட யானை இலச்சினை. 

எருது மாடு, யானை ஆகிய மிருகங்களின் படங்கள் பொறித்த இலச்சினைகளின் மேலே, அவர்களது மொழியில் ஏதோ எழுதப் பட்டுள்ளது. அது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த இலச்சினைகளின் வடிவமைப்பைப் பார்க்கும் பொழுது, அவை வழிபாட்டுக்கு பயன்பட்ட தெய்வச் சிற்பங்களாக தெரியவில்லை. மாறாக, அரச இலச்சினைகளாக, பத்திரங்களில் சீல் வைக்க பயன்படுத்தப் பட்டுள்ளதாக தெரிகின்றது. அதாவது, வர்த்தக ஒப்பந்தங்கள், அனுமதிப் பத்திரங்களை செல்லுபடியாக்குவதற்காக பயன்பட்டுள்ளது. அன்றைய காலத்தில், சிந்துவெளி மக்கள் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது, செல்வச் செழிப்புக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், தம்மைத் தாமே எப்படி அழைத்துக் கொண்டார்கள், தமது நாட்டுக்கு என்ன பெயர் வைத்திருந்தார்கள், என்பது யாருக்கும் தெரியாது. பாகிஸ்தானில் அரப்பா என்ற கிராமத்தின் அருகில் இருந்ததால், “ஹரப்பா நாகரிகம்” என்றும், சிந்தி மொழியில் இறந்தவர்கள் நகரம் என்ற அர்த்தத்தில், “மொஹஞ்சதாரோ” என்றும் அழைக்கப் படுகின்றது. சிந்து, இந்து இரண்டும் அந்தப் பிரதேசத்தில் ஓடும் நதியின் வெவ்வேறு பெயர்கள். அதனால், சிந்துவெளி நாகரிகம் என்றாலும், இந்து நாகரிகம் என்றாலும், இரண்டும் ஒன்று தான்.

அதிர்ஷ்டவசமாக, சுமேரியர்களின் வரலாற்றுக் குறிப்புகளில், சிந்து வெளி மக்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. சிந்து வெளி வணிகர்கள், இன்றைய ஈராக்கில் இருந்த சுமேரியா வரையில் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். “மிலேக்கா” நாட்டு வணிகர், மொழிபெயர்ப்பாளர் பற்றிய சுமேரியர்களின் குறிப்புகள், சிந்துவெளிக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அப்படியானால், சிந்துவெளியில் இருந்த நாட்டிற்கு, மிலேக்கா அல்லது அது மாதிரியான பெயர் இருந்திருக்க வேண்டும். 

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், ஆரியர்களின் ரிக் வேதம், “மிலேச்சர்கள்” என்று ஒரு இன மக்களை பெயர் சொல்லி அழைக்கின்றது. பிற்காலத்தில் ஒரு சாதியாக மாறி விட்ட மிலேச்சர்கள், வேத காலத்தில் ஆரிய தேசத்திற்கு வெளியே இருந்த அந்நியர்களைக் குறித்தது. இது, கிரேக்கர்கள் தமது தேசத்திற்கு வெளியே இருந்த அந்நிய இனங்களை, “பார்பாரியர்கள்” (Barbarian) என்று அழைத்ததைப் போன்றது.

மேற்குறிப்பிட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. (திராவிடர்கள் எந்த மொழியை பேசுவோராகவும் இருக்கலாம். தமிழர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.) சிந்து வெளியில் வாழ்ந்த திராவிட இன மக்கள், அன்று உலகிற் சிறந்த நாகரிக வளர்ச்சி கண்டிருந்தார்கள். அவர்களது காலத்தில், சுமேரியா, எகிப்தில் நாகரிக சமுதாயங்கள் தோன்றி இருந்தன. ஆனால், அவர்களால் கூட, சிந்து வெளி மக்களின் நாகரிக வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்றைய சிந்து வெளி நாகரிகம், இன்றைய பாகிஸ்தானில் மட்டும் இருக்கவில்லை. ஈரானின் கிழக்கு எல்லைப் பகுதி, ஆப்கானிஸ்தானின் மலைகள், குஜராத், டெல்லி வரையில், சிந்துவெளி நாகரிகம் பரவி இருந்துள்ளது. அங்கெல்லாம் நடந்த அகழ்வாராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. அநேகமாக, மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் நகரங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியாவில், குஜராத்தில் டொலாவிரா (Dholavira) எனுமிடத்திலும், அதே மாதிரியான ஒரு பெரிய நகரத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

 தண்ணீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட பிரமாண்டமான தொட்டி. (Dholavira , குஜராத்)
ஹரப்பா, மொஹஞ்சதாரோவை விட, டொலாவிராவில் பல கட்டுமானங்கள் அழியாமல் அப்படியே உள்ளன. உதாரணத்திற்கு, நீரைத் தேக்கி வைக்கப் பயன்பட்ட பிரமாண்டமான தொட்டியை கூறலாம். அது ஒரு நவீன நீர்த் தேக்கம் போன்று கட்டப் பட்டுள்ளது. தொட்டியை பராமரிப்பதற்காக கட்டப்பட்ட படிகள் கீழ் நோக்கிச் செல்கின்றன. இது போன்று, நீரைத் தேக்கி வைப்பதற்காக, சிறிதும் பெரிதுமாக, பத்து, பதினைந்து தண்ணீர்த் தொட்டிகள் உள்ளன. ஹரப்பா, மொஹஞ்சதாரோவிலும் ஒரே மாதிரியான தண்ணீர்த் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன. மேலும், அது இன்றைய கோயில் தீர்த்தக் கேணி மாதிரி, பொது மக்கள் நீராடுவதற்கும் பயன்பட்டிருக்கலாம்.

சிந்துவெளி நாகரிக கால பொறியியலாளர்களின் நீர் முகாமைத்துவம், நவீன விஞ்ஞான யுகத்திற்கு ஏற்றது போல அமைந்துள்ளமை வியக்க வைக்கின்றது. சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள், உடற்தூய்மை பேணுவதில் அதிக அக்கறை காட்டி வந்துள்ளனர். செங்கற்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும், ஒரு குளியலறை இருந்துள்ளது. குளியறையில் இருந்து வடிந்து செல்லும் நீர், தெருவோர சாக்கடையில் போய்ச் சேருமாறு கட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும், கழிவு நீரை எடுத்துச் செல்லும் சாக்கடைகள் கட்டப் பட்டிருந்தன. ஐரோப்பிய நகரங்களில் கூட, 17 ம், 18 ம் நூற்றாண்டில் தான், சாக்கடை வசதி கொண்டு வரப் பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், பாக்தாத் நகரில் சாக்கடை வசதி இருந்தது. ஆனால், சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள், ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

இடது : ஆழமான கிணறு. வலது : நவீன மலசல கூடம். 

சிந்துவெளி நாகரிக காலத்தில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனியான மலசல கூடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. நவீன காலத்தில் கட்டபடும் கழிப்பறை போன்று, சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டுள்ளது. குடி நீருக்காக, பல கிணறுகள் தோண்டப் பட்டுள்ளன. சில கிணறுகள் 55 அடி ஆழத்தில் கூட தோண்டி இருக்கிறார்கள். இவற்றை விட, முழுக்க முழுக்க சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், தெருக்கள் என்பன, ஒரு நவீன கால நகரம் போன்ற தோற்றத்தை தருகின்றன.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே, உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட மக்கள், தமக்கென்று பொதுவான மதம், அல்லது அரசு என்று எதையும் கொண்டிருக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது! அரச மதம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று எதுவும் கிடையாது. கோயில்கள் அல்லது வழிபாட்டு ஸ்தலங்கள் இருந்ததற்கான எந்தத் தடயமும் கிடையாது. பண்டைய நாகரிகங்களில் இருந்ததைப் போன்ற, தெய்வச் சிலைகள், சிற்பங்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை. சிந்துவெளி மக்கள் சிவனை அல்லது சக்தியை வழிபட்டிருக்கலாம். ஆனால், அது நகரில் வாழ்ந்த குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட மத நம்பிக்கை போன்று தெரிகின்றது.

மொஹஞ்சதாரோ நகரமும்,
அதன் அருகில் உள்ள குன்றின் மேல் கட்டப் பட்ட
புத்த ஸ்தூபி அல்லது பிரமிட்டும்.
பொதுவாக, சிந்து வெளி நாகரிகம் மதச் சார்பற்றதாக இருந்துள்ளது. ஆட்சியாளர்கள் மதம் குறித்து அக்கறைப் படவில்லை போலத் தெரிகின்றது. மொஹஞ்சதாரோவில், ஒரு குன்றின் மேல் புத்த ஸ்தூபி போன்ற தோற்றத்துடன் இடிந்த கட்டிடம் ஒன்று இருக்கிறது. சில அகழ்வாராய்ச்சியாளர்கள், அதை வைத்துக் கொண்டு, சிந்துவெளி நாகரிகத்தில் பௌத்த மதம் இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீபத்திய ஆய்வுகள், அந்த இடிபாடு ஒரு புத்த ஸ்தூபி அல்ல என்று கூறுகின்றன. அனேகமாக, அது ஒரு பிரமிட் அல்லது அது போன்ற ஏதாவது கட்டிடமாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சிந்து வெளியில் வாழ்ந்த மக்களை ஆள்வதற்கு ஓர் அரசு இருக்கவில்லை! என்னது! அரசு இருக்கவில்லையா? அது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். இன்றைக்கு நாங்கள் அதி உன்னத நாகரிகமடைந்த உலகில் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மெத்தப் படித்த அறிவுஜீவிகள் கூட, அரசு இல்லாத தேசத்தை கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அரசு என்பது மக்களை ஒடுக்குவதற்கான கருவி என்பது பலருக்கு தெரிவதில்லை. 


  • "அரசைப் பற்றிய  முட்டாள்தனமான நம்பிக்கை, தத்துவஞானத்தில் இருந்து, முதலாளி வர்க்கத்தினருடைய உணர்வில், பல தொழிலாளர்களின் உணர்வில் கூடக் கலந்து விட்டது." 
  • "யதார்த்தத்தில் அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குகின்ற இயந்திரம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது முடியாட்சியைப் போன்று ஜனநாயகக் குடியரசுக்கும் உண்மையானதே." 
             - கார்ல் மார்க்ஸ் (மார்க்ஸ், எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்)

சிந்துவெளி நாகரிகத்தில், அரசு என்ற கட்டமைப்பு இருந்ததற்கான எந்த தடயமும் கிடையாது. அரண்மனை, அல்லது மாளிகை ஏதாவது கண்டுபிடிக்கப் பட்டால், அங்கே மன்னராட்சி நிலவியதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கே ஒரு மன்னனின் ஆட்சி, அல்லது அரச வம்சம் இருந்ததற்கான எந்தச் சான்றும் கிடையாது. நகரம் முழுவதும் ஒரே மாதிரியான வீடுகள் கட்டப் பட்டிருந்தாலும், இடையிடையே பல பெரிய வீடுகளும் காணப் படுகின்றன. ஆனால், அவை செல்வச் செழிப்பை காட்டுவதற்காக கட்டப் பட்டதாக தெரியவில்லை. 


  • "அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம். உடைமையற்ற வர்க்கத்திடமிருந்து அந்த வர்க்கத்தை பாதுகாப்பதற்கே அது இருக்கிறது."  

         - எங்கெல்ஸ் (குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)

அனேகமாக, சிந்துவெளியில் ஒவ்வொரு நகரமும் சுதந்திரமான நாடு போன்று செயற்பட்டு வந்துள்ளது. பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் சனத்தொகை கொண்ட நகரங்களை, மக்கள் பிரதிநிதிகளின் குழு ஒன்று ஆட்சி செய்திருக்க வேண்டும். அவர்கள் வணிகர்களாக, அல்லது கைவினைஞர்களாக இருந்திருக்கலாம். அப்படியான ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தமக்கென பெரிய வீடுகளை கட்டி இருக்கலாம்.

சிந்து வெளி நாகரிகம் பற்றி, நாம் மென்மேலும் அறியும் பொழுது, அது நவீன கால பொதுவுடைமை சித்தாந்தத்துடன் ஒத்துப் போவது துலக்கமாக தெரிகின்றது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, பகுனின், புருடொன் போன்ற அனார்க்கிச சிந்தனையாளர்களும், ஆதி காலத்தில் பொதுவுடைமை சமுதாயம் இருந்ததை வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு பொதுவுடைமை சமுதாயத்தில் அரசு இருக்காது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டிருக்கும். குடிமக்களுக்கு இடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்காது. நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது.

நவீன காலத்தில் மட்டுமல்ல, பண்டைய நாகரிகங்களிலும் ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் குவிந்திருந்தது. அவர்களுக்கு மட்டுமே, தங்கத்தால் செய்த அணிகலங்களும், ஆடம்பர நுகர்வுப் பொருட்களும் கிடைத்து வந்தன. ஆனால், சிந்து சமவெளியில் அவ்வாறு, ஆடம்பர வாழ்வை அனுபவித்த செல்வந்தர்கள் இருந்ததாக தெரியவில்லை. அனேகமாக எல்லா வகையான பொருட்களும், அனைவருக்கும் கிடைத்து வந்துள்ளன. பெரிய நகரங்களில் கிடைத்த தரமான பாவனைப் பொருட்கள், தொலை தூரத்தில் இருந்த சிறிய நகரங்களிலும் கிடைத்து வந்தன. சிந்து வெளியில் இலட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், எல்லோருக்கும் வீட்டு வசதி கிடைத்திருந்தது. முன்னாள் சோஷலிச நாடுகளைப் போன்று, அனைவருக்கும் ஒரே மாதிரியான குடியிருப்புகள் கட்டப் பட்டிருந்தன.

சிந்துவெளி நாகரிகம், அனைத்து குடிமக்களும் சமத்துவமாக நடத்தப் பட்ட, சமதர்ம சமுதாயமாக இருந்தது. அது ஒரு ஆதிப் பொதுவுடைமை சமுதாயம். அங்கே ஒரு அரசு இருக்கவில்லை. அரச மதம் என்று எதுவும் இருக்கவில்லை.  கோயில்கள் இருக்கவில்லை. அரசன் என்று யாரும் இருக்கவில்லை. அரச வம்சம் என்ற ஆண்ட பரம்பரை எதுவும் இருக்கவில்லை. ஆனால், குடி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கான நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. இராணுவம், ஆயுதங்கள் கூட, தற்பாதுகாப்புக்காக மட்டுமே இருந்துள்ளன. சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கையை விரும்பினார்கள். அவர்கள் அயலில் உள்ள எந்த நாட்டின் மீதும் படையெடுத்து சென்று, அங்கிருந்த மக்களை அடிமைப் படுத்தவில்லை. உலகில் இது போன்று, ஆயிரம் வருட கால சமாதானம் நிலவிய, வேறெந்த நாகரிகமாவது இருந்திருக்குமா என்பது சந்தேகமே. 


  • "கம்யூனிஸ்ட் சமூகத்தில் தனிநபர்களுடைய நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதில்லை. அதற்கு மாறாக அவை இணைந்திருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் போட்டி என்பது அகற்றப் பட்டு விடுகின்றது. இன்றுள்ள பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்கங்கள் நீடிப்பதும் அங்கே இருக்காது.....  
  • இன்றைய சமூகம் தனிப்பட்ட மனிதருக்கும் மற்ற ஒவ்வொருவருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்துவதால், எல்லோருக்கும் எதிராக எல்லோரும் என்ற சமூக யுத்தத்தை உற்பத்தி செய்கின்றது.... 
  • குற்றங்கள், நேரடியான பலாத்கார நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து சமூகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, மிக விரிவான, மிகவும் சிக்கலான நிர்வாக அமைப்பும் தேவைப் படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு அதிகமான எண்ணிக்கையுள்ள உழைக்கும் அணி தேவைப் படுகின்றது. 
  • கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த நிர்வாக அமைப்பு சமூகத்தின் தனிப்பட்ட அம்சங்களை ஒழுங்குபடுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், அதன் எல்லா நடவடிக்கைகளையும், அதன் எல்லா அம்சங்களிலும் நிர்வகிப்பதால், இந்தக் காரணத்திற்காகவே நிர்வாக அமைப்பு எளிமையாக்கப் பட்டு விடும். தனிப்பட்ட மனிதனுக்கும், மற்றவர்களுக்கும் இடையியே ஏற்படும் முரண்பாடுகளை நாம் அகற்றி விடுகிறோம். சமூகயுத்ததிற்கு பதிலாக சமூக அமைதியை நாம் ஏற்படுத்துகிறோம். குற்றத்தின் மூலவேரை நாம் வெட்டி விடுகிறோம். இவற்றின் மூலமாக நிர்வாக, நீதி இயல் அமைப்புகளின் பெரும் பகுதியை மிகையானதாகச் செய்து விடுகிறோம்."    
          - எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் சமூகம், பக்கம் 11, 15-16) 

பொதுவுடைமை என்ற சொல்லைக் கேட்டாலே வெறுப்பவர்கள், அல்லது பொதுவுடைமை சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி என்று நினைப்பவர்கள்,  சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிந்து கொள்வது நன்று. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களுக்கு உரியது என்று உரிமை கோர விரும்புவோர், ஆதித் தமிழர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தார்கள் என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உசாத்துணை :
1. Archaeology, January - February 2013
2. The Indus Civilization: A Contemporary Perspective, by Gregory L. Possehl
3. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
4. இந்து நாகரிகம், கலாநிதி க. சொக்கலிங்கம் 
5. விக்கிபீடியா: சிந்துவெளி நாகரிகம்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

7 comments:

வலிப்போக்கன் said...

புரதான பொதுவுடமை சமுதாயம் என்று சொல்லலாமா???

Unknown said...

”உண்மை என்னவென்றால், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பின்பற்றிய மதம், பேசிய மொழி குறித்து, இன்று வரையில் யாருக்கும் எதுவும் தெரியாது.”

சிந்து வெளியில் கிடைத்துள்ள முத்திரைகள் பலவும் (மஹாயாண) பௌத்தம் சார்ந்தவை.அவை பற்றிய ஆய்வுகளை எனது முகநூலில் காணலாம். https://www.facebook.com/uthayakumara#!/uthayakumara

காரிகன் said...

கலையரசன்,
நல்ல பகிர்வு. சிந்து சமவெளியைப் பற்றி பல தவறான அனுமானங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தற்போதைய இந்து (சைவ ) மதத்தை தூக்கிப் பிடிப்பதற்கான முயற்சியாகவே இருப்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. பசுபதி மற்றும் சிவ லிங்கம் போன்ற அடையாளங்கள் அங்கே இருப்பதை வைத்துக்கொண்டு அந்த மக்களை சைவர்கள் என்று முத்திரை குத்தி பெருமைப்படும் போக்கு பலருக்கு இருந்தாலும், சில உண்மை விளம்பிகள் அவ்வாறான அடையாளங்களை பிற்பாடு சைவர்கள் தங்கள் மத குறியீடுகளாக மாற்றிக்கொண்டுவிட்டனர் என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் இருக்கலாம்தான்.
அது சரி. இடம் வலமாக எழுதப்படுவது அரபி மொழி மட்டுமல்லவே. யூதர்களின் ஹீப்ரு மொழியும் இடம் வலம்தானே. நீங்கள் அதை மறந்ததின் பின்னால் எதுவும் இஸ்லாமிய சார்பு இல்லை என்று நினைக்கிறேன்.

Kalaiyarasan said...

@வலிப் போக்கன், அது புராதன பொதுவுடைமை சமுதாயமாக இருந்தாலும், நவீன கால சமுதாயம் போன்று, உன்னத நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது.அது மட்டுமே வித்தியாசம்.

@Abimanasingham Uthayakumar, புத்த ஸ்தூபி போன்ற கட்டிட இடிபாட்டை வைத்து, அங்கே பௌத்த மதம் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். ஹரப்பா நாகரிகத்திற்கு பிந்திய பௌத்த மத வரலாறு மட்டுமே நமக்குத் தெரியும். கி.மு. 3 ம் நூற்றாண்டில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பௌத்த மதம் பரவியிருந்தது.

@காரிகன், முட்டையிலே மயிர் பிடுங்கலாம் என்ற நப்பாசையில், இப்படி குதர்க்கமாக பேசுவதை விட்டு, கொஞ்சம் நடைமுறை சார்ந்து சிந்திப்பது நல்லது. அரபி மொழி வலமிருந்து இடமாக எழுதுவது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளன் பெரும்பான்மையான வாசகர்களுக்கு தெரிந்த உதாரணத்தை எடுத்தாள்வது இயல்பு. எதற்கு ஹீபுரு மொழியை மறந்தீர்கள் என்று கேட்பது விதண்டாவாதம். அரபி, ஹீபுரு மட்டுமல்ல, உருது, பார்சி, அரமைக் போன்ற பிற செமிட்டிக் மொழிகளையும் வலமிருந்து இடமாகத் தான் எழுதுவார்கள்.பெரும்பான்மையான தமிழர்கள், மெத்தப் படித்தவர்கள் கூட, லத்தீன் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று லத்தீன் எழுத்து என்று சொல்வதை விட, ஆங்கில எழுத்து என்று சொன்னால், உடனே புரிந்து கொள்வார்கள்.

காரிகன் said...

"முட்டையிலே மயிர் பிடுங்கலாம் என்ற நப்பாசையில், இப்படி குதர்க்கமாக பேசுவதை விட்டு, கொஞ்சம் நடைமுறை சார்ந்து சிந்திப்பது நல்லது. "

கலையரசன்,
அபாரமான உதாரணம் கொடுத்து அதையும் அருமையான சங்கத்தமிழில் சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. ஆங்கில எழுத்துகள் என்பதே ரோமன் எழுத்துகள்தானே? ஐரோப்பிய மொழிகள் ஏறக்குறைய எல்லாம் ரோமன் எழுத்தைத்தானே பின்பற்றுகின்றன? உண்மையை சொல்வதை தரமான தமிழில் சொல்வதை விட்டு விட்டு வீண் கோபம் கொள்வது என்னவிதமான நாகரீகம் என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா இருக்கும் வரை நீங்கள் புதிது புதிதான "வரலாற்று உண்மைகளை" வெளிக்கொனர்வதை நிறுத்தப்போவதில்லை என்று தோன்றுகிறது.

David Salamon said...

அருமை

David Salamon said...

அருமை